சிறுகதை : சாமி யார்?

நவம்பர் 16-30

– அப்சல்

கோவிலுக்குள் நுழையும்போதே, படிக்கட்டுகளில் அந்தப் பையனைப் பார்த்தார் பூசாரி நாகராஜன்.
வழக்கமாக வருபவன்தான். பக்தர்களின் செருப்புகளைப் பாதுகாப்பாக வைத்து, அவர்கள் சாமி கும்பிட்டுவிட்டு வந்ததும் தருவான். அதற்கு அவர்கள் ஒரு ரூபாயோ, இரண்டு ரூபாயோ தருவதை மகிழ்ச்சியாக வாங்கிக் கொள்வான். நாள்தோறும் அவனுக்கு அய்ம்பது ரூபாயாவது கிடைக்கும். அதில் அய்ந்து ரூபாய் பிச்சைக்காரர்களுக்குப் போடுவான். கோவில் உண்டியலில் எதுவும் போடமாட்டான்.

 

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த பூசாரி, அன்றுதான் அவனிடம் முதன்-முறையாகப் பேசினார்.

தம்பி, நீ சின்னப் பையனா இருக்கிறே. படிக்கிறதை விட்டுட்டு செருப்பைப் பாதுகாக்கிற வேலை செய்யலாமா?

அவன் அவரையே பார்த்துக் கொண்டிருந்-தான். லேசாகப் புன்னகைத்தான். கருப்பு மேகங்கள் சூழ்ந்த வானில் மின்னலைப்போல துயரம் தோய்ந்த முகத்தில் புன்னகை…

அய்யா! கோவிலுக்கு வரும் பக்தர்களின் செருப்பைத் திருடி விற்று நூறு ரூபாய் சம்பாதிக்கிறவர்களும் இருக்காங்க. நான் உழைச்சுத்தானே வாழறேன். எனக்குப் பெற்றோர்கள் யாரும் கிடையாது. அதனால படிக்க வழியில்லை…

நீ சம்பாதிக்கிற காசிலே பிச்சைக்-காரர்களுக்குக்கூட போடறே… உண்டியலில் ஏன் போடலே?

கடவுள் தான் மனிதனைக் காப்பாத்தணும். மனிதன் கடவுளைக் காப்பாத்தக் கூடாது. கடவுள் மனுஷன் மீது கரிசனப்பட்டிருந்தா பிச்சைக்காரன் உருவாவானா? பசிக்கிறவனுக்குச் சோறு போட்டா எனக்கு மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியில்தான் நான் சாமியைப் பார்க்கிறேன்.

அவனுடைய பேச்சைக் கேட்டு சிலையாகி நின்றார் பூசாரி.

தம்பி, உன் பெயர் என்ன?

முத்து…

உன்னை வளர்க்கிற பொறுப்பை நான் எடுத்துக்கவா? உன்னைப் படிக்க வைக்கணுமுன்னு ஆசைப்படறேன்… உனக்குச் சம்மதமா?

அது முடியாதே…

ஏன்?

பூசாரி அய்யா! எனக்குப் பெத்தவங்கதான் கிடையாதுன்னு சொன்னேன். ஆனால், ஒரு பிள்ளை இருக்கு… என்று சிரித்தபடி புறப்பட்டான் முத்து.

பூசாரியால் நம்ப முடியவில்லை. இது என்ன வேடிக்கை. முத்துவுக்குப் பன்னிரெண்டு வயதிருக்கலாம். அவனுக்கு ஒரு பிள்ளையா? பொய் சொல்கிறான். படிக்க விருப்பமில்லை என்பதால் சாக்குப் போக்குச் சொல்கிறான் போலிருக்கு. யாரோ அனாதை, அவனைப்பற்றி தான் ஏன் இப்படிக் கவலைப்படணும்? இவர்கள் திருந்தமாட்டார்கள். படிக்க ஆர்வமின்றி, சின்ன வயதிலேயே திசை மாறிப் போன எத்தனையோ சிறுவர்களில் ஒருவன்தான் முத்து. இவனைப் போன்றவர்களுடைய வாழ்க்கை கோவில் வாசலில் தொடங்கி, அதே வாசலிலேயே முடிந்துவிடும். ஒருபோதும் இவனால் சாமியை நெருங்கக்கூட முடியாது. இவனாவது… சாமியைப் பார்ப்பதாவது… என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டார் பூசாரி… ஆனால், வீட்டிற்குச் சென்று சோற்றில் கை வைத்துப் பிசைந்தபோது, சோற்றுடன் சேர்ந்து அவருடைய மனதையும் பிசைந்தது போன்ற ஓர் உணர்வு.

முத்து சாப்பிட்டிருப்பானோ?

அவரால் சரியாகச் சாப்பிட முடியவில்லை. அன்றிரவு தூங்கவும் முடியாமல் அவதிப் பட்டார்…
அதை அவரது மனைவி பார்வதி கவனிக்காமல் இல்லை.

ஏங்க.. கவலைப்படறீங்க… எல்லாம் நல்லபடி நடக்கும் என்றாள்.

இவள் எதைப் பற்றிப் பேசறா? என்று புரண்டு படுத்தார்.

உங்க கவலை எனக்குத் தெரியாதா? நம்ம பெண்ணோட அழகுக்கு நிச்சயமா நல்ல வரன் அமையும். அதுக்காக நீங்க இப்படி சாப்பிடாம, தூங்காம உங்களையே வருத்திக்கலாமா? நீங்க சாமிக்குச் சேவை செய்யறீங்க. அந்த சாமி நம்மைக் கைவிட மாட்டான்…

சந்தியா அவர்களுடைய ஒரே வாரிசு. சிலை போல அழகு. வசதியில்லாததால் பிளஸ்டூவுடன் படிப்பை நிறுத்திவிட்டாள். அவளைப் பார்க்க வரும் மாப்பிள்ளை எல்லோரும் படிப்பு, வரதட்சனை இவற்றைக் காரணம் காட்டி வேறு வசதியான இடங்களைத் தேடிப் போயினர். பெண் நன்றாகப் படித்திருக்கவும் வேண்டும். நிறைய வரதட்சணையும் வேண்டும். அப்பத்தான் வெளிநாட்டில் வேலை பார்க்கும் மாப்பிள்ளைக்குக் கவுரவம். பெண் படித்திருந்தால், அவளையும் வேலைக்கு அனுப்பி நிறைய சம்பாதிக்கலாம் என்கிற பேராசை.. அழகு, பண்பு இதற்கெல்லாம் இங்கே இப்ப மரியாதை கிடையாது. சில சமயங்களில் சாமி சிலைகளைப் பார்க்கும்போது நாகராஜனுக்கு எரிச்சலாக இருக்கும். சிலைக்கு இத்தனை நகைகளா? அத்தனையும் சுத்தமான பொன், என் மகள் பேசும் அழகுச் சிலை; உயிருள்ள சிலை. அவளுக்கு ஒரு கிராம் தங்கம்கூட இல்லையே என்று வருந்துவார்.

சந்தியாவே ஓர் அழகுப் புதையல்தான். அவளது தரிசனமே தெய்வீகமானதுதான். ஆனால், மனதால் குருடானவர்களால், அதை உணர முடியாது. சின்னப் பிள்ளையாக இருக்கும்போது, எப்படி அவளைக் கொஞ்சி மகிழ்ந்தேன். இப்போது அவளே தனக்கு ஒரு சுமையாகத் தெரிகிறாளே என்று கண்கலங்கினார் அர்ச்சகர்.

காலை மணி ஆறு. தன் பழைய சைக்கிளில் கோவிலை நோக்கிச் சென்றார் நாகராஜன். மார்கழி மாதப் பனி, ஒரு போர்வையைப் போல படர்ந்திருந்தது. அந்தக் குளிரிலும் கோலம் போடும் பெண்கள், பாலுக்காகவும், பேப்பருக்காவும் அலையும் ஆண்கள்.

நாகராஜனுக்கு ஏனோ கோவிலுக்குச் செல்லப் பிடிக்கவில்லை. மனதில் அதே எண்ணங்கள் மறுபடியும் வந்து வந்து அலைகழித்தன.

நம்ம பசங்க நல்லா படிச்சு, வெளிநாட்டில் நிறைய சம்பாதிச்சு வாழறதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தேன். ஆனா, அவங்க தம் வேர்களை மறந்துவிட்டனர். தான் சம்பாதிக்கிறது பத்தாதுன்னு இன்னும் வேணுங்கிற பேராசையில், திருமணத்தை வியாபாரமாக்கி விட்டனர். காலம் முழுக்க சாமிக்குச் சேவை செஞ்சு என்ன பலன்? அந்த சாமி கண் திறக்கலையே….

அவரால் வீட்டிற்குத் திரும்பிச் செல்லவும் முடியவில்லை. சூளை சிவலிங்க செட்டி தெரு அருகே வந்தபோதுதான், முத்துவுடைய நினைவு வந்தது. அவன் இங்கேதான் எங்கேயோ இருப்பதாகச் சொன்னானே.

எப்படியோ விசாரித்து, ஒரு வழியாக முத்து இருக்கும் வீட்டைக் கண்டுபிடித்தார். அந்தச் சிறிய குடிசையில், ஏதோ சத்தம்…

குளிப்பா… அடம் பிடிக்காதே.

போதா… குளிக்க மாத்தேன். உன்னை அதிப்பேன்…

யாரை முத்து குளிக்கச் சொல்கிறான்? அதற்கு ஏன் அந்த ஆள், முத்துவை அடிக்கணும்?

பூசாரியால் பொறுமையாக இருக்க முடியவில்லை. கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தவர் அதிர்ந்தார்.

முத்து குளிப்பாட்டிக் கொண்டிருந்தது ஓர் இளைஞனை!

என்ன பூசாரி அய்யா! இங்கேயே வந்துட்டீங்க.. பார்த்தீங்களா.. என் பிள்ளைன்னு சொன்னேனே, அது இவரைத்தான். இவர் என் அண்ணன் அப்பு. உடம்புக்கு வயது இருபது. ஆனால், மூளைக்கு? தினமும் இதே தொல்லைதான். ஒரு வழியாக குளிக்க வெச்சாச்சு. இனி டிபன் செய்யணும்… என்றான் முத்து. உப்புமா செய்ய ரவையை எடுத்தான் முத்து. பூசாரி அய்யா, இன்னைக்கு எங்க வீட்டில்தான் உங்களுக்கு நாஷ்டா…

பூசாரி என்ன சொல்வதென்று தெரியாமல் விக்கித்து நின்றார்.

முத்து… உன் அண்ணனைப் பராமரிக்கறது உனக்குக் கஷ்டமாக இல்லையா?

இதிலென்ன கஷ்டம். நம்மவங்களுக்காக அவஸ்தைப்படறதிலகூட ஒரு சுகம் இருக்கு. என்னை நீங்க காப்பாத்தறதா சொன்னீங்க. அப்புவை யார் காப்பாத்துவா? அதனாலதான் நான் படிக்க மாட்டேன்னு சொன்னேன்.

நாகராஜன் வாயடைத்துப் போனார்.

இந்த வயதில் இப்படி ஒரு மனிதநேயமா?

திருமணம் தாமதமாவதால் மகளையே சுமையாக நினைக்கும் தான் எங்கே? வசதி படைத்தவர்களே மனநிலை பாதிக்கப்-பட்டவர்களை வளர்க்காமல், அதற்காக இருக்கும் இல்லங்களில் சேர்த்துவிடும் காலத்தில் இந்த ஏழ்மை நிலையிலும் அப்புவைப் பராமரிக்கும் முத்து எங்கே என்று தலைகுனிந்தவர் மெல்ல முணுமுணுத்தார். நான் செய்யிற சாமி சேவையை எண்ணிக் கர்வப்பட்டேன். முத்து, நீ செய்யிற மனுஷ சேவைக்கு முன்னாடி நான் வெறும் தூசு.

முத்து பதில் எதுவும் சொல்லாமல் சிரித்தான்.

நல்லா சிரிய்யா. உன் சிரிப்புலே என் மனசோட அழுக்கு எல்லாம் கரையுது… என்று பூசாரி கண்கலங்கினார்.

அதைப் பார்த்த அப்பு கைகொட்டிச் சிரித்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *