சிதம்பரத்தில் சித்திரவதை
08.09.1927 ஆம் தேதி காலையில் 10 மணிக்குச் சிதம்பரத்தில் பார்ப்பனர்கள் வாழும் புதுத் தெருவிற்கு அடுத்த தெருவில் ஒரு யாகம் நடைபெற்றது. யாகத்தீயில் அவிர்பாகம் செய்ய ஓர் ஆட்டை பார்ப்பனர்கள் எப்படி சித்திரவதை செய்து கொன்றார்கள் என்பதைக் கூறும் கீழ்வரும் நிகழ்ச்சி எல்லோர் மனதையும் கசிந்துருகச் செய்யும். அவ்வாட்டின் சித்திரவதையை யாராலும் எடுத்து வருணித்தல் முடியாது. ஆனால், அந்தக் கூட்டத்திற்குப் போன ஒரு பார்ப்பனன் அக்கூட்டத்திற்குப் போக சம்மதம் கொடாத இன்னொரு பார்ப்பனருக்கு எடுத்துச் சொன்னவை கீழே தரப்படுகிறது. அதைப் படித்த பின் பார்ப்பன வேதம், யாகம் முதலியனவற்றின் புரட்டுகளைப் புரிந்து கொள்ள வேண்டும்)
யாகத்தை வளர்த்துவிட்டு அவ்வாட்டை இரண்டு மூன்று பேர்வழிகள் பிடித்துக் கொண்டார்களாம்! அதில் ஒருவன் அதன் வாயைத் தருப்பைப் புல்லால் (சாஸ்திர சம்பிரதாயம் வழுவாமலிருக்க) இறுக்கிக் கட்டிவிட்டு நாசியின் துவாரங்களைச் சுவாசம் உள் போகாமல் வாயோடு சேர்த்து அழுத்தமாகப் பிடித்துக் கொண்டானாம்! அய்யோ பரிதாபம்! சுவாசம் அடைப்பதினால் அந்த ஆடு என்ன மரண அவஸ்தைப் பட்டதோ? அதே ஆடு இருந்த ஸ்திதியில் நாம் இருக்கிறதாக நினைத்துக் கொண்டு சற்று யோசித்துப் பார்ப்போமானால் அவ்வாட்டின் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்பது யாவருக்கும் தெரியவரும். இத்துடன் நிற்கவில்லை அய்யா! அச்சித்திரவதைக் காரர்களின் செயல்! (இவ்விதமான சித்திர வதையை ஒப்புக் கொள்ளும் அவ்வேதங்களையும் சாஸ்திரங்களையும், புராண இதிகாசங்களையும் ஏன் நாம் கொளுத்துதல் கூடாது?) இவ்விதமாக அந்த ஆடானது தத்தளித்துக் கொண்டிருக்கும் போது மற்றொருவன் அதன் பீஜத்தைத் தனது இரண்டு கால்களிலும் இறுகப்பிடித்து தனது வலிமையைக் கொண்டு பிசைந்து பிசைந்து உயிரை நீக்கினானாம். என்ன கொடுமை பாருங்கள்!
இச்சித்திரவதைகளைக் கற்றுக் கொடுக்கும் புத்தகங்கள் கடவுளால் எழுதப்பட்டவைகளாம்! கடவுளால் அங்கீகரிக்கப்பட்டவைகளாம். என்னே! இப்பார்ப்பன மாமிசப் பட்சணிகள் நம் மக்களை சாஸ்திரத்தின் பேரால் ஏமாற்றுகிற கொடுமை! அது உயிர் துறக்கும் சமயத்தில் ஒருவன் திடமான கத்தியைக் கொண்டு அதன் வயிற்றைக் கீறி ஈரலை வெளியில் எடுத்து முள்ளின் மேல் ஏந்தி வந்து நெய் ஊற்றி அதை அக்கினியில் வாட்டி எடுத்தார்களாம். பின்பு அவர்களுக்குள் அய்ந்து பேர்வழிகளை அக்னி, வருணன் முதலிய அய்ம்பெரும் தேவர்களாக நியமித்துக் கொண்டு அவ்வைந்துபேர்களும் அவ்யாகத்தை நடத்திவைக்கக் காரண கர்த்தாவாயிருந்தவரும் சேர்த்து ஆகிய ஆறு ஆசாமிகளும் அம்மாமிசத்தைப் பகிர்ந்து கொண்டார்களாம்! இம்மாமிசப் பக்ஷிணிகளா நமக்கு மோக்ஷ வழியைக் காட்டப் போகிறார்கள்? புரோகிதத் தரகர்களை இன்றே ஒழியுங்கள். இந்து வேத புராணங்களை இன்றே வெறுத்துத் தள்ளுங்கள்.
பின்பு, ஒரு பெரிய பார்ப்பன போஜனம் நடைபெற்றதாம். இந்த யாகத்தில் சம்பந்தப்பட்ட ஆறுபேர்களும் அய்யர்களாயி ருந்ததால் அன்றைய தினத்திலிருந்து அவர்களெல்லாம் தீக்ஷதர்களாய் விட்டார்களாம். என்னே நாயைப் பன்றியாக்கும் வித்தை!
இந்த அநியாய அக்கிரமத்தைத் தடுக்க ஜீவகாருண்ய சபையார் தகுந்த முயற்சி எடுப்பார்களென்று நம்புகிறேன். மேலும், நம் காருண்ய கவர்ன்மெண்டாரும் இச்சித்திரவதைகள் இனிமேல் நடவாமல் தடுப்பார்களென்றும் நம்புகிறேன். இன்னும் இத்தகைய யாகம் ஒன்று கூடிய சீக்கிரத்தில் இவ்வூரிலேயே நடத்தப்போகிறார்களாம். இதைத் தடுக்க யாவரும் முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டுமென்று மன்றாடிக் கேட்டுக் கொள்ளுகிறேன்.
குடிஅரசு – 02.10.1929 – பக்கம் 14
தகவல் – மு.நீ.சி