-கவிஞர் கலி.பூங்குன்றன்
மத்திய அரசின் மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணியை ஆர்.எஸ்.எஸ். முதன்மையாளர்கள் கிருஷ்ணா கோபால், சோனி, தத்தாத்ரேய முதலானவர்கள் சந்தித்து மூன்று கோரிக்கைகள் வைத்துள்ளனர்.
1. தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை கல்விக் கட்டணங்கள் அதிகமாக இருக்கின்றன.
2. பள்ளிகளிலும் ஒழுக்கத்தைப் போதிக்கும் பாடமான இராமாயணம், பாரதம், கீதை முதலில் சொல்லிக் கொடுக்கப்பட்டது பின்பு அது நிறுத்தப்பட்டது. அதனை மீண்டும் கொண்டுவர வேண்டும்.
3. தற்போதுள்ள வரலாற்றுப் பாடங்களை எடுத்துவிட்டு இந்துமத வரலாற்று ஆசிரியர்கள் கூறிய பாடங்களைச் சேர்க்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் இக்கோரிக்கையை ஸ்மிரிதி இராணி மத்திய அமைச்சரவையுடன் கலந்தாலோசித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.
மத்தியில் ஆட்சியில் உள்ள பி.ஜே.பி ஆட்சி பாடத்திட்டங்களில் மாறுதலைக் கொண்டுவர இருக்கிறது என்றால் அதன் பொருள் இந்து மதவாதத்தைக் திணிக்கிறது என்று பொருள்.
இப்பொழுது மட்டுமல்ல, வாஜ்பேயி அவர்கள் பிரதமராகவும், முரளிமனோகர் ஜோஷி மனிதவள மேம்பாட்டுத்துறை (கல்வி) அமைச்சராகவும் இருந்த காலத்திலேயே இதற்கான பந்தல்கால் நாட்டப்பட்டது.
புதுடில்லியில் அனைத்து மாநிலக் கல்வி அமைச்சர்களின் மாநாட்டினை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி கூட்டினார். (22.10.1998) மாநாடு மூன்று நாட்கள் நடைபெற்றன. எடுத்த எடுப்பிலேயே நிகழ்ச்சி நிரலில் சரஸ்வதி வந்தனா என்று அறிவிக்கப்பட்டது.
மாநாட்டு மேடைக்கு பிரதமர் வாஜ்பேயி வந்தவுடனேயே, ஆந்திர மாநிலத்தின் உயர்கல்வி அமைச்சர் கே.பிரதிபா பாரதி எழுந்தார். நிகழ்ச்சியின் தொடக்கத்துக்கு அடையாளமாக சரஸ்வதி மீதான துதிப் பாடலைப் பாடக் கூடாது. அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்று ஆட்சேபித்தார்.
பாரதீய ஜனதா அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த கல்வி அமைச்சர்கள் அவருக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினர். ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கைகளை மத்திய அரசு பின்பற்றுகிறது. தொடக்க விழாவுக்கான நிகழ்ச்சி நிரலை உடனே மாற்ற வேண்டும் என்று பஞ்சாப் மாநில கல்வி அமைச்சர் (அகாலி தளம்) மஞ்சித் சிங் உரத்த குரலில் ஆட்சேபம் தெரிவித்தார்.
பிரதமர் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைப்பார். பிறகு தேசிய கீதம் பாடப்படும். அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று மனித வளத்துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி மேடையிலிருந்த-படியே வேண்டுகோள் விடுத்தார்.
தேசிய கீதம் பாடி முடிக்கப்பட்ட பிறகு, சரஸ்வதியைப் பற்றிய துதிப்பாடல் பாடப்படும் என்று நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அறிவித்தனர். உடனே மீண்டும் கூச்சல் எழுந்தது. தமிழ்நாடு, புதுவை, கேரளம், கர்நாடகம், மேற்கு வங்கம், திரிபுரா, பீகார், பஞ்சாப், ஒரிசா, மத்தியப் பிரதேசம் ஆகிய 10 மாநிலங்களைச் சேர்ந்த கல்வி அமைச்சர்கள் இந்த அறிவிப்பை ஆட்சேபித்து முழக்கம் எழுப்பிக் கொண்டே வெளிநடப்புச் செய்தனர்.
ஆர்.எஸ்.எஸ்.சின் சித்தாந்தத்தைப் புகுத்த முயற்சி நடப்பதையே இது காட்டுவதாக, வெளிநடப்புச் செய்த கல்வி அமைச்சர்கள் பிறகு செய்தியாளர்களிடம் குற்றஞ்சாட்டினர். கல்வியில் மதத்தின் ஆதிக்கம் ஏற்படுவதை பாரதீய ஜனதா விரும்புவதையே இது காட்டுகிறது என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
தங்களுக்கு வேண்டியவர்களிடமிருந்து கருத்துகளை வரவழைத்து அவற்றை விவாதப் பட்டியலில் சேர்த்துவிட்டது மத்திய அரசு என்று சாடினார் மஞ்சித் சிங் (கல்கத்தா).
கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் சரஸ்வதி வந்தனம் பாடுவது இந்து மத சம்பிரதாயத்தைத்தான் சுட்டிக் காட்டுகிறது. இதை எங்களால் ஏற்க முடியாது என்று அமைச்சர்கள் க.அன்பழகன் (தமிழ்நாடு), எஸ்.பி.சிவகுமார் (புதுவை) ஆகியோர் குறிப்பிட்டனர்.
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த கல்வி-யமைச்சர்கள் இந்துத்துவாவைக் கல்வித் திட்டத்தில் சேர்ப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன் சிட்டியாங்லியா என்ற ஆர்.எஸ்.எஸ்.காரர் மாநாட்டில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டதற்கும் கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தனர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவரும், தொழிலதிபரும் ஆகிய அவர் அரசு நிகழ்ச்சியில் பங்குபெற அனுமதிக்கப்பட்டது குறித்து பலரும் கண்டனக் குரல் எழுப்பினர்.
மத்திய அரசின் வகுப்புவாதப் போக்கைக் கண்டிக்கும் வகையில் மகளிர் அமைப்பினர் கண்டன அறிக்கையைச் சுற்றுக்கு அனுப்பினார்.
மத்திய அரசின் மதவாதப் போக்கைக் கண்டித்து மீண்டும் பல அமைச்சர்கள் வெளிநடப்புச் செய்தனர். மாநாடு முறையாகத் தொடங்கப்படுவதற்கு முன்பே முடிவுக்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் அமைச்சர் முரளிமனோகர் ஜோஷி, தமது உதவியாளர்களுடனும், மத்தியக் கல்வித் துறைச் செயலாளர் பி.ஆர்.தாஸ்குப்தாவுடனும் தனியறையில் கூடிப் பேசினார்.
அரை மணிநேரக் குழப்பத்திற்குப் பிறகு மாநாட்டு அரங்கத்திற்குள் வந்த முரளிமனோகர் ஜோஷி ஓர் அறிவிப்பை வெளியிட்டார். 14 பக்கங்கள் அளவில் இடம் பெற்றிருந்த பலராலும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட இந்துத்துவப் பரிந்துரைகள் அனைத்தும் முழுமையாகத் திரும்பப் பெறப்படுகின்றன; முதல் 20 பக்கங்களில் இடம்பெற்றுள்ள அரசின் அதிகாரப்பூர்வமான நிகழ்ச்சிகள் பற்றி மட்டுமே மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று ஜோஷி உறுதியளித்தார்.
ஆர்.எஸ்.எஸ்.காரரான சிட்டியாங்லியா உரை நிகழ்த்துவதையும் தவிர்த்துவிட்டதாக ஜோஷி அறிவித்ததைத் தொடர்ந்து எதிர்க்கட்சி அமைச்சர்கள் மாநாட்டில் பங்கு பெற இசைவு தெரிவித்தனர்.
ஆர்.எஸ்.எஸ்.காரர் சிட்டியாங்லியா தயாரித்த கல்வித் திட்டம்
1. இந்தியக் கலாச்சாரத்தை மய்யமாகக் கொண்டு முதல் வகுப்பு முதல் உயர்நிலைக் கல்வி வரைக்கும் பாடத் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும்.
2. பெண்களைப் பொறுத்தவரையில் வீட்டை நிர்வகிப்பது சம்பந்தமாக போதிக்கப்-பட்டாக வேண்டும்.
3. சகல மட்டங்களிலும் தாய்மொழிகள் மூலமாகவே பாட போதனைகள் நடத்தப்பட வேண்டும்.
4. இந்தியாவின் கலாச்சார ஒருமைப்-பாட்டைப் பேணிப் பாதுகாப்பதற்காக மூன்றாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரைக்கும் சமஸ்கிருத மொழியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும்.
5. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நீதிநெறி போதனையானது செயல்படுத்தப்பட வேண்டும். அந்தப் போதனைகள் இந்துத்துவாக் கோட்பாட்டின்படி நடத்தப்பட வேண்டும்.
6. சரஸ்வதி வணக்கம், வந்தே மாதரம் பாடல்கள் சகல பள்ளிகளிலும் பாடப்-படுவதைக் கட்டாயமாக்கிட வேண்டும்.
7. பாடத்திட்டங்கள் யாவும் சுதேசி மயமாக்கப்பட வேண்டும். (அதாவது காவி மயமாக்கப்பட வேண்டும்).
8. நாட்டில் நான்கு பிரதேசங்களில் சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட வேண்டும். இதற்காக அரசாங்கத் தரப்பில் நிதியாதாரங்கள் ஒதுக்கப்பட்டு விட்டன. (நிதியுதவிகள் கிடைக்காமல் கல்வித் துறையில் பல துறைகள் வாடிக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் இங்கு நினைவுபடுத்திட விரும்புகின்றோம்).
9. இந்தியத் தத்துவப் பாடங்கள் (அதாவது இந்துமதத் தத்துவப் பாடங்கள்) போதிக்கப்பட வேண்டும்.
அ. உப நிஷத்துகள், வேதங்கள் முதலியவற்றையெல்லாம் பாடத்திட்டத்தில் இணைத்திட வேண்டும்.
ஆ. எல்லோரும் உயர்கல்வி அளித்திடும் இன்றைய முறையை மாற்றியமைத்திட வேண்டும். அப்போதுதான் கல்வியைத் தரமானதாக உயர்த்திட முடியும்.
இ. கல்வித்துறையில் அரசாங்கத்தின் பங்களிப்பைவிட சமூகத்தினுடைய பங்களிப்பே அதிகமாக இருக்க வேண்டும்.
கல்விக் கூடங்களைத் தொடங்கிடுவதற்கு அரசு அனுமதி தேவையில்லை என்று ஒரு ஏற்பாடு செய்யப்பட வேண்டும். 10 வருடங்கள் செயல்பட்டு வரும் கல்வி நிலையங்களுக்கு உடனேயே அரசால் அங்கீகாரம் அளிக்கப்பட்டாக வேண்டும்.
ஆர்.எஸ்.எஸின் இந்தக் கல்வித் திட்டம் என்பது ஆரியப் படையெடுப்பின் அம்சம் என்பதல்லாமல் வேறு என்ன? கடும் எதிர்ப்பால் இந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
புதிய குழு ஒன்று
முரளி மனோகர் ஜோஷியின் தலைமையின் கீழ் உமாபாரதி, பி.டி.-சித்தலிங்கையா, வீ.கே.மல்ஹோத்ரா, கே.கே.சுதர்ஷன் (ஆர்.எஸ்.எஸ்.) போன்றோர் செயல்படுவார்கள். இது வித்யாபாரதியின் தலைவர் தீனநாத் பத்ராவின் மேற்-பார்வையில் இயங்கக்கூடிய குழு ஒன்றை வாஜ்பேயி அரசு அமைத்து, பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் வேதம், உபநிஷத், இந்து சாஸ்திரங்களைப் போதிப்பதற்கான திட்டம் வகுக்கும் குழு இது.
Introduced to Vedic literature which is an expression of Indian culture;
வேதப் பாடங்களுடன் இந்தியக் கலாச்சாரத்தை மாணவர்களுக்குப் போதித்தல்.
Knows about the respectable status of women in Indian culture;
இந்தியக் கலாச்சாரத்தில் பெண்களுக்கு எவ்வாறு மதிப்பளித்தனர் என்று மாணவர்களுக்கு அறிவுரை கூறல்.
Gets acquainted with the basic truths of life against a backdrop of Indian culture;
மனித வாழ்க்கையில் உண்மைத் தத்துவம் பற்றி இந்திய வேதங்கள் கூறியவற்றை மாணவர்களுக்குப் போதித்தல்.
Learns for himself the truth; that in the context of Indian culture a person acquires a high status not by right of birth but by merit;
பிறப்பின் தத்துவம், மனித வாழ்க்கையை இறைநிலைக்குக் கொண்டு செல்லுதல் வாழ்க்கையின் உண்மை நிலையைக் கற்பித்தல்.
Knows about how in the Indian cultural context the rules were oriented towards the subjects;
இந்தியாவின் உண்மையான இந்துக் கலாச்சாரத்தைப் போதித்தல்.
Imbibes the basic values of Indian culture expressed by the narratives of the epics, Ramayana, Mahabharata, and by the main characters in it; for instance, the importance of 1) the purity of domestic life 2) stead fastness in adhering totruth even at the cost of suffering;
நமது வேத இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றின் உண்மை நிலையை மாணவர்களுக்குப் போதித்தல், அதன் மூலம் மனிதத் துன்ப நிலையில் இருந்து தப்பித்தல்.
Moulds the character which makes one abide by one’s duty when there is a conflict between personal relationship and a sense of duty.
மாணவர்களை இந்துக் கலாச்சாரத்தின் ஊடாக சீர்படுத்தி அவர்களது வாழ்க்கையை மேம்படுத்துதல், சமூகத்தின் நல்லுறவுடன் வாழக் கற்றுக் கொடுத்தல்.
மேலும் பள்ளிகளில் தினசரி தேசிய கீதத்துடன் சரஸ்வதி வந்தனா பாடுவது கட்டாயப்படுத்தப்பட்டது.
வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்
பாரதீய ஜனதாக் கட்சியின் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக முரளிமனோகர் ஜோஷி இருந்த நிலையில் இந்துத்துவா கோட்பாட்டை ஆதாரக் கல்வி மட்டத்திலேயே, எவ்வாறு அவர் காலத்தில் திட்டமிட்டுப் புகுத்தினார்கள் என்பதை, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அமைத்த நான்கு பேர் கொண்ட புலனாய்வுக் குழுவின் மேற்கண்ட அறிக்கை ஒன்று தெளிவுபடுத்துகிறது.
புராணப் பாத்திரங்கள்
மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் பண உதவியுடன் ஆயிரக்கணக்கான ஏகல் வித்யாலயங்களை பா.ஜ.க., ஆளுகின்ற ஜார்கண்ட் மாநிலத்தில் விசுவ இந்துப் பரிசத் நடத்தியது. அவற்றில் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கப்பட்டது. ஆங்கில எழுத்துகளைப் கற்பிப்பதற்கு இந்துப் புராணப் பாத்திரங்களின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டன. ஏ ஃபார் அர்ஜுன் (A for Arjuna) பி ஃபார் பிரம்மா, சி ஃபார் கவ், டி ஃபார் துருவா, ஜி ஃபார் கணேஷ், எச் ஃபார் ஜாம்பவான், எம் ஃபார் மகாதேவ், ஆர் ஃபார் ராம் என்ற வகையில் எழுத்துகள் கற்பிக்கப்பட்டன.
இந்தி – இந்து – இந்துஸ்தான்…
வழிபாடு நடத்தும்பொழுது, இந்து வீரர்கள் எனப்படுவோருக்கு, ஒவ்வொரு நாளும் ஒதுக்கப்பட்டது. இன்று சோம்வார் (திங்கள்கிழமை); இது சிவாஜிக்கு உரிய நாள்; அவருக்கு வழிபாடு நடத்துவோம்; இன்று மங்கள்வார் (செவ்வாய்க்கிழமை) இது அனுமானுக்கு உரியது; அவருக்கு வழிபாடு நடத்துவோம் என்ற வகையில் ஒவ்வொரு நாளும் பள்ளி தனது பணியைத் தொடங்கியது. இவ்வாறு தொடக்க நிலை ஆங்கிலப் புத்தகத்தில்கூட இந்தி _ இந்து _ இந்துஸ்தான் என்ற போக்கு புகுத்தப்பட்டது.
பழங்குடி சமூக நண்பர்கள், விசுவ இந்துப் பரிசத் முதலிய சங்க பரிவார் அமைப்புகள், மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் நேரடி மானியத் தொகையைப் பெற்று ஏகல் வித்யாலயங்களை நடத்தினர். தொடக்கக் கல்வியைத் திட்டமிட்டு, முரளிமனோகர் ஜோஷி காலத்தில், அவை இந்து மயமாக்கின. பழங்குடி மக்களிடையே கிறித்துவ மதத்தவர்களின் பணி மிகுதியாக நடந்து வந்த ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் அத்தகைய பள்ளிகள் தீவிர நாட்டம் செலுத்தின.
