சிறையில் இருக்க வேண்டிய சங்கராச்சாரியர்கள்

நவம்பர் 01-15

– கவிஞர் கலி.பூங்குன்றன்

சங்கராச்சாரியார்

பூரி சங்கராச்சாரியார் பற்றி கடந்த அக்டோபர் 21ஆம் தேதி ஏடுகளில் பரபரப்பாக ஒரு செய்தி வெளிவந்தது.

தாழ்த்தப்பட்டவர்களும், சூத்திரர்களும் கோவிலுக்குள் நுழையக் கூடாது. சாத்திரம் அனுமதிக்கவில்லை என்று கூறிய பூரி சங்கராச்சாரியார் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வேண்டும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பூரி சங்கராச்சாரியாரை எதிர்த்து டில்லியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. போராட்டக்காரர்கள் பூரி சங்கராச்சாரியார் உருவப் பொம்மையை எரித்தனர்.

 

கோவில் என்பது தூய்மையாக இருக்க-வேண்டிய ஓர் இடமாகும். இங்கு தூய்மைப் பணியாளர்களுக்கு என்ன வேலை? வர்ணாஷ்ரமம் கூறியதைத் தெளிவாகப் பின்பற்ற வேண்டும் என்று பூரி சங்கராச்-சாரியார் பேசி உள்ளார்.

ராஞ்சியில் நடந்த மத விழா ஒன்றில் பூரி சங்கராச்சாரியார் நிச்சலானந்தா பேசும்போது பகவத் கீதையில் 16ஆவது அத்தியாயத்தில் வர்ணாஷ்ரமம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நான்கு வர்ணங்கள் மனித குலத்தின் நன்மைக்காக உருவாக்கப்பட்டவைகள். அவரவர்கள் அவர்களுக்கான பணியைச் செய்வதே சிறப்பான ஒன்றாகும். இதற்காகத்-தான் வர்ண முறையை உருவாக்கினார்கள். ஆனால் இந்த வர்ண முறையை மீறி அதற்குக் களங்கம் விளைவிக்கும் விதமாக தற்போது நடந்து வருகிறார்கள். அதாவது சனாதனிகள் கோவிலுக்குள் நுழையத் தடையில்லை. ஆனால் சூத்திரர்கள், தலித்துகள் எப்படி கோவிலுக்குள் நுழையலாம்? வர்ணாஷ்ரம கொள்கையின்படி தூய்மையானவர்கள் மாத்திரமே கோவிலுக்குள் நுழைய முடியும். அப்படி இருக்க தூய்மைப்-படுத்தும் பணியில் உள்ளவர்கள் கோவிலுக்குள் நுழைய எப்படி அனுமதிக்க முடியும்? இது அவர்களாகவே புரிந்து கொண்டு கோவிலுக்குள் நுழைவதைத் தவிர்க்க வேண்டும். இது சாஸ்திரத்தில் கூறியுள்ளது என்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச ஆளுநர் ராம் நரேஷ் மற்றும் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்தியப் பிரதேச ஆளுநர் ராம்நரேஷ் கூறியதாவது:

சங்கராச்சாரியாரின் பேச்சில் எந்தத் தவறும் இல்லை. அவர் சாஸ்திரத்தை மேற்கோள்-காட்டிப் பேசினார் என்று முட்டுக் கொடுத்துள்ளார்.

சங்கராச்சாரியாரின் இந்தப் பேச்சிற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் ஞாயிறு (19.10.2014) தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் ஜார்கண்ட் காவல்துறை பூரி சங்கராச்சாரியார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டது.

பல்வேறு அமைப்புகள் கண்டனம்

பூரி சங்கராச்சாரியின் தலித் விரோதப் பேச்சின் காரணமாக சமூகத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும், உயர் ஜாதியினருக்கும் உள்ள ஜாதி பேதத்தை மேலும் அதிகரித்து ஜாதீய தீண்டாமையைத் திணிப்பவர்களுக்குத்  துணிச்சலை ஊட்டும் செயலாக இருக்கிறது என்று பல்வேறு அமைப்புகள் சங்கராச்-சாரியாருக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன.

18.10.2014 அன்று கிழக்கு டில்லியில் பல்வேறு சமூக அமைப்பின் தலைவர்கள் ஒன்று கூடினர். பிறகு சங்கராச்சாரியாரின் உருவப் பொம்மை தீவைத்துக் கொளுத்தப்பட்டது. கான்பூர் டில்லி முக்கிய சாலையில் ஒன்றுகூடிய போராட்டக்-காரர்கள் சங்கராச்சாரியாரை உடனடியாகக் கைது செய்யச் சொல்லி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தூய்மைப் பணியாளர் கழகம், தலித் சமூக அமைப்பு, அகில பாரதிய சபாய் மஸ்தூர் காங்கிரஸ் மற்றும் வால்மீகி மஸ்தூர் சங் போன்ற அமைப்புகள் டில்லியில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தின.

டில்லி மாநகராட்சி தூய்மைப்பணி தொழிலாளர் கழகத்தின் தலைவர் சஞ்சய் கேலத் கூறும்போது சமூகத்தில் கல்வி கற்று மருத்துவர்களாகவும், இந்திய அரசு ஆட்சிப் பணியாளர்களாகவும் (அய்.ஏ.எஸ்.) மற்றும் அரசியல் துறையில் பல்வேறு உயர் பொறுப்புகளில் இருக்கும் தலித்துகளை மிகவும் கீழ்த்தரமாக தூய்மையற்றவர்கள் என்று கூறிய சங்கராச்சாரியை நாங்கள் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர் மீது காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மறுத்துவிட்டனர் என்று செய்தி வருகிறது. சமூகத்தில் ஒருவர் தீண்டாமையைப் பச்சையாக ஆதரிக்கிறார், அவர் ஒரு மதத் தலைவர் என்றதும் அவருக்கு காவல்துறை சிறப்பு மரியாதை தருகிறது. அவரது பேச்சு சட்ட விரோதமானது என்று காவல்துறைக்குத் தெரியவில்லையா? அல்லது அவர்களுக்கு மேலுள்ளவர்கள்  இச்சாமியாருக்கு ஆதரவானவர்களா? என்று கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது அனல் கக்கப் பேசினார்கள் என்பதுதான் அந்தச் செய்தி.

ganthi

இந்தப் பூரி சங்கராச்சாரியார் மட்டுமல்ல. இதற்கு முன்பு இருந்த பூரி சங்கராச்-சாரியார்களும் ஜாதி  தீண்டாமையைக் காப்பாற்றுவதில் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

பூரி சங்கராச்சாரியார் நிரஞ்சன தேவ திருத்தா

மணியன் கேள்வி: தமிழ்நாட்டில் அரிஜனங்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட இருக்கிறார்களே, அதைப்பற்றி…?

பூரி சங்கராச்சாரியார்: அர்ச்சனை நடத்த அவர்களுக்குத் தகுதியில்லை. ஆகவே அவர்களை அர்ச்சகர்களாக நியமிப்பது சரியில்லை.

மணியன்: அர்ச்சனை முறைகளைக் கற்றுக் கொள்ளலாம் அல்லவா? அதற்குப் பிறகு அர்ச்சகர்களாகப் பணிபுரியும் தகுதி இவர்-களுக்கு ஏற்படலாமே?

பூரி சங்கராச்சாரியார்: அவர்களுக்குத் தகுதியில்லை, அவ்வளவுதான். மேலே இதைப்பற்றிய விவாதத்திற்கே இடம் இல்லை.

மணியன்: சாதுர்வர்ணா மய சிருஷ்டம் என்ற கீதையின் சுலோகத்தைப் பற்றி சுவாமிகள் என்ன கருதுகிறீர்கள்?

பூரி சங்கராச்சாரியார்: பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் போன்ற நால்வகை-யினரையும் தாமே படைத்ததாகக் கடவுள் கூறுகிறார்.

மணியன்: ஆனாலும் குணம், தொழில் அடிப்படையில் (குணகர்மா) அவர்கள் பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றுதானே கீதாசிரியன் கூறுகிறார்?

பூரி சங்கராச்சாரியார்: இக்காலத்துக் குண கர்மங்களின் அடிப்படையில் அல்ல. முற்பிறவியில் அவர்கள் செய்த குண கர்மங்களின் அடிப்படையில்தான் பிராமணர்கள் என்றும், க்ஷத்திரியர்கள் என்றும் படைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஒவ்வொருவனும் ஒவ்வொரு குலத்தில் பிறக்கிறான். அந்தக் குலப்படி அவன் கடமை ஆற்றவேண்டும்; அதிலிருந்து தப்ப முடியாது.

16.6.1974 ஆனந்த விகடனில் வெளிவந்த பூரி சங்கராச்சாரியார் – மணியன் பேட்டி.

அதற்கு முன்பும் 1965இல் இதே பூரி சங்கராச்சாரியார் எந்த மருத்துவ அறிஞரும் கண்டுபிடிக்காத ஒன்றைக் கண்டுபிடித்து(–?) திருவாய் மலர்ந்தருளினார்.

வர்ணாசிரமம்

கேரளத்தில் 1965ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதியன்று காலடி என்ற ஊரில் நடைபெற்ற அகில இந்திய பார்ப்பனர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பூரி சங்கராச்சாரி குறிப்பிட்டதாவது: ஆண்டவன் ஒரு மனிதனுக்குச் செய்யும் உயர்ந்த சிறப்பு அவனைப் பிராமணனாகப் பிறக்க வைப்பது, அப்பெருமைக்குத் தகுந்த வகையில் நடந்துகொள்வது பிராமணர்களது கடமையாகும். (ஆதாரம்: இந்து 8.12.1965 பக்கம்: 12)

அது மட்டுமா? பச்சையான ஒரு வர்ணாசிரமவாதிதான் என்று பகிரங்கமாகக் காட்டிக் கொண்டதும் இதே பூரிதான்.

எப்போது வர்ணாசிரமம் தழைக்கிறதோ அப்போதுதான் பாரதம் க்ஷேமம் அடைய முடியம், உலகமும் க்ஷேமம் அடையும்.

எல்லோரும் சமம் என்று வாழும் பிரச்சாரம் இக்காலத்தில் பரவிக் கிடக்கிறது. ஜாதி வகுப்புகளற்ற சமுதாயம் என்றெல்லாம் பெருமையடித்துக் கொள்ளப்படுகிறது. சிருஷ்டியில் சமம் என்று வாதிப்பது சரியானதா? பிறக்கும்போதே ஆண் பெண் என்ற வித்தியாசத்துடன்தானே பிறக்கின்றோம்? ஒரே சமயத்தில் பிறந்தவர்களுக்கு உள்ளேயே தோற்றம், குணம் போன்றவற்றில் வேறுபாடுகள் காணப்படுகின்றனவே. பஞ்சேந்திரியங்கள் பயன்படுத்தப்படுவதைக் கவனமாகப் பார்த்தால் எத்தனையோ பேதங்கள் இருப்பது புலப்படும். இரட்டைக் குழந்தைகள் இடையே கூட பல பேதங்கள் இருக்கின்றன.

நமது தேகத்தில் ஓடும் இரத்தத்தில்கூட அல்லவா வேறுபாடுகள் காணப்படுகிறது. மேனாட்டு ரத்தப் பரிசோதனை நிபுணர்கள் மனுஷ்ய சரீரங்களில் ஓடும் ரத்தத்தை நான்கு வகையாகப் பிரித்திருக்கிறார்கள்.

ஓ, ஓஏ, ஏபி, பி என்பவையே அவை.

இவற்றில் ஓ என்பது உயர்ந்த வகையான ரத்தம். இன்று ரத்த ஓட்டத்தை நான்கு வகையாகப் பிரிப்பதற்கு ஏற்பத்தான் நமது முன்னோர்கள் மனித சமுதாயத்தை நான்கு வர்ணங்களாகப் பிரித்திருக்கின்றனர். இதை ஆதாரமாகக் கொண்ட வர்ணாசிரமம் தழைக்குமானால் பாரதம் க்ஷேமம் அடையும்; உலகமும் க்ஷேமமுறும் என்றார்.

பூரி சங்கராச்சாரியார் (கோவர்த்தன பீடாதிபதி ஸ்ரீ ஜகத்குரு சங்கராச்சார்யாள் நிரஞ்சனா என்ற தீர்த்த சுவாமிகள்.)
18.3.1965 அன்று சென்னை தியாகராயநகரில் உள்ள சிருங்கேரி சங்கரர் மடத்தில்தான் இவ்வாறு பேசினார்.
(ஆதாரம்: சுதேசமித்திரன், பக்கம்: 2, 22.3.1965)

சாதாரண பொதுமக்களுக்குத் தெரிந்த பொது அறிவுகூட இல்லாதவர்கள்தான் இந்த நாட்டில் ஜெகத் குருக்கள்.

இவர் சொல்லுவதைப் பார்த்தால் பார்ப்பனர்களுக்கெல்லாம் ஒரே வகையான ஓ வகையோ! தாழ்த்தப்பட்டவர்கள் எல்லாம் ஒரே வகையான பி பிரிவோ! இந்தக் காலத்தில் எல்.கே.ஜி.யில் படிக்கும் பையனுக்குள்ள அறிவுகூட இல்லாதவர் தான் இந்து மதத்தில் லோகக்குரு! (வாயால் சிரிக்க முடியவில்லை அல்லவா!)

இன்னும் இருக்கிறது. இதே பூரி மடத்து சங்கராச்சாரியார் சுவாமி நிரஞ்சன் தேவ் அளித்த பேட்டி ஒன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் (23.6.1988) வெளிவந்தது.

Acharya who defends Sati, Casteஎன்பது பேட்டியின் தலைப்பு. அதில் ஓரிடத்தில் கூறுகிறார்.

The Sankaracharya argued that caste was  based on “Religious principles.
He challenged anyone to point out a single harijan who could be rated equal to a brahmin.
When a reporter said that Dr. Ambedkar could be one, the acharya lashed out ‘The Constitution is full of mistakes owing to Dr. Ambedkar. One expert has pointed out 540 mistakes in the constitution.’’

ஒரு பிராமணனுக்கு இணையான ஒரே ஒரு தாழ்த்தப்பட்டவரைக் காட்ட முடியுமா? என்று பூரி சங்கராச்சாரியார் சொன்னபொழுது செய்தியாளர் ஒரு கேள்வியை எழுப்பினார். ஏன் அம்பேத்கர் இல்லையா என்றதும், சீறிப் பாய்ந்த பூரி சங்கராச்சாரியார் அம்பேத்கர் அரசியல் சட்டத்தை உண்டாக்கியதால்தான் இந்திய அரசியல் சட்டம் முழுவதுமே குறைபாடுகள் நிறைந்ததாகிவிட்டது.

540 குறைகள் இந்திய அரசியல் சட்டத்தில் இருந்ததாக ஒரு நிபுணர் சொன்னார் என்று பூரியார் சொன்னாரே! சதியை ஆதரிக்கிறேன் என்றும் அந்தப் பேட்டியில் கூறினார்.

பெண்கள் வேதம் ஓத உரிமை கிடையாது என்று கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஒரு பெண்ணை வேதத்தைக் கூற விடாமல் மேடையிலிருந்து கீழே இறங்கச் செய்தவரும் இதே பூரி சங்கராச்சாரியார்தான். தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழக மகளிர் அணியினர் பூரி சங்கராச்சாரியார் உருவப் பொம்மைகளை எரிக்கும் போராட்டத்தை நடத்திக் கைதானார்கள். (17.2.1994)

ஏதோ பூரி சங்கராச்சாரியார் தான் இப்படிச் சொன்னார். இப்படி நடந்து கொண்டு இருக்கிறார் என்று கருதிவிடக் கூடாது. மகா பெரியவாள் என்று பார்ப்பனர்கள் புகழ்ந்து தள்ளுவார்களே _ அவர் பேசினால் தெய்வத்தின் குரல் என்பார்களே, அந்த மறைந்த  சந்திரசேகரேந்திர சரஸ்வதி எப்படிப்பட்டவர் தெரியுமா?

தீண்டாமையைப் பச்சையாக க்ஷேமகரமானது என்று கூறியவர்தான். (ஸ்ரீ ஜெகத் குருவின் உபதேசங்கள்)

தீண்டாமை ஒழிப்புக் குறித்து இந்த காஞ்சி சங்கராச்சாரியாரின் ஆதரவு கோரி காந்தியார் வந்தார். அப்பொழுது பாலக்காட்டில் இருந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி காந்தியாரை மாட்டுக் கொட்டகையில் வைத்து சந்தித்தார்.(16.10.1927) காரணம், காந்தியார் பிராமணர் அல்லவே, வைசியர் ஆயிற்றே!

அப்பொழுது காந்தியாரிடம் சங்கராச்சாரியர் என்ன கூறினார்?

ஹரிஜன ஆலயப் பிரவேச விஷயத்தில் சாஸ்திரங்களையும் பழைய வழக்கங்களையும் நம்பி இருப்பவர்கள் நாட்டில் பெரும்பாலோர் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் மனம் நோகும்படிச் செய்யும் எந்த மாறுதலும் இம்சைக்கு ஒப்பாகுமென்றே தாம் முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது என்றும் ஸ்வாமிகள் காந்தியடிகளிடம் தெரிவித்தார்.(ஆதாரம்: தமிழ்நாட்டில் காந்தி  பக்கம்: 575_576)

சங்கராச்சாரியாரின் கருத்துகளை தெய்வத்தின் குரல் என்ற பெயரில் தொகுத்தவரான ரா.கணபதி காஞ்சி பெரியவாள் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் வைர விழாவையொட்டி வெளியிட்ட மலரில் ஆசார சீலம் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றினை எழுதியுள்ளார். அதில் அவர் முக்கியமாகக் குறிப்பிடுவதாவது:

தீண்டாமை ஒழிப்பை ஸ்ரீசரணர் எப்படி வரவேற்கப் போகிறார் என்று உலகம் ஆர்வமுடன் நோக்கியபோது அவர் வைதேகியை எட்ட நிறுத்தி வைத்த ராகவனாகவே நடந்து கொண்டார். ஆனால் அக்னிப் பிரவேசத்தை இவரே செய்தார். தீண்டாமை ஒழிப்புக்கு இவர் இணக்கம் தந்திருந்தால் மிக மிகப் பாபுலர் ஆகியிருக்கலாம். ஆனால் தமது இளமையிலும் ஆம், அப்போது குருநாதனுக்கு யௌவன பிராயம்தான். அதற்கு ஆசை வையாமல் தமக்கு விதிக்கப்பட்ட கடமைத் தீயிலேயே குதித்தார். பழைய சமூக ஏற்பாடுகளைப் பற்றி ஒழுகுவதற்கே நாம் ஒரு பிரதிநிதி என்று புரிந்து கொண்டு செயலாற்றினார். காமகோடி பீடாதிபதிகளாகிய அவர் சொந்த விருப்புகளுக்கு இடம் தருவதற்கில்லை. நீதிபதியிடம் சட்டப்படித் தீர்ப்புத் தந்து விட்டீர்கள், ஆனால் உங்கள் சொந்தக் கருத்தென்ன? என்று கேட்பார்களா? சட்ட விஷயங்களில் சொந்தக் கருத்தையே இழந்து விடவேண்டியவரானார். குருநாதன் பழைய சாஸ்த்ரங்களில் கரைந்து விட்டவர். அதன்படியே நடக்க வேண்டியவர்; சொந்த அபிப்பிராயம் என்பதற்கு இங்கு இடமில்லை. தனி சந்நியாசியாக இருந்தால் இவர் சொந்தக் கருத்து வெளியிடலாம். ஆனால் காமகோடி பீடாதிபதிகளாக இருப்பதால் தம்மையே பழைய ஏற்பாடுகளுக்குச் சரணாகதி செய்து விட்டவர். ஆம், சரணாகதி என்பதுதான் சரியான வார்த்தை. நம்மால் இவரிடம் அடைய முடியாத சரணாகதியை இவர் தமக்கு விதிக்கப்பட்ட பூர்வீக சாஸ்திரங்களிடம் அடைந்துவிட்டார்.

தீண்டாமை குறித்துப் பழைய வழக்கங்களையே பின்பற்ற வேண்டும் என்று குருநாதன் கூறியபோது ஆதரித்தவர்களும் இருக்கத்தான் செய்தனர். எனினும் ஏமாந்தவர்கள் பலர். வருந்தியவர்கள் பலர். ஆத்திரமடைந்தவர்களும் பலர். புதிய வழியில் செல்வதற்கு இவருக்கு அதிகாரம் இல்லை என்று கண்டவர்கள் இவரது கருத்தில் மாறுபாடு கொண்டிருந்த போதிலும், தமது கடமையை இவர் ஆற்றும் செவ்வியை மதித்தனர். தீண்டாமை ஒழிப்பை எடைக்கல்லாக வைத்துக் கொண்டு இவரை நிறுத்தப் பார்க்கக் கூடாது என்று அவர்கள் உணர்ந்தனர். 1932இல் காந்தியடிகள் விருப்பப்படி ராஜாஜி, ராஜன்பாபு முதலியோர் குருநாதனுடன் சென்னையில் 2 மணி நேரம் ஆலோசனை செய்தனர். அதன்பின் ராஜாஜி இதைத்தான் கூறினார். இந்தப் பிரச்சினையில் சுவாமிகளின் கருத்து எவ்விதமிருந்த போதிலும், அவர் தபஸ்வி, ஆன்மஞானி என்பதோடு ஹரிஜனங்களின் நலனை எப்பொழுதும் கோருபவர். ஒரு விஷயத்தை மாத்திரம் மனத்தில் கொண்டு ஸ்வாமிகளைப் போன்ற பெரியவர்களின் நிலைமையைப் பற்றி ஆராய்வதால் எவ்வித நன்மையும் கிடைக்கப் போவதிலலை என்றார். (இதில் ராஜாஜியின் தளுக்கான நழுவலையும் கவனிக்கத் தவறக் கூடாது.)

திரு.ரா.கணபதியின் கட்டுரை ஓர் உண்மையைத் தெளிவாக்குகிறது. தீண்டாமை க்ஷேமகரமானது என்பது ஹீமத் பரமஹம்ஸ பரிவ்ரஜாச்சார்ய ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரி என்கிற பெரியவாளின் கருத்து மட்டுமல்ல. சாஸ்திரங்கள் உள்ளவரை காஞ்சி சங்கர மடங்கள் உள்ளவரை அங்கே வருகிற எந்த சங்கராச்சாரியாரானாலும் இதைத்தான் சொல்வார்கள். செய்வார்கள். ஏனெனில்  பழைய சமூக ஏற்பாடுகளைப் பற்றி ஒழுகுவதற்கே அவர் பிரதிநிதி! இதற்கு மாறாக யாராவது எதிர்பார்த்தால் திரு.ரா.கணபதி வர்ணிப்பது போல சந்தனத்தை எதிர்பார்த்தால் செந்தணல்தான் கிடைக்கும்.

சரி, மூத்தவர்தான் அப்படி. அவரின் வாரிசாக இருக்கக்கூடிய ஜெயேந்திர சரஸ்வதி எத்தகையவர்?

சுடுகாட்டில்கூட பேதா பேதம் இருக்க வேண்டும் என்பதில் பிடிவாதம் காட்டக் கூடியவர்; எல்லா ஜாதியினரும் ஒரே வகையான எரிப்பு முறையைக் கடைப்பிடிக்காததால் ஒரே சுடுகாடு முடியாத காரியம் என்றார். அது மட்டுமல்ல, மின்சார சுடுகாடு இந்து தர்மத்துக்கு எதிரானது என்று கூறியதும் அவரே! (விடுதலை 8.3.1982 பக்கம்: 1)

சமதர்மவாதி, சேரிக்குள் எல்லாம் செல்லக்கூடியவர் இந்த ஜெயேந்திரர் என்றெல்லாம் கூட விளம்பரப்படுத்தினார்கள். அது பற்றியும் தகவல்கள் உண்டு.

10.11.2002 இரவு 10.10 மணிக்கு காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி மதுரை மாவட்டம் மேலூர் அருகில் உள்ள தும்பைப்பட்டிக்குச் சென்றார். முன்னாள் அமைச்சர் கக்கன் அவர்களின் சொந்த ஊர் இது. அங்குள்ள வீரகாளியம்மன் கோவிலைத் தலித் மக்கள்தான் நிர்வகித்து வருகின்றனர். கக்கனின் தந்தையார் பூசாரியாக இருந்த அந்தக் கோவிலுக்கு வெள்ளைச்சாமி என்ற தலித்துதான் அப்போது பூசாரி. கக்கன் அவர்களின் தம்பி விசுவநாதன் அவர்களின் ஏற்பாட்டின் பேரில்தான் காஞ்சி சங்கராச்சாரி அந்தக் கோவிலுக்கு வந்தார். காளியம்மன் கோவிலில் வந்து இறங்கிய சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கோவிலுக்குள் சென்று மணி அடித்தார்.

தமிழ்ப் பூசாரி வெள்ளைச்சாமி காட்டிய தீபாராதனையைக் கும்பிடவும் செய்தார். பரவாயில்லையே! சங்கராச்சாரியார்கள் திருந்தி விட்டார்களே என்று எல்லோரும் நினைத்துப் புளகாங்கிதம் அடைந்த சற்று நேரத்தில் எல்லாம் ஏமாற்றம் என்ற உருட்டுக் கட்டை அடி விழுந்தது. தலித் பூசாரி கொடுத்த பிரசாதத்தைப் பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்.

தாழ்த்தப்பட்டவர்கள் நிறைந்த பகுதி.. யாரும் ஜெயேந்திரரைத் தொட்டுவிடக் கூடாது என்பதிலே சங்கராச்சாரியாரின் பாதுகாவலர்கள் விழிப்பாகவே இருந்தனர்.
சாமிகளை யாரும் தொட்டுக் கும்பிடக் கூடாது என்று ஒலிபெருக்கியிலே சொல்லிக் கொண்டே இருந்தனர். தாழ்த்தப்பட்டவர்கள் சங்கராச்சாரியாரைக் காலில் விழுந்து கும்பிட முனைந்தனர். அப்பொழுதுகூட தன் காலைத் தப்பித் தவறித் தொட்டுவிடக் கூடாது என்பதில் இறுக்கமாக இருந்த ஜெயேந்திர சரஸ்வதி என்ன செய்தார்? தன் தோளில் இருந்த வஸ்திரத்தை எடுத்துக் கால்களில் சுற்றிக் கொண்டார். பிறகு பிரசங்கம் நிகழ்த்தினார்.

கக்கன் நினைவு மண்டபத்திற்குச் சென்று மாலையிடுவது என்று திட்டமும் இருந்தது. பிரசங்கத்தை முடித்தாரோ இல்லையோ காரில் ஏறி நேராக மதுரைக்குப் பறந்தார் மடாதிபதி. கக்கன் நினைவிடத்தில் காத்துக் கிடந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்தச் சங்கராச்சாரிதான் தீண்டாமையை ஒழிக்கக் கூடியவராம். சேரிக்குள் எல்லாம் போகிறார் என்று தண்டோரா போட்டார்களே பார்ப்பனர்கள். அவர் சேரிக்குள் சென்ற லட்சணம் இதுதான்.

