சேரிகள் துப்பினால்.. மாடிகளே விழும்! மோடிகள் எம்மாத்திரம்?

அக்டோபர் 01-15

சேரிப் பகுதிகள் ஏன் அவசியம்? என்ற தலைப்பில், இந்தியா டுடே பத்திரிகையில் ஒரு கட்டுரை வந்திருந்தது. அந்தத் தலைப்பைப் படித்தவுடனேயே  எவ்வகையிலான கோபம் பீறிட்டெழுந்தது என்பதைப் புரிந்து கொள்ள,  ஒன்று  என்னைப் போல சேரிப்பையனாக வாழ்க்கையில் பெரும்பகுதியைக் கழித்திருக்க வேண்டும்; அல்லது சேரியைக் கடந்து போகும்போது மூக்கைப் பிடித்துக் கொண்டு ச்சீ  என்று சொல்லிக் கடந்து போவதற்குப் பதிலாக, இங்கும் மனிதர்கள்தானே வாழ்கிறார்கள்  என்று குறைந்தபட்சம் உச்சுக் கொட்டியிருக்க வேண்டும்;

அல்லது அந்தப் பக்கமாக நடந்து போகும் கெடு வாய்ப்பமைந்து சாக்கடையில் கால் பட்டுவிடாமல் தவ்விச் சென்ற அனுபவம் பெற்றிருக்க வேண்டும்; அல்லது குடைக்குள் மழை என்ற கவிதை நயமுள்ள சொற்குவியலை ரசித்த உள்ளங்கள் _ சேரிகளின் வீட்டிற்குள்ளும் மழை பெய்யும், வீட்டுக்கு அடியிலிருந்து ஊற்றெடுக்கும், வீட்டுக்கு வரும் விருந்தினர் போல அவ்வப்போது மழைக்காலத்தில் நிரம்பி வழியும் சாக்கடை நீரோடு மலத்துண்டுகளும் வந்து போகும்  என்பதை உணர்ந்திருக்க வேண்டும். அஃதில்லாமல், என் கோபத்தைப் புரிந்து கொள்ள முடியாது. எத்தனை வன்மம்? எத்தனை எகத்தாளம்?

அந்தத் தலைப்பையும், அந்தக் கட்டுரையின் உள்ளடக்கத்தையும் அத்தனை சுலபமாக  என்னால் கடந்து போக முடியவில்லை.  அது கட்டுரையாளரின் சேரி பற்றிய அனுபவமின்மையாக மட்டும் புரிந்து கொள்வது தவறு. முதலாளித்துவத் திமிரோடு, சனாதன சிந்தனையும் இணைந்த இந்திய உளவியலைத்தான் அந்தக் கட்டுரையில் காண முடிந்தது. சேரியையே எட்டிப் பார்த்திராத, காரிலேயே பவனி வரும் இந்த முதலாளித்துவ அடியாட்களை இப்படி எழுதத் தூண்டியது எது? முதலாளித்துவ அடிமைத்தனமும், அதன் பலனாக விளைந்த கொழுப்புமேயன்றி வேறு காரணமிருக்க வாய்ப்பில்லை என்பதுதான் எனது முடிவு. கட்டுரையாளரைப் பொறுத்தவரை நகரமயமாக்கலின் விளைவாக புலம்பெயர்ந்து நகரங்களுக்கு வரும் மில்லியன்கணக்கான மக்களுக்குத் தங்குவதற்கு இடம் வேண்டும்  என்று இரங்கியிருப்பதாக நினைத்து உள்ளார்ந்து இருக்கும் வன்மத்தைக் கக்கியிருக்கிறார். இந்தத் தாராள இரக்கத்தை எண்ணி எண்ணிக் கண்ணீல் நீர் வர ஒற்றிக் கொள்ள வேண்டும்  என்று அவர் விரும்புகிறார். ஆனால், அவரது போலி இரக்கத்தைப் புரிந்து கொள்ள, கிராமப்புற ஏழை மக்கள் சொந்த வாழ்விடங்களிலிருந்து நகரங்களுக்கு இடம்பெயரும் காரணங்களையும், நகரச்சேரியில் தஞ்சம்புக நேரிடும் நிர்பந்தத்திற்கான காரணத்தையும் ஆராய்ந்தால் புரிந்துவிடும்.

கிராமம்  என்பது சினிமாவின் கேமராக்கள் படம்பிடிக்கும் பசுமை மட்டுமல்ல, இந்திய கிராமம்  என்பது யதார்த்தத்தில் ஜாதியக் கட்டமைப்புதான். அங்கே, கூலி வேலைக்கு ஆட்கள் தேவை, அதுவும் அடிமையாகத் தேவை, நீண்ட காலத்திற்குத் தேவை, சுயமில்லாத மனிதர்களாகத் தேவை  என்ற அடிப்படையில் ஊர்த்தெருக்காரர்களின் ஜாதிய மேலதிகாரத்திற்கு அடங்கி நடக்கும் பொருட்டு ஜாதியின் பெயரால் சேரியில் பெருந்திரளான மக்கள் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இந்த மக்கள் விரும்பினாலும், அந்தச் சேரியைவிட்டு இடம்பெயர்ந்து ஊர்த்தெருவில் குடியமர முடியாது. இரட்டைக் குவளையில்லாமல் தேநீர் அருந்த முடியாது. கடைக்கண் பார்வைதனை கன்னியர் தம் காட்டிவிட்டால் என்று மலையைத் தூக்கக் கிளம்ப முடியாது. ஜாதி தடுக்கும். ஆனால், அவர்களின் அடிமை உழைப்பால் விளைந்த வளம், சேரிக்குச் செல்லாமல் ஊர்த்தெருவையும், அக்ரஹாரத்தையும் செழிக்கச் செய்யும். கூலி அடிமையோ தன் விதியை நொந்து அடுத்த ஜென்மத்துக்காகக் காத்திருந்தபடியே, அடுத்த தலைமுறைக்குத் தான் சேர்த்த அடிமைத்தனத்தைக் கையளித்துவிட்டு, மரணத்தைத் தழுவிக் கொள்வான்.  ஆங்கிலேயன் வரும்வரை இந்தக் கிராம அமைப்பு சிறிய சேதாரம் கூட இல்லாமல் இப்படித்தான் காப்பாற்றப்பட்டு வந்தது.

ஆங்கிலேயன் வணிகம் செய்வதற்காக வந்து, ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு, தனது வணிகம் தொடர்ந்து நடக்க, நகரங்களை உருவாக்கத் தொடங்கினான். நகர உள்கட்டமைப்பைப் பெருக்கும் தேவை எழுந்ததையொட்டி கிராமங்களிலிருந்து அடிமைகளாக ஓட்டி வரப்பட்ட மக்கள், ரத்தமும், சதையுமான தங்களது உழைப்பால் நகரங்களைக் கட்டியெழுப்பினர். மலிவான விலையில் கிடைக்கும் கூலியாட்கள் அண்டிக்கொள்ள சுகாதரமற்ற சேரிப் பகுதிகளில், ஆங்கிலேயரின் அரசு அனுமதி அளித்தது. பிற நிர்வாகத் தேவைகளுக்கும் ஆட்கள் தேவைப்பட, கல்வி உரிமை மறுக்கப்பட்டிருந்த இந்திய அடிமைகளுக்குக் கல்வியை அளித்து, தங்களுடைய நிர்வாகத்திற்கான கிளார்க்குகளை உற்பத்தி செய்து கொள்வதென முடிவு செய்தார்கள் ஆங்கிலேயர்கள். (மேலை நாடுகளின் அடிமைகளுக்கு கல்வி உரிமை முழுவதுமாக மறுக்கப்பட்டிருக்கவில்லை என்பதை நினைவில் கொள்க) ஆங்கிலேயர்களையே முழுமையாகப் பணிக்கமர்த்துவது செலவுகளைக் கூட்டும்  என்பதைத் தவிர, ஜாதிய சகதியில் அழுத்தி வைக்கப்பட்டிருந்தவர்களை மீட்டெடுக்கும்  நோக்கம் ஆங்கிலேயர்களுக்கு இருந்தது என்று நற்சான்றிதழ் வழங்கி வரலாற்று யதார்த்தத்தை விட்டு விலகிப் போகும் நிலை நமக்கு வேண்டாம்.

இதை அப்படியே பொருத்திப் பார்த்தால், இன்றைக்கும் உலகமயமும், தாராளமயமும், தனியார்மயமும் இப்படித்தான் சொற்ப அளவில், தம் சொந்த நன்மை கருதி சில நன்மைகளை நம் மக்களுக்குச் செய்திருக்கிறது. நாம்  இங்கிருந்தபடியே பார்க்கும் கால் சென்டர் வேலைக்கு அமெரிக்கர் ஒருவரை நியமித்தால், அதிகமான  அமெரிக்க அளவுகோல்களின்படி சம்பளமும், உரிமையும் வழங்கப்பட வேண்டும். அது அந்த நிறுவனங்களின் லாப நோக்கத்திற்கு உறுதுணையாக இருக்காது. லாபத்தைப் பெருக்க குறைந்த கூலிக்கு ஆட்கள் தேவை.

