எது தமிழ்த் திருமணம் – 8

நவம்பர் 16-30

வாழ்க்கை ஒப்பந்தமே

– சு.அறிவுக்கரசு

இந்துமதத்தில் செய்யப்படும் திருமணங்கள் எல்லாமே புனிதப்பூட்டுகள் (Sacrament). இந்தப் பூட்டுகளைத் திறக்கக்கூடாது. வாழ்வின் இறுதிவரை இல்லறக் கட்டடம் பூட்டப்-பட்டேதான் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது இந்துமதம். இந்த நியதி பார்ப்பனப் புரோகிதர் நடத்திவைக்கும் சமஸ்கிருத மொழிச் சடங்குத் திருமணத்திற்கும் பொருந்தும். தமிழ்ப் புரோகிதர் நடத்திவைக்கும் தமிழ்மொழிச் சடங்குத் திருமணத்திற்கும் பொருந்தும். மேலைநாட்டிலே நடைபெறும் திருமணங்களைப்போல, கிறித்துவ, இசுலாமிய திருமணங்களைப்போல ஒப்பந்தம் (Contract) அல்ல.

மதநூல்களின்படியே புனிதச்சடங்கு, இறைவன் போட்ட முடிச்சு, மனிதன் பிரிக்காமல் இருப்பானாக என்றெல்லாம் கூறப்பட்டாலும் சட்டங்கள் இயற்றப்பட்டு அவற்றின் அடிப்படையில் மணவிலக்குகள் நடந்து-கொண்டு இருக்கின்றன. இசுலாத்தைப் பொறுத்தமட்டில் முழுமையான முறையில் ஒப்பந்தமாகவே நிக்காஹ்கள் நடத்தப்-படுகின்றன. ஆணோ பெண்ணோ பிரிய-வேண்டும் என்று பிரியப்பட்டால் பிரிந்து கொள்ளலாம். இதற்கான வழிமுறைகளை அந்த மார்க்கத்திலேயே செய்திருக்கிறார்கள்.

மனிதன் சுதந்தரச் சிந்தனையை வளர்த்து அவனறிவின் அடிப்படையில் வாழ்க்கையை   நடத்திச் செல்லவேண்டும் என்கிற உயரிய நோக்கத்தோடு சுயமரியாதை இயக்கத்தைக் கண்டார் தந்தை பெரியார். அவருடைய சுயமரியாதைக் கொள்கையைப் பகுத்தறிவின் அடிப்படையில் வாழ்க்கைக்கு வழிகாட்டும் நெறியாகக் கருதி வாழ்பவர்கள் கோடிக்-கணக்கில் உருவாகினர். அவர்கள் கடைப்-பிடித்துவரும் திருமண முறையை உருவாக்கித் தந்தவர் பெரியார்.

திருமணம் என்ற பெயரால் அறிவுப் பறிமுதலும் பொருள் இழப்பும் ஒரு குலத்துக்கொரு நீதி என்ற முறையில் ஆண்குலம் எஜமானத் தத்துவத்திலும் பெண்குலம் அடிமைத்தனத்தில் உழலும் புழுக்களாகவும் இருந்த நிலைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப் புகுத்தப்பட்டதுதான் சுயமரியாதைத் திருமண முறை என்கிறார் பெரியாரின் தத்துவ வழித்தோன்றல் கி.வீரமணி அவர்கள். பெரியாரின் மொழியிலேயே கூறுவோமானால், நிர்ப்பந்தத்திற்கும் ஒரு கட்டுப்பாட்டிற்கும் கட்டிக்கொண்டு, எப்படி இருந்தாலும் சரிப்படுத்திக்கொள்ள வேண்டியதாகவும் இருக்கிறது என்பதால் பழைய வைதிகத் திருமண முறைகள் ஒழிய வேண்டும் என்றார். சுயமரியாதைத் திருமணம் என்பதில் புதிய முறையோ புதிய சடங்கோ ஒன்றுமில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அர்த்தமற்றதும் பொருத்தமற்றதுமான சடங்குகள் வேண்டாம் என்பதும் அநாவசியமான அதிகச் செலவும் அதிகக் காலக்கேடும் இருக்கக் கூடாது என்பதும்தான் சுயமரியாதைக் கல்யாணத்தின் முக்கியத் தத்துவமாகும் என்றும் விளக்கினார் பெரியார்.

நமக்கு மேலான மேல்ஜாதிக்காரன் என்பவனை (பார்ப்பானை) புரோகிதனாக வைத்து நடத்தாத திருமணம் சுயமரியாதைத் திருமணம் ஆகும் என்றார் பெரியார். சுயமரியாதை அற்ற திருமணம் என்பது எதுவென்றால், ஜாதியாலோ சமயத்தாலோ மற்றவர்களைக் காட்டிலும் தான் உயர்ந்தவன் என்று சொல்லிக்கொள்கிற ஒருவனைக் கொண்டு சடங்குகள் செய்கின்ற திருமணமாகும் என்றார். மணமக்கள் அறியாத மொழியில் சடங்குச் சொற்களைக் கூறுவதும், பொருள் விளங்காத சடங்குகளைச் செய்வதும் சுயமரியாதை அற்ற திருமணம் எனக் கூறியுள்ளார்.

முதல் சுயமரியாதைத் திருமணம்

28.5.1928இல் அருப்புக்கோட்டைக்குப் பக்கத்தில் உள்ள சுக்கிலநத்தம் எனும் ஊரில் சுப்பா ரெட்டியார் என்பவரின் மகன் அரங்கசாமி ரெட்டியார் என்பவருக்கு நடத்தி வைத்த சுயமரியாதைத் திருமணம் இந்த இலக்கணப்படியே நடத்தி வைத்தார். சுப்பா ரெட்டியாரும் அவர் குடும்பத்தினரும் குடிஅரசு வாசகர்கள். பார்ப்பனர்களின் வாசனையே வீசாதவாறு திருமணம் செய்விக்க விரும்பி, தேதி கேட்டுப் பெரியாருக்கு எழுதினர். 27.5.1928இல் மதுரை இளைஞர் மாநாட்டுக்குத் தாம் வருவதை ஒட்டி மறுநாள் திருமணம் நடத்தலாம் எனத் தேதி தரப்பட்டது. எந்தப் பொருத்தமும் பாராமல் பெரியார் தந்த தேதியில் திருமணம் செய்விக்க ஒப்புக் கொண்டனர். இதே நாளில் தம் மகன் திருமணத்தையும் வைத்துக்-கொள்ள க.ரெ.நாராயண ரெட்டியார் என்பவரும் முன்வந்தார். சுப்பாரெட்டியாரும் இவரும் நெருங்கிய உறவினர்கள் என்பதால் ஒரே பந்தலில் திருமணம்.

சுப்பா ரெட்டியாரின் மகன் அரங்கசாமி நாகம்மாள், இரத்தினத்தாயம்மாள் ஆகிய இரு கன்னியருக்கும் தாலி கட்டினார். பெண்களின் பெற்றோரையும் பிள்ளையின் பெற்றோரையும் திருமணத்திற்குச் சம்மதமா என்று கேட்டும், பிறகு பெண்கள் இருவர், பிள்ளை ஆகியோரிடமும் திருமணத்திற்குச் சம்மதமா என்று கேட்டுப் பெற்று திருமணத்தை நடத்தி வைத்தார்.

க.ரெ.நாராயண ரெட்டியாரின் மகன் கோபால்சாமி ரெட்டியாரும் கமலத்தம்மாள், சிரோமணியம்மாள் ஆகிய இருவருக்கும் தாலி கட்டித் திருமணம் செய்வித்தார்.

இந்த இரண்டு திருமணங்களின் நடைமுறை, எளிய முறையும் சிறப்பாகவும் இருந்ததைக் கண்ட அதே ஊரைச் சேர்ந்த மாரி செட்டியார் என்பவர் தம் திருமணத்தையும் பெரியாரே நடத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதே பந்தலில் அவருக்கும் சீதாலட்சுமிக்கும் திருமணத்தைப் பெரியார் நடத்தி வைத்தார்.

மூன்று திருமணங்களும் முடிந்த நிலையில் அனைவரும் மகிழ்ந்து சிரித்துப் பேசிக் கொண்டு இருந்தபோது ஒரு கார் வந்தது. அதிலிருந்து இறங்கி வந்தவர்கள் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டனர். மதுரையைச் சேர்ந்த திருவேங்கடசாமி நாயுடு தம்முடைய திருமணத்தைப் பெரியாரே வந்து நடத்தித் தரவேண்டும் என்று கேட்டார். பெரியாரும் சம்மதித்து காரில் ஏறி மதுரை போய் மதியம் 1.30 மணிக்கு அவரின் திருமணத்தை நடத்தி வைத்து உணவு அருந்திப் பிறகு மாலை 5 மணிக்கு சுக்கிலநத்தம் திரும்பினார்.

ஒரே நாளில் நான்கு திருமணங்கள். சுயமரியாதைத் திருமணங்கள். பெரியார் நடத்தி வைத்த திருமணங்கள். சென்னை ஜனகசங்கர கண்ணப்பர், சிதம்பரம் தண்டபாணி பிள்ளை, திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் பிள்ளை, பட்டுக்கோட்டை அழகர்சாமி நாயுடு ஆகியோர் ஈ.வெ.ராமசாமி நாயக்கருடன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியோர். (குடிஅரசு 3.6.1928)

ஒரு மணமகனுக்கு இரு மணமகள்களைத் திருமணம் செய்விக்கலாமா? என்று கி.ஆ.பெ.விசுவநாதம் கேட்டாராம். ஒரு பெண் மாமன் மகள். மற்றொரு பெண் அத்தை மகள். ஒன்றை விடுத்து மற்றொன்றைத் திருமணம் செய்தால் குடும்பத்தில் குழப்பமும் சண்டையும் வரும். ஆதலால் இரண்டு பெண்களையும் கட்டி வைத்தார்களாம். இந்த விவரம் தெரிந்த பெரியாரும் ஒப்புதல் தந்தார். ஓர் ஆய்வின்படி உலக அளவில் 554 இனக்குழுக்களில் 415இல் பல மனைவி முறை உள்ளது.

சுயமரியாதைத் திருமணம் என்பதற்கு இலக்கணம் என்ன என்று பெரியார் கூறினாரோ அந்த இலக்கணப்படி அவை நடந்துள்ளன. ஒருவனுக்கு ஒருத்தி என்பது வழமைப்படியும் சட்டப்படியும் நடைமுறையில் இருக்கிறது இப்போது! ஆனால் 1928இல்…? இருதார மணம் என்பது சகஜம். பார்ப்பனப் புரோகிதர், சமஸ்கிருதச் சொற்கள், சடங்குகள் எவையுமற்ற திருமண முறை _ பெரியார் வகுத்த இலக்கணப்படி சுயமரியாதைத் திருமணங்கள்-தானே!

சட்டச் சிக்கல்

இப்படிப்பட்ட முறையில் பெரியார் தலைமையில் 1934இல் நடந்த திருமணத்தைச் சட்டப்படி செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது. 26.8.1953இல் இவ்வாறு தீர்ப்புக் கூறியவர்கள் நீதிபதி ராஜகோபாலன் ICS,, நீதிபதி சத்யநாராயணராவ் ஆகியோர். ஹோமம் வளர்க்காமலும் சப்தபதி சுற்றிவராமலும் செய்யப்பட்டதால் திருமணம் செல்லாது எனக் கூறிவிட்டனர். எனவே இத்திருமணத்தின் மூலம் பிறந்த குழந்தைகள் வைப்பாட்டி பிள்ளை-களாக மட்டுமே கருதப்படத்தக்கவர்கள் என்பதும் தீர்ப்பு. தீர்ப்புக்கு ஆதாரங்களாக அவர்கள் காட்டியவை நாரதர், யாக்ஞவல்கியர், பராசரர் முதலியோர் எழுதிய ஸ்மிருதிகள். இதுதான் இந்துச் சட்டம்.

இந்தத் தீர்ப்பினால் பாதிக்கப்பட்டோர் திராவிடர் கழகத் தலைவரின் மாமியார், மாமனார், மனைவி முதலியோர்தாம்.

அந்தக் காலகட்டத்தில் சென்னை மாநிலத்தின் முதல் அமைச்சராக இருந்த ராஜகோபாலாச்சாரி குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்து, ஆயிரக்கணக்கான பள்ளிகளை மூடியவர். அவர் ஒரு சட்டம் கொண்டுவர முயன்றார். அதன்படி இதுவரை நடந்த சுயமரியாதைத் திருமணங்கள் செல்லாதவை என்றும் இனி நடப்பவை செல்லத்தக்கவை என்றும் சட்டம் கொண்டுவர எத்தனித்தார். பெரியாரின் குலக்கல்வி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக அவர் பதவியை விட்டு ஓடவேண்டியதாயிற்று. சட்டமும் நின்றுபோனது. அதன்பின் பெரியாரின் ஆதரவுடன் 1954 முதல் 1966 முடிய ஆளும் வாய்ப்பைப் பெற்ற காமராசரின் – காங்கிரசு ஆட்சிக் காலத்திலும் இதற்கான சட்டம் கொண்டுவரத் தயாராக இல்லாத நிலைதான்.

1967இல் அறிஞர் அண்ணா தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைத்த பிறகு, சட்டம் கொண்டு வரப்பட்டது. 15.1.1968இல் குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்றபின் 20.1.1968 முதல் சட்டமாக நடைமுறைக்கு வந்தது. அதன்படி 1928 முதல் அதற்கு முன்னதாகவும் நடைபெற்ற எல்லா சுயமரியாதைத் திருமணங்களும் செல்லும் என்றாகின. இனி நடக்கும் திருமணங்களும் செல்லும் எனும் நிலை வந்தது.

சுயமரியாதைத் திருமணங்கள் இங்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் மலேயா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலும் சட்டப்படிச் செல்லத்தக்கன என்கிற தகுதியைப் பெற்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *