வலை
எஸ்.அய்.வரதராஜன் வருகையை எதிர்நோக்கியிருந்தது கூடல்பட்டி காவல் நிலையம். சில வருடங்களுக்கு முன்பெல்லாம் அவ்வூரில் காவல் நிலையமே இருந்ததில்லையாம். அவ்வூரில் வலை மேட்டுக் குகை என்று ஒன்று உள்ளதாம். அக்குகையில் கடந்த சில வருடங்களாக நடைபெற்ற பலதரப்பட்ட அசம்பாவித நிகழ்வுகள்தான் அவ்வூருக்குக் காவல் நிலையம் அமைவதற்கே காரணமாகிவிட்டது என்று கூடல்பட்டியின் நிலையை ஏட்டு கண்ணப்பன் வரதராஜனிடம் சொல்லிக் கொண்டே கூடல்பட்டி காவல் நிலையத்தை அடைந்தனர்.
நல்ல நகரத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தன்னைப் பட்டிக்காட்டில் தூக்கிப் போட்டுவிட்டார்களே என்ற கோபம் ஒருபுறமாக இருந்தாலும் அக்காவல் நிலையக் கட்டுபாட்டுப் பொறுப்புகள் அனைத்தும் தன்னைச் சார்ந்தது என்ற நிலை வந்துவிட்டதால் என்ன செய்வது, அரசின் ஆணைப்படி நடந்து கொள்ள வேண்டுமே என்ற சலனத்துடன்தான் பணியாற்றி வந்தார். ஆனால், வலை மேட்டுக் குகையில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் பெரும் மர்மத்திற்கு இடமளிப்பதாகவே இருந்தது. அக்குகையின் மர்மங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கவே அய்யா இப்படி ஆயிடுச்சே என்ற புலம்பலுடன் குகை அருகே இருந்த தன் மகனைத் தோளில் சுமந்து கொண்டு முருகன் காவல் நிலையத்திற்கே ஓடிவந்தார். இரத்த வெள்ளத்தில் மிதந்த முருகன் மகனின் உடலில் 27 இடங்களில் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டது, ஆய்வில் தெரிய வந்தது. அன்றுதான் வரதராஜனுக்குத் தனது பணியின் அருமை புரிந்தது. சலனத்துடன் வேலை பார்த்தவர் கவனத்துடன் வேலை பார்க்கலானார்.
இச்சம்பவம் அவ்வூர் மக்களிடையே பெரும் அச்சத்தை அள்ளித் தெளித்தது. அந்தக் குகையில் நடைபெற்ற சம்பவங்கள் ஏதோ சாதாரண மனிதர்களால் நடப்பதாகத் தெரியவில்லை. அதில் மிகப் பெரிய சக்தி இருக்க வேண்டும். அந்த சக்தியை வழிபடாததால்தான் இந்த விபரீதங்கள் எல்லாம் நடைபெறுகின்றன. எனவே, அந்த அபூர்வ சக்திக்கு விழா எடுத்து வழிபடலாம் என்று அவ்வூரில் மூத்த குடிமக்கள் தெரிவித்தனர்.
வரதராஜனின் நடமாட்டம் வலைமேட்டுக் குகைப் பக்கமாக அதிகளவில் காணப்பட்டதால் கூடல்பட்டி மக்களிடையே சலசலப்புப் பெருகியது. சில பெரியவர்கள் அவரிடம் சென்று கடவுள் சக்தியாகக்கூட இருக்கலாம். அதனைச் சோதனையிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர். அவ்வூர் மக்களின் மரண பயம்தான் இப்படியெல்லாம் பேச வைக்கிறது என்பதை வரதராஜன் நன்றாக உணர்ந்திருந்தார். அந்தக் குகையை இரு நாட்களாகச் சோதித்துப் பார்த்ததில் குகையின் உள்ளே செல்வது என உறுதி செய்து கொண்டார். குகையின் உள்ளே என்ன நடக்கிறது என்பதை நன்றாக உணர வேண்டும் எனத் தீர்மானித்திருந்தார். முன், பின் அக்குகையைப் பற்றி ஒன்றுமே தெரியாததனால் வரதராஜனைச் சற்றுப் பயஉணர்ச்சி முற்றுகையிட்டாலும், உள்ளத்தின் உறுதி உறுதுணையாக நின்றது எனலாம்.
