Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

உலகப் பகுத்தறிவாளர்

தாமஸ் ஹென்றி ஹக்ஸ்லிசு.அறிவுக்கரசு

படைப்பா?

மனிதனின் தோற்றம் பற்றிய தனது நூலை சார்லஸ் டார்வின் 1871 ஆம் ஆண்டுவரை அச்சிடவில்லை.  என்றாலும், மனிதனின் தோற்றம் தொடர்பான கொள்கைபற்றிய வெளிச்சம் ஒருநாள் வந்தே தீரும், என்கிற கருத்தைச் சூசகமாக வெளியிட்டார்.  இதைப் பிடித்துக் கொண்ட ரிச்சர்டு ஓவன் – மனிதன் மற்ற பால் குடிக்கும் உயிரிகளைப் போன்றவன் அல்லன், அவனது மூளை அவனை மற்றவற்றிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டும் – என்று கூறத் தொடங்கினார்.

இதனை மற்றைய உயிரியல் வல்லுநர்கள் யாரும் ஏற்கவில்லை.  என்றாலும் 1860 இல் ஆக்ஸ்போர்டின் பிரிட்டிஷ் சங்கத்தில் இப்பிரச்சினை எழுப்பப்பட்டபோது, ஹக்ஸ்லி மறுத்துப் பேசி, செயல் விளக்கம் தந்தார்.  மனிதக் குரங்குக்கும் (APE) மனிதனைப் போலவே (பக்கவாட்டு இதய அறை) வென்ட்ரிக்கிளும் மூளையின் சில பகுதிகளும் அமைந்திருப்பதை அறுத்துக் காட்டி நிரூபித்தார்.  ரிச்சர்டு ஓவனுக்குத் தோல்வி ஏற்பட்டது.  ஹக்ஸ்லி வாதத்தில் வல்லவர் மட்டுமல்ல, மிகப் பெரிய உடற்கூறு இயல் வல்லுநர் எனும் உண்மையும் புரிந்தது.

பாடத்திட்டத்தில்…. பைபிளா?

ஒரு வகையில் பார்த்தால், டார்வின் இயற்கை இயலாளர்.  ஹக்ஸ்லி உடற்கூறு இயலாளர். எனவே, இருவரது கருத்துகளும் வேறு வேறாகவே இருந்தன எனலாம்.  ஆனாலும், டார்வினின் கொள்கைகள் பற்றிய எல்லா சந்தேகங்களும் ஹக்ஸ்லியின் கொள்கைகளால் தீர்ந்தே போயின என்பதுதான் உண்மை.  இவரின் முயற்சியால் காப்ளி விருது (COPLEY MEDAL) டார்வினுக்கு வழங்கப்பட்டது.

1870 ஆம் ஆண்டில் லண்டன் பள்ளி நிருவாக அவைக்கு ஹக்ஸ்லி தேர்ந்தெடுக்கப்பட்டார்.  தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றின் பாடத்திட்ட முறைகளை வகுத்துத் தரும் பொறுப்புள்ள அவையாகும்.  தொடக்கப் பள்ளிகளில் படிக்க, எழுத, கணக்குப் போட, கலை, அறிவியல், இசை முதலியவற்றைக் கற்பிக்கும் முறையை இவர்தான் கொண்டுவந்தார்.  அவர் கொண்டு வந்த முறைதான் இன்றளவும் அங்கே நிலவுகிறது.  முறைப்படுத்தப்பட்ட பொது அறிவு எனும் வகையில் அறிவியல் கற்றுத் தரப்படுவதற்கும் இவரே காரணி.

பள்ளிகளில் பைபிள் படிக்க ஆதரவு தந்தார்.  அதன்மூலம் மத நம்பிக்கையை ஊட்டிட அல்லாமல், அந்நூலின் இங்கிலீஷ் மொழிவளத்தைச் சிறார் அறிந்து கொள்ளவும் ஆங்காங்கே தென்படும் நீதிநெறிகளை மாணவ, மாணவியர் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற அளவில் மட்டுமே!  கரப்பான் பூச்சிகள் இருக்கின்றன என்ற காரணத்திற்காக யாரும் கப்பலைக் கொளுத்தி விடுவது கிடையாது அல்லவா! பைபிளில் உள்ள குறைபாடுகள், பிழைகள், அறிவியலுக்கு மாறான வாசகங்கள் போன்றவற்றை மாணவர் களுக்குச் சொல்லித்தரக் கூடாது என்று கண்டிப்பாக அறிவுறுத்திவிட்டார். இதனை பள்ளி நிருவாக அவை ஏற்க மறுத்தது.  அதைப் போலவே மாணவர்களை பைபிள் வகுப்புகளுக்கு அனுப்பக் கூடாது என்றும் முடிவெடுத்தது.  இறுதியில் நாடாளுமன்றம் தலையிட்டு, பைபிளைப் படிக்கலாம், ஆனால் அறிவியலுக்கு முரணான கருத்துகள் கற்பிக்கப்படக் கூடாது எனக் கூறியது.  ஹக்ஸ்லியின் கருத்து ஏற்கப்பட்டது என்பது தெளிவு.

ஆத்திகப் பித்தலாட்டம்

பிரசன்ன ஆஸ்திகர் என்று தந்தை  பெரியாரைச் சிலர் முன்பு கூறியதைப் போல, ஹக்ஸ்லியையும் கிறித்துவப் பாதிரியார்கள் – கடவுளை மறுக்கும் சுவிசேஷகர் (ATHEISTIC EVANGALIST)  என்று அழைத்தனர். அவரது வாதத்தைப் பாதிரியார்களின் அறிவு ஏற்றாலும், பக்தி அதற்கு முகமூடி அணிவித்து மறைத்துவிட்டது.  பாவம், அவர்கள் ஜீவனமும் நடைபெற வேண்டுமல்லவா? ஹக்ஸ்லியைப் பொறுத்தமட்டில், அவர் எல்லா மதங்களையும் எதிர்த்தவர்.  அவரது கொள்கைகள், (லோகாயதவாதம்) பொருள்முதல்வாதத் தத்துவத்திற்கான தோற்றம் என்றே தோழர் லெனின் கூறினார்.  அது ஏன்?

ஹக்ஸ்லி 1854 இல் பைபிளை விமர்சனம் செய்து எழுதத் தொடங்கினார்.  ஒன்றும் அறியாதவர்களும், மாதாகோயிலின் பாதிரிமார்களும் இப்போது ஒன்றாக நிற்கிறார்கள், (பைபிளின் பழைய ஏற்பாட்டில் வரும் கடவுளின் தூதர்) மோசஸ் கையில் நிலவியல் நூல் இருந்திருக்குமேயானால், பைபிள் வேறுவிதமாக எழுதப்பட்டிருக்கும் என்று குறிப்பிட்டார்.  உயிரிகளைப் படைத்தவிதம், பூமியின் வயது போன்றவை பற்றிய பைபிள் கருத்துகளைக் கேள்வி கேட்டுக் கட்டுரைகள் (சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்புதான் உலகம் படைக்கப்பட்டதாக பைபிள் கூறும்) எழுதினார்.  1859 இல் உரை நிகழ்த்தியபோது மதமும் அறிவியலும் இரட்டைச் சகோதரிகள் எனக் கூறியவர் – கடவுள் நம்பிக்கையும் அறிவியலும் நிரந்தர எதிரிகள் என்று வருணித்தார்.  பைபிளின் (ஆதி ஆகமம்) தோற்றுவாய் (GENESIS) பகுதி நிலவியில் விஞ்ஞானத்தோடு ஒத்துப்போக முடியாத கற்பனை என்று கூறினார்.

பைபிளின் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு ஆகியவற்றிலுள்ள கதைகளைக் கண்டித்த ஹக்ஸ்லிக்கும் அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் கிளாட்ஸ்டோனுக்கும் நடந்த வாதப் போர் 30 ஆண்டுகள் தொடர்ந்தது என்பதே அவரது கொள்கை உறுதியைக் காண்பிக்கும்.

போப் ஆக இருந்தாலும்…

படைப்பு என்பதே பைத்தியக்காரத்தனமானது என்றார் ஹக்ஸ்லி.  மனிதன் ஆதாம் என்பவனின் சந்ததிகள் அல்ல, மாறாக மனிதக் குரங்கு போன்ற முன்னோர் வழியில் உருமலர்ச்சி பெற்றவன் என்ற கருத்தை உறுதியாகத் தெரிவித்து வந்தார்.
போப் ஒன்பதாம் பயஸ் (POPE PIOS IX), கர்டினல் வைஸ்மான், பிரதமர் பெஞ்சமின் டிஸ்ரேலி போன்ற பலரும் படைப்புக் கொள்கையைத் தாங்கிப்பிடித்து, பரிணாமக் கொள்கையைக் கூறும் அறிவியலைக் கண்டித்தபோதும்கூட, அரசியல் சதிகாரர்களும் மாதாகோயில் கூப்பாடு போடுபவர்களும் கூட்டுச் சேர்ந்து தேர்தல் வெற்றிக்காகப் போடும் வெற்றுக் கூச்சல் என்று புறந்தள்ளியவர் ஹக்ஸ்லி.  பிரதமர் டிஸ்ரேலி பதவிமோகம் கொண்ட நடிகர், அவர் அறிவியலின் சில அம்சங்களைப் புகழ்வதைக் கண்டு ஏமாற நான் தயாரில்லை; அறிவியலின் நிரந்தர எதிரியுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ளவும் தாம் தயாரில்லை எனத் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியவர்.

ஆவிகள் மோசடி

கிறித்துவ மதத்தில் ஆவிகள் (SPIRITS) முக்கிய இடத்தைப் பெற்று வந்துள்ளன; இன்றளவும் பெற்று வருகின்றன.  பரிசுத்த ஆவி (HOLY SPIRIT) என்பது கருப்பையில் புகுந்ததால்தான் கன்னி மேரி கருவுற்று யேசுவைப் பெற்றெடுத்தாள் என்றுதான் கதையே தொடங்குகிறது.  இன்றளவும் உயிரோடு இருந்து சுவிசேஷப் பிரசங்கம் செய்துவரும் அமெரிக்கக் கோடீசுவரனான பில்லி கிரகாம் முதற்கொண்டு தமிழ்நாட்டுக் கோடீசுவரனான (மறைந்த) தினகரன் வரை எல்லோருமே ஆவிகள் பற்றிப் பேசி, அவற்றை விரட்டியடித்து, சொஸ்தப்படுத்தும் – சுகமளிக்கும் – நற்செய்திக் கூட்டங்களையே நடத்தி வருகிறார்கள்.  இந்த ஆவிகள், கெட்ட ஆவிகள் என்றும் வகைப்படுத்தியிருக்கிறார்கள்.  இவற்றின் செய்கை பற்றி அவர்கள் வருணிப்பதைக் கேட்டால், நிச்சயமாக அவை கடவுளின் வலிமையான எதிரிகள் என்றும், கடவுளின் ஆற்றலுக்கும் மேலான ஆற்றல் பெற்றவை என்ற முடிவுக்குத்தான் எவரும் வரமுடியும்.  ஆவிகளுடன் தொடர்பு கொண்ட நிகழ்ச்சியும் ஹக்ஸ்லிக்கு 1854 இல் ஏற்பட்டது.

ஹக்ஸ்லியின் உறவினர் ஒருவரின் வீட்டில் ஆவிகளுடன் பேசும் இடைத்தரகர் (MEDIUM)  ஆகிய பெண் (நம் ஊர் ஆவி அமுதாபோல – அவரைப் பற்றிய பேச்சையே காணோமே, ஏன்?) ஒரு பென்சிலையும் ஏ,பி,சி,டி, எழுத்துகள் கொண்ட பலகையையும் வைத்துக் கொண்டு மூடர்களை ஏமாற்றுவதுபோல, இவரிடமும் தம் கைவரிசையைக் காட்ட முயற்சித்தார்.  இவர் அவரின் பித்தலாட்டத்தைத் தோலுரித்து உறவினையும் தெளிவு பெற வைத்தார்.  (சரி, அமுதா போகட்டும் – நான் வருகிறேன் என்று விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் மாதிரி) ஒருவர் ஹக்ஸ்லியிடம் தொடர்பு கொண்ட போது, இந்த ஏமாற்று வித்தைகளைக் காண நான் வரமுடியாது எனக் கூறி விட்டார். அவருக்குத் தெரிந்த ஒரே SPIRIT ஒரு கோப்பை ஒயின் மட்டுமே!

ஆதிகாலம் தொட்டு செய்யப்பட்டுவரும் ஏமாற்று வித்தைகளான ஆவியால் பீடிக்கப்பெற்றது, மந்திரக்காரியால் சூன்யம் வைக்கப் பெற்றது என்கிற பித்தலாட்டங்கள் 15,16,17 ஆம் நூற்றாண்டுகளில் பெரும் வளர்ச்சி பெற்று அப்பாவிகளான ஆண், பெண், குழந்தைகளை, மிகக்கொடூரமான முறைகளில் கிறித்துவமதம் கொன்று குவித்த கொடுமையை ரோம் நகர மதபீடம் (கத்தோலிக்கத் தலைமை – போப்) செய்தது என்கிற உண்மையைக் கொஞ்சமும் தயக்கமின்றி வெளிப்படுத்திக் கண்டித்தார்.

யார் தந்தை?

இடையில் ஒரு சிறிய கதை.  பள்ளி ஆசிரியரைப் பார்த்து, சிறுவனான மாணவன் கேட்டான்; நாம் ஜெபம் செய்வதைப்போல, பிதாவை நோக்கி யேசு ஜெபம் செய்வார் அல்லவா?
ஆம் என்றார் ஆசிரியர்.

அந்தவகையில் பிதாவே என்பது ஜோசப் என்பவரை நோக்கியா அல்லது கடவுளை நோக்கியா?

கடவுளை நோக்கி

யேசுவின் பிதா ஜோசப் அல்ல என்றால் – மேரியின் ஜெபத்தில் யார் பிதா?
யேசுவுக்குப் பிதா என்றால் கடவுள்.  மேரி பிதா என்று கூறும் போது அது ஜோசபைக் குறிக்கும்

அப்படியானால், கடவுள்தான் யேசுவின் பிதா என்பது (தாயாரான) மேரிக்கே, தெரியாதா?

இந்தக் கதையைச் சொல்லித்தான் பைபிளைச் சொல்லிக் கொடுப்பது எவ்வளவு அபத்தமானது என்பதை ஹக்ஸ்லி, பள்ளிக்கூட நிருவாக அவையில் விளக்கினார்.  அவர்தான் AGNOSTIC என்ற சொல்லையே இங்கிலீஷ் மொழிக்குத் தந்தவர். இந்தமாதிரி பலநூறு சொற்களை அம்மொழிக்கு உருவாக்கித் தந்தவர்.  இந்தச் சொல்லை உருவாக்கிட வாய்ப்புத் தந்தது தற்செயல் நிகழ்வுதான்.

– தொடரும்