பெரியாருக்கு சங்கராச்சாரியார் எழுதிய கடிதம்

நவம்பர் 01-15

அய்யாவின் அடிச்சுவட்டில்… 117 ஆம் தொடர்

பெரியாருக்கு சங்கராச்சாரியார் எழுதிய கடிதம்

(சூளுரை நாள் கூட்டங்களில் ஆற்றிய உரைகளின் தொகுப்பு தொடர்கிறது)

சிருங்கேரி சங்கராச்சாரியார் என்பவர் தந்தை பெரியார் அவர்களுக்கு, இந்த இயக்கம் தொடங்கிய உடனே 1930ஆம் ஆண்டு ஒரு கடிதம் எழுதுகின்றார், தந்தை பெரியார் அவர்களின் தொண்டு எப்படிப்பட்டது என்று அந்த எதிரி சொல்லுகின்றார்? அதைத்தான் நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். நாங்கள் சொல்லுவது அல்ல. நமது இயக்கத்தில் பொது ஒழுக்கம், நாணயம், மானாபிமானத்தைப் பற்றிக் கவலைப்படாது பொதுத் தொண்டாற்றும் நிலை இருக்கின்றது என்றால் எப்படி அது வாழையடி வாழையாக தலைவரிடம் இருந்து தொண்டரிடம் இருந்து அது வந்துகொண்டு இருக்கின்றது; அது எதிர்காலத்திலும் பொதுச்சொத்தாக இருக்கும் என்பதற்கு அடையாளமாகத்தான் இந்நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறேன்.

சங்கராச்சாரி, தந்தை பெரியார் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த அன்னை நாகம்மையார் அவர்களையும் சேர்த்து அந்தக் கடிதத்தில் எழுதுகின்றார். அந்தக் கடிதத்தின் ஒரு பகுதி. தந்தை பெரியார் அவர்களின் தன்னல மறுப்பைப்பற்றிக் கூறுகின்றார்.

நீங்கள் நெடுநாளாய்ப் பாரபட்ச-மின்றியும், தாட்சண்யங்களுக்கு உட்படாமலும், ஜீவகாருண்யம் உள்ள-வராயும், சுயநன்மையைக் கருதாமல், லோக நன்மையையே முக்கியமாகக் கருதி, சுகதுக்கங்களைப் பாராமல் மான அவமானத்தைக் கவனியாமல், ஜன்மம் எடுத்ததற்கு பரோபகாரமே சாதனம் என்று கருதி, உங்கள் தர்ம பத்தினி சமேதராய்ப் பாடுபட்டு வருவது எங்களுக்கு மிகவும் சந்தோஷத்தை உண்டாக்குகின்றது. உங்களை நேரில் பார்த்து உற்சாகப்படுத்தி, எங்கள் அபிப்பிராயங்-களையும் உங்களுக்குச் சொல்லி நல்ல சகாயம் செய்து அனுக்கிரகிக்க வேண்டும் என்று தேவதா பிரேரணை உண்டாக்கி இருப்பதால், விவேகியாகிய நீரும் உங்கள் தர்ம பத்தினியும் இந்து சமஸ்தானத்திற்கு வந்த ஸ்ரீ சாரதா சந்திர மௌளீதர சாமிகள் பிரசாத அனுக்கிரகம் பெற்று இப்போதிலும் அதிகமான சிரேஷ்டை அடைவீர்கள் என்று நம்பி இந்த ஸ்ரீமுகம் எழுதி வைத்து அனுப்பலாயிற்று.

இது 1930இல் அய்யா அவர்களுக்கு எழுதப்பட்ட கடிதம். அய்யா அவர்கள் 1925இல் இந்த சுயமரியாதை இயக்கத்தைத் தோற்று-வித்தார்கள். தொடங்கிய 5 ஆண்டிலே 1930லே இந்த இயக்கம் உச்சக்கட்டத்தில் இருக்கின்ற-போது வரச்சொல்லிக் கூப்பிடுகின்றார். அய்யா அவர்கள் தாட்சண்யத்திற்கு உட்பட்டவர்தான். ஆனால் கொள்கையிலே கொஞ்சங்கூட விட்டுக் கொடுக்காதவர் ஆவார்.

என்ன செய்தார் அய்யா அவர்கள்? உங்களிடம் வந்து நான் என்ன செய்யப்-போகிறேன். உங்கள் கடிதத்திற்கு மிகவும் நன்றி. அதற்கு மிகவும் மரியாதை செலுத்து-கின்றேன்; தலை வணங்குகின்றேன். ஆனால் வருவது தேவை இல்லை என்று நண்பர்கள் எல்லாம் கருதுகின்ற காரணத்-தால் நான் அங்கு வருவதற்கு இல்லை என்று நண்பர்கள் மீது பழியைப் போட்டு பதில் எழுதிவிட்டார்கள் அய்யா அவர்கள்.