குகையின் மேற்பரப்பு போன்று அடிப் பரப்பு இல்லை. மிகுந்த இருட்டானது கண்களைக் கட்டிவிட்டது. பாதை தெரியாவிட்டாலும் கைகளின் உதவியால் சற்று பயணிக்க முடிந்தது. குகையின் உள்ளே செல்லச் செல்ல முணுமுணுக்கும் சத்தம் மெதுவாய் கேட்டது. அச்சத்தத்தை நோக்கிச் செல்லச் செல்ல அந்த ஓலம் காதுகளைக் கிழிப்பது போன்ற உணர்வு. இந்த இரவு நேரத்தில் அந்தச் சத்தம் மட்டுமே அக்குகையைச் சுற்றிச் சுற்றி ஒலித்துக் கொண்டே இருந்தது. குகையின் உள்ளே இருப்பது மனிதர்கள்தான், ஊரார்கள் கூறிப்பிடுவது போல அபூர்வ சக்தியோ கடவுள் சக்தியோ ஒன்றும் இல்லை என்பதை நன்கு உணர்ந்து கொண்டு ஸ்டேஷனுக்குத் திரும்பினார். கண்ணப்பனிடம் விழா ஏற்பாடுகள் எப்படி இருக்கிறது என்றார் வரதராஜன். கோயில் வேலை முழுவதுமாக முடிந்துவிட்டது, அடுத்தது கும்பாபிஷேகம்தான் அய்யா என்றார். கும்பாபிஷேகம் என்றைக்கு நடக்கிறதாம் என்றதும், இன்னும் ஒரு வார காலம்தான் இருக்குங்கய்யா என்றார் கண்ணப்பன். கும்பாபிஷேகம் செய்யும் அந்நாள்தான் அக்குகைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் நாள் எனத் திட்டமிட்டார்.
இந்த வாரத்தோடு நமது அச்சத்திற் கெல்லாம் ஒரு விடிவு காலம் இக்கோயிலின் மூலம் ஏற்படப் போகிறது என்பதை அவ்வூர் மக்கள் பார்த்துப் பார்த்துப் பூரித்துப் போனார்கள். கோயில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் எல்லாம் வெகு விரைவாக முடுக்கிவிடப்பட்டிருந்தது. கும்பாபிஷேக விழா மூன்று நாட்களுக்கு நடைபெறும் என்ற அழைப்பிதழ்கள் உறவினர்கள், நண்பர்கள், சுற்று வட்டாரப் பகுதி மக்கள் என அனைவரையும் சென்றுவிட்டது. கும்பாபிஷேக விழாவும் தொடங்கிற்று. அழைப்பிதழ் பெற்ற அனைவரும் கூடல்பட்டியில் குவிந்ததால் கூடல்பட்டியில் எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம் போல் காட்சியளித்தனர்.
விழா நடைபெறுவது ஒரு பக்கமாக இருந்தாலும் அதே சமயத்தில் விழாவினைப் பயன்படுத்தி வலை மேட்டுக் குகையில் உள்ள குற்றவாளிகளைப் பிடிக்க வேண்டும் என்பதே எஸ்.அய். வரதராஜனின் திட்டமாகும். அதன்படியே நகர காவல் துறைக்குத் தகவல் தெரிவித்திருந்தார். ஏட்டு கண்ணப்பனையும் இரு கான்ஸ்டபிள்களையும் முன்னதாகவே குகையின் அருகே செல்லுமாறு வரதராஜன் உத்தரவிட்டார்.
வரதராஜன் தன் கைத் துப்பாக்கி ஒன்றைத் தற்காப்பிற்காக எடுத்துக் கொண்டு குகைக்குத் திரும்புகையில் விழாவிற்கு வந்திருந்த பத்து வயது மதிக்கத்தக்க சிறுமி காணாமல் போய்விட்டது என்ற செய்தியும் அவருக்கு எட்டியது.
வரதராஜன் வருவதற்கு முன்பே ஏட்டு கண்ணப்பனும் கான்ஸ்டபிள்களும் அக்குகையின் அருகே நின்று கொண்டிருந்தனர். வலை போல் வடிவமுடைய அந்தக் குகையின் அருகே வரதராஜன் சென்று, -குகைக்குள் இருப்பது விபரீத சக்தியில்லை, சாதாரண மனிதர்கள்தான், அக்குற்றவாளிகளைப் பிடிக்க நாம் குகைக்குள் செல்ல வேண்டும் என்ற அவசியத்தை அவர்களுக்கு உணர்த்தினார். குகையின் ஒரு முனையில் வரதராஜனும் மறு முனையில் கான்ஸ்டபிள்களும் ஏட்டு கண்ணப்பனும் குகைக்குள் நுழைந்தனர்.
வரதராஜன் தனது கைத் துப்பாக்கியை முன் பக்கமாக நீட்டியவாறே சென்றார். குகையின் நடுப்பகுதியை அடைந்தவுடன் தனக்குப் பின்னால் யாரோ பின் தொடர்வது போல நடக்கும் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தால் ஏதோ ஒரு ஒளி அதிக வெளிச்சமாகப் பெருகி தன்னருகே நெருங்குவதைக் கவனித்த வரதராஜன் தன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார், பயனில்லை. துப்பாக்கி ஒலி எதிரிலிருந்த கண்ணப்பனுக்கு ஒலித்தது. உடனே கண்ணப்பன் குகையின் உள்ளே வரதராஜனைத் தேடலானார். வரதராஜன் குகையில் இருப்பதற்கு சாத்தியக்கூறு கிடைக்கவில்லை. குகையின் இரு வாயில்களையும் அடைத்து விட்டு காவல் படைக்குத் தகவல் அளித்தார். காவல் படை அக்குகையைச் சுற்றியும் நிறுத்தப்பட்டிருந்தது. ஒருவர் பின் ஒருவராக குகையின் இரு பக்கங்களில் உள்ளே நுழைந்தனர். குகையின் உள்ளே காவி உடையணிந்த ஒருவர் குண்டடிபட்டு இறந்து கிடந்தார். எதிர் முனையில் எஸ்.அய். வரதராஜன் கைத் துப்பாக்கியுடன் சூலாயுதத்தால் தாக்கப்பட்டு இறந்து கிடந்தார் என்ற செய்தி கூடல்பட்டி மக்களிடையே பெரும் அச்சத்தையும் சலசலப்பையும் உண்டாக்கியிருந்தன. காவல் துறையினர் பத்து வயதுச் சிறுமியைப் பத்திரமாக மீட்டு சைகோ சாமியாரை கூடல்பட்டி வழியாக இழுத்துச் சென்று கொண்டிருந்தனர். வரதராஜன் தம்பி மட்டும் இல்லைன்னா இந்த ஊர் என்ன பாடுபட்டிருக்குமோ? ஒன்னும் இல்லாத கடவுளுக்குக் கோயில் கட்டுறதவிட தம்பி மாதிரி ஒரு நல்ல மனுஷனுக்கு மரியாதை பண்ணுங்கய்யா என்ற கூடல்பட்டி மூத்த குடிமக்களின் முடிவு அவ்வூரையே அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளச் செய்தது.
இன்னும் ஓர் யாகம் நடத்தியிருந்தால் 28_ஆம் உச்ச பலியில் சர்வ சக்தியையும் பெற்றிருப்பேனே என்ற சைகோ சாமியாரின் கொலை வெறி முடிக்கப்பட்டது.
– இரா.ஜெயபிரகாஷ்