சிருங்கேரி சங்கராச்சாரியாரின் கதை என்ன? அதையும் பார்த்துவிடலாம்.

நம் நாட்டில் முற்காலத்தில் தட்டாருடைய பிள்ளை தட்டானாகவும், தச்சருடைய பிள்ளை தச்சனாகவும், சிற்பியின் பிள்ளை சிற்பியாகவும்தான் இருந்து வந்திருக்கிறார்கள். வம்ச பரம்பரையாக வரும் கல்வியைக் கற்பதிலும் தொழிலை நடத்துவதிலும் அதிக சிரமமிருக்காது. மேலும் இதனால் போட்டி குறைந்து அவரவர் பரம்பரைத் தொழிலை நடத்தி எல்லாரும் க்ஷேமமாக இருந்தார்கள். இக்காலத்திலோ அதற்கு நேர்மாறாக, யாரும் எத்தொழிலையும் செய்யலாம் என்கிற நிலையைக் காண்கிறோம். நம் ப்ராசீனர்கள் படிப்பு விஷயத்திலும் வம்ச பரம்பரையாக வரவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்-தார்கள்.

அதைப்பற்றி இப்போது சொன்னால் அது பலருக்கு ருசிக்கிறதில்லை. ஆனாலும் ஹிதமான விஷயத்தை சொல்லத்தான் வேண்டும். தங்கத்தில் எவ்வளவு செம்பு கலந்திருக்கிறது என்பதை ஒரு கெமிஸ்ட் கூட திராவகங்களை வைத்துக்கொண்டு சோதனை செய்துதான் கண்டுபிடிக்க முடியும். ஆனால் பழைய காலத்தில் ஒரு தட்டாருடைய பையன்கூட லேசாகத் தட்டிப் பார்த்தோ அல்லது நிறத்தைக் கொண்டோ உடனே சொல்லிவிடுவான். அவனுக்குத் தந்தையுடன் கூட வேலை செய்யும் பொழுது பார்த்துப் பழக்கம். இது பரம்பரையாக வந்த அறிவு.

தன் பிள்ளை தன்னைவிடச் சிறந்தவனாக வருவதில் தந்தைக்கு சந்தோஷமேதான் ஏற்படும். தனக்குப் போட்டியாக வந்து விடுவானோ என்ற பயம் புத்ரன் விஷயத்தில் ஒரு தந்தைக்கும் ஏற்படாது.

ஆனால் மற்றவர் விஷயத்தில் தனக்குப் போட்டியாக வந்து விடுவாரோ என்ற பயம் ஏற்படக் கூடுமாதலால் அவருக்கு ரஹஸ்யமான விஷயத்தைச் சொல்லிக்கொடுக்க மாட்டார். ஆகையால் பரம்பரையாக வரும் வித்தையைக் கைக்கொண்டு வந்தால் எல்லாருக்கும் சிரேயஸ் உண்டாகும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயத்தில் அறிவு இருக்கும். அதை புத்ர பரம்பரையாக சொல்லிக் கொடுத்துக் காப்பாற்ற வேண்டும்.

_ சிருங்கேரி சங்கராச்சாரி, மங்கை ஆகஸ்ட் 80 இதழ்.

இந்த சங்கராச்சாரியார் எல்லாம் ஸ்மார்த்தர்கள். இவர்களை ஏற்றுக் கொள்ளாத ஜீயர்களின் புத்தி என்ன? கல்கி இதழிலிருந்தே ஆதாரத்தைத் தந்தால்தான் பொருத்தமாக இருக்கும்.

அகோபிலமடம் அழகிய சிங்கர் (ஜீயர்)

கேள்வி: ஹரே கிருஷ்ணா என்று ஓர் இயக்கம் அமெரிக்காவில் தோன்றி உலகமெங்கும் பரவி வருகிறதே… இந்தியாவில்கூட இவ்வியக்கத்தினர் சுற்றுகிறார்களே!

ஜீயர் பதில்: நாமம் இட்டுக்கொண்டு, குடுமி வைத்துக்கொண்டு காவி உடுத்து இங்கேயும் ஒருத்தன் வந்தான்… வாயெல்லாம் மந்திரங்கள்… பெருமாள் பெயரையே சொல்லிண்டு இருக்கான்… பூணூல்  போட்டிருக்கான்… உட்காரச் சொல்லிச் சாப்பாடு போட்டேன். உபசரித்து அனுப்பினேன். அவ்வளவுதான். பூணூல் போட்டதுனால் மட்டுமே ஒருவன் பிராமணனாகிவிட மாட்டான். அவனவன் பிறப்பால் எதுவோ அதுதான் சாஸ்வதம். நல்ல காரியங்கள் செய்து பகவான் பெயரைத் தியானிக்கிறதுனாலே அவனது ஜாதிக்குள் உயர்ந்தவனாகிறான்…
கல்கியில் (11.4.1982) பேட்டி.

இந்திய அரசியல் சட்டம்

“Untouchability is abolished and its practice in any form is forbidden. The enforcement of any disability arrising out of “untouchability” shall be an offence punishable in accordance with law.

தீண்டாமை ஒழிக்கப்பட்டுள்ளது. தீண்டாமையை எந்த ஒரு வழியிலும் கடைப்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. தீண்டாமை என்ற பெயரால் எந்தவித பேதத்தையும் நடைமுறைப்படுத்துவது சட்டப்படிக் குற்றமாகும்.

இவ்வாறு இந்திய அரசியல் சட்டத்தின் 17ஆவது பிரிவு கூறுகிறது. இச்சட்டப்படி தீண்டாமையை வலியுறுத்தும் இந்தச் சங்கராச்சாரியார்கள் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகளா இல்லையா?

ஆனால் நிலைமை என்ன? சட்டத்திற்கு விரோதமாகத் தீண்டாமையை வலியுறுத்தும் இந்தக் குற்றவாளிகளான சங்கராச்சாரியார்களின் கால்களில் இந்த நாட்டின் ஆட்சியாளர்கள், பிரதமர் முதல் சாதாரண அதிகாரி வரை விழுகிறார்கள் என்றால் இதன் பொருளென்ன?

நடப்பது பார்ப்பன ஆட்சி. அய்யா பெரியார் அன்று 1925இல் சேலத்தில் சொன்னாரே _ அந்தக் கணிப்புப்படி இங்கு நடப்பது பிராமினோகிரஸி (Braminocracy) தான் என்பதில் அய்யம் உண்டோ! அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள தீண்டாமை ஒழிப்புக்கு விரோதமாக நடந்துகொள்ளும் இந்த சங்கரமடங்களின் ஆச்சாரியார்கள் காலில் மண்டியிடாத ஆட்சித் தலைவர்கள் ஒரே ஒரு கே.ஆர்.நாராயணன் _ வி.பி.சிங் தானே?

தீண்டாமையை க்ஷேமகரமானது என்று கூறும் காஞ்சி சங்கராச்சாரியாரின் தெய்வத்தின் குரல் என்ற தொகுதியை _  ஆங்கில மொழிபெயர்ப்புத் தொகுதிகளை பிரதமராக இருந்த இந்திரா காந்தி (1980) வெளியிட்ட கொடுமையை என்ன சொல்ல!

1971 ஆகஸ்ட் 24இல் சாரதா பீட மடாதிபதி துவாரகையில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிக்கு அன்றைய துணைக் குடியரசுத் தலைவர் ஜி.எஸ். பாடக் அவர்களையும் குஜராத் மாநில ஆளுநர் ஸ்ரீமன் நாராயணனையும் அழைத்து இருந்தார் சாரதா பீட மடாதிபதி.

தீண்டாமையை அனுசரிக்கும் ஒரு பீடாதிபதியின் விழாவில் துணைக் குடியரசுத் தலைவரும், ஆளுநரும் கலந்து கொள்ளக் கூடாது என்று குஜராத் மாநிலக் குடியரசுக் கட்சி அறிக்கை வெளியிட்டது.

துணைக் குடியரசுத் தலைவரும் ஆளுநரும் சாரதா பீட சங்கராச்சாரியாருக்கு அதுபற்றி விளக்கம் கேட்டுக் கடிதம் எழுதினார்கள். இதற்கு எந்தவித பதிலும் பீடாதிபதியிடமிருந்து வராத காரணத்தால் அவ்விருவரும் தீண்டாமையை ஆதரிக்கும் சங்கராச்சாரியாரின் விழாவில் கலந்து கொள்ளவில்லை.

இப்படிப்பட்ட உண்மையான மதச்சார்பின்மையின் மீது நம்பிக்கை உள்ள ஆட்சியாளர்களும் இருந்திருக்கிறார்கள். ஆனால், பெரும்பாலும் அப்படி இல்லை என்பது வெட்கக்கேடான நிலையே.

பூரி சங்கராச்சாரியாரின் தீண்டாமைக்கு ஆதரவான குரலுக்கு அவ்விழாவில் பங்கேற்ற ஆளுநரும், ஆமாம், அது சரிதான் என்று கூறியிருக்கிறாரே! அரசமைப்புச் சட்டத்தை மாநில அளவில் காப்பாற்ற வேண்டியவரே அதனைக் கிழித்தெறியும் கேவலத்தை எது கொண்டு சாற்றுவது?

அரசமைப்புச் சட்டத்துக்கு நேர் விரோதமாக தீண்டாமையை வெளிப்படையாக ஆதரிக்கும், பின்பற்றும் இந்த சங்கர மடங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கையை  எடுக்க வேண்டாமா?

சட்டத்தின் முன் அனைவரும் சமம். சங்கர மடங்களைத் தவிர என்று எங்காவது சட்டத்தில் யாருக்கும் தெரியாமல் சொருகி வைத்துள்ளார்களா?

ஓர் உண்மை மட்டும் வெளிப்படை _ அதுவும் சங்கராச்சாரியார் மூலம்.

யோசித்துப் பார்த்தால் நம் தேசத்தில்கூட பழைமை வர்ணதர்மங்களில் பிடிப்புக் குறைந்து போய் எல்லாம் ஒன்றாகிவிட வேண்டும் என்ற அபிப்பிராயம் வந்த பிறகுதான், இப்படி மத உணர்ச்சி குன்றி நாஸ்திகம் அதிகமாகி-யிருக்கிறது என்று தெரிகிறது, சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெரிகிறது.

_ காஞ்சி மூத்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி, தெய்வத்தின் குரல் -_ முதல் பாகம் பக்கம்: 162.

தந்தை பெரியார் என்ன செய்தார்? திராவிடர் கழகம் என்ன சாதித்தது? என்பதனை சாட்சாத் சங்கராச்சாரியாரே ஒப்புக்-கொண்டுவிட்டாரே!

 

——————

ஒரே நாடு – ஒரே கலாச்சாரம்

பாபர் மஸ்ஜிதை இடித்துவிட்டு அத்வானி வந்திருந்தார். அப்போது நான் தொலைக்காட்சியில் இருந்தேன். அவர் We believe in one country and one culture (நாங்கள் ஒரே நாடு; ஒரே கலாச்சாரம்) என்பதையே நம்புகிறோம் என்றார். உடனே நான் உங்கள் கருத்தை நானும் ஏற்கிறேன். இங்கும் சைவ வெள்ளாளர் இருக்கின்றனர். அவர்களுக்கும் சமஸ்கிருதம் தெரியும். அவர்களும் ஆகமவிதிகளின்படி பூஜை செய்கிறார்கள் என்றேன். அவர் பூரிப்புடன் அதனால்தான் ஒரு நாடு, ஒரே கலாச்சாரம் என்கிறோம் என்றார். உடனே அவரிடம் வைத்தேன் ஒரு கோரிக்கை.

அய்யா இந்த அளவு தகுதி பெற்றிருக்கும் ஒரு வெள்ளாளர் காஞ்சி மடத்தின் சங்கராச்சாரியார் ஆக முடியுமா? என்று நான் கேட்டவுடன் திணற ஆரம்பித்து விட்டார். இதைக் கண்ட ஒரு ஆங்கிலப் பத்திரிகை அம்பி By the way.. என்று கேள்வியைத் திசைமாற்றி விட்டார்.

–  முஸ்லிம் முரசு பொன்விழாவில் சு.சமுத்திரம், (ஆதாரம்: முஸ்லிம் முரசு ஆகஸ்டு 2000)

——————

ஒரு பார்ப்பனரே சொல்லுகிறார்!

கலேல்கர்

தீண்டாமை என்பது சமயம் சம்பந்தப்-பட்டு இருக்கின்றது. அதைச் சமய சம்பந்தத்தினால்தான் தீர்க்க முடியும். நான் ஒரு பிராமணன் என்ற முறையிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தலைவன் என்ற முறையிலும் உங்களிடம் பேசுகின்றேன். நல்ல ஒழுக்கமுள்ள ஹரிஜன் எப்போது சங்கராச்சாரியார் பீடத்தில் அமருகின்றாரோ, அப்போது-தான் தீண்டாமை ஒழிந்ததாகக் கருதமுடியும்.

– டாக்டர் கலேல்கர்
ஆதாரம்: பெரியார் படைக்க விரும்பிய மனிதன், பக்கம்: 123.

——————


சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டிய சமுதாயக் குற்றவாளிகள்

The Panchama is asked to be at a distance because of the inborn impurity of his body. Any amount of washing of the body with the best available soap and any clothing and decoration of it in the best upto date style cannot remove from it its inlaid filth that has originated from the deep rooted contamination of the filthy inheredity.

பஞ்சமர்கள் (தாழ்த்தப்பட்ட மக்கள்) தொடாதே_எட்டி நில்! என்று சொல்லப்படுவதற்குக் காரணம், பிறப்பின் அடிப்படையிலே அவர்களின் உடலோடு பிறந்து வந்த புனிதமற்ற தன்மையேயாகும். ஆழமாகப் பதிந்த அருவருக்கத்தக்க, தூய்மைக்கேடான தீட்டுப் பரம்பரையில் அவர்கள் வந்ததால், உலகத்தில் உயர்ந்த வகையான சோப்பினால் போட்டு அவர்களைக் குளிப்பாட்டினாலும் நவநாகரிக அணிமணிகளால் அவர்களை அலங்கரித்தாலும், அவர்கள் மீது படிந்த தீட்டைப் போக்கவே முடியாது _ முடியவே முடியாது.  – சிருங்கேரி சங்கராச்சாரியார்

——————

காஞ்சி சங்கராச்சாரியார்

ஒரு நாள் ஆதிசங்கரர் ஸ்நானத்திற்குப் போகிறார். ஒரு தாழ்த்தப்பட்டவர் எதிரே வருகிறார். சங்கராச்சாரியார் எட்டிப் போ என்று சொல்லுகின்றார்.
அதற்கு அந்தத் தாழ்த்தப்பட்ட தோழர் எட்டிப் போ என்றது ஆத்மாவையா? உடலையா? என்று எதிர்க்கேள்வி கேட்கிறார்.

ஆதிசங்கரர் அதிசயப்பட்டார் நீ தாழ்த்தப்பட்டவனல்ல, என் ஞானாசிரியன் என்றார்.

இந்த சுலோகத்தை வைத்துக் கொண்டு ஸ்ரீ ஆச்சாரியார்கள் (ஆதிசங்கரர்) தீண்டாமையை ஒழித்துவிட்டதாகச் சிலர் அர்த்தம் சொல்லுகிறார்கள். சுலோகம் தீண்டாமையை ஸ்தாபிப்பதாக நமக்குத் தோன்றுகிறது. எந்த சித்தாந்தத்தில் ஒருவருக்கு முன்பாக ஆசை இருக்கிறதோ, அதற்குத் தகுந்தபடி அவர்கள் ஸ்லோகங்களுக்கு வேறு அர்த்தம் செய்து கொள்வார்கள். தீண்டாமை க்ஷேமகரமானது என்ற எண்ணம் நமக்கு இருப்பதால் அநாதியாக நாம் இப்படி அதற்கு அர்த்தம் செய்கிறோம்.  – (ஸ்ரீ ஜெகத்குருவின் உபதேசங்கள் 2ஆம் பாகம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *