வேண்டாம்…. வேண்டாம்… என்று கதறக் கதற ஒரு பெண்ணுக்குத் தாலி கட்டி திருமணம் நடத்திய காட்சி ஒன்று அண்மையில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ஏதோ தனியாகச் சென்ற பெண்ணுக்கோ, ஆளில்லாத இடத்திலோ நடந்தது அல்ல. கர்நாடக மாநிலம் தும்கூரில் அண்மையில் ஒரு திருமண மண்டபத்தில் உறவினர்கள் கூடி அமுக்கிப் பிடித்துக் கொள்ள மணமகள் வேண்டாம் வேண்டாம்மா என்று கதற, மணமகன் தாலி கட்டுகிறார். இந்தக் காட்சியை டிவி9 தொலைக்காட்சி ஒளிபரப்பியது. (https://www.youtube.com/watch?v=McW9Rm5TUdE) விருப்பமில்லாத ஒருவருக்கு வலுக்கட்டாயமாக திருமணம் நடத்தி வைக்கும் மனிதத் தன்மையற்ற செயல் இந்த நூற்றாண்டிலும்! ஆனால், இதிலும் அந்தப் பெண்ணைக் குற்றம்சொல்லும் கும்பல் உண்டு. 8 ஆண்டுகளாக அவர்கள் காதலித்தவர்கள். இப்போது திருமணம் வேண்டாமென்றால் என்ன அர்த்தம்? என்று சப்பைக் கட்டு கட்டுகிறார்கள். உறுதிப்படுத்தப் படாத அந்த தகவலும் கூட உண்மை என்று நாம் வைத்துக் கொண்டாலும். எத்தனை ஆண்டு பழக்கமென்றாலும் திருமணம் பிடிக்கவில்லை என்று சொல்வதற்கான உரிமை கிடையாதா ஒரு பெண்ணுக்கு? வேண்டாம் என்று சொல்வதற்கான காரணங்கள் அப்பெண்ணுக்கு இருக்காதா? இதற்கு எத்தனை சப்பைக் கட்டு கட்டினாலும் ஏற்க முடியுமா?