ஆசிரியர் பதில்கள்

நவம்பர் 16-30

கேள்வி : மகாராஷ்டிரா மற்றும் அரியானாவில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களில் பா.ஜ.க.வின் வெற்றிக்கு காங்கிரசு ஆட்சிகள் மீது ஏற்பட்ட கடுமையான எதிர்ப்பு அலை தான் காரணம் என்பதுதானே உண்மை? நாத்திகன் சா.கோ., பெரம்பலூர்

பதில் : 1. அடிப்படையான காரணம் காங்கிரசின் மீது – அங்கே ஆட்சியில் இருந்த நிலையில் (தொடர்ந்து) ஏற்பட்ட வெறுப்பு – எதிர்ப்பு.

2. மும்பையில் குஜராத்தி வியாபாரிகளின் திட்டமிட்ட பணச்செலவு, மற்ற வேலைகள். (இதனால்தான் ஒரு எம்.எல்.ஏ., குஜராத்திகள், மஹாராஷ்டிரத்தி-லிருந்து வெளியேறினால் மஹாராஷ்டிர மாநிலம் சுத்தமாகி விடும். என்று பேசியுள்ளார்.)

3. காங்கிரசின் உட்கட்சி கோஷ்டி சண்டை.

4. தேசியவாதக் காங்கிரசின் முறிவு  இத்தியாதி.

கேள்வி : பாவம் மற்றும் பாவ மன்னிப்பு பற்றிய தந்தை பெரியாரின் கருத்து என்ன?
த.மணிமாறன், மதுரை

பதில் : புண்ணியம் _ பாவம் என்பதே கற்பனை என்னும்போது _பாவ மன்னிப்பு என்பது அதன் அண்ணன்தானே. பாவ மன்னிப்பு என்பது குருக்கள், மதவாதிகள், கோவில் அர்ச்சகர்கள், பாதிரியார்கள், முல்லாக்களுக்கு வருமான வழி. அவ்வளவே!
நன்மை – தீமை – தவறு – தண்டனை இவைதான் யதார்த்தம்.

கேள்வி : மதம் மாறிய குற்றத்திற்காக ஒருவரது பிணத்தை தனது கிராமத்தில் புதைக்க அனுமதிக்காமல் 40 கிலோ மீட்டர் தூரம் எடுத்துச்சென்று புதைத்த கொடுமை தமிழகத்தில் நடைபெற்றுள்ளதைக் கவனித்தீர்களா? – கோ. சுருதி, பெரம்பலூர்

பதில் : தமிழகத்தின் தனித்த அடையாளத்தையே (பெரியார் பூமி என்ற நிலை) இழக்கும் அவமானகரமான செயல் இது; இது எங்கள் தகவலுக்கு உடனே வந்திருந்தால் நாங்கள் அதற்கு எதிர் நடவடிக்கை எடுத்திருப்-போம்; ஆட்சி வேடிக்கை பார்க்கலாமா?

கேள்வி : தேர்தலில் தில்லுமுல்லுகளுக்கு வழிவகுத்துவிட்டு மக்கள் மட்டும், ஆன்மீக சிந்தனையோடும் ஒழுக்கத்தோடும் வாழ வேண்டுமென உபதேசம் செய்யும் ஆளவந்தோர் பற்றி?
நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

பதில் : அதிகமாக இப்படி யார் ஹிதோபதேசம் செய்கிறார்களோ, அவர்களே அதிகம் தில்லுமுல்லு திருகுதாளப் பேர்வழி என்பதாகும்!

கேள்வி : தமிழ்நாட்டில் பார்ப்பனர் அல்லாதவர்கள் அனைவரும் சூத்திரர் என்று ஏதேனும் நீதிமன்றத் தீர்ப்பு உள்ளதா? – மு.அருண்குமார், காஞ்சிபுரம்

பதில் : தமிழ்நாட்டில் 2 ஜாதிதான் – வர்ணங்கள்தான் உண்டு; பிராமணர்_சூத்திரர். வடக்கே உள்ளதுபோல நாலுவகைப் பிரிவு நடைமுறையில் இல்லை; அதாவது-க்ஷத்திரியர்_வைசியர் என்ற இடைப்பட்ட இரண்டு பிரிவுகள் இல்லை என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் உண்டு. ‘Hindu Law’ – Text Book இல் பார்க்கவும்.

கேள்வி : இலட்சிய வெறியோடு, தனது திரை உலக வாழ்க்கையிலும் பெரியார், அண்ணா வழியைக் கடைசி வரை கடைப்பிடித்து, சுயமரியாதைச் சுடரொளியாய் நம்மோடு வாழ்ந்து, சமீபத்தில் மறைந்த இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.இராஜேந்திரன் அவர்களின் இழப்பு குறித்து? தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி

பதில் : மிகப்பெரிய இழப்பு -_ கலை உலகத்திற்கு மட்டுமல்ல; நமது சுயமரியாதை உலகத்திற்கும் கூடத்தான்! இதை அன்றே எனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளேன்.

கேள்வி : மதச் சார்பற்ற இந்திய அரசின் அஞ்சல் துறையால், திருப்பதி தரிசன அனுமதிச் சீட்டு விற்பனை பற்றிய அறிவிப்பு, மதச்சார்பற்ற அறிவார்ந்த பொதுநோக்குடையோரை பெரிதும் கிளர்ச்சிக்குத் தூண்டுவதாகாதா? – வே.சொர்ணம், ஊற்றங்கரை

பதில் : ஆம்; அமைதியாக இருக்கிறார்களே போராட வேண்டிய பலர். அதுதான் வேதனை.

கேள்வி : 10 ஆண்டுகள் ஆகியும் தமிழக அரசு புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவதில் தாமதம் ஏற்படுத்துவது மாநில அரசின் நிர்வாகத் திறமையின்மையை வெளிப்-படுத்துவதாக இல்லையா?
சா.வடிவேல், ஆவூர்

பதில் : கைப்புண்ணுக்குக் கண்ணாடியா தேவை?

கேள்வி : மோடியின் தேர்தல் கால கருப்புப் பணம் பற்றிய பிரச்சாரத்திற்கும், தற்பொழுது ஆட்சிக் கட்டிலில் ஏறியபிறகு அவரது ஆட்சி மேற்கொள்ளும் எதிர்நிலை சந்தர்ப்பவாதம் மக்களை ஏமாற்றும் அரசியல் மோசடி இல்லையா? – அ. திருமகள், அரியலூர்

பதில் : உங்களுக்குப் புரிகிறது; உலகத்திற்குப் புரிய கொஞ்ச காலம் ஆகலாம்! 265 பேர்களுக்கு பிளாங்கி கணக்கா? இதுவா கருப்புப் பண மீட்பு வீரம் _ விளைவு?

கேள்வி : மாநில அரசின் அனைத்துப் பிரச்சினைக்கும் அதிகாரபூர்வமற்ற ஒரு சக்தியை (தலைமையை) நம்பி அரசு செயல்படுவது சாத்தியமா? – அ.பாரிவேந்தன், செங்கை

பதில் : தமிழ்நாட்டைப் பாருங்கள்! புதிய வகை இரட்டை ஆட்சியின் புதிய வடிவம் தெரியும்!

கேள்வி : தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான மழை சேதத்தைக்கூட உடனடியாக பார்வையிட இயலாத அளவில் அமைச்சர்கள் முடங்கிக் கிடக்க வேறு ஏதேனும் முக்கியக் காரணம் உண்டா?
செ.சாந்தி, அம்மாபாளையம்

பதில் : எல்லாம் அம்மா… அம்மா… ஆணை என்றே எதிர்நோக்கும் நிலையில், இன்றும் ஆணை வராத நிலையோ_வேறு எதுவோ காரணமாக இருக்கலாம்! அவரின்றி எதுவும் அசையாதே.

கேள்வி : மத்திய பி.ஜே.பி. அரசு அமைய ஆதரவும் மற்றும் ஆலோசனையும் வழங்கி வந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தற்பொழுது படிப்படியாக மத்திய, மாநில அரசுப் பொறுப்புகளில் நேரடியாகவே பங்கேற்கும் நிலை ஏற்பட்டு வருவது குறித்து?
தி.மூவேந்தர், திருவள்ளூர்

பதில் : முழுக்க நனைந்த பிறகு முக்காடு ஏதுக்கடி குதம்பாய் என்ற பாட்டு வரிகள் நினைவுக்கு வருகின்றன.

கேள்வி : திருமணத்திற்கு முன்பே இரு பாலருக்கும் மருத்துவ பரிசோதனை தேவை என நீதியரசர் கிருபாகரன் அவர்கள் கூறிய கருத்தைப் பலரும் ஆதரிக்காததேன்?
வெங்கட. இராசா, ம.பொடையூர்

பதில் : பக்குவமின்மை; பழைமைப் பாசி அவர்கள் உள்ளத்தினை ஆக்கிரமித்திருப்பதால்!

கேள்வி : பெருகிவரும் மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த உலக வங்கி தலைவர் எச்சரித்தும், அய்.நா.சபை உலகவங்கி கட்டாயமாக _ தீவிரமாக உலக நாடுகள் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை அமல்-படுத்தினால் என்ன? தங்களின் கருத்து?
எம்.ஆர்.பக்கிரிசாமி, நாகை

பதில் : மதங்கள் குறுக்கே நிற்கின்றன. பல நாடுகளில் மதவாதிகளின் ஆதிக்கம் ஆட்சியாளர்களுக்கு மூக்கணாங் கயிறாக இருக்கிறதே. எனவே எளிதில் இது சாத்தியப்-படாது!

கேள்வி : படைப்புக் கொள்கைக்கு எதிரானது இயற்கையின் பரிணாமக் கொள்கை, கடவுளும், அறிவியல் கொள்கைகளும் முரண்பட்டவை அல்ல என போப் கூறியதுபற்றி தங்களின் கருத்தென்ன? – த.வேல்விழி, ஊரப்பாக்கம்

பதில் : முற்றிலும் தவறான கருத்து. அறிவியலும் கடவுளும் நேர் எதிரானது என்பதை அண்மையில் வெளிவந்துள்ள இயற்பியல் பேராசிரியரின் மறுக்க முடியாத நூல் தெளிவாக்குகிறது. (இந்த நூலைத் தமிழில் கொணர, முயற்சிகள் எடுத்து வருகிறோம்.)

கேள்வி : தமிழக வளர்ச்சி முன்னேற்றத்தில் இருந்து பின்னோக்கிச் செல்ல என்ன காரணம்? இப்புள்ளி விவரத்தைத் தமிழக அரசு தார்மீகப் பொறுப்பேற்காமல் மறுப்பதேன்?
மோ.கண்ணதாசன், சேலம்

பதில் : மின்வெட்டு, தொழிலதிபர்களுக்கு உடனுக்குடன் முன்னாள் முதல்வரைச் சந்திக்க இயலாத நிலை. மற்ற பேரங்கள் _ இவைகளே உண்மைக் காரணங்கள்.

இதை எப்படி மறுக்க முடியும்? என்பதால் தார்மீகப் பொறுப்பேற்கும் அறிவு நாணயம் இல்லையே! உண்மை எப்போதும் கசப்புதானே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *