உலகைச் சுற்றி….
லண்டன் தய்மார்கள் நடத்திய வித்தியாசமான தோள்சீலைப் போராட்டம்
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட ஜாதிப் பெண்கள் தங்கள் மார்புகளை மறைக்கக்கூடாது என்று விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்த்துப் போராட்டம் நடத்தி, தங்களின் மேலாடை அணியும் உரிமையைப் பெற்றார்கள். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் நடந்த பெண்ணுரிமைக்கான போராட்டம் அது. அதுவே பரவலாக தோள்சீலைப் போராட்டம் என்று அறியப்படுகிறது.
இதோ 21 ஆம் நூற்றாண்டில் லண்டனில் இருக்கும் தாய்மார்கள் சிலர் வித்தியாசமான-தொரு போராட்டம் ஒன்றை நடத்தியிருக்-கிறார்கள். ஒருவகையில் இதுவும் தோள்சீலைப் போராட்டம் தான். இந்தியாவின் தமிழ்நாட்டுப் பெண்கள் மார்புகளை மறைக்க தோள்சீலையை அணிவதற்காக போராட்டம் நடத்தினார்கள் என்றால், லண்டன் தாய்மார்களோ பொது இடங்களில் தங்களின் மார்பு தெரிய குழந்தைகளுக்குப் பால் கொடுப்பதற்கு தமக்கு உரிமை இருக்கிறது என்பதை நிலைநாட்டுவதற்காக இந்த வித்தியாசமான போராட்டத்தை நடத்தினார்கள்.
லண்டன் புறநகர்ப்பகுதியில் இருக்கும் ஒரு பப்பில் (உணவுடன் கூடிய மதுபானச்சாலை) தன் குழந்தைக்குப் பால் கொடுத்த ஒரு தாய் தனது மார்புகளை மூடவில்லை என்று அந்தக் கடையின் பணியாள் அந்தப் பெண்ணிடம் கடும் ஆட்சேபம் தெரிவித்ததாக அந்தத் தாய் புகார் தெரிவித்திருக்கிறார். கடையில் இருந்த ஒரு (அழுக்கு துடைக்கும்) துணியைக் கொண்டுவந்து தன்னிடம் கொடுத்து மார்புகளை மூடச்-சொல்லி அந்தப் பணியாள் வலியுறுத்திய செயல் தன்னை அவமானப்படுத்தும் வகையில் இருந்ததாகவும் அந்தத் தாயார் தெரிவித்துள்ளார்.
அந்தப் பணியாளரின் வார்த்தைகளும் அவர் அழுக்குத்துணியைக் கொண்டுவந்து தன்னிடம் கொடுத்த செயலும், ஒரு தாய் என்கிற முறையில் தனது பால் கொடுக்கும் உரிமையையும், பெண் என்கிற முறையில் தனது சுயமரியாதையையும் பாதித்ததாக அந்தத் தாயார் உள்ளூர் பத்திரிகையில் புகார் செய்துள்ளார்.
அந்தப் பெண்ணுக்கு நடந்ததைக் கேள்விப்பட்ட உள்ளூர்த் தாய்மார்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து அந்த பப்புக்கு எதிராக ஒரு போராட்டம் நடத்தியுள்ளார்கள். ஒரு குறிப்பிட்ட நாளை அறிவித்துவிட்டு, அந்த நாளில் தத்தம் குழந்தைகளுடன் அந்த பப்புக்கு வந்த தாய்மார்கள் எல்லோரும் தங்களின் குழந்தைகளுக்கு மார்பு மூடாமல் பாலூட்டியுள்ளனர். அந்தத் தாய்மார்களுக்கு தமது ஆதரவைத் தெரிவிக்கும் முகமாக குழந்தை இல்லாத பெண்களும் அந்த இடத்திற்கு வந்திருந்தனர்.
இந்தச் செய்தியின் முழுமையான தகவல்-களை கீழ்கண்ட இணைப்புகளில் சென்று நீங்கள் வாசித்துக் கொள்ளலாம்.
இந்தப் போராட்டத்தை ஆதரித்த பெண் ஒருவர் தெரிவித்த காட்டமான கருத்து இது: Barbara Tanner, 76, also from Bexleyheath added: “Most of the men in this pub have seen breasts before, they’re groping them all the time”.
தமிழ்நாட்டுக்கும் லண்டனுக்கும் இடையில் எத்தனையோ ஆயிரம் மைல் இடைவெளி இருக்கிறது. தமிழ்நாட்டின் தோள்சீலைப் போராட்டத்துக்கும் லண்டனில் நடந்த இந்தப் போராட்டத்துக்கும் இடையில் 200 ஆண்டு கால வித்தியாசமும் இருக்கிறது. ஒன்று, இந்தியாவின் ஜாதிய அடக்குமுறைக்கு எதிரான போராட்டமும்கூட. மற்றதின் பின்னணியில் வர்க்கப்பார்வையும் இருக்கக்கூடும். ஒன்று, தமது மார்புகளை மறைக்க உரிமை கோரி நடந்த போராட்டம். மற்றது, மார்புகளைத் திறந்து காட்டியபடி பாலூட்ட நடந்த போராட்டம்.
இத்தனை வித்தியாசங்கள் இருந்தும் இரண்டிலும் வெளிப்பட்ட குரல் ஒன்றே. அது பெண்ணியக் குரல். பெண்ணின் உடல் என்பது அடிப்படையில் அவளுடைய உடைமையே தவிர ஆணின் உடைமை அல்ல என்கிற அடிப்படை உரிமைக்கான குரல். பெண்கள் ஜீன்ஸ் அணிவது இந்தியக் கலாச்சாரத்துக்கு எதிரானது என்று கே. ஜே. ஜேசுதாஸ் போன்றவர்கள் பேசும் காலகட்டத்தில், தங்கள் உடலின் எந்தப் பகுதியும் வெளியில் தெரியலாம் அல்லது தெரியக்கூடாது என்கிற மிகச்சிறிய உரிமைக்காகக்கூட பெண்கள் இன்னமும் போராட வேண்டியிருக்கிறது என்பதற்கான மற்றும் ஓர் எடுத்துக்காட்டே லண்டனில் நடந்த இந்த வித்தியாசமான ‘boob and bottle feed-in’என்கிற 21 நூற்றாண்டின் தோள்சீலைப் போராட்டம்.
– ஜெகதீசன்