கேள்வி: – வாழ்வைப் பாழாக்கிய ஜாதகம் -செய்தி கடந்த உண்மை இதழில் படித்தேன். ஆண்-_பெண்ணுக்கு பொருத்தம் பார்த்தே மணம் முடிக்கும் இன்றைய சமூகத்தில் படித்த குடும்பங்களிலும் உடல்நலப் பொருத்தங்களுக்கு முக்கியத்துவம் இல்லையே. இவர்கள் திருந்(த்)தும் வழிதான் என்ன? – சொர்ணம், ஊற்றங்கரை
பதில்: உயர் நீதிமன்ற நீதிபதி (ஜஸ்டிஸ் திரு.கிருபாகரன்) ஒரு நல்ல தீர்ப்புக் கொடுத்து, முயற்சியும் எடுத்தார். இன்னும் அதிகமான அளவுக்குப் பிரச்சாரம், அழுத்தம் தர, மக்களை நாமும் பக்குவப்படுத்தினால், மத்திய, மாநில அரசுகள் – காலந்தாழ்ந்தேனும் வழிக்கு வரும் என்று நம்புவோம். எதுவும் நம் நாட்டில் உடனடியாக நடப்பது இல்லையே!
கேள்வி: பார்ப்பானுக்குக் காரியம் ஆகவேண்டும் என்றால், கிறித்தவப் பாதிரியார் காலிலும் விழுவானா? – ஈ.வெ.ரா.தமிழன், சீர்காழி
பதில்: கிறித்தவப் பாதிரியார் காலில் என்ன – பன்றியாகி மலந்தின்னும் அவதாரமும்கூட எடுக்கத் தயங்க மாட்டான் என்பதுதானே 10 அவதாரங்களின் உண்மைத் தத்துவம்! புரியவில்லையா?
கேள்வி: ஜெ சொத்துக் குவிப்பு வழக்கில், நீதி அரசர் வழங்கிய தண்டனைக் காலமும், அபராதத் தொகையும் ஜாமீன்மறுப்பும் சரியா? தவறா? அதுகுறித்த தங்கள் கருத்து?
– தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி
பதில்: தவறு அல்ல; சட்டப்படி _ நீதி நியாயப்படி _ பொது ஒழுக்கம் கருதியும். (நாம் தீர்ப்பு வந்தபோதே எழுதியுள்ளோம். விடுதலை 28.9.2014 அறிக்கையைப் படிக்க.)
கேள்வி: நீதித்துறை முடிவுகளை ஆன்மீக நடவடிக்கைகள் மூலம் மாற்றிவிட முடியும் என்ற நம்பிக்கை தமிழகத்தில் விதைக்கப்படுவது பற்றி? – நாத்திகன் சா.கோ., பெரம்பூர்
பதில்: தவறான புதுவகையான மூடநம்பிக்கை நோய்! இது கேவலத்திலும் கேவலம். கண்டிக்க நாம் மட்டும்தானே உள்ளோம் என்பது அதைவிட வேதனை – வெட்கமும்கூட!
கேள்வி: பார்ப்பனர்களுக்கு அடிமையான தமிழக அரசர்கள் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான கோவில்களைக் கட்டி தமிழர்களை மூடர்களாக மாற்றியிருக்கும் இந்நிலையில், திருப்பதியை நோக்கி தமிழர்கள் பெருமளவில் குவிய அடிப்படைக் காரணம் என்ன? – சா.கோவிந்தசாமி, பெரம்பலூர்
பதில்: மூடநம்பிக்கையின் உச்சம். பக்திப் பரவசம் என்ற பெயரால் பார்ப்பனப் பகற்கொள்ளை -_ தியாகராய நகரில் சி.டி.நாயகம் மேல்நிலைப்பள்ளி முன் _ ஒரு திருப்பதி தேவஸ்தான தகவல் அலுவலகமாக சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. இப்போது அதுவே ஒரு மினி திருப்பதியாகி விட்டதே! இந்த முட்டாள்தனக் கொடுமைக்கு எங்கு போய் முட்டிக்கொள்வது?
பெரியார் சொன்னது எவ்வளவு சரியானது என்பது புரிகிறதா? பக்தி வந்தால் புத்தி போகும், புத்தி வந்தால் பக்தி போகும்!
கேள்வி: நீதி, நீதிபதி, நீதிமன்றங்கள் அதாவது நீதிக்குத் தலைவணங்குவோரும் செவி சாய்ப்போரும், நீதிபதிகளைப் போற்றுவோரும் மதிப்போரும், நீதிமன்றங்களை நாடுவோரும் _ நாடி நல்லதைப் பெறுவோரும், இனி எதிர்காலங்களில் குறையும் வாய்ப்பையே தற்போது நிலவி வரும் போக்கு காட்டுகிறதே? – பெ.கூத்தன், தி.க., சிங்கிபுரம்
பதில்: முன்பெல்லாம் மதங்கள்தான் பாவமன்னிப்பு, பிராயச்சித்தம், மகா மன்னிப்பு இவைகளைக் கட்டணம் வாங்கி, புரோகித வரி வசூலித்து தள்ளுபடி செய்தன.
இப்போது அந்த வேலையை நமது நாட்டு நீதிமன்றங்கள் செய்யத் தொடங்கிவிட்டன! இந்த நீதிப் பாலைவனத்தில் மைக்கேல் டி. குன்கா போன்ற ஓயாசிஸ்களும் இருப்பது சற்று ஆறுதல். அவ்வளவுதான்.
கேள்வி: தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா உழைத்த, பகுத்தறிவு பூமியான தமிழகத்தை அ.தி.மு.க. தொண்டர்கள் பஜனை மடமாக மாற்றி வருவதுபற்றி தங்களின் கருத்து என்ன?
– ம. இராசா, படையூர்
பதில்: இதுபற்றி கடும் கண்டனம் தெரிவித்து முன்பே விடுதலையில் அறிக்கை எழுதியுள்ளோம். அண்ணா பெயரில் இப்படி ஒரு கொள்கை கொச்சைத்தனம் – கோமாளித்தனம் அரங்கேறிடுவது அபத்தத்திலும் அபத்தம்!
கேள்வி: தொண்டர்களின் தற்கொலைக்கு தலைவர்கள்தான் காரணமா?
– வெங்கட.இராசா, ம.பொடையூர்
பதில்: தலைவர்கள் சரியானபடி தடுத்து பகுத்தறிவைத் தத்தம் கட்சித் தொண்டர்களுக்கு ஊட்டாததே முதற்காரணம். அதற்கு நஷ்ட ஈடு தருவது அதை ஊக்குவிக்கும் தவறான செயல்!
கேள்வி: ஈழப் பிரச்சினையில் காங்கிரசை எதிர்த்த தமிழ்த் தேசியவாதிகள் தற்போது மோடி அரசை எதிர்க்காததேன்? – ந.பூஜா, காரியாபட்டி ப
பதில்: அவர்களா? இப்போது விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டையையும், தீபாவளிப் பலகாரத்தையும் வைத்து தங்கள் வாயை அடைத்துக் கொண்டுள்ளார்கள்.
கேள்வி: தொடர் வழிபாடுகள் _ நித்திய பிரார்த்தனை _ யாகங்கள் இத்தியாதி நிகழ்வுகளால் நேர்ந்த பயன்களை எண்ணவே மாட்டார்களா? – வே.அகில், ஊற்றங்கரை
பதில்: காக்காய் பிடிக்கவும், பதவி வேட்டைக்காகவுமான அச்சாரம் இது. இவைகளை உணராதபோது எப்படி சுயமான சிந்தனை வரும்?
கேள்வி: நீதிமன்றம் பணம் படைத்தவர்களுக்கும், செல்வாக்குப் படைத்தவர்களுக்கும் புகலிடமாக மாறி வருகிறது. நாம் பணம் படைத்தவர்களின் வழக்குகளை மட்டுமே விசாரித்தோமானால் சாமான்ய மக்களுக்கு என்ன கதி? என்று நீதியரசர் பி.எஸ்.சௌகான் கூறியிருப்பது பற்றி? – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
பதில்: அவருக்குப் பதவி போனபிறகுதான் இப்படி திடீர் ஞானோதயம்! (பவானிசிங் பப்ளிக் பிரசிக்யூட்டர் ஆகவும், சிதம்பரம் கோவில் தீட்சதருக்கு மறுபடி தாரை வார்த்திடும் தீர்ப்பையும் தந்த மேதை இவர்தான்).
கேள்வி: தாங்கள் நாடகம் பார்த்ததுண்டா? அதில் உங்களைக் கவர்ந்தது எது
– தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி
பதில்: நான் அறிஞர் அண்ணா, கலைஞர் நடித்த நாடகங்களை (சந்திரோதயம், நீதிதேவன் மயக்கம் – சந்திரமோகன் (சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்) ஆகிய அண்ணாவே எழுதி நடித்த நாடகங்களைப் பார்த்துள்ளேன்.
கலைஞர் எழுதிய தூக்குமேடை சாந்தா அல்லது பழனியப்பன் நாடகங்களைப் பார்த்துள்ளேன். புதுவையில் மாநாட்டின் முதல்நாள் (கலவரம் நடந்து கலைஞர் தாக்கப்பட்ட மாநாடு) நாடகத்தில் எனது தலைமையில் சுயமரியாதைத் திருமணம் என்பதிலும், ஈரோடு திராவிடர் கழக (ஸ்பெஷல்) தனி மாநாட்டில் கலைஞர் நடித்த தூக்குமேடை நாடகத்தில் வேலைக்காரன் வேடத்திலும் நடித்தும் உள்ளேன்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த நாடகம் எதுவும் பார்க்க எனக்கு வாய்ப்பே கிட்டியதில்லை.
நான் அதிகமாக சுவைத்தது அண்ணாவின் நாடகங்களையும் அவரது நடிப்பையும். குறிப்பாக _ கங்கபட்டர் வேடத்தில் வந்த அண்ணா சந்திரமோகன் நாடகத்தில் – மிகவும் மறக்க முடியாதது.