இந்த இயக்கம் எவ்வளவு பெரிய இயக்கம். சங்கராச்சாரி போன்றவர்கள் எல்லாம் அழைத்துச் சொல்லவேண்டிய அளவிற்குப் பயங்கரமாக வளர்ந்ததற்கு என்ன காரணம்? இந்த இயக்கம் அவ்வளவு பெரிய சாதனையினைச் செய்து இருக்கின்றது. இங்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்தியைக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என்பதால் குறிப்பிடுகிறேன்.

ஒருமுறை, நீதிக்கட்சித் தலைவர்கள் காந்திஜியைச் சந்தித்துப் பேசுகின்றார்கள். யார் அந்த நீதிக்கட்சித் தலைவர்கள்? பன்னீர்செல்வம், உமா மகேஸ்வரம் பிள்ளை, உக்கடைத் தேவர், சையத் தாஜுதீன், காருகுடி சின்னையா பிள்ளை, பட்டுக்கோட்டை தண்டபாணி செட்டியார் ஆகியவர்கள் ஆவார்கள். அவர்களுக்கு அண்ணல் பேட்டி அளித்தார்.

இது மொத்தமாக அளித்த பேட்டி, இப்படிப்  பலருக்கும் பேட்டி அளித்து இருந்தாலும் நீதிக்கட்சித் தலைவர்களான பன்னீர் செல்வமும் உமாமகேஸ்வரம் பிள்ளையும் காந்திஜியைச் சந்தித்துப் பேசிய உரையாடல்கள் சுதேசமித்திரன் இதழில் அந்தக் காலத்தில் விவரமாக வெளியாகி இருந்தது. அதில்,

 

தமிழவேள் உமாமகேஸ்வரம் பிள்ளையும், சர் ஏ.டி.பன்னீர்செல்வமும் காந்தியாரைச் சந்திக்கின்றார்கள்.

உமாமகேஸ்வரம் பிள்ளை காந்தியாரைப் பார்த்துக் கேட்கின்றார்: பிராமணர் பிராமணர் அல்லாதார் விவகாரம் தமிழ்-நாட்டில் மிகவும் சிக்கலாகி வருகின்றது. தலைவர் அவர்கள் (காந்தி அவர்கள்) இதில் தலையிட்டு சமாதானத்தை உண்டுபண்ண வேண்டும்.

இது ரொம்ப உச்சக்கட்டத்திற்குப் போய்க்கொண்டு இருக்கின்றது. நீங்கள் தலையிட்டு இதற்கு ஒரு சமாதானம் உண்டுபண்ண வேண்டும் என்று கேட்கின்றார்.

இப்படி உமாமகேஸ்வரம் பிள்ளை கேட்ட உடனே மகாத்மா காந்தி அவர்கள் என்ன பதில் சொல்லுகின்றார், பிராமணர் அல்லாதாரே இந்த இயக்கத்தைப் பற்றிப் பலவிதமாகக் கூறுகின்றார்கள். பிராமணர் பிராமணர் அல்லாதாரிடையே மாறுபாடுகள் இருந்தாலும் அவை சிறிதுகாலத்திலேயே மறைந்து விடும் என்று டாக்டர் வரதராஜுலு நாயுடு கூறுகிறார். என்னைப் போன்றவர்கள் இதில் தலையிட வேண்டாம் என்றும் அவர் (வரதராஜுலு நாயுடு) கேட்டுக் கொண்டார்.

ஆனால் ஈரோடு இராமசாமி நாயக்கர் தென்னாட்டில் பிராமணர்கள் கொடுமை அதிகமாக இருக்கின்றது என்றும், என்னைப் போன்றவர்கள் அவசியம் இதில் தலையிட்டு மனநிறைவு ஏற்படக்கூடிய ஒரு முடிவை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் கூறுகின்றார் என்று காந்தியார் குறிப்பிட்டு உள்ளார்.

தந்தை பெரியார் அவர்கள் எவ்வளவு மனிதாபிமானத் தலைவர், அவர் அந்தக் காலத்தில் எவ்வளவு பாடுபட்டு இருக்கின்றார்? பார்ப்பானை எவ்வளவோ முயற்சி பண்ணியும் வழிக்குக் கொண்டுவர முடியாது என்று தெரிந்த பிறகுதானே ஆரம்பித்தார் கதையை. அதை எவ்வளவு தெளிவாக காந்தியார் அவர்களிடமே சொல்லி இருக்கின்றார்.

காந்தியார், பன்னீர் செல்வத்திடம் இந்தக் குற்றச்சாட்டுக்குச் சமாதானம் பின்வருமாறு கூறுகின்றார்;

இப்போது பிராமணர்களிடையே முற்போக்கான கருத்துகள் பரவி வருவதைக் காண்கின்றேன்.

எப்போது? 1927இல் என்ன மாற்றம்? முற்போக்குக் கொள்கை பார்ப்பனரிடையே பரவுவதற்கு என்ன காரணம், கூறுகின்றார் கவனியுங்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் நான் சென்னைக்கு வந்தபோது (அதாவது 1927ஆம் ஆண்டுக்குச் சில ஆண்டுகள் முன்னாலே) எஸ்.சீனிவாச அய்யங்கார் வீட்டுத் தாழ்வாரத்தில்தான் உட்கார்ந்து இருந்தேன் யார்? தேசபிதா காந்தி சாமான்யர் அல்ல. காந்திக்கே பூணூல் போட்ட தேசபக்தத் திலகங்கள் மயிலாப்-பூரில் எங்கே இடம் கொடுத்தார்கள் என்றால், சீனிவாச அய்யங்கார் வீட்டுத் தாழ்வாரத்தில்தான் உட்கார வைத்தார்கள்.

பிராமண சீனிவாச அய்யங்கார் வீட்டுக்குள்ளே வைசிய காந்தியை அனுமதிக்கவில்லை. இதைத்தான் காந்தியார் குறிப்பிட்டுள்ளார். அந்தக் காலம் தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவிக்காத காலமாகும்.

காந்தியார் மேலும் அந்தப் பேட்டியில் கூறுகின்றார்: ஆனால் இப்போது அவர் வீட்டை என் வீடாகவே நினைத்துப் பழகுகின்றேன் எப்போது? 1927இல். சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த பிற்பாடு.

என் மனைவி அவர் வீட்டு அடுப்பாங்கரை வரை செல்லுகின்றார்.

தந்தை பெரியார் போட்ட அணுகுண்டு இருக்கின்றதே, சுயமரியாதைச் சூறாவளி, அது அடிக்கவில்லை என்றால் காந்தியே பார்ப்பனர்கள் வீட்டுத் தாழ்வாரத்தில் இருக்க வேண்டியவர்தான்! சீனிவாச அய்யங்கார் வீட்டுத் தாழ்வாரத்தில் இருந்த காந்தியையே சீனிவாச அய்யங்கார் வீட்டு அடுப்பாங்கரை வரையில் போகவைத்தது யாருடைய உழைப்பு? அதன் பெருமை யாருக்கு என்றால் இந்த இயக்கத்திற்குத்தான் ஆகும். தந்தை பெரியார் அவர்களுடைய மனிதாபிமான உழைப்பு. அப்படி எல்லாம் செய்த பிற்பாடுதான் தந்தை பெரியார் அவர்கள் இறுதிவரை ஓய்ந்தாரா? இல்லை.

தாழ்வாரத்தில் உட்கார்ந்து இருந்த காந்தியை பார்ப்பனர் வீட்டுக்குள்ளே அனுப்பினேன். ஆனால், கோவில் கட்டிய தமிழன்; தமிழன் கட்டிய கோவில் என்று சொன்னாலும்கூட இன்னமும் கருவறைக்-குள்ளே அனுப்ப முடியவில்லையே என்று எண்ணி தமது இறுதி மூச்சு அடங்குகின்ற வரையில் பாடுபட்டார். அனுப்பியே தீருவேன் என்று சூளுரைத்தார். ஆனால் அய்யா இன்று நம்மிடையே இல்லை.

அய்யா விட்ட பணியை நிறைவேற்றுவேன் என்று சூளுரைத்து வேகமாகப் பணியாற்றிய அம்மா அவர்கள் இன்று நம்மிடையே இல்லை.

அம்மா அவர்களும் இல்லையே என்-பதற்காக நாம் அந்தப் பணியினை விட்டுவிடுவதா? நீங்கள் சிந்திக்க வேண்டும்.

அய்யா_அம்மா அறிவித்த விட்ட பணி நம்மிடையே இருக்கின்றது. தெருவில் நடக்க முடியாத தமிழனைத் தெருவிலே நடக்க வைத்தார். படிக்கக் கூடாது என்று ஒதுக்கி வைக்கப்பட்ட தோழனைப் படிக்க வைத்தார். உத்தியோகம் பார்க்கக் கூடாதவர்கள், லாயக்கற்றவர்கள் என்று சொல்லப்பட்டவர்களை உத்தியோகம் பார்க்க வைத்தார்.

அய்.ஏ.எஸ். அதிகாரியை கலெக்டராக, செகரட்ரிகளாக ஆக்கிப் பார்த்தார். ஆதிதிராவிடத் தோழரை அய்க்கோர்ட்டு ஜட்ஜாக ஆக்கிப் பார்த்துவிட்டுத்தான் கண் மூடினார். அர்ச்சகர் ஆக்க சூளுரைத்து போர்ச்சங்கு ஊதினார்.

இவ்வாறு சூளுரை நாள் பொதுக்-கூட்டங்களில் வரலாற்று ரீதியாக நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறினேன். கழகத் தோழர்கள், தோழியர்கள் உள்பட ஏராளமான பொது-மக்களும் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளார்கள்.

– நினைவுகள் நீளும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *