ஆடுகளின் மீது அன்பைப் பொழியும்… …மோடி!

நவம்பர் 01-15

ஆடுகளின் மீது அன்பைப் பொழியும்… …மோடி!

– சிற்பா அம்பேட்கர்

மோடி என்னும் வாய்ச்சொல் வீரரின் சமீபத்திய கவர்ச்சிமிகு  அறிவிப்புதான் இந்த சுவச்ச பாரத். அதை தொடங்கின இடம் எது தெரியுமா?  தில்லியின் வால்மிகி பஸ்தி என்னும் வால்மிகி ஜாதியைச் சார்ந்த தீண்டப்படாத துப்புரவுத் தொழிலாளிகள் வசிக்கும் பகுதி.  சுத்தம் என்பது துப்புரவுத் தொழிலாளிகளின் வேலை மட்டுமல்ல, நம்முடைய கடமையும் கூட  என்று வாய்ச்சவடால் அடித்தபின்பே வால்மீகி பஸ்தியை தேர்ந்தெடுத்திருக்கிறார் மோடி.  உண்மையிலேயே துப்புரவுத் தொழிலாளிகள் மீது இவருக்கு அக்கறை இருக்கிறதா? அவர்களின் இழிநிலைக்குக் காரணம் – தான் போற்றும் இந்து சனாதன மதம்  என்ற புரிதல் இருக்கிறதா? அந்த இழிநிலைக்குக் காரணமான ஜாதியமைப்புக்கெதிராக ஒரு துரும்பைக் கிள்ளிப் போடுவாரா  என்பதை அலசிப்பார்க்க கீழுள்ள பத்திகளை கவனமாக வாசியுங்கள்.

எந்த வால்மிகி பஸ்திக்குப் போனாரோ அந்த வால்மிகி சமூகத்து மக்களை வீட்டில் சிறைபிடித்து வைத்துக் கொண்டுதான், மோடி குப்பை கூட்டினார். அது அந்த மக்களுக்கு  எந்தளவுக்குத் தொல்லையாக இருந்தது  என்பதை அங்கிருக்கின்ற மக்களே  (http://articles.economictimes.indiatimes.com/2014-10-03/news/54599633_1_modis-visit-security-cover-narendra-modi)

(அக்டோபர் 3) செய்திக் குறிப்பில் தெரிவித்திருக்கிறார்கள். விடிகாலை 5 மணிக்கே அந்தப் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்ட பாதுகாப்புப் படையினர், பால்கனிகளில் நின்றபடி கூட மோடியைப் பார்க்கவிடாமல், தொலைக்காட்சிகளில் பாருங்கள் என்று வீட்டுக்குள் அடைத்தனர். கிட்ட அண்ட விடாத இந்த மகான்தான் வால்மிகி இளைஞர்களை அர்ச்சகர்களாக்கு வோம்  என்று குஜராத்திலும் வாய்ச்சவடால் அடித்திருந்தார். தாழ்த்தப்பட்ட ஜாதி ஆண்களை அர்ச்சகர்களாக்குவோம் என்று மோடி அறிவித்தது வரவேற்கத் தக்கதாக தோன்றினாலும், அது குஜராத்தில் கடுமையான தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாகும் வால்மீகி சமூகத்தின் உண்மையான பிரச்சினைகளிலிருந்து திசைதிருப்பும் மோசடி தவிர வேறொன்றும் இல்லை. தாழ்த்தப்பட்ட மக்கள் வரலாற்று ரீதியாக சந்தித்து வரும் கொடுமைகள் குறித்து மோடி இதுவரை பேசியதேயில்லை என்று கூறலாம்.  ஆக,  இது தலைப்புச் செய்திகளில் இடம்பெறும் உள்நோக்கம் கொண்ட  பச்சை இரட்டை வேடமன்றி வேறில்லை.

ஒளிரும் குஜராத் குறித்து தொடர்ந்து ஊடகங்கள் நிரம்ப பேசி, பொய்களை அள்ளிவீசி மோடியை மத்திய ஆட்சி கட்டிலிலும் அமர்த்திவிட்டன. இது ஊடகங்கள் மறைத்து வைத்த அசிங்கத்தை அம்பலப்படுத்த வேண்டிய தருணம். தாழ்த்தப்பட்ட இளைஞர்களுக்கு  அர்ச்சகர் பயிற்சி அளிக்கும் புரட்சியை செய்யக் கிளம்பியுள்ள(!) இந்து இதயங்களின் சாம்ராட் மோ(ச)டியை, சுவச்ச பாரத்  என்னும் பெயரில் செய்யும் சித்துவிளையாட்டுகளை அம்பலப்படுத்த வேண்டிய தேவையின் பொருட்டே இந்தக் கட்டுரை.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு அர்ச்சகர் பயிற்சி என்ற இந்த திட்டத்திற்காக மோடியின் அரசு ஒதுக்கிய தொகை 22.50 லட்சம்.  பெருமுதலாளி டாட்டாவின் நானோ கார் தொழிற்சாலைக்கு மோடியின் அரசு 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வழங்க ஒப்புக் கொண்டிருந்த கடன் தொகை மட்டும் ரூ.545 கோடி. முதலாளிகளுக்காக கோடிகளை ஒதுக்க முடிந்த மோடிக்கு, தலித் மக்களின் சுயமரியாதைக்கான திட்டமென்று பீற்றிக் கொள்ளும் திட்டத்திற்கு சில லட்சங்களை மட்டும் ஒதுக்கமுடிந்ததே மோடியின்  அக்கறையின் லட்சணத்தை புரிந்து கொள்ள போதுமானது.

இந்த திட்டத்தின்  கீழ் பயிற்சி பெறுகின்ற மாணவர்களுக்கு சமஸ்கிருத அறிவு ஊட்டப்படுவதன் மூலமாக அவர்கள் சுயமாக பூஜை, புனஸ்காரங்களில் ஈடுபட இயலும்.  இதற்கான பயிற்சி சோம்நாத் சமஸ்கிருத வித்யா பீடத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்-பட்டுள்ளது. இது உண்மையிலேயே, சமூக சமத்துவத்திற்கான முன்னெடுப்பா அல்லது இந்து சமூகம் செய்யும் கொடுமைகளிலிருந்து விடுபட, இந்து மதத்தை விட்டு வால்மிகி சமூகம் வெளியேறிவிடாமல் தடுக்கும் கயமைத்தனமா? (சுய விருப்பத்தோடு மதமாறும் உரிமையை தடுக்க பா.ஜ.க கும்பல் தீட்டியுள்ள திட்டமென்று இதை புரிந்து கொள்ளலாமா?)

மோடிக்கு ஜால்ரா தட்டும் காவி ஆதரவாளர்கள் மோடியைப் புரட்சியாளராகவும்,  சீர்திருத்தவாதியாகவும் விளம்பரப்படுத்துகிறார்கள். சிலரோ,  அவர் பிற்படுத்தப்பட்டவர் ஆகையால், தலித் மக்களையும் பிற்படுத்தப்பட்டவர்களையும் சுயமரியாதையோடு இந்து சமூகத்தில் வாழ வைக்கும் முயற்சி என்று புகழ்கிறார்கள். வால்மீகி சமூகத்தினரிடையே ஒரு கூட்டத்தில் பேசும் பொழுது, நீங்கள் நகரத்தின் அர்ச்சகர்கள், நகரத்தை சுத்தப்படுத்தும் நீங்கள் அர்ச்சகர்களைவிட உயர்ந்தவர்கள் என்றார் மோடி. அவருடைய சொற்கள் கேட்க இனிப்பாகத்தான் இருக்கின்றது. (ஆனால், மலமள்ளும் தொழிலாளர்கள் அதே கையோடு தேனை தொட்டு சாப்பிட முடியுமா என்ன?).  சுவச்ச பாரத் என்ற ஆடம்பரமான முழக்கத்தின் மூலம் பொதுச்சமூகத்திற்கு அழைப்பு விடுப்பதாக ஜம்பம் காட்டுகிறாரே மோடி, அந்த மோடி வாங்க  ஜாதி வேற்றுமை பார்க்காம மலக்குழிக்குள்ள இறங்கலாம்னு கூப்பிடுவாரா?  எவனாவது வருவானா? ஹே ராம் மூலம் காவிகளைத் தோலுரித்துக் காட்டியுள்ளேன்  என கூறிக் கொள்ளும் கமல், மோடி அழைத்தவுடன் நான் ஆதரவு தர்றேன்னு போய் நின்னாரே… அவர் இறங்குவாரா மலக்குழிக்குள். மலக்குழிக்குள் இறங்குறது ஒருத்தன், மலமள்ளுறது ஒருத்தன்… ஆனா, மத்தவனெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்கள் குப்பையைச் சுத்தப்படுத்துன  இடத்தில் நாலு இலையை அள்ளிப் போட்டு, அதை பெருக்கிற மாதிரி நடிக்கிறதுக்கு பேரு சுவச்ச பாரத்தாம், அதை நாமும் நம்பணுமாம்.

இதுபோன்ற கரிசனங்களின் போர்வையில் மோடி சாதிக்க விரும்புவது என்ன? அதை புரிந்து கொள்ள, சமீபத்தில் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் சிக்கிய ஆசாராம் பாபுவோடு கலந்து கொண்ட சபரி மேளாவில் (2006-ஆம் ஆண்டு) மோடி பேசியதை நினைவில் கொள்ளுதல் சிறந்ததாக இருக்கும்.

பழங்குடியினர்களுக்கு மருத்துவ உதவிகளையும், உணவையும் வழங்கி வேறு மதத்திற்கு மாற்றுவதை இனி சகித்துக் கொள்ள முடியாது. சொந்த மதத்திற்கு திரும்பும் காலம் வந்துவிட்டது.

(http://articles.timesofindia. indiatimes.com/2006-02-11/ahmedabad/27805644_1_morari-bapu-narendra-modi-dangs)

எது சொந்த மதம்? அப்படி இவர்கள் சொல்லும் சொந்த மதத்திற்கு திரும்பினால் என்ன சுயமரியாதை இருக்கும். என்ன ஜாதியில் சேர்த்துக் கொள்வார்கள்? இந்து மதத்திற்கு மாறுவதால் என்ன பொருளியல், வாழ்வியல் முன்னேற்றம் நிகழ்ந்துவிடப் போகின்றது. இவர் மதம் மாறுவதை  சாப்பாட்டுக்காக மதம் மாறுபவர்கள் என்று இழிவுப்படுத்துவதற்கு? இவர் யார் மதம் மாறுவதை சகித்துக் கொள்ளாமல் இருக்க, இவருக்கும் நமக்கும் என்ன தொடர்பு? கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்தால்.

எங்கள் அடிமைகள் மதம் மாறிய ஒரே காரணத்தினால் எப்படி சுயமரியாதை கோரலாம், எங்கள் அடிமைகளை நாங்கள் இழக்க தயாராக இல்லை. என்னும் வக்கிரம் தவிர வேறென்ன வெங்காயமிருக்கின்றது இந்த உரையில்? இதையொட்டி, இந்த தலித் அர்ச்சகர் திட்டத்தையோ, சுவச்ச பாரத் திட்டத்தையோ பரிசீலித்தால், தாழ்த்தப்பட்ட மக்களை இந்து மதச் சங்கிலிக்குள் பிணைத்து வைக்கும் திட்டத்தை புரிந்து கொள்ளுதல் எளிதாகும். புரிதலை இன்னும் எளிதாக்க இன்னும் சில தகவல்களை சரிபார்ப்போம்.

(அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் அடுத்த இதழில்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *