எங்கள் வாழ்வியலும் ‘அழகியல்’ தான் – மெட்ராஸ்

சினிமா

இந்து சமூகம் தலித்துகளின் மேல் சுமத்தி வைத்திருக்கின்ற ‘இழி நிலை’ மிக மோசமானது,
தலித்தாக இருப்பின் ஒரு ‘மாநில முதல்வரானாலும்’ அவர் கோவிலுக்கு வந்து சென்றபின் தூய்மை படுத்த சிறப்பு பூசைகள் நடத்தப்படுகின்றன.
தலித் மக்களின் இருப்பிடத்தை குறித்து ‘ஹவுசிங் போர்டுல இருப்பவன் என்றும் ‘பக்கத்துல ஹவுசிங் போர்டு இருக்கு அது தான் ஒரே பிரச்சினை’என்பதுமாகவும் ,

இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் பலநூறு தலித் மாணவர்களை அவமானத்தில் தள்ளி தற்கொலை செய்து கொள்ள வைத்திருப்பதாகவும் ,’சேரில உள்ளவன் மாதிரி பேசாத’ என்ற சொல்லாடல் போலவும் ,அனைவருக்கும் வருவது போல் இளம் பருவத்தில் ஒரு தலித்துக்கு இயல்பாக காதல் வந்தால் அதனை ‘நாடக காதல்’என்று இழிவு செய்வது போலவும் ,தலித் மக்களின் உடை,மொழி,இருப்பிடம்,நிறம்,உணவு முறை,காதல் என்று பலவற்றையும் (அனைத்தையும்)இந்து சமூகம் தீட்டாக கருதி அவமானம் செய்கிறது .

அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் என்று சமூகத்தில் தலித்துகள் எதிர்கொள்ளும் ‘நவீன தீண்டாமை’ எழுத்து வடிவத்திற்கு சொல் வடிவத்திற்கும் அப்பாற்பட்டது.
இவ்வாறான சுழலில் இந்த ‘இந்து சாதி’ சமூகத்திலிருந்து வந்த சினிமாகாரர்கள் எவ்வாறு இருப்பார்கள் என்பது புரிந்து கொள்ள கூடியதே !
அவர்கள் தங்கள் சாதி வன்மத்தை தீர்த்துகொள்ளும் மற்றொரு தளமாக ‘சினிமா’ வை பயன்படுத்தி கொள்கின்றனர். தமிழ் தேசியம் பேசும் அரசியல் கட்சிகள் ‘ஓட்டுக்காக’ சாதி வெறியை தூண்டி விடுவது போல வியாபாரத்திற்காக சாதி வன்மத்தை தூண்டி விடும் சினிமாக்காரர்கள் பலர் தமிழகத்திலே உள்ளனர்.
நாட்டாமை படத்தில் ஒருவன் வெத்தலை பாக்கு போட்டு துப்புவான், அவன் எச்சிலை மற்றொருவர் கையில் பத்திரம் ஏந்தி பிடிப்பார், மற்றுமொரு படத்தில் ‘இவுங்க தலைமுறை தலைமுறையா நம்ம குடும்பத்துக்காகவே ஓடா உழைக்கிறவங்க என்று சட்டை போடாத ஒருவரை காட்டுவார்கள், சினிமாவில் வில்லன் கள் அனைவரும் அடர்ந்த நிறம் கொண்டவர்கள் முதல்வன் படத்தில் அனைவரின் பிரச்சினையும் போன் போட்டு தீர்க்கும் முதல்வர் ‘சேரி பகுதி வில்லன்களை நேரில் சென்று மிதிப்பார்.
சண்ட கோழி திரைபடத்தில் ‘பெரிய துரையாமுல்ல எத்தன காலத்துக்கு தான் இவுங்க நெஞ்ச நக்கி வாழுறது, உங்க காலத்திலாவது நெஞ்ச நிமித்தி வாழுங்கடா என்ற ஒருவர் கூறியவுடன் ஹீரோ அவர்களை மியூசிக் போட்டு மிதிப்பார்.
இவ்வாறு தலித்துகளை இழிவு படுத்தும் காட்சி அமைப்புகள்,வசனங்களை ஆயிரக்கணக்கில் எங்களால் கூற முடியும் , நடைமுறையில் புற வாழ்வில் தீண்டாமையை அனுபவிக்கும் தலித் மக்கள் ஒரு சினிமாவுக்காவது நிம்மதியா போகலாம் என்றால் அங்கும் தீண்டாமை கொடுமை தலை விரித்தாடுகின்றது,
டேய் இது மதுர டா! என்பதற்கு என்ன பொருள் என்பது எல்லாருக்கும் தெரியும்.
உண்மையை தானே காட்டுகின்றோம் என்று சிலர் வாதிட கூடும், ஆனால் இந்த காட்சி அமைப்புகளில் என்ன பிரச்சினை என்றால் இவை ‘அழகியலாக’ காட்டப்படுகின்றன என்பதே யாகும், உங்க காலத்திலாவது நெஞ்ச நிமிர்த்தி வாழுங்கடா என்று கூறும் தலித்தை ஹீரோ ‘செம அடி’ அடிப்பது ரசிக்க கூடியதாக காட்டபடுகின்றது,சாதி வெறியை தூண்ட ‘போற்றி பாடும் ‘ பாடல்கள் அமைக்கபடுகின்றன.
சாதி வன்மத்தின் உச்சமாக ‘சைகோ கதாப்பதிரங்களை’ வைத்து படமெடுக்கும் பாலா ‘மாட்டு கறி வியாபாரம் செய்வதை’ குற்றமாக காட்டுகின்றார், சினிமாவின் அழகியலில் உயர் சாதி பழக்க வழக்கங்களே தவிர வேறு ஒன்றும் இல்லை.
மேலும் சூத்திரர்கள் அதாவது பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் இந்து மதத்தின் சாதி முறையின் காவலர்களாக செயல் படுவார்கள் என்று ‘அண்ணல் அம்பேத்கர்’ கூறுவார், அதாவது யாராவது சனாதன தர்மத்தை மீற முயன்றால் அவர்களை ‘அழித்தொழிப்பது’ அவர்களின் கடமை.
இந்த கடமை அவர்களுக்கு தொடர்ந்து நினைவூட்ட படுகின்றது, அதற்ககு பயன்படுவது ‘முழு நிலவு விழாக்கள்’ மட்டுமல்ல, இந்த சினிமாவும் தான். ஒவ்வொரு முறையும் ‘இது கவுரவுமான ‘குடும்பம் என்று சினிமாவில் கூறும்போதெல்லாம் அது அது ஒரு ‘போலி கவுரவ கொலைக்கு’ வழி வகுப்பதாகவே நாங்கள் கருதுகின்றோம்
நடப்பதை தானே காட்டுகின்றோம் என்பவர்கள் ஒரு தீண்டாமை நிகழ்வை ‘பெருங்குற்றமாக,மனித தன்மையற்ற செயலாக, காட்ட வேண்டும், ஆனால் அதைவிடுத்து இந்த சான தான தர்மத்தை காப்பற்றுபவர்களை தமிழ் சினிமா ‘ஹீரோ’களாக காட்டுகின்றது.நேரடியாக வெளிபடுத்த முடியாவிடிலும் ஒவ்வொரு தலித்தும் தமிழ் சினிமா தங்களை இழிவு செய்வதை ஆழ் மனதில் உணர்கின்றான்.
இவ்வாறான சூழலில் ‘இயக்குனர்’ ரஞ்சித் எங்களுக்கு ஒரு விடி வெள்ளி யாக தெரிகின்றார் , அவரின் காட்சி அமைப்புகள் ‘காயம் பட்ட ‘எங்கள் நெஞ்சங்களுக்கு மருந்து தடவுவதாக உள்ளன, ‘அட்ட கத்தி ‘ திரைப்படத்தை பார்த்து பலர் கண்ணீர் விட்டு அழுததாக கூறினர்,அந்த கண்ணீர் அந்த படத்தில் வரும் நாயகனுக்காக அல்லது கதைக்காக அல்ல’ அந்த கண்ணீர் வெகு நாள் தமிழ் சினிமாவில் இழிவாக காட்டப்பட்டு வந்த தங்களை முதன் முறையாக ஒரு ஹீரோவாக பார்த்ததால் வந்தது.அது எங்கள் வாழ்வியலும் அழகியல் தான் என்ற ‘ஆற்றாமையில் ‘ வந்தது.
ஆகவே , குடும்பத்தோடு நடனமாடுவதும் ,’மெட்ராசின் ‘ மொழியில் ஹீரோயின் பேசுவதும் , ஹீரோ நன்கு படித்து வேலைக்கு சென்றவனாக இருப்பதும்,காதலிக்கும் செய்தி தெரிந்ததும் ‘பெற்றோர்கள் ‘எங்கள் கவுரவத்தை கெடுத்துடாத’ என்று பேசாமல் இருப்பதும் , ஊர் கூடி ஒரு சாவுக்கு அழுவதும் ,எங்கள் இளைஞர்களின் ‘கானா ‘ பாடல்களும்,நாடி நரம்புகளை அசைத்து பார்க்கும் பறை இசையும் ,மாட்டு கறியும் ,எங்கள் வாழ்வியலும், அழகியல் தான்..
-ஜானகிராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *