நான் என்ன அதிசயம் செய்துவிட்டேன்?
தஞ்சையில் தனக்கு வேன் அளிக்கப்பட்ட நிகழ்ச்சியில் தந்தை பெரியார் உரையாற்றும் போது, இந்த நாட்டைச் சேரன் ஆண்டான் சோழன் ஆண்டான் என்கிறீர்களே! ஏன் நாம் மட்டும் படிக்க முடியவில்லை. காரணம், அவன் எல்லாம் மதத்தின்படி ஆண்டான். அந்த மதத்திலே சூத்திரன் படிக்கக்கூடாது என்று கூறுகிறது. குனிந்த குதிரையும், படித்த சூத்திரனும் ஒன்று என்று மனுதர்மத்திலே இருக்கிறது. அதன்படி, அரசர்கள் ஆண்டதினாலே நாம் எல்லாம் படிக்க வாய்ப்பு இல்லாது போயிற்று. நாம் தலையெடுத்து முயற்சி செய்தோம். நமக்குக் கல்வி கிடையாது என்று கூறும் மதத்தை ஒழிப்பது, கடவுளைத் தீர்த்துக் கட்டுவது, அவற்றிற்கு ஆதரவளிக்கும் காந்தியை ஒழிப்பது, அவற்றை எல்லாம் காப்பாற்றும் பார்ப்பானைத் தரைமட்டமாக்குவது என்று முயற்சி செய்து பாடுபட்டோம். அதனால் மாற்றம் பெற்றோம். சும்மா என்னைப் பாராட்டுகிறார்கள். உண்மை என்ன என்றால் கடவுளைச் செருப்பால் அடித்ததால்தான் முன்னேறினோம்; மதத்தை மீறியதால்தான் பிழைத்தோம். நான் என்ன அதிசயம் செய்துவிட்டேன்? மலையைப் புரட்டினேனா? வில்லை வளைத்தேனா? ஆகாயக் கப்பலைக் கண்டுபிடித்தேனா? இல்லையே. நான் ஏதாவது செய்தேன் என்றால், சாமியைச் செருப்பாலடித்ததுதான் – சாக்கடையில் போடச் செய்ததுதான். தோழர்களே! சிந்தியுங்கள்! இந்தக் காரியத்தை நாம் செய்யவில்லை என்றால், நாம் சூத்திரன்தானே? மறுக்க முடியுமா? இந்து லா விலேயே இருக்கிறதே! அதில் இரண்டு பிரிவுதானே இருக்கிறது. பிராமணன், சூத்திரன் என்ற இரண்டு பிரிவுதானே. இதுதானே இந்து மதம். இந்து என்று ஒப்புக் கொண்டால் அவன் பண்டார சன்னதியாக இருந்தாலும் சூத்திரன்தானே. ஒவ்வொரு பயலும் நெற்றியிலே சாம்பலைப் பூசிக்கொள்கிறானே – சிவ சிவா என்கிறானே யோக்கியம் கெட்டபயல்? அவனுக்கு அர்த்தம் தெரியுமா? அர்த்தம் தெரிந்தால் அவன் அப்படிச் சொல்வானா? எந்த அளவுக்கு நாம் மதத்தை ஏற்றுக் கொள்கிறோமோ, அந்த அளவுக்கு நாம் தாசிப்புத்திரன் ஆவோம். நம்முடைய இழிவுக்கு நாமே இன்றைக்குக் காரணமாகிறோம். ஒருவன் கோயிலுக்குப் போகிறான் என்றால் அவன் யோக்கியதை என்ன? கோயிலுக்குள் எந்த இடம் வரை உள்ளே போகிறான்? கர்ப்பக்கிரகத்திற்குள் போக உனக்கு யோக்கியதை உண்டா? ஏன் உனக்கு அந்த யோக்கியதை இல்லை. நீ சூத்திரன்; அதனாலே உள்ளே போக உனக்கு உரிமை இல்லை. இதைப்பற்றி நீ வெட்கப்படுகிறாயா? இந்த இழிவு எப்போது நீங்குவது? தாழ்ந்த சமுதாயத்திலே பிறந்த கலைஞர் இந்த நாட்டின் முதல்வராக ஆக முடிகிறது. ஆனால், அந்தக் கோயில் கர்ப்பக்கிரகத்தில் செல்ல முடியவில்லையே? நாம் வெட்கப்பட வேண்டாமா?
தோழர்களே! உங்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். நான் செத்துப் போனாலும் நீங்கள் நினையுங்கள். என்றைக்கு இந்தக் கோயிலுக்கும், கடவுளுக்கும், மதத்திற்கும் முழுக்குப் போடுகிறீர்களோ, -என்றைக்கு அவற்றை எல்லாம் குப்பைத் தொட்டியில் வீசி எறிகிறீர்களோ அன்றைக்குத்தான் நீங்கள் மனிதர் ஆனீர்கள் என்று அர்த்தம். அதுவரை உங்களுக்கு முன்னேற்றம் ஏது? இன்னும் எத்தனை நாளைக்கு நான் சொல்லிக் கொண்டு இருக்க முடியும்? எனக்குப் பின்னால் எவன் வந்து இவற்றை எல்லாம் சொல்லப் போகிறான்? அப்படி எவனாவது சொன்னால் விட்டுவைப்பார்களா என்பது சந்தேகம். நான் உலகைச் சுற்றியவன். அந்த அனுபவத்தை எல்லாம் வைத்துத்தான் சொல்கிறேன். அப்படிச் சொல்வதற்காக நீ நம்ப வேண்டும் என்று சொல்லவில்லை. உங்கள் அறிவைக் கொண்டு சிந்தியுங்கள் -சிந்தியுங்கள்! எவன் ஒருவன் நெற்றியில் சாம்பல் பூசி இருந்தாலும், நாமம் போட்டு இருந்தாலும் காரித் துப்புங்கள். அவன் மீது துப்பவேண்டாம். வீதியிலே துப்புங்கள். சீ நீ ஒரு மனிதனா? இன்னும் பார்ப்பானின் வைப்பாட்டி மகனாக வாழ ஆசைப்படுகிறாயே? என்று காரித்துப்ப வேண்டும். இந்நிகழ்ச்சிக்கு எல்லாம் பேருதவியாக இருந்த நண்பர் வீரமணி அவர்கட்கும் பொதுமக்கட்கும் எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறி தந்தை பெரியார் அவர்கள் தமது உரையை முடித்தார்கள். இறுதியில் தஞ்சை மாவட்ட தி.க. செயலாளர் திரு. கா.மா.குப்புசாமி நன்றி நவில விழா 11.30 மணி அளவில் முடிவுற்றது. தந்தை பெரியார் அவர்களுக்கு வழங்கிய புது வேனுக்கு மோட்டார் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அரசு ஆணைக்கு விழாவில் நன்றி தெரிவித்தேன். தந்தை பெரியார் அவர்களுக்கு தமிழக மக்களால் அளிக்கப்படும், இந்தப் புது வேனுக்கு மோட்டார் வரி கட்டவேண்டியதில்லை என்று தமிழக அரசு ஆணை (நி.ளி) விதிவிலக்கு ஆணை (முந்தைய அரசால் காஞ்சி சங்கராச்சாரியார் வாகனத்திற்கு வரிவிலக்குக் கொடுக்கப்பட்டது) பிறப்பித்துள்ளது என்பதைப் பலத்த கைத்தட்டலுக்கிடையே விழாவில் நான் குறிப்பிட்டேன். பெரியார் வாழ்க, கலைஞர் வாழ்க, கடவுள் இல்லை என்று சுடர்விட்டு வண்ண மத்தாப்புகள் எரிந்தன! 95 அதிர்வேட்டுகள் அப்போது முழங்கின. விழாவினை நடத்தி முடித்திட்ட மகிழ்ச்சியில் விடுதலையில் தலையங்கம் எழுதினேன். அதில், தமிழர்களின் ஒரே பாதுகாவலரும்- தமிழ்ச் சமுதாயத்திற்குத் தன்மான உணர்வூட்டியவருமான- தொண்டு செய்து பழுத்த பகுத்தறிவுப் பழமான நம் தந்தை பெரியார் அவர்களது ஆயுள் மேலும் வளர வேண்டும் என்பதற்காக, நமது இயக்கத் தோழர்கள், அன்பர்கள், ஆதரவாளர்கள் பலரது பெருவிருப்பத்திற்கிணங்க நான் சில மாதங்களுக்கு முன்பு அய்யா அவர்களுக்கு, சகல வசதிகளையும் உள்ளடக்கிய ஒரு புதுக் காரினைப் பரிசளிக்க வேண்டும் என்று திட்டமிட்டு, அதற்குச் சுமார் ஒருலட்ச ரூபாய் வரையில் தேவைப்படலாம் என்று வேண்டுகோள் விடுத்திருந்தேன்.
தஞ்சாவூரில் தந்தை பெரியாருக்கு அளிக்கப்பட்ட பிரச்சார வாகனம். இந்த வாகனம் தற்பொழுது திருச்சி பெரியார் மாளிகையில் பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பெரியார் திரைப்படத்தில் இந்த வாகனம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னலம் என்பதே இன்னதென்று அறியாத – தனிவாழ்க்கை என்ற ஒன்றே இல்லாத- தனித்தன்மை வாய்ந்த தன்னிகரற்ற இமயமாய் வளர்ந்தோங்கியுள்ள தலைவருக்கு அளிக்கப்படும் அக் கார், அறியாமையை விரட்டும் ஆயுதம்; அறிவுலகத்தை உருவாக்கும் புதிய படைக்கலன் என்பதை யெல்லாம் உணர்ந்து, நன்றி உணர்ச்சியுள்ள ஒவ்வொரு தமிழரும், பகுத்தறிவுவாதியும் அதில் தத்தம் பங்கும் இருத்தல் அவசியம் என்று உணர்ந்த காரணத்தால், ஆயிரக்கணக்கான ரூபாய் முதல் 5 காசு, 10 காசு வரை அவரவர் சக்திக்கும், வசதிக்கும், மனவளத்திற்கும் ஏற்ப தாராளமாகத் தந்து ஒத்துழைத்தார்கள்.
சிறுதுளி பெருவெள்ளமாக உருவெடுத்து, கேட்ட தொகையான ஒரு லட்ச ரூபாயையும் தாண்டி 1-1/2 லட்ச ரூபாயாக அது உருவெடுத்த நிலை கண்டு அய்யாவின் கொள்கைகள் எவ்வளவு வெற்றி வாகை சூடி நிற்கின்றன என்பதை நாட்டிற்கு உறுதி செய்வதாக அமைந்திருக்கிறது! அய்யா அவர்கள் வயதில், அறிவில், முதியவராக என்றும் காட்சி அளித்த போதிலும்கூட, வாய்மைப் போருக்கு என்றும் இளையராகவே காட்சி அளித்துக் கொண்டிருக்கின்றார்கள். அய்யா அவர்களைப் பொறுத்தவரை, முதுமை அவர்கள் வயதுக்கானது என்றாலும், கொள்கைகளைப் பிரச்சாரம் செய்யும் முறையில் முதுமை தலைகாட்டாமல் முறுக்கேறிய இளமைதான் தலைகாட்டுகிறது என்ற நிலையையே நாடு கண்டு வியப்புக் கடலில் தன்னைத் தள்ளிக் கொண்டிருக்கிறது! அய்யா அவர்கள் வேகம், அய்யா அவர்களுக்குத் தரப்படும் வேனுக்கு இருப்பதில்லை, வேன் பழுதடைகிறது என்றாலும் அவர்கள் வேகம் பழுதாவதில்லை. இதை உணர்ந்தேதான், அவர்களுக்குள்ள உடல் தொல்லைகளில், அவர்கள் அடிக்கடி மேடைகளில் ஏறி இறங்கி அதன் மூலம் உடல் நலிவுக்கு ஆளாகாத வண்ணம், குளிர்சாதன (ஏர்கண்டிஷன்) வசதி பொருத்தப்பட்ட காரில் உட்கார்ந்தவாறே மக்களிடம் பொதுக் கூட்டத்தில் பேசுவது போல், பேசக்கூடிய வசதி படைத்த காரினை உருவாக்குவது என்று திட்டமிட்டுச் செயலாற்றினோம். பிரபல பஸ் பாடி கட்டும் நிபுணர்களான கரூர் எல்.ஜி. பாலகிருஷ்ணன் அண்டு பிரதர்ஸ் என்ற தமிழர் நிறுவனம் அப்பெரும் பொறுப்பை ஏற்று மகிழ்ச்சியுடன் செம்மையாகச் செய்து அளித்திருக்கிறது! பார்ப்போர் பரவசம் அடையத்தக்க வண்ணம்- _ தெளிவாக எவருக்கும் விளங்கும் வண்ணம் செய்துள்ளார்கள். அதன் மானேஜிங் டைரக்டர் முதல், அக் காரின் வேலையில் ஈடுபட்ட கடை நிலைத் தொழிலாளத் தோழர் உட்பட ஒவ்வொருவரும் மகிழ்ச்சிப் பெருக்குடனும் கடமை உணர்வுடனும் சிறப்பாகச் செய்தனர்!
ஒவ்வொரு மாவட்டக் கழக முக்கியஸ்தர்கள், தலைவர், செயலாளர்கள், மற்றும் நிருவாகப் பொறுப்பில் உள்ளோர், ஆங்காங்குள்ள பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள், சிந்தனையாளர் கழகத் தோழர்கள் முதலிய பல தோழர்களும், உத்தியோகத் துறை, தொழில் துறை, கல்வித் துறை போன்ற பல துறைகளில் உள்ள அதிகாரிகள், ஊழியர்கள், மாணவமணிகள், தாய்மார்கள் ஆகிய சமுதாயத்தின் சகல பிரிவினரும் தீவிர ஆர்வம் காட்டி, அள்ளி அள்ளித் தந்தனர்! தி.மு. கழக சட்டமன்ற உறுப்பினர்களில், ஒரு மாதச் சம்பளத்திற்கும் மேலாகத் தந்தவர்களும், ஒரு மாதச் சம்பளம் தந்தவர்களும், கணிசமான தொகை நன்கொடை தந்தவர்களும் உண்டு! அழுக்குச் சட்டையுடன் பாடுபடும் பாட்டாளிகள், ஒரு ரூபாயை மகிழ்ச்சி பொங்க ஓடோடிவந்து கொடுத்த காட்சிகள் ஏராளம்! ஏராளம்!! அய்யா – நமது பொதுச் சொத்து என்பதை, அனைத்து மக்களும் உணர்ந்துள்ள ஒரு அரிய திருப்பத்தில் நாடு இருக்கிறது என்பதை, கார் நிதி வசூல் மிகத் தெளிவாகக் காட்டிற்று! இதற்காக முழு ஒத்துழைப்பை நல்கிய -_ கடும் உழைப்பைத் தந்த நமது மாவட்டத் தலைவர்கள், கழக கருஞ்சட்டை மாவீரர்கள் தோழர்கள், இன்னும் உள்ள ஏனையோர் அனைவருக்கும் நமது இதயப்பூர்வமான ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்! ஒருமுறை அல்ல, பலமுறை!! வெறும் வார்த்தைகளால் அதனை வடித்திட முடியாது என்றாலும் வேறு வழி இல்லையே! அய்யா அவர்களுக்குக் கொடுப்பனவெல்லாம் கொடுப்போம் அவர் தம் வாழ்வு நீள, நாம் நம் உயிரையே வேண்டுமானாலும் என்று உறுதிபடைத்த சிங்கக் கூட்டம் நாடெங்கும் பொங்கு உணர்ச்சியோடு இருக்கிறது என்பதை இந்தக் கார் நிதி வசூல் தெளிவாக எடுத்துக்காட்டியது! எனவே நன்றி! நன்றி!! அனைவருக்கும் நம் நன்றி!!! என்று நான் நீண்டதோர் தலையங்கம் தீட்டினேன். தந்தை பெரியார் கார் அளிப்பு விழாவுக்குத் தலைமையேற்ற போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் சீரிய கருத்து விளக்கம் அளித்தார். பொருளாதார பேதம் மட்டும் இங்கே இல்லை; பிறவியிலேயே பேதம் இருக்கிறது. இந்தப் பேதத்தை ஒழிக்க தந்தை பெரியார் கண்ட மருந்தே பகுத்தறிவு என்று அமைச்சர் ராமச்சந்திரன் விளக்கினார்.
அய்யா அவர்களுக்கு வரிவிலக்குக் கொடுத்ததுபற்றி இங்கே குறிப்பிட்டார்கள். இந்த மக்களை எல்லாம் தனது அயராத உழைப்பால் வாழ்வித்த தலைவருக்கு வரிப்போட்டு வசூலிப்பது எப்படி நியாயமாக இருக்க முடியும்? உலகத்திலே எத்தனையோ தலைவர்கள் இருந்தார்கள். அவர்களை எல்லாம்விட அய்யா அவர்கள் உயர்ந்த நிலையில் உள்ளவர்கள். தனது கருத்தைத் தானே எடுத்துச் சொல்லி அது வெற்றி பெற்றுக் குலுங்குவதைத் தன் வாழ்நாளிலேயே கண்ட தலைவர் நமது பெரியார் அவர்களாவார்கள்.
உலகத்திலே வேறு மற்ற நாடுகளில் எல்லாம் வெறும் ஏழை-, பணக்காரன் பிரச்சினைதான்; ஆனால் இந்த நாட்டிலே அதையும் மிஞ்சிய, பிறவியிலேயே உள்ள ஜாதிப் பாகுபாடு கள்ளி போல் வளர்ந்துவிட்டது. இவற்றை எல்லாம் எதிர்த்து அய்யா அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். பெண்ணடிமை ஒழிப்புக்குப் பாடுபட்டதற்காக பெட்ரண்டு ரஸ்ஸலுக்கு நோபல் பரிசு கொடுத்தார்கள். ஆனால், அதற்கு மேலாகப் பாடுபடும் நமது அய்யா அவர்களை வகுப்புவாதி என்கிறார்கள். அதுதான் இந்த நாட்டின் நிலைமை. ஆண்டவன் முன்னிலையிலே அனைத்து மனிதரும் சமம் என்ற எண்ணத்திலே அர்ச்சகர் சட்டம் கொண்டு வந்தால் அதைச் செல்லுபடியற்றதாகச் செய்யும் ஒரு அரசு, மேலே அதிகாரங்களைப் பெற்று இருக்கிறது. அந்த ஆதிக்கத்தை எதிர்க்கும் அரசாக இன்றைய தமிழக அரசு விளங்குகிறது என்று கூறி அய்யா அவர்களுக்கு விழாக் குழுவின் சார்பில் கைக்கடிகாரம் பரிசளித்தார்கள்.
நினைவுகள் நீளும்…