இவ்விடம் அரசியல் பேசலாம்

நவம்பர் 16-30

இவ்விடம் அரசியல் பேசலாம்

– கல்வெட்டான்

சலூன்கடை சுந்தரம் ஏதோ தீவிர சிந்தனையில் இருந்தார். அந்நேரம் அங்கே வந்த வாடிக்கையாளர் மதியழகன், “என்ன நண்பரே தீவிர சிந்தனையில் இருக்கறாப்புல தெரியுதே?” எனக் கேட்க,

“இப்பல்லாம் வியாபாரமே டல்லடிக்குது சார். பேசாமல் இந்தத் தொழிலை விட்டுட்டு சாமியாரா போயிடலாம்னு தோனுது!” என்றார் சுந்தரம்.

“அட, அதான் இப்போ நம்ம முதல்வரே ஷேவிங் பண்ணத் தொடங்கிட்டார்ல, இனி தொழில் பழையபடி பிக்-அப் ஆகிடும்!”

“அதேதான் சார்! என்னவோ பெரிய துக்கம் நடந்துட்ட மாதிரி ஆளாளுக்கு தாடி வளர்த்துக்கிட்டு சீன் போடத் தொடங்கிட்டாங்க சார்! இப்பதான் என் மனசுல பால் வார்த்திங்க!”

“அது சரி, நான் உங்க மனசுல பால் வார்த்துட்டேன், ஆனால் நம்ம டீக்கடை முதல்வர் ஏழைங்க வயித்துல பாலாலயே அடிச்சுட்டாரே!”

“பால் விலையேத்தத்தைத்தான சார் சொல்றீங்க? பாலை வச்சு கொள்ளையடிச்சவன் ஒருத்தன், தெண்டம் கட்டுறது இன்னொருத்தன்ங்கற கதையால்ல சார் இப்போ ஆயிடுச்சு! திருடுனவனை அப்படியே கமுக்கமா வச்சுட்டாங்க!”

“ம்ம்ம்… முன்னயாவது சட்டசபைன்னு ஒன்ன கூட்டினாங்க… இப்ப இருக்குற நிலைமையில இந்த ஆமாச்சாமிகள் என்னைக்கு சட்டசபையைக் கூட்டி மக்கள் பிரச்சினையப் பேசறதாம்!”

“சாமின்னு சொல்லவும்தான் இந்த விஷயம் நினைவுக்கு வருது! இப்பல்லாம் சாமியார்கள்-தான் ஜாலியா ராஜ வாழ்க்கை வாழறாங்க!”

“நீங்க நித்தியைச் சொல்றீங்களா சார்??”

“அதுதான் தெரிஞ்ச கதையாச்சே! இது புதுக்கதை! காஞ்சி சங்கர மடத்துக்கு 3992 கோடி ரூபாய் பணம் நன்கொடையா வந்திருக்குன்னு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கண்டுபிடிச்சிருக்காங்க நண்பரே! காஞ்சி மடத்தோட நிர்வாகி சிறீதரனே வாக்குமூலம் கொடுத்திருக்காராம்!”

“அடப்பாவிகளா! முற்றும் துறந்த முனிவர்னா, மானம், வெட்கம், நேர்மை, உண்மையைத் துறக்குறதுதான் போல! கோடிகோடியா கொள்ளையடிச்சுக்கிட்டு எப்படித்தான் கையில ஒரு தண்டத்தோட போஸ் கொடுக்க முடியுதோ நண்பா!”

“இவங்க கறுப்புப்பண கார்ப்பரேட்டுகளின் தண்டல்காரங்க என்பதை சிம்பாலிக்கா காட்டத்தான் இந்த தண்டம்! இப்பவாவது புரிஞ்சதா?!”

“ம்ம்ம்ம்… இனி எந்த சங்கரராமனைப் போட்டுத் தள்ளப் போறாங்களோ! அந்தக் கடவுளுக்குத்தான் வெளிச்சம்!”

“இன்னுமா அந்தக் கடவுளை நம்புறீங்க? அப்படியொருத்தர் இருக்கார்னு நம்பினால் பூரி சங்கராச்சாரி அப்படிப் பேசியிருப்பாரா?”

“அப்படியென்ன பேசினார்?”

“துப்புரவுப் பணியாளர்கள் கோவிலுக்கு உள்ள வந்து சுத்தம் பண்ணக் கூடாதாம்… அவங்க உள்ள நுழைஞ்சால் தீட்டாயிடுமாம்!”

“அடங்கொய்யால! கத்தி படத்துல நடக்குற போராட்டம் மாதிரி இவங்க மட்டும் ஒரு வாரம் வேலை செய்யாமல் விட்டால் ஊரே நாறிப் போயிடும்! அபிஷேகம்ங்கற பெயர்ல கழுவுன சிலையையே மாற்றி மாற்றி கழுவி ஊத்திக்கிட்டிருக்குற இவங்களுக்கே இந்த அதுப்புன்னா, ஊர் முழுக்க சுத்தம் பண்ற நம்ம மக்களுக்கு எம்புட்டு அதுப்பு இருக்கும்! இதுல இவனுங்களுக்கு மட்டும் குடுமியை விட்டுட்டு வழிக்கணுமா? தலையைக் காட்டட்டும் இனிமேல்!” கோபத்தோடு நக்கலடிக்கும்போது நடிகர் சந்தானத்தையே மிஞ்சி விடுவார் நம்ம சலூன்கடை சந்தானம்!

“மோடி வந்துட்ட தைரியம்தான் நண்பரே, இப்படியெல்லாம் பேசச் சொல்லுது!” இது மதியழகன்.

“நீங்க வேற! மோடி வந்ததும் கறுப்புப் பணமெல்லாம் வந்துடும்னு சொன்னாங்க… இப்ப என்னடான்னா பிரசாதம் மாதிரி கவரை நீட்டுறாங்க!”

“அதுவே நீதிமன்றம் குட்டு குட்டுன்னு குட்டுன பிறகுதான்! பின்ன, காங்கிரஸை வெறுப்பேத்துறதுக்காகவே கறுப்புப் பணம் கறுப்புப் பணம்னு சொன்னவங்க மூஞ்சில அது கரியப் பூசும்னு நெனச்சிருப்பாங்களா?!”

“அதுசரி, அவங்களுக்கு தேசிய அளவுல எதாவது அசிங்கம் வந்தால் உடனே கலாச்சாரம், ஆன்மீகம்னு பேச ஆரம்பிச்சுடுவாங்களே, இப்ப அப்படி எதாவது நியூஸ் இருக்கா சார்?”

“இல்லாமலா? முன்ன பெங்களூர் பார்ல நுழைஞ்சு அடிச்ச மாதிரி,  கேரளாவிலிருக்குற ஒரு ஹோட்டலில் முத்தம் கொடுத்த காதலர்களுக்கு எதிரா கலாட்டா பண்ணியிருக்காங்க! கேரளா பெரியார் கால்பட்ட பூமின்னு இவனுங்களுக்குத் தெரியாமப் போயிடுச்சு போல! உடனே கேரளாவிலிருக்கும் இளைஞர்களெல்லாம் முத்தப் போராட்டத்துல இறங்கவும் பி.ஜே.பி. வாயடைச்சுப் போயிடுச்சு!”

“அதுசரி, கலாச்சாரம் கலாச்சாரம்னு ஒருபக்கம் பேசிக்கிட்டே சட்டசபையில வச்சு நீலப்படம் பார்க்குற தில்லு பி.ஜே.பி.யத் தவிர வேற யாருகிட்ட இருக்கு?!”

“ஹஹஹ! அதுசரி, ரஜினி ஆதரவு தரணும் தரணும்னு தமிழ்நாட்டு பி.ஜே.பி.க்காரங்க காலில் விழாத குறையா கெஞ்சிக்-கிட்டிருந்தாங்களே இப்ப என்னாச்சு சார்?”

“இவங்களுக்கு ஆதரவு இல்லைங்கறதை ஒரு கடிதத்தாலயே புரியவச்சுட்டாரே! இப்போ சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்னு வேற ஆளைத் தேடத் தொடங்கிட்டாங்க!”

“இவங்களுக்கெல்லாம் பவர் ஸ்டார்தான் சார் லாயக்கு! கோமாளிக்குக் கோமாளி பொருத்தமா இருக்கும்! ஆனால் இவங்ககூட சேர்றதுக்கு பவர்ஸ்டார் ஒத்துக்கணுமே!”

“பி.ஜே.பி. தான் இப்படின்னா காங்கிரஸ்ல ஜி.கே. வாசன் சைக்கிளை எடுத்துட்டுக் கிளம்புன சைக்கிள் கேப்புல கார்த்திக் வந்து ஒட்டிக்கிட்டாரே சார்! இப்ப எனக்கு ரொம்ப யோசனையா இருக்கு சார்!”

“என்ன யோசனை?”

“வழக்கமா தேர்தல் நேரத்துல தூக்கத்துலருந்து முழிக்கிற ஆளை, நேரங்கெட்ட நேரத்துல யாரு முழிக்க வச்சாங்கன்னுதான்!”

“ஹஹஹஹ!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *