பண்டைய காலத்தில் காலத்தைக் கணிக்கவும் இடத்தைக் கணிக்கவும் பயன்பட்ட ஓரை, இராசி, நட்சத்திரம் என்பன பிற்காலத்தில் பார்ப்பனர்களின் பிழைப்புக் கருவியாக _ தொழிலாக மாற்றம் பெற்றன. இந்த மூடநம்பிக்கைகளில், ஜோதிடப் போர்வையில் சிக்கிக்கொண்டு மக்கள் எவ்வாறெல்லாம் துன்பப்படுகின்றனர் என்பதை விளக்கும் மணிக்காட்டி விற்பனைக்கு வந்துள்ளது.
முள்ளை முள்ளால் எடுப்பதுபோல புரியாத புதிர்கள் அறிவியல் வழியே மக்கள் மனதில் விதைக்கப்பட்டுள்ளன. அந்த மணிக்காட்டியின் நடுவே கதிரவனும் அதைச்சுற்றிக் கோள்களும் நீள்வட்டப் பாதையில் சுற்றுவது படங்களுடன் போடப்பட்டுள்ளன. கோள்களுக்கும், கதிரவனுக்கும் உள்ள தொலைவு, சுற்றும் காலம் இவற்றைக் குறிப்பிட்டு, கூடவே ஓரைகள், விண்மீன்களின் படத்தைப் போட்டு இவையெல்லாம் கற்பனைகள், இவற்றால் மனிதனுக்கு எவ்வித நல்லதும், கெட்டதும் நடப்பதில்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அறிவியல் சிந்தனை உள்ளவர்களின் அறியாமையை, அச்சத்தைப் போக்கிட, அறிவியல் கேள்விகளை எழுப்பும் விதமாக இம்மணிக்காட்டி உருவகம் செய்யப்பட்டுள்ளது. கூடவே, ஜோதிட அறியாமையைப் போக்கும்விதமாக ஒரு இலவச இணைப்பாக ஒரு இதழும் கொடுக்கப்படுகிறது. இந்த அரிய மணிக்காட்டியை அமைத்திருப்பவர் பகுத்தறிவாளர் செந்தமிழ் சேகுவாராவார். பெரியார் வழியில் அறிவியலின் துணை கொண்டு, அறிவின் பலங்கொண்டு பார்ப்பனிய மூடக் கருத்துகளை வேரோடும், வேரடி மண்ணோடும் அழிக்கப் போராடும் போராளியை இம்மணிக்காட்டியை வாங்கிப் பயன்படுத்துவதன் மூலம் மேன்மையடையச் செய்யலாம். மேலும், நமக்கு எழும் அய்யங்களை நீக்கும் விதமாக செல்பேசி எண்களையும் பயன்படுத்தியுள்ளார்.
– களப்பிரன், தண்டையார்பேட்டை