மகர ஜோதி சர்ச்சை

மே 16-31

சபரிமலையில் தோன்றும் மகர ஜோதி இயற்கையாகத் தோன்றுவது அல்ல; மனிதர்களால்தான் ஏற்றப்படுகிறது என்று பகுத்தறிவாளர்கள் சொல்லிவந்ததோடு அந்த இடத்திற்கே சென்று நிரூபித்தும் காட்டினர்.  நமது உண்மை இதழிலும் இது பற்றிய விளக்கங்கள் பலமுறை கூறப்பட்டுள்ளன.  இந்த ஆண்டின் பிப்ரவரி 1_15 இதழிலும் மகர ஜோதியா மரண ஜோதியா என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரை நினைவுகூறத்தக்கது.

பகுத்தறிவாளர்களில் சிலர் கேரள உயர் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகளைத் தொடர்ந்தனர்.  அதில் ஒன்றில், 1999 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற துயரச் சம்பவ விசாரணையை அரசு வெளியிட நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.  இந்த ஆண்டு நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு விசாரணை நடத்தாமல் கேரள அரசு விலகி உள்ளது.  இதுபற்றி விசாரணை நடத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இன்னொரு மனுவில், சபரிமலை சீசனுக்காக காவல்துறையினர், வனத்துறையினர், மின்சார வாரிய ஊழியர்கள், வருவாய்த்துறையினர் உள்ளிட்ட அரசு ஊழியர்களைப் பயன்படுத்துவது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த மனுக்களுக்கு தேவசம் போர்டு செயலாளர் ஆர்.  அனிதா கொச்சி நீதிமன்றத்தில் இரண்டு பதில் மனுக்களைத் தாக்கல் செய்தார்.  அவற்றில், மகர  சங்கராந்தி நாளன்று பொன்னம்பலமேடு பகுதியில் வானத்தில் தெரியும் மகர ஜோதி ஒரு நட்சத்திரம்; அது இயற்கையாகத் தோன்றக்கூடியதே!  மனிதர்களால் ஏற்றப்படுவது அல்ல.

ஆனால், மகர ஜோதி வானத்தில் தோன்றும் அதே நேரத்தில் பொன்னம்பலமேட்டில் சிறப்பு தீபாராதனை நடைபெறும்.  அப்போது மகர தீபம் பொன்னம்பல மேட்டில் ஏற்றப்படுகிறது.  அது மனிதர்களால் ஏற்றப்படுவதுதான்.  அதைத்தான் பக்தர்கள் மகரஜோதி என்று கும்பிட்டு வருகிறார்கள்.

காலம் காலமாக இது நிகழ்கிறது.  அந்த மகர ஜோதி தெய்வீகமானது என்று நாங்கள் (தேவசம் போர்டு) கூறியதில்லை.  மகர ஜோதி பக்தர்களின் நம்பிக்கை தொடர்பான விஷயம் என்பதால் மகர ஜோதி ஏற்றப்படுவதைச் தடைசெய்ய முடியாது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *