கேள்வி : தேர்தல் ஆணையம் வாக்களிக்கப் பணம் கொடுத்தாலும் வாங்கினாலும் சிறை என்று சட்டம் போட்ட பின்பும், கொடுப்பவர்களிடம் வாங்கிக் கொண்டு எங்கள் கூட்டணிக்கு ஓட்டுப் போடுங்கள் என்று சொல்லும் விஜகாந்த்தைத் துணிச்சல்காரர் என்று சொல்வதா? சட்டம் ஒழுங்கைச் சிதைப்பவர் என்று சொல்வதா? அல்லது….. – ஜே.அய்.ஏ.காந்தி, எரும்பி
பதில் : ஒழுக்கக்கேட்டிற்கு துணிச்சல் என்ற பெயர் உண்டு என்பதை முதல் முறையாக உங்கள் கேள்வி வாயிலாக அறிகிறேன்.
கேள்வி : புட்டபர்த்தி சாய்பாபா பற்றி….? – குல. மணிமொழி, பெரிய கோவிலாம்பாக்கம்
பதில் : பார்ப்பனரல்லாதார் என்பதால் சங்கராச்சாரிகள் இவரை வெறுத்தனர்; ஆனால், பகவான் என்று கூறி பல்லாயிரக்கணக்கில் பணம் சேர்த்தவர்.
அற்புதங்கள் செய்கிறேன் என்று கூறி மிகப் பெரிய பதவியாளர்கள், படித்தவர்களை அடி முட்டாளாக்கிய மேதை, இரவு அவதாரம் என்று சீடகோடி ஒருவர் (அமெரிக்கர்) இவர்பற்றி தனி புத்தகமே எழுதினார் என்றாலும் மருத்துவம், மற்றும் குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்து அறப்பணிகள் மூலம் ஓரளவு பேசும்படிச் செய்தவர்.
கேள்வி : புட்டபர்த்தி சாயிபாபாவின் நல்லடக்கத்தின்போது வானில் பிறை தோன்றியதாக தினமலர் எழுதியுள்ளதே…. – பாவலர் அறிவரசன், திருலோக்கி
பதில் : கப்சா மலரின் கடைசித் தரச் சரக்கு இது! அடக்கத்தில் என்ன நல்லடக்கம் கெட்டடக்கம் – புரியவில்லையே!
கேள்வி : பள்ளிக் கல்வித்துறை இன்று அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்கிறாரே அமைச்சர் தங்கம் தென்னரசு. அப்படியானால் அது யாருடைய கட்டுப்பாட்டில் இயங்குகிறது? – நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்
பதில் : தற்காலிகமாக சிலர் சட்டத்தைக் கையில் எடுத்து ஆடிய ஆட்டத்தின் ஒரு நாள் கூத்து அது!
கேள்வி : 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற அக்கட்சியின் கொறடா செங்கோட்டையன் பழநியில் தங்கத்தேர் இழுத்ததைப்பற்றி? – இ. இயற்கை தாசன், கொட்டாகுளம்
பதில் : தங்கத்தேர் மட்டுமா? அந்த முக்கியஸ்தர்கள் அனைவரும் யாகம் செய்த படம் ஏடுகளில் வெளியாகியுள்ளது (எக்ஸ்பிரஸ் 9.5.2011). மண்சோறு, தங்கத்தேர் இழுத்தல், எல்லாம் அண்ணா பெயரில் உள்ள கட்சியின் இலட்சிய விளக்கம் போலும்!
கேள்வி : The Jesus will come soon என்ற ஒரு வேடிக்கைப் புரளியைக் கிளப்பிவிட்டு பக்தி வியாபாரத்தில் கொழிக்கிறார்கள் சிலர். 2010 ஆண்டுகளுக்கு மேலாகியும் வந்தபாடில்லை அவர். இதோ – இப்போது பத்துவருடம் கழித்து பகவான் சாய்பாபா வருவாரென ரவிசங்கர் என்ற சித்துவேலை சிகண்டிமணி கூறியிருப்பது கொள்ளை லாபம் ஈட்டும் பக்திக் கம்பெனியின் பல கிளைகளைத் தொடங்கி மீண்டும் மீண்டும் தொடர்ந்து ஏமாற்றிப் பிழைக்கத்தானே? – சே. நவீன், காரைக்குடி
பதில் : ஆமென் ஓம் ஆம் சுத்சத்!
கேள்வி : வியட்நாம் போரைப் போல…. தமிழீழப் போர் வெற்றி பெற முடியாததற்கு என்ன காரணம்? – த. கவிதா, நாகர்கோவில்
பதில் : அந்த மக்களுக்குக் கிடைத்த வெளிநாட்டு ஆதரவுகள் இல்லாததும்; இந்திய அரசின் ஒத்துழையாமை, எதிரிக்கு உதவிய தன்மை!
கேள்வி : ஊழல், ஒழிப்பு, கறுப்புப் பணத்தை மீட்க வலியுறுத்தி பாபா ராம்தேவ் டில்லியில் ஜூன் 4 அன்றிலிருந்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப் போகிறாராமே? – பெ. தமிழ்ச்செல்வி, அம்பத்தூர்
பதில் : அன்னா ஹசாரே உண்ணாவிரத வியாதி ஒரு தொத்து வியாதியாகிப் பரவுகிறது என்பது புரிகிறது.
கேள்வி : பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறதே, தடுக்க முடியாதா? – கா. மதிவாணன், மயிலாடுதுறை
பதில் : முறையான நடவடிக்கை முன்னெச்சரிக்கையாக எடுத்திருந்தால் தடுத்திருக்கலாம்!
கேள்வி : அமெரிக்கா, பாகிஸ்தானில் அத்து மீறி நுழைந்து பின்லேடனைக் கொலை செய்தது சரியா? -அ. மங்கையர்க்கரசி, சீர்காழி
பதில் : அமெரிக்கப் பெரியண்ணனுக்கு உலகம் முழுவதும் ஃபிரீ (Free) லைசென்ஸ் உண்டே! மறந்துவிட்டீர்களா?