மானியத் தொகை
மானியங்களாகத் தந்த தொகையை இந்தப் பள்ளிகளைப் பயன்படுத்தி எவ்வாறு பெற்றார்கள் என்பதையும் அந்த நான்குபேர் கொண்ட குழுவின் அறிக்கை தெரிவிக்கிறது. அவதேஷ் கவுசல், தீபக் மாலிக், சுதிர் குமார் மற்றும் கே.ஆர்.மீனா ஆகிய நால்வர் அக்குழுவில் இடம் பெற்றவர் ஆவர். கிராமப்புற மக்களுக்கு முறைசாராக் கல்வியை அளிக்கும் பெயரிலும், அதற்கான பொருள்களை விநியோகிக்கும் பெயரிலும் ஏகல் வித்யாலயங்கள் மனித வள மேம்பாட்டுத் துறையின் மானியத்தைப் பெற்றன. ஒரு கிராமத்தில் நடைபெறும் அரசாங்கப் பள்ளியில் உள்ள பதிவேட்டில் உள்ள பெயர்கள், ஏகல் வித்யாலயங்கள் சிலவற்றிலும் அப்படியே இடம்பெற்றிருந்தன. அதாவது, அந்த வித்யாலயங்கள் மானியங்களைப் பெறுவதற்காகவே பெயரளவிற்கு இருந்தன!
பாட நூலில் ஒருவரின் வரலாறு
ஏகல் வித்யாலங்களில் கற்பிக்கும் ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதற்கான ஓர் அடிப்படை நூலை, ரகேஷ் போப்லி என்பவர் எழுதியுள்ளார். வித்யாலயங்களை நடத்தும் எந்தெந்த அரசு சாராத அமைப்புகளுக்கு (என்.ஜி.ஓ.,) மானியம் அளிப்பது என்பதை முடிவு எடுக்கும் குழுவில் அவர் இடம் பெற்றிருந்தார். அவர் எழுதிய நூலில் உள்ள விருசாமண்டா என்பவரைப் பற்றிய வாழ்க்கை வரலாறு விந்தையானது; விருசா (பிர்சா) கிறித்தவப் பள்ளியில் பயின்றார்; கிறித்தவ மதத்திற்கு மாற்றப்பட்டார்; மாட்டு மாமிசம் உண்ணத் தூண்டப்பட்டார்; மாணவர் விடுதியில் இருந்தபொழுது அவருடைய குடுமி வெட்டப்பட்டது; ஆகையால் மனம் நொடிந்து வீடு திரும்பினார்; துளசியை வழிபடத் தொடங்கினார்; பூணூல் அணிந்தார்; காட்டில் திரிந்தார்; கிறித்தவ மத ஊழியர்களை எதிர்த்துப் போரிட்டார்; நிலப் பிரபுக்களையும், பிரிட்டிஷ் அரசையும் எதிர்த்துப் போராடினார். சிறையில் மெல்ல மெல்ல நஞ்சு ஊட்டப்பட்டார்.
மேலும், ரகேஷ் போப்லி எழுதிய நூலில் மாடு, ராமன், சீதை மற்றும் பல இந்துக் கடவுள்களைப் பற்றி குழந்தைகளுக்கான பாடல்களை எழுதியுள்ளார்.
ஆசிரியர்களால் இடிக்கப்பட்ட சர்ச்
ஏகல் வித்யாலயா பள்ளியின் ஆசிரியர்கள் சங் பரிவாரின் இந்துத்துவா பாட முறையைக் கற்பித்ததுடன் வேறு வேலைகளையும் செய்தனர்.
ஜார்கண்டில் சிங்பூம் மாவட்டத்தில், தந்த் நகர் பகுதிக்குப் புலனாய்வுக் குழு சென்றபொழுது ஒருசெய்தி தெரிய வந்தது. மன்னேசிங் எனும் ஆசிரியர் அதைத் தெரிவித்தார். அவரும் பிற ஆசிரியர்களும் சேர்ந்து கொண்டு 2002_இல், பாதி கட்டிய நிலையில் இருந்த சர்ச் ஒன்றை இடித்துத் தள்ளினர்! ஜார்கண்ட் மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசு தலையிட்டதால் அவர்கள் மீது பதிவான குற்றம் தள்ளப்பட்டது! பள்ளிக்கூடப் பாடத்திட்டத்தில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவரும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் புதிய கல்விக் கொள்கையை வகுத்தது. இதற்கு பல கல்வியாளர்கள் பலத்த எதிர்ப்புத் தெரிவித்தனர். கல்வியைக் காவி மயமாக்க மத்திய அரசு முயற்சிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்தப் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் தயாரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுநலன் கருதி அருணாராய், பிஜி, வர்க்கீஸ், மீனா ராதா கிருஷ்ணா தயாப்ஜி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இதுபற்றி அவர்கள் தாக்கல் செய்த மனுவில், தேசியக் கல்விக் கொள்கை பற்றி முடிவு செய்யும் அதிகாரம் படைத்த மத்தியக் கல்வி ஆலோசனை போர்டின் அனுமதி பெறாமல் பாடத்திட்டத்தை மாற்ற மத்திய அரசு முடிவு செய்ததாகவும், மேலும் இது தொடர்பாக மாநிலக் கல்வி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தவில்லை என்றும் கூறப்பட்டு இருந்தது. ஆட்சி அதிகாரத்தில் உள்ள ஒரு சிலரின் மதச்சார்பு மற்றும் அரசியல் கொள்கைகளுக்கு ஆதரவாக பாடத்திட்டம் மாற்றப்படுவதாகவும் மனுவில் கூறப்பட்டு இருந்தது.
மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான மனிதவள மேம்பாட்டு அமைச்சக ஏற்பாட்டின் பேரில் கல்வியைக் காவி மயமாக்கும் நோக்கத்தில் புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு இருந்ததாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.
இதையொட்டி இந்தப் புதிய கல்விக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட புதிய பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
அத்துடன் மத்திய கல்வி ஆலோசனை போர்டுடன் கலந்து ஆலோசிக்காமல் புதிய பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்தக் கூடாது என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட கல்வி அமைப்புகளுக்கும் தாக்கீது அனுப்ப உத்தரவு பிறப்பித்தது.
பின்னர் 2002, மார்ச் 22ஆம் தேதி இந்த இடைக்காலத் தடை உத்தரவில் சில திருத்தங்களைச் செய்ததோடு சமூக அறிவியல், வரலாறு, இந்தி ஆகிய புத்தகங்கள் தவிர மற்ற பாடப் புத்தகங்களை அச்சிட்டு விற்பனை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்த நிலையில் இடைக்காலத் தடையை நீக்கக் கோரி தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலின் (என்.சி.இ.ஆர்.டி.) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
புதிய பாடத் திட்டத்தின்படி தயாரிக்கப்பட்டு உள்ள சமூக அறிவியல், வரலாறு, இந்தி ஆகிய பாடப் புத்தகங்களை வெளியிட அனுமதிக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.பி. பரூச்சா, சிவராஜ் பாட்டீல், எச்.கே.சீமா ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் முன்னிலையில் 12.4.2002 அன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் ஹரிஷ் சால்வே வாதாடினார். மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் எப்.எஸ்.நரிமன், எம்.என்.கிருஷ்ணமணி ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
இருதரப்பு விவாதத்தையும் கேட்ட நீதிபதிகள் புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க முடியாது. தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. புதிய பாடத்திட்டத்திற்குத் தடை விதித்து ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட ஆணையை எந்தத் திருத்தமும் செய்ய முடியாது.
புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்ட பாடப் புத்தகங்களை வெளியிட அனுமதிக்க முடியாது என்று தீர்ப்புக் கூறினர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த ஆணை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது.
* * *
வாஜ்பேயி பிரதமராக இருந்த கால-கட்டத்தில் வரலாற்றுக் குழு, பாடத்திட்டக் குழுவை எல்லாம் மாற்றி அமைத்தனர். இந்திய வரலாற்று ஆய்வுக் கழகம் முற்றிலும் காவிக் கழகமாக மாற்றி அமைக்கப்பட்டது. வரலாற்றைப் புரட்டும் வேலையில் இறங்கியுள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ். மனப்பான்மை கொண்ட 18 பேர் புதிதாக நியமிக்கப்பட்டார்கள். அவர்களுள் கே.எஸ்.லால், பி.பி.லால், பி.பி.சின்ஹா ஆகியோர் பாபர் மசூதி இருந்த இடத்தில் அதற்கு முன் ராமன் கோவில் இருந்தது என்று சரித்திரம் சொன்னவர்கள்.
பேராசிரியர் சுமித் சர்க்கார், பேராசிரியர் கே.எம்.பணிக்கர், உறுப்பினர் செயலாளர் டி.கே.வி.சுப்பிரமணியம் உள்ளிட்ட 12 புகழ் பெற்ற வரலாற்று ஆய்வாளர்கள் இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்திலிருந்து(I.C.H.R.)வெளியேற்றப்பட்டார்கள். பாபர் மசூதியை இடிப்பதற்காகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கெட்ட பெயர் எடுத்த -_ வரலாற்றாளர் என்று கூறிக் கொள்ள வரலாற்றுத் தளத்தில் எத்தகைய தகுதியும் இல்லாதவர்கள் இந்தப் பொறுப்புகளில் நியமிக்கப்படத் தேர்ந்தெடுக்கப்-பட்டார்கள். மசூதி இருந்த பகுதியில் இராமர் கோவில் இருந்தது எனப் பொய்யான ஆதாரத்தைத் தந்த வரலாற்றாளரான பி.ஆர்.குரோவர் இந்திய வரலாற்று ஆய்வுக்கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
2. இந்திய சமூக விஞ்ஞான ஆய்வுக் கழகத்தின் தலைவராக (I.C.S.S.R.) பா.ஜ.க.,வின் முன்னாள் டெல்லி பாராளுமன்ற உறுப்பினர் எம்.சோந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
3. வரலாற்றிலும் தொல்பொருள் ஆய்விலும் பா.ஜ.க.வின் பொய்யான கண்டுபிடிப்புகளைத் தவிடுபொடியாக்கிய புகழ்பெற்ற வரலாறு மற்றும் தொல்பொருள் ஆய்வாளரான பேராசிரியர் ஜரஜ்பான் கல்வி ஆலோசனைக் குழுத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
4. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குழுவின் (N.C.E.R.T.) பேராசிரியர்களையும், விரிவுரையாளர்களையும் தேர்வு செய்வதற்கான குழுவில் டாக்டர் கே.ஜி.ரஸ்தோகி நியமிக்கப்பட்டார். ஆர்.எஸ்.எஸின் பிரச்சாரகர்களில் ஒருவரான கே.ஜி.ரஸ்தோகி 1947இல் நடைபெற்ற மதக்கலவரத்தில் பங்கேற்றதற்கான மறைக்க முடியாத சான்றுகளை உடையவர். அவர் தனது ஆப் பிடி (Aap biti) என்ற சுயசரிதையில் தனது சொந்த வார்த்தைகளில் அந்த இடத்தில் ஒரு விநோதமான நிகழ்ச்சி நடந்தது. தாக்குவதற்காகச் சென்றவர்கள் (இந்துக்கள்) கொலை நடந்த வீட்டில் காணப்பட்ட ஒரு அழகான பெண் (முஸ்லீம் பெண்) தொடர்பாகத் தங்களுக்குள்ளேயே ஒருவரோடு ஒருவர் சண்டையிடத் துவங்கினார்கள். தாக்கச் சென்றவர்கள் தங்கள் நோக்கத்தை மறந்து அப்பெண்ணை உரிமை கொண்டாடப் போட்டி-யிட்டார்கள். நான் அவர்களை மிரட்டினேன். பின் மனதுக்குள் ஒரு தீர்வு வந்தது. நான் அந்தப் பெண்ணைச் சுட்டுக் கொன்றேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இவர் தூக்குமரத்தில் தொங்க-விடப்படவில்லை. சிறையில்கூட அடைக்கப்படவில்லை. ஆனால், இந்த நாட்டின் முதன்மையான கல்வி நிறுவனத்தில் கல்வியாளர்களைத் தேர்வு செய்யும் குழுவில் நியமிக்கப்பட்டார். 5. நாட்டின் உயர் கல்வியைச் சீரமைக்க பல்கலைக்கழக மான்யக் குழுவின் செயலாளராக பா.ஜ.க. தொடர்புடைய ஹரிகௌதம் என்பவர் நியமிக்கப்பட்டார்.
ஸ்டேட்ஸ்மென் (6.11.99) ஏட்டின் தலையங்கம்.
ரஸ்தோகியின் நியமனக் காலம் முடிவதற்குள் இந்திய வரலாறு முற்றிலும் மாற்றி எழுதப்படும். இந்துக்கள் தேச பக்தர்கள் எனவும் அனைத்து சிறுபான்மையினரும் மதவாத ஆக்கிரமிப்பாளர்கள் என்றும், நாட்டின் அனைத்துக் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்கப்படும் என்று ஸ்டேட்ஸ்மென் தலைப்பில் தீட்டியுள்ளது.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பாசிசக் கண்ணோட்டத்தோடு பாடத்திட்டங்கள் அமைக்கப்பட்டு பிஞ்சு நெஞ்சங்கள் நஞ்சுக் காடுகளாக மாற்றப்பட்டு வருகின்றன. சரஸ்வதி, சிசுமந்திர் என்கிற பெயரிலும், வித்யாபாரதி என்கிற பெயரிலும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் நாடெங்கும் கல்வி நிலையங்களை நடத்தி வருகிறார்கள்.
14 ஆயிரம் பள்ளிகளையும், 60 கல்லூரிகளையும் நடத்தி வருகிறார்கள்; மேல்படிப்புக்கான 25 கல்வி நிறுவனங்களும் உண்டு. ஜெய்ப்பூர், அஹ்மத் நகர் ஆகிய நகரங்களில் இந்துத்துவா ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கின்றனர். 18 இலட்சம் மாணவர்கள் இவர்களின் இந்துத்துவா கோட்பாட்டுக் கல்வி நிறுவனங்களில் பயின்று வருகின்றனர்.
நவம்பர் 14ஆம் நாள் நேருவின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாகக் கொண்டாட அரசு ஆணையிருந்தும் கோகுலாஷ்டமியைத்-தான் (கடவுள் கிருஷ்ணன் பிறந்த நாளாம்) குழந்தைகள் தினமாகக் கொண்டாடுகிறார்கள். டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாட வேண்டும் என்பதே அரசு ஆணை. ஆனால், இவர்கள் நடத்தும் பள்ளிகளிலோ, வேதகால முனிவரான வியாசரின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாகப் போற்றி வருகின்றனர். (புராண வியாசரின் பிறந்த நாளை எப்படித்தான் தேடிப் பிடித்தார்களோ?)
உத்தரப்பிரதேசத்தில் இவர்களின் சரஸ்வதி சிசுமந்திர் பள்ளியில் ஏழாம் வகுப்பில் இடம் பெற்றுள்ளவை:
முலாயம் சிங் யாதவ் இக்கால இராவணன் என்று ஏன் அழைக்கப்படுகிறார்?
பாபர் மசூதியை இடிக்கும் முயற்சி நடந்தபோது முலாயம்சிங் யாதவைச் சேர்ந்த ஆட்களின் துப்பாக்கிக் குண்டுகளால் எத்தனை இந்துக்கள் கொல்லப்பட்டனர்–?
(அவுட்லுக், 10.5.1999)
* * *
இப்பொழுதோ ஒரு பிற்போக்கான சனாதனவாதியான எல்லப்ப பிரகத சுதர்ஷன் ராவ் என்பவரைத் தட்டிப் பார்த்து இந்திய வரலாற்று ஆய்வுக்குழுவுக்கு (Indian Council for Historial Research) தலைவராக்கியுள்ளனர்..
சங்பரிவார் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் மிகவும் தீவிர உறுப்பினர். இவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் துணைப் பிரிவான அகில்பாரதீய இதிஹாஸ் யொஜனா (இந்திய வரலாற்று பாதுகாப்பு அமைப்பு)வின் ஆந்திர மாநிலத் தலைவராவார்.
காக்கடியா பல்கலைக்கழகத்தின தெற்காசிய மதம் குறித்த பாடத்திட்டத்தின் தலைவராக உள்ளார். இவர் தற்போது மகாபாரதம் நடந்த தேதியை நிர்ணயிக்கும் திட்டத்திற்குத் தலைமையேற்று பல்கலைக்கழக மாணவர்-களுடன் சேர்ந்து ஆய்வு நடத்தி வருகிறாராம். இவரது மகாபாரத போர் நடந்த தேதி ஆய்விற்கு கோவாவைத் தலைமை-யகமாகக் கொண்ட சனாதன தர்ம சாஸ்தா சாரிட்டபிள் டிரஸ்ட் பொருளாதார உதவி செய்துள்ளது.
மிகவும் குழப்பமான கற்பனைக் கதையாக புராணங்கள் மற்றும் இதிகாசங்களை ஆய்வு செய்து மகாபாரதம் பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் இடையே யுத்தம் நடந்த காலத்தையும் தேதியையும் நிர்ணயம் செய்வார்களாம்.
இந்திய வரலாற்று ஆய்வு மய்யக் குழுமத்தில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராவிற்கான தகுதி குறித்து தகவலில் எல்லப்ப பிரகர சுதர்ஷன் ராவ்: மகாபாரத் நடந்த காலத்தை பல்வேறு சிறப்பு ஆய்வுகளின்படி உறுதியாகக் கூறத் தகுதியானவர்;
இவர் புராண இதிகாசங்களில் குறிப்பிடப்-படும் கிரகணம், நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு, பேரழிவு மற்றும் பெரும் பஞ்சங்களைக் கணக்கில் எடுத்து மகாபாரத காலத்தை நிர்ணயம் செய்துவிடுவாராம்; இந்தத் தகுதி ஒன்றே போதுமே() இந்திய வரலாற்றை நிர்ணயிக்க.
இவர் இந்தியாவில் வாழும் பழங்குடி மக்களின் மதம் குறித்து ஆய்வு செய்து அவர்களின் மூல மதம் சனாதனமே என்று உறுதிபடக் கூறுகிறாராம். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் துணை அமைப்பான அகில பாரதிய இதிஹாஸ் யொஜனா 1978ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தூண்களில் ஒருவரான ஆம்தே மற்றும் மொர்பந்த் பிங்களே போன்றோர்களால் இந்திய வரலாற்றை இந்துமதக் கலாச்சார வரலாறாக மாற்றும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது அவர்களின் எண்ணப்படியே இந்திய வரலாற்று ஆய்வுக் குழுமத்தின் தலைவராக தீவிர இந்துத்துவவாதி ஒருவரே நியமிக்கப்-பட்டுள்ளார். இந்திய வரலாறு சரஸ்வதி நதிக்கரையில் இருந்து ஆரம்பித்தது என்றும் தென்பகுதி மக்கள் ஆப்பிரிக்கக் கண்டங்களில் இருந்து கப்பல் மூலமாக வந்தவர்களாக இருக்கலாம் என்றும் கர்நாடகாவில் வாழும் நீக்ரோக்கள் போன்ற மக்களைச் சான்றாக வைத்துக் கூறுகிறார்.
இந்தியா என்பது இந்துக்களின் ராஜ்யம். எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாகவிருந்தாலும் அவர்கள் இந்துக்களே என்று அரசு வானொலியை சட்ட விரோதமாகப் பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசினாரே (3.10.2014). நான் ஹிந்து நேசனலிஸ்ட் என்று நரேந்திர மோடி அழுத்திச் சொன்னதுண்டே!
இந்த நிலையில் வரலாற்றுக் குழுப் பாடத்திட்டங்கள் எல்லாம் காவி நஞ்சைக் கக்கும் ஆதிசேஷன்களாக ஆவதில் ஆச்சரியம் ஏது? மக்கள் விழிப்புணர்வு மட்டும்தான் இதற்கு மாற்று மார்க்கம்!
————————–
பல்கலைக்கழகங்களில், கருமாதி மந்திரம் உள்படச்
சொல்லிக் கொடுக்கும் பாடத்திட்டம்
ஈமச்சடங்குகள், அன்னதானம், மொட்டை யடிப்பது, திருமணம் செய்வது, பெயர் வைக்கும் சடங்கு போன்ற அருமையான விஷயங்களை அளிக்கும் புதிய பாடத்திட்டங்களை நம் நாட்டிலுள்ள 21 பல்கலைக்கழகங்கள் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளன. புரோகித பத்யாகாரம் என்ற பெயர் கொண்ட இந்தப் பாடத்திட்டத்தைப் பயின்று புரோகிதர் ஆக விரும்புபவர்களுக்கு சிரார்த்தம் செய்வது, கல்யாண மண்டபம் அமைப்பது, வீட்டில் அமைதியினை நிலைநாட்டும் வழிகள் ஆகியவைபற்றி வேத சடங்குகளில் உள்ள நெளிவு சுளிவுகளைக் கற்பிக்க கர்மகாண்டம் என்னும் தனித் துறையே இப்பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படும். வேதகால ஜோதிடப் பாடம் போன்றே, இப்புரோகிதப் பாடத்திட்டத்திலும், பட்ட, முதுகலைப் பட்ட, முனைவர் பட்டப் படிப்புகள் அளிக்கப்படும். இதற்காக பல்கலைக்கழக மான்யக் குழு பல்கலைக் கழகங்களுக்கு விசேட மான்யம் அளிக்கும்.
இப்பாடத்திட்டம் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பதைத் தெரிவிக்க மறுத்த பல்கலைக்கழக மான்யக் குழுவின் தலைவர் அரி கவுதம் பயிற்சி பெற்ற புரோகிதர்களுக்கான தேவை அமெரிக்கா, இங்கிலாந்து, அய்ரோப்பா,இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளில் அதிகமாக நிலவுவதாகவும், இப்பணியினைச் செய்ய போதுமான பயிற்சி பெற்ற புரோகிதர்கள் தற்போது இல்லை என்றும் கூறுகிறார்.
டில்லி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரின் கருத்தறிய இத்திட்டத்தினைப் பல்கலைக்கழக மான்யக் குழு அவர்கள் முன் வைத்தது. இச்சங்கத்தின் தலைவர் சரஸ்வதி மஜும்தார் இத்திட்டத்தினைக் கடுமையாக எதிர்க்கிறார். இது போன்ற பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்த முயல்பவர்கள் எத்தகைய மனச்சாட்சி படைத்தவர்களாக இருப்பார்கள்? புரோகிதர் களுக்கான தேவை உள்ளதென பல்கலைக்கழக மான்யக் குழு கூறுகிறது. நாளை மூடநம்பிக்கை யாளர்களும் தேவைப்படுகின்றனர் என்றால், அதனையும் பாடத்திட்டமாக அவர்கள் அறிமுகப்படுத்துவார்களா?
ஓரடி பின்னோக்கி!
இதுபோன்றதொரு பாடத்திட்டத்தைத் தொடங்குவது, அனைத்து வகையான தெளிவற்ற, புரியாத மூடநம்பிக்கைகள் பற்றிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான வழி வகுக்கும் இப்பாடத் திட்டத்தினைத் தொடங்குவதன் மூலம் நாம் ஓரடி பின்னோக்கிச் செல்வோம் என இயற்பியல் துறைப் பேராசிரியர் விஜய் வர்மா கூறுகிறார்.
எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தினைப் பற்றிய கல்வியையும் அரசு செலவில் அளிப்பதை அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய வரலாற்றாசிரியர் சுமித் சங்கர் இப்பாடத்திட்டம் தொடங்கப்படுவது மிகவும் இழிவு தரத்தக்கதாகும் என்று கூறுகிறார்.
இக்கருத்துகளை மறுத்த கவுதம் மற்ற பல்கலைக்கழகங்களிலும் இதுபோன்ற பாடத் திட்டங்களைத் தொடங்கச் செய்ய தான் விரும்பு வதாகக் கூறினார். கிறித்துவ பாதிரியார், சீக்கிய குருமார், இஸ்லாமிய மதகுருமாரான தீன்யாத் போன்ற பாடத்திட்டங்கள் தொடங்கப்பட பல்கலைக் கழக மான்யக் குழுவிற்கு பெருமளவு கோரிக்கைகள் இதுவரை வந்துள்ளன.
கர்மகாண்ட பாடத்திட்டத்திற்கானப் பாடப் புத்தகங்கள் பெரும்பாலும் பார்ப்பனப் புரோகிதர் களான பண்டிட் ரம்பவான் அஸ்ரா, பண்டிட் லால் பிகாரி மிஸ்ரா, சதுர்வேதி, வித்தல் தீக்சித் போன்றவர்களாலேயே எழுதப்படுகின்றன. தங்களது இந்துத்துவா செயல்திட்டத்தின்படி பன்முகத்தன்மை கொண்ட இந்தியக் கலாச்சாரத்தினை அழிப்பதற்கான ஒரு முயற்சியே இதுபோன்ற கல்வி அறிமுகப் படுத்துவது என மஜும்தார் நம்புகிறார்.
இச்சடங்குகள் அனைத்தையும் பார்ப்பனர்களே செய்வதால், மறுபடியும் பார்ப்பனர்களுக்கு ஒரு உயர் நிலை ஏற்படுத்தித் தருவதாகவே இது இருக்கும் என அவர் சுட்டிக் காட்டுகிறார். முன்னமே உள்ள மதத் துறையில் இப்பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படலாம் என்ற கருத்துத் தெரிவிப்பவர்களும் உள்ளனர். முக்கியமான பாடங்களுக்கு, குறிப்பாக அறிவியல் பாடங்களுக்கான நிதி ஒதுக்கீடு பெருமளவு குறைக்கப் படும்போது, இதுபோன்ற பொருளற்ற, தேவையற்ற பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு அவர்கள் பணத்தை வீணாக்குகின்றனர் என மூத்த அறிவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.
– பேராசிரியர் மஜும்தார், டைம்ஸ் ஆஃப் இந்தியா, 4.2.2002, ராஷ்மே செகாய்
————————–
மதவெறி நோக்கில் பாடப் புத்தகங்கள்: அறிஞர்களின் மவுனம்
ஆபத்தானது – ரொமிலா தாப்பர் எச்சரிக்கை!
மதவெறி நோக்கில் பாடப் புத்தகங்கள் திருத்தப்படுவது குறித்தும், மதச்சார்பின்மை அடிப்படையிலான புத்தகங்கள் பாடத்திட்டத்தி லிருந்து நீக்கப்படுவது குறித்தும் அறிஞர்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என்று வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர் வற்புறுத்தினார். டெல்லியில் நிகில் சக்கரவர்த்தி நினைவு அறக்கட்டளை சார்பில், கேள்வி எழுப்புவதா? கேள்வி எழுப்பாமல் இருப்பதா? – இதுதான் இப்போதைய கேள்வி என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார். முன்பை விட இப்போது ஏராளமான அறிஞர்கள் உள்ளனர். ஆனால், அதிகாரத்தோடு மோத அவர்கள் மறுக்கின்றனர். சிந்தனைச் சுதந்திரத்தின் மீது தாக்குதல் தொடுக்கப்படும்போதுகூட அவர்கள் மவுனம் சாதிக்கின்றனர். ஏனெனில் அவர்கள் சர்ச்சையற்ற முறையில் இயங்க விரும்புகின்றனர் அல்லது தங்களது அறிவாற்றலை அமுக்கிக் கொள்ள சம்மதிக்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டார். பண்டைய இந்தியாவில் பிராமணர் அல்லாத சிந்தனையாளர்கள், நாத்திகர்கள் அல்லது கடவுள் மறுப்பாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு ஒடுக்கப்பட்டனர். தற்போது இந்துத்துவா போதனைகளை ஏற்க மறுப்பவர்கள் அத்தனைப் பேரும் மார்க்சிஸ்ட்டுகள் என்று முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்படுகின்றனர் என்று ரொமிலா தாப்பர் குறிப்பிட்டார்.
பகுத்தறிவுச் சிந்தனை என்பதுதான் நம்முடைய அறிவுலகின் பாரம்பரியம். அதை முன்னெடுத்துச் செல்ல அறிஞர்கள் துணிச்சலுடன் முன்வர வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், இனவெறி, மதவெறி அடிப்படையில் மனித உரிமைகள் மறுக்கப்படுவதற்கு எதிராக அறிஞர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்றார்.
இன்றைய நாளில் அறிஞர்கள் என்று அறியப்படுபவர்கள் அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்ப அஞ்சுகின்றனர்.
அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களது சிந்தனைகளைத் திணிக்கும்போது அதற்கு எதிராக எதுவும் பேசாமல் மவுன சாட்சியாகிவிடுகின்றனர் என்றார் அவர். மதச்சார்பற்ற கோட்பாடுகளை முன்வைக்கும் புத்தகங்கள் தடை செய்யப்படுகின்றன. பாடத்திட்டங்கள் மதவெறி அடிப்படையில் திருத்தி எழுதப்படுகின்றன. மத மற்றும் அரசியல் தலையீடுகளின் காரணமாக இவ்வாறு நடக்கிறது. அரசியல் அதிகாரத்தைக் கண்டு அறிஞர்கள் அஞ்சுவதால்தான் சிறு எதிர்வினையைக் கூட செய்வதற்கு இவர்கள் தயங்குகின்றனர் என்று குறிப்பிட்ட ரொமிலா தாப்பர், மத அடிப்படையிலான அரசியல் திட்டமிட்டு வளர்க்கப்படுவதால், மக்களிடையே பகைமை உருவாக்கப்படுகிறது. இதனால் சுதந்திரமான சிந்தனை மறுக்கப்படுகிறது. அறிஞர்கள் இத்தகைய போக்கை எதிர்த்து மேலும் மேலும் கேள்வி எழுப்ப வேண்டும். அறிவுத்தளத்தில் போர் புரிய வேண்டும். ஆனால், இது மிகவும் குறைவாகவே உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். (தி இந்து 27.10.2014)