மனித இனக்குழு வரலாறும் ஆரியமும்

நவம்பர் 16-30

– அறிவழகன் கைவல்யம்

“மோ அசுமங்” கின் “The Aryans” (Die Arier) என்கிற ஆவணப்படம் நியோ நாசிசம் (Neo Nazism)” குறித்த சில கவலைக்குரிய செய்திகளை நமக்குச் சொல்லிச் செல்கிறது. இனக்குழுக்களில் உயர் குழுவாக முன்னெடுக்கப்பட்டு பல்வேறு ஈவிரக்கமற்ற படுகொலைகளுக்குக் காரணமான ஆரியக் கோட்பாடு இந்த ஆவணப் படத்தின் மூலம் தோலுரிக்கப்படுகிறது. இனக்குழுக் கோட்பாடுகளுக்குள் நாம் நுழைவதற்கு முன்னதாக இனக்குழுக்கள் குறித்த நமது அறிவு எதன் அடிப்படையில் இயங்குகிறது என்பதையும் நாம் தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. தமிழ்ச் சமூகத்தின் சமகால அரசியலில் இனக்குழுக் கோட்பாடு இப்போது ஒரு நெருக்கடியான காலத்தில் இருக்கிறது.

சில தமிழ்த் தேசிய இயக்கங்கள் மொழிசார்ந்த மனிதக் குழுக்களை ஒரு வட்டத்தில் அடைத்து அதற்கான தேவைகளோடு அரசியலை நகர்த்துவது ஒரு நவீன அரசியல் வடிவம் என்று நமது இளைஞர்களுக்கு உள்ளீடு செய்யப்படுவது சில ஆபத்தான பின்விளைவுகளை உருவாக்கக் கூடும் என்கிற உள்ளுணர்வின் அடிப்படையில், நாம் மீண்டுமொருமுறை இனக்குழுக்கள், மற்றும் மொழிசார் அரசியல் குறித்த வரலாற்றுப் பாடங்களை நோக்கிப் பயணம்  செய்தாக வேண்டும். குழந்தைப் பருவத்தில் இருந்தே வரலாற்றுப் பாடங்களின் வழியாக நாம் இருவேறு இனக்குழுக்களைப் பற்றிய செய்திகளை, அகழ்வாராய்ச்சிகளைக் கடந்து வந்திருக்கிறோம்.

திராவிடம் மற்றும் ஆரியம் என்கிற அந்த இருவேறு இனக்குழு வரலாற்றுப் பாடங்கள் இந்தியத் துணைக்கண்டத்தில் மட்டுமன்றி தமிழக அரசியல் வரலாற்றிலும் மிகப்பெரிய தாக்கங்களை உருவாக்கி இருக்கிறது. 1917ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நீதிக் கட்சியின் படிநிலைகள் ஏறத்தாழ 100 ஆண்டுகளைக் கடந்து இன்றும் திராவிட இயக்கங்களை வலிமையோடு வைத்திருக்கும் சூழலில் நமது புதிய தலைமுறையை மீளாய்வுக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

ஆரிய – திராவிட இனக்குழுக் கோட்பாடுகள் உலகின் ஏனைய எல்லா இனக்குழுக் கோட்பாட்டுச் சண்டைகளை விடவும் தனித்தன்மை மிக்க தொடர் விவாதங்களுக்குரிய ஒரு அரசியலாகவே இன்று வரைக்கும் வரலாற்றில் நிலைத்திருக்கிறது. ஆரிய திராவிட அரசியலின் சிக்கலான முடிச்சுகளுக்குள் நாம் பயணிப்பதற்கு முன்னதாக மனித இனங்கள் மற்றும் மொழிகளைக் குறித்த சில அடிப்படைப் புரிதல்களைத்  தன்னிறைவாக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. மனித இனங்களை அறிவியல் வகைப்படுத்தி இருக்கிறது, மொழிகளை மனித இனங்களோடு தொடர்புபடுத்தி நாகரிகத்தின் சுவடுகளை நமக்கு மானுடவியலாளர்கள் சொல்லிக் கொடுத்துச் சென்றிருக்கிறார்கள். ஆனாலும், மனித இனக்குழுக்களைப் பற்றிய ஒரு தெளிவான பார்வையை நமது சமூகம் ஆய்வுப் பூர்வமான கல்விமுறையை இழந்ததன் காரணமாக இன்றுவரை பெற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் கவலைக்குரிய உண்மை.

மனித இனங்களைக் குறித்து நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டு-மென்றால் முதலில் மனித உடற்கூறியல் மற்றும் மனித உளவியல் குறித்த இரண்டு படிநிலைகளில் பயணம் செய்ய வேண்டி-யிருக்கிறது. தொடக்க கால ஆய்வுகள் மனித இனங்களை மூன்று வெவ்வேறு தொகுதிகளாக அடையாளம் கண்டது. குவியே (சிஸ்வீமீக்ஷீ) என்கிற நவீன மானுடவியல் ஆய்வாளர் 1800 வாக்கில் மனித இனங்களை மூன்று பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தினார். அவை முறையே 1)

மஞ்சள் நிறமுடைய மங்கோலிய வகையினம்

2) வெள்ளை நிறமுடைய அய்ரோப்பிய வகையினம்

3) கருப்பு நிறமுடைய ஆப்பிரிக்க வகையினம்  இப்போது கவனமாக இருங்கள், இந்த மூன்று தொகுப்பினங்களும் நியாண்டர்தெல் என்று அழைக்கப்படுகிற பிற்காலக் குரங்குகளில் இருந்து வளர்ச்சி பெற்றவை, ஆதி மனிதர்கள் என்று அழைக்கப்படுகிற உயர் வளர்ச்சி பெற்ற குரங்கினங்கள் பிற்காலத்தில் நியாண்டர்தெல் வகை உயிரினங்களை உருவாக்கிய அடிப்படைக் காரணிகளாய் இருந்தன. ஆக இந்த மூன்று பெரிய வகையினங்களும் ஒற்றை மூலத்தைக் கொண்டிருந்தவை அடிப்படையில் ஒன்றானவை என்கிற பரந்த புரிதலை மய்யமாகக் கொண்டே இந்தக் கட்டுரையை நீங்கள் தொடர்ந்து வாசிக்க வேண்டும்.

மனித இனக்குழுக்களில் இயற்கையாகவே உடலியல் மற்றும் உளவியல் வழியிலான வேறுபாடுகள் உண்டு என்று தொடர்ச்சியாக சில பிற்போக்குவாதிகள் நிறுவ முயன்று வருகிறார்கள் என்கிற எளிய உண்மையை நீங்கள் புரிந்து கொண்டால் சிக்கலான மனித இனங்களின் நாகரிக வளர்ச்சி குறித்த பரந்த உண்மைகளை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.

ஒடுக்குமுறைகளுக்கும், வர்க்க நலன்களுக்கும், வர்ண பேதங்களுக்கும் சான்று பகர்வதற்காக அத்தகைய ஒரு மலிந்த அறிவியல் ஆய்வுகள் சாராத பொய்களை அவர்கள் கிடைக்கும் இடங்களில் எல்லாம் பரப்பி வந்திருக்கிறார்கள். மனு சாஸ்திரம் என்றும் நான்கு வேதங்கள் என்றும் இந்தியத் துணைக்கண்டத்தில் இன்று வரை வலிமையான தரவுகளாய் முன்னிறுத்தப்-படும் நூல்கள் அத்தகைய வரலாற்றுப் புரட்டுகளுக்கு எளிமையான எடுத்துக்காட்டு. பிறப்பால் மனிதன் உயர் மற்றும் தாழ் நிலைகளை அடைகிறான் என்கிற கட்டுக்கதை எந்த அறிவியல் சான்றுகளும் அற்ற ஒரு புனைவு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஏனெனில் மனித இனங்களின் உடல் மற்றும் உளவியல் கூறுகளை ஆய்வு செய்த பல்வேறு மானுடவியலாளர்கள் எல்லா மனிதக் குழுக்களிலும் சூழலுக்கு ஏற்ப நன்மை தீமைகளை எதிரொலிக்கிற மனிதர்கள் பரவலாக இருக்கிறார்கள்  என்கிற உண்மையை உரக்க ஆய்வுகளின் மூலம் அறிவியல் உண்மையாக நிலைநிறுத்திச் சென்றிருக்-கிறார்கள். இவ்வுலகில் பிறந்த எல்லா மனிதர்களும், அவர்கள் எந்த இனத்தவராயினும், எந்த மதம் சார்ந்தவராயினும் மானுட சமூகத்தை முன்னோக்கி நகர்த்திச் செல்லும் திறன் கொண்டவர்கள் என்பதில் எப்போதும் உறுதியான நம்பிக்கை கொண்டவராய் இருங்கள், அதுவே நாகரிகப் படிநிலைகளில் உங்களை அறிவுசார்ந்த நவீன மனிதனாக நிலைநிறுத்தும் ஒற்றைக் காரணி.

மனித இனக்கொள்கையை நகர்த்திச் செல்லும் இந்த ஒற்றைச் சாளர முறையில் இருந்து மாறுபடுகிற பிற்போக்கு மானுட-வியலாளர்கள் தங்கள் தரப்பை வலுப்படுத்திக் கொள்வதற்காக ஒரு முறையைக் கையாளு-கிறார்கள், அதாவது மனித இனங்கள் பொதுவான மூதாதை ஒன்றில் இருந்துதான் தோற்றம் பெற்றன என்பதை அவர்கள் எந்த ஒரு புள்ளியிலும் மறுப்பதில்லை. மாறாக, வளர்ச்சி மற்றும் நாகரிகப் படிநிலைகளை அவர்கள் அடையும் விதத்தில் உயர்ந்தவர்-களாகவும், தாழ்ந்தவர்களாகவும் நிலை கொள்கிறார்கள் என்றொரு புரட்டான வாதத்தை நிறுவ முயற்சி செய்கிறார்கள்.

இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டு-மென்றால், அவர்கள் டார்வினின் “வலியவை வாழ்கின்றன” (The Survival of the Fittest) கோட்பாட்டைத் துணைக்கு அழைப்பார்கள். அதாவது விரைவாக வளர்ந்த உயர் இனங்கள், பின்தங்கிய தாழ்ந்த இனங்கள் உண்டு என்றும், முன்னவை ஆளப்பிறந்தவை, பின்னவை அடிமைப் பரம்பரை என்றொரு சொத்தை வாதத்தை நிறுவ முயற்சி செய்வார்கள். இந்தப் புள்ளியில் இருந்துதான் நீங்கள் ஆரியக் கோட்பாட்டைக் கையாள வேண்டி-யிருக்கிறது. மேற்கு ஜெர்மனி, இங்கிலாந்து, இந்தியா மற்றும் அமெரிக்காவில் ஒரு குழுவாக இயங்கும் அறிவியலாளர்களும், மானுடவியலாளர்களும் வெள்ளை அய்ரோப்பிய இனம், ஏனைய மஞ்சள் மங்கோலிய மற்றும் கருப்பு ஆப்பிரிக்க மனிதக் குழுக்களில் இருந்து முற்றிலும் மேம்பட்ட இனம் என்கிற ஒரு போலியான பிரச்சாரத்தை முன்னெடுக்கிறார்கள். வடக்கு மற்றும் மத்திய அய்ரோப்பிய வெள்ளை இனக்குழுக்களில் ஒன்றே இவ்வுலகின் உயர்ந்த உயரினம் என்கிற கயமைத்தனமான ஆரியப் புனைவை அவர்கள் முன்வைக்கிறார்கள்.

நவீன உலகின் இந்தப் போலிக் கோட்பாட்டு இயக்கமே பண்டைய இந்தியாவின் வர்ணப் பிரிவுகளாக உள்ளீடு செய்யப்பட்டு வேதங்களும், மனுதர்மங்களும் மானுடவியலுக்கு ஒரு மிகப்பெரும் அச்சுறுத்தலை விடுத்துச் சென்றிருக்கின்றன. இப்போது இனம் குறித்த ஒரு எளிமையான விளக்கத்தை நாம் உள்வாங்கிக் கொண்டு தொடர்ந்து பயணிப்போம். இனம் என்று மானுட-வியாலளர்கள் குறிப்பது உண்மையில் உயிரியல் வகைப்பாட்டைச் சார்ந்தது. ஒருபோதும் உளவியல் வகைப்பட்டைச் சார்ந்தது அல்ல. மாறாக, எல்லைக் கோட்-பாடுகளுக்குள் தேங்கிய பிறகு மனித இனங்கள் ஒரு புதிய சமூகக் கூறினைச் சென்று சேர்கிறது. அவை “நாட்டினம்” அல்லது “மொழியினம்”. அறிவியல்படியான வரலாற்று மனித இனங்களுக்கும்-நாட்டினம்-மற்றும் மொழியினங்-களுக்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. நாட்டினங்களும், மொழியினங்-களும் சமூகக் கூறுகளையும், உளவியல் கூறுகளையும் உள்ளடக்கிய ஒரு கூட்டுப் பண்பு நிலைக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன. ஆனால், நாடு மற்றும் மொழியினங்களை மனித இனக் குழுக்களோடு ஒப்புமை செய்வது  ஆபத்தான விளைவுகளைத் தோற்றுவிக்கக் கூடியது.

இன்றைய சில தமிழ்த் தேசியர்கள் தொடங்கி பண்டைய இந்தியாவின் வர்ணாசிரம அடிப்படையாளர்கள் வரை அறிவியல் வழியான இந்த உண்மையை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டு மனித இனக் குழுக்களையும், மொழி மற்றும் நாட்டினங்களையும் ஒற்றைப் புள்ளிக்குள் கொண்டுவர முயற்சி செய்வது அறிவீனமானது மட்டுமன்றி ஆபத்தானது என்பதையும் நாம் உணர வேண்டும்.

– தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *