மெட்ராஸ்: பொறுப்பானவர்களிடம்தான் பொறுப்பை எதிர்பார்க்கமுடியும்!

சினிமா

அட்டக்கத்தி பார்த்தபோது இயக்குனர் ரஞ்சித் மீது ஒரு வாஞ்சை உண்டானது.தலித் வாழ்வின் சிலபல அம்சங்களையேனும் தமிழ்ச்சினிமாவில் முதன்முறையாக சமரசமின்றி பதிவு செய்திருந்ததால் அவர்மீது மிகுந்த நம்பிக்கை உண்டானது.

அந்த நம்பிக்கையிலும், பல பதிவர்கள் ஆகா..அற்புதமான படம் என ஒரே குரலில் பாராட்டிக்கொண்டாடியதாலும் மெட்ராஸ் படத்தை பார்த்துவிட என்மகனுடன் போனேன்.

அது தமிழின் முதல் அரசியல்படம் என்று ஒரு பதிவர் போட்டிருந்ததும்கூட அந்த நம்பிக்கையை அதிகப்படுத்தியிருந்தது.

 

நேற்று தியேட்டரும் நிரம்பி வழிந்தது. நீண்ட நாட்களுக்குப்பிறகு அரங்கம் நிரம்பிய காட்சியை கண்டதும் மிகுந்த உற்சாகமாகிவிட்டேன்.என்மகனும் என்னப்பா இவ்ளோ கூட்டமாயிருக்கு என அசந்துபோனான்.அவன் படம்பார்க்க துவங்கியபின் முதன்முறையாக இப்போதுதான் இவ்வளவு கூட்டத்தை பார்த்ததால அவனுக்கும் பிரமிப்பாக இருந்தது.

படம் துவங்கியதிலிருந்தே மக்கள் ரசித்தும்..சிரித்தும் மகிழ்வதை கண்டேன்.அதற்கு படத்தின் மனிதர்கள் பேசிய மொழியும் ஒரு முக்கிய காரணம்.எங்கள் மாவட்டமொழியும் அதனுடன் ஒத்துப்போனதால் படத்துடன் பார்வையாளர்கள் ஒன்றிப்போய் பார்த்தனர். படத்தின் ஒளிப்பதிவு மிகவும் இயல்பாக உள்ளுக்குள் இறங்கியது..( வாழ்த்துக்கள் முரளி)படத்தில் வரும் அன்பு, காளி குழுவினரின் நட்பு மிகவும் இயல்பாய் நெருக்கத்தை தந்தது.

அதுவும் அன்புவின் மனைவி மேரி…அடடா…என்ன இயல்பான தோற்றம்…அன்னியோன்னியம்…அவர் காளியை அண்ணே,,என அழைக்கும்போதெல்லாம் நமக்கு நமது நண்பர்களின் துணையர்தான் நினைவுக்கு வந்தனர்.காளியின் அப்பாவும் அம்மாவும் துட்டு கேட்கும் ஆயாவும் அற்புதமான யதார்த்த மனிதர்கள். பாத்திர படைப்புகளில் இயக்குனரின் எளிமை தெரிகிறது.இசையும் மோசமில்லை. மரணவீட்டின் கானா பாட்டும் அந்தச்சூழல் படமாக்கப்பட்டவிதமும் அருமை.

சரி..கதைக்கு வருவோம். தன்னை நம்பும் தொண்டர்களுக்கு துரோகம் இழைக்கின்ற அரசியல்வாதிகளின் கதைதான்.புதுசாக ஒன்றுமில்லை.ஒரு கைதியின் டைரியில் துவங்கி ஏராளமான படங்களில் இந்த துரோகத்தையும் அதற்கான பழிவாங்குதலையும் சந்தித்து போரடித்து விட்டது.இந்தப்படமும் அதே பழிவாங்குதலில்தான் போய்முடிகிறது.

இது அரசியல் படமல்ல…அரசியல்வாதிகளின் குணநலன்களை பேசும் படம்.அந்த அரசியல்வாதிகளை கதாநாயகன் மக்க்ள் முன்னிலையில் அம்பலப்படுத்துகிறான்.ஆனால அந்த அரசியல்வாதியை அப்புறப்புடுத்தும் வேலையை மட்டும் கதாநாயகனே செய்துமுடித்து விடுகிறான். அப்புறம் மக்களுக்கு என்ன பங்கு..ஒன்றுமில்லை.

அவர்கள் அரசியல்வாதியின்மீது மண்ணள்ளி தூற்றிவிட்டு அவரவர் வேலையை பார்த்துக்கொண்டு போகவேண்டும்.கதாநாயகனே அதர்மத்தை வழக்கம்போல் வீழ்த்துவான் என்றால் இது என்ன அரசியல் படம்..?

படத்தில் இரண்டு மோசமான அரசியல் கட்சிகளும் கூட்டணி அமைக்கின்றன. அந்தக்கூட்டணிக்கு “ மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி” என பெயர் வைத்திருக்கிறார் இயக்குனர்.எவ்வளவு ஆபத்தான பெயர்சூட்டல் இது. மதச்சார்பற்ற தன்மைக்கு வேட்டுவைக்கும் ஒரு வலதுசாரி அரசியல் மேலோங்கியுள்ள நிலையில், அந்த வார்த்தையையே கேலிக்குரியதாகவும் கிண்டலானதாகவும் ஊடகங்களின் துணையோடு கட்டமைக்கப்பட்டுவரும் நிலையில்,அதை இன்றைய இளம்தலைமுறையினர் நம்பத்துவங்கியிருக்கும் நிலையில் மோசமானவர்களாக சித்தரிக்கப்படும் அரசியல்வாதிகளை மதச்சார்பற்ற..முற்போக்கு என்ற வார்த்தைகளால் அடையாளப்படுத்துவது என்பது யாருக்கு துணைபோகிற அரசியல்..?

எல்லா அரசியல்வாதிகளுமே மோசம்..அரசியலே மோசம்..என அரசியல் ஒவ்வாமை வியாதி இளம் தலைமுறையனரை பீடித்திருக்கும் நிலையில், மோசமான அரசியல்வாதிகளை(அவர்களின் அரசியல் கொள்கைகள் குறித்து எந்தக்குறிப்பும் படத்தில் இல்லை.

உணமையில் அம்பலப்படுத்தவேண்டியது அதுதான்)வலுவாக சித்தரிக்கும் இயக்குனர், அதற்கு மாற்றான அரசியலையும் அதே வலுவுடன் முன்மொழிய வேண்டாமா..? கடைசி காட்சியில் போகிறபோக்கில் சொல்லும்போது அது பார்வையாளனுக்கு எந்த தாக்கத்தை ஏற்படுத்திவிடமுடியும்..?

ரஞ்சித் போன்ற பொறுப்பான கலைஞர்களுக்கு அந்த பொறுப்பும் இருக்கிறதே…

( எனது இந்த பார்வை தவறு என நினைப்பவர்கள் என்னை தெளிவுபடுத்தலாம்…தெளிவுற எனக்கு எந்தத்தடையும் இல்லை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *