முக்கியத்துவம் வாய்ந்த மசோதாக்கள் விவாதம் இல்லாமல் பார்லிமெண்டில் நிறைவேற்றப்படுவது சரியல்ல. நிதி மசோதா போன்ற முக்கியமான மசோதாக்கள் மீது அதிக நேரம் விவாதம் நடப்பதற்கான வழிமுறைகளை மக்களவை அவைத்தலைவர் சபாநாயகர் கண்டறிய வேண்டும். திட்டங்களுக்குப் பணத்தை ஒதுக்கும்போது, வரிகள் விதிக்கும்போது குறிப்பிட்ட அளவு நேரம் ஒதுக்கி விவாதிப்பது அவசியம்.
– பிரணாப் முகர்ஜி, இந்தியக் குடியரசுத் தலைவர்
————–
மகாராஷ்டிராவில் புதிய அரசு பதவி ஏற்றுள்ளது. இது முழுக்க முழுக்க அரசு நிகழ்ச்சி. ஆனால், பதவியேற்பு விழாவில் சாமியார்கள், துறவிகள் அதிக அளவில் கலந்து கொண்டனர். அவர்கள் வரிசையாக அமர்ந்திருந்ததைப் பார்க்க முடிந்தது. இது மூடநம்பிக்கை இல்லையா? இதை எப்படி ஏற்க முடியும்? பா.ஜ. தலைவர்கள் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
– அசோக் சவான், காங்கிரஸ் மூத்த தலைவர்
————–
புதிய எழுத்தாளர்கள் தங்களது எழுத்துகளில் உளவியலைக் கொண்டுவர வேண்டும். மனிதனுக்குள் இருக்கும் மன ஓட்டங்களை எழுத்தைத் தவிர வேறு எதிலும் பதிவு செய்துவிட முடியாது. வாழ்வில் வெளிச்சம் படாத பக்கங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அவற்றை வெளியில் கொண்டு வருவது எழுத்தாளனின் கடமை.
– கவிப்பேரரசு வைரமுத்து
————–
ஆந்திரத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 54 விழுக்காடு தெலங்-கானாவுக்குத் தரப்பட வேண்டும். அதைத் தர ஆந்திர முதல்வர் மறுக்கிறார். இது தெலங்கானா மக்களுக்கு சந்திரபாபு நாயுடு இழைக்கும் அநீதியாகும்.
– சந்திரசேகர் ராவ்,
தெலங்கானா முதல் அமைச்சர்
————–
கடந்த காலத்தை விடவும் வடக்கு மற்றும் மலையகத் தமிழ் மக்களுக்கு இடையிலான உறவுப் பாலம் வலுவடைந்-துள்ளது. வெறும் வாக்கு வங்கியாகப் பார்க்கும் கலாச்சாரத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்னரே மண்சரிவு குறித்த எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. அதன் பின்னரே, வாக்கு சேகரிக்கச் சென்ற அரசியல்வாதிகள் சுயநலத்தை மட்டும் கருத்தில் கொள்ளாது மக்கள் நலனிலும் அக்கறை கொண்டிருந்தால் இப்படிப்பட்ட உயிர்ப் பலிகளைத் தடுத்திருக்க முடியும்.
– விக்னேஸ்வரன், முதல் அமைச்சர், இலங்கை வடமாகாணம்