இந்தியாவில் கிடைக்காத கூலிகளா? 1 டாலர் அவன் சம்பளம் கொடுத்தா, நமக்கு 60 ரூபாய்… 1000 டாலர் சம்பளம் வாங்குனா 60,000 ரூபாய். வளராத நம்ம நாட்டுல  இது பெரிய பணமில்லையா? அமெரிக்கத் தொழிலாளியோட வயித்துல கைய வச்சு, நம்ம வயித்துக்கு, அதிலும் நம்மவர்களின் கொஞ்ச பேர் வயித்துக்கு மட்டும் கொஞ்ச நாள் வயிறு நிறையச் சோறு போடுவான். நாமும், மலிவான அமெரிக்க ஊதியத்திற்கு லீமீறீறீஷீ லீவீ வீ னீணீநீ என்று நம்மிடையே வாழும் சக ஏழை இந்தியர்களை, தமிழர்களை மறப்போம். கண்ணகி நகரையும், செம்மஞ்சேரியையும் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.

இந்த உலகமயம் தனது கொள்கைகளால் வேறு  என்ன செய்கிறது?

கிராமப்புற விவசாயத்தை அழிக்கிறது. கூலித்தொழிலாளிகளையும், பசுமைப் புரட்சி எனும் நச்சால் தம் நிலம் மலடாகிப் போன சிறு-குறு விவசாயிகளையும் வேலை தேடி நகரத்திற்கு அலைக்கழிக்கிறது. இதன் விளைவாக நகரத்திற்கு இடம்பெயர்ந்து வருபவர்கள் மாட மாளிகையில் வாழ்வதில்லை. குடிசைகளையே கோபுரமாகக் கொண்டாடும் சேரிகளில்தான் தஞ்சமடைகிறார்கள்.  இந்தியாவில் மட்டும் 2015க்குள் விரும்பியோ, விரும்பாமலோ விவசாயத்தை விட்டு 400 மில்லியன் மக்கள் அகதிகளாக நகரங்களுக்கு இடம்பெயர்வார்கள்  என்று உலக வங்கி அறிவித்துள்ளது. வறுமையை ஒழிப்பதுதான் எங்கள் முதல் வேலை என்று ஆட்சிக்கு வந்த இராமர் கோவில் புகழ் பா.ஜ.க. கும்பல் என்ன செய்யத் தொடங்கியிருக்கிறது.

விவசாயத்தையும், கிராமப் பொருளாதாரத்தையும் ஊக்குவிக்கும் திட்டங்களையா நடைமுறைப்படுத்தத் தொடங்கியிருக்கிறது? கங்கையைச் சுத்தப்படுத்துகிறேன் என்று ஜம்பம் அடிக்கிறது. ஹிந்தியைத் திணிக்கிறேன் என்று பூச்சாண்டி காட்டுகிறது.  ஆட்சிக்கு வருவதற்கு முன் ஊடகங்களின் பலத்தினால் நல்லவன் வேடம் போட்ட இந்த பா.ஜ.க. காவி கும்பலின் வரலாறு நாம் அறியாததல்ல. நூற்றுக்கணக்கான கலவரங்களை இந்தியாவெங்கும் நிகழ்த்தி, ஆயிரக்கணக்கான சிறுபான்மை மக்களை அகதிகளாக்கிய கும்பல், நாட்டிற்குள்ளேயே இவர்களின் மோசமான பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாக அகதியாக அலையும், அலையப்போகும் இந்த மக்களுக்கு எப்படி நன்மை செய்வார்கள்? பஞ்சம் பிழைக்க நாளும் வெளிக்கிளம்பிக் கொண்டிருக்கும் இந்த இடம்பெயர்பவர்களை மிகப்பெரிய மனிதவளம்  என்று கணக்குக் காட்டித்தான்  ஆளும்  வர்க்கம் அந்நிய முதலீட்டை ஈர்க்கிறது. அந்நிய நாட்டுக் கம்பெனிகள் முதலீடு செய்து லாபமீட்ட  தொழிலாளர் நலச்சட்டங்கள் இடையூறாக இருக்கின்றன.

ஆகவே, அந்தப் பன்னாட்டு முதலாளிகள் தொழிலகங்கள் நிறுவிய பிறகு, பணிபுரியும் தொழிலாளர்கள் உரிமை கேட்டுவிடக் கூடாது. ஆகவே, சட்டம் பெயரளவில்கூட தொழிலாளர்களுக்குச் சாதகமாக இருக்கக் கூடாது என்று  கைகட்டி வாய்பொத்தி தொழிலாளர்நலச் சட்டங்களை திருத்தக் கிளம்பிவிட்டார்கள். அய்யா சொன்ன பார்ப்பனப் பனியா கும்பலின் ஆட்சிதானே இன்றும் நடக்கிறது. அந்தக் கும்பல் தம் வெளிநாட்டு எஜமானர்களின் பேச்சை மீறுவார்களா?

அதன்படி, பா.ஜ.க. அரசு தொழிலாளர் நலச்சட்டங்களில் பெரியதொரு சீர்திருத்தத்தைக் கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருக்கிறது. அதன்படி, தொழிலாளர்கள் உரிமைகள் நசுக்கப்படும், பணிப்பாதுகாப்பு முற்றாக அழிக்கப்படும். 8 மணி நேர வேலை என்பது காணாமல் போகும். நீயில்லையானால் ஆயிரம் பேர் வேலைக்கு நிற்கிறான், உரிமை கேட்டாயானால் வேலை கிடைக்காது என்று முதலாளிகள் அதன்பின் கூத்தாடுவார்கள்.
வேறு வழியில்லாமல், இந்தக் கழுகுகளுக்கு உழைத்துக் கொட்ட, தங்களுடைய, தங்கள் பிள்ளைகளுடைய நலன் கருதி, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, நகரத்திற்குத் தஞ்சம் புகும் மக்களைத்தான் சேரியில் அடைத்து வைக்கும் அய்டியாவைக் கொடுக்கிறார் இந்த அய்டியா மணி சஞ்சீவ் சன்யால். அதாவது, அண்மையில் ஜப்பான் சென்று இறங்கியவுடன், மோடியின் முன்னிலையில் வாரணாசியை ஸ்மார்ட் சிட்டியாக ஆக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது அல்லவா? ஒருவேளை  ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 100 ஸ்மார்ட் சிட்டிகள் உருவாக்கும் திட்டத்தின் தொடக்கம்தான் இதுவென்றால், அந்த நகரங்களில் அவசியம் சேரி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டுமென்று பதறுகிறார். ஏன், சேரிகள் தவிர்த்து அடிப்படை வசதிகள் நிறைந்த பகுதிகளில் ஏழை உழைக்கும் மக்கள் வாழக் கூடாதா?

மாட்டைத் தெய்வமாக மதிக்கும் இந்தக் கும்பலுக்குள் மனிதனை மாடு போல நடத்தும் சிந்தனை இருப்பதைப் புரிந்து கொள்ள வேறென்ன சான்று வேண்டும்? சொகுசு பங்களாவில் வாழ்ந்து கொண்டு, தின்ற கொழுப்புக் கரைய, தானும் தன்னுடைய நாயுமாய் வாக்கிங் செல்லும், இந்த சிகாமணிகள் ஒரு 50 ரூபாய் கூலியை உயர்த்திக் கொடு என்று போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளிகளை மந்தை போல சேரியில் அடைக்கச் சொல்கின்றனர்.

இந்த அய்டியாவை நாம் அப்படியே வெற்றுக் கோபத்தால் கடந்து போய்விடுவதற்கு மாறாக, சமமான வளப்பகிர்வை உறுதி செய்யும் போராட்டம் ஜாதிய, வர்க்க அரசியல் கண்ணோட்டத்தின் புரிதலோடு துரிதமாக, நம் மீது வர்ணாசிரம தருமத்தின் தொடர்ச்சியாக திணிக்கப்பட்ட முதலாளித்துவ அடிமைத்தனத்தை வீழ்த்த களம் காண வேண்டும்.

போய் சேரியில் வாழுங்கடா, சென்னையைச் சிங்காரச் சென்னையாக்கணும் என்று சொல்லும் இந்தத் திருட்டுப் பேர்வழிகளுக்கு, கவிஞர் காசி ஆனந்தனின், மாடியில் இருந்து துப்பினால் குடிசையில் விழும்,

குடிசையிலிருந்து துப்பினால் மாடியே விழும்

என்ற கவிதையை நினைவூட்டிவிட்டு எம் சேரிகள் இணைந்து துப்பினால், இந்த ஒடுக்குமுறை அமைப்பே வீழும். மாடிகளும், மோடிகளும் எம்மாத்திரம் என்பதை அழுத்தம், திருத்தமாக  வரலாற்றில் பதிவு செய்ய வேண்டிய காலம் கனிந்து கொண்டிருக்கிறது.

அப்படியும் சேரிகள் வேண்டும் என்று சஞ்சீவ் சன்யால் கும்பல் அடம் பிடித்தால்,
சரி, சேரிகள் தயாராகட்டும்… நீங்கள் அக்கிரகாரங்களையும் அடுக்குமாடிகளையும் காலி செய்துவிட்டு சேரிகளில் குடியேறத் தயாராகுங்கள்!

சிற்பா அம்பேட்கர்

 


 

நகரங்களுக்காக கிராமங்களா?

(இன்று நகரங்களுக்குச் சேவை செய்ய சேரிகள் அவசியம் என்று சொல்லும் கும்பல்தான், அன்று கிராமங்கள் அவசியம் என்றும் சொன்னது. அதற்கான பெரியாரின் பதிலை அப்படியே நாம் சேரிக்கும் பொருத்திப் பார்க்கலாம். கிராமச் சீர்திருத்தம் என்ற தலைப்பில் தந்தை பெரியார் பேசிய உரையின் சில பகுதிகள் இங்கே தரப்பட்டுள்ளன.)

கிராமம் என்றால் என்ன? அதில் பள்ளிக்கூடம் இல்லை, ஆஸ்பத்திரி இல்லை, டிராமா இல்லை, பார்க் இல்லை, நீதி ஸ்தலமில்லை, போலீஸ் காவல் இல்லை, நல்ல ரோட்டு வசதியில்லை, விளக்கு இல்லை, நல்ல தண்ணீர் இல்லை, உயர்ந்த நாகரிகம் என்பது இல்லை, பெரும்பாலும் வயிற்றுக்கு ஆகாரம் சம்பாதிப்பதைவிட, வாழ்வு ஆசைக்குப் பணம் சம்பாதிக்கும் வசதி இல்லை, புத்தியைச் செலவழித்து முற்போக்கடைய வழியில்லை – இப்படி இன்னும் பல வசதிகள் (நகரத்தானுக்கு இருப்பவைகள்) கிராமத்தானுக்கு இல்லையென்பதல்லாமல் கிராமம் என்றால் வேறு என்ன?

ஆனால், நகரங்களுக்கு ஆதாரம் கிராமங்கள்தான் என்று சொல்லப்படுகிறது. சொல்லுவது மாத்திரமல்லாமல், கிராமத்தாரின் உழைப்பில் ஏற்பட்ட விளைபெருள்களும், உற்பத்திப் பெருள்களுமே நகரத்தார் அனுபவிக்கவும், நகரத்தார் செல்வவான்களாக ஆகவும், அரசாங்கம் நடக்க வரி கொடுக்கவும், அரசாங்கம் – நகர மக்கள் ஆகியவர்கள் மாத்திரமல்லாமல் கடவுள்கள், கோவில்கள்கூட அங்கிருப்பவர்களும் சேர்ந்து தேவஸ்தான சட்டப்படி ஒழுங்காக சகல இன்பங்களும் அனுபவிக்கவும் வசதிகள் இருந்து வருகிறது.

சர்க்காருக்கும் கிராமவாசி என்றால், கசாப்புக் கடைக்குப் பேகும் ஆடுகள் போலக் காணப்படுகிறார்கள்.

ஆகவே, கிராமம் என்பது தீண்டப்படாத மக்கள் நிலையில்தான் இருந்து வருகிறது. கிராமத்தார் அல்லாத மற்றவர்களுக்கு உழைப்பதற்கு ஆகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் அந்த அடிப்படையை அப்படியே வைத்துக் கெண்டு கிராமத்தை எவ்வளவு சீர்திருத்தினாலும் கிராமம் சூத்திரன் – தீண்டாத ஜாதியான நிலையில்தான் இருக்கும்.

எனவே, சமுதாயத்தில் மக்கள் மனிதத் தன்மை பெறவேண்டுமானால் பிராமணன் என்ற ஒரு ஜாதியும், பறையன் என்ற ஒரு ஜாதியும் இல்லாமல் மனிதன் என்ற ஒரு ஜாதிதான் இருக்க வேண்டும் என்று எப்படிக் கருதுகிறோமோ” அதுபோல் ஊர்களிலும், பட்டணம், நகரம் என்று சில ஊர்களும், கிராமம், குப்பைக்காடு என்றும் இல்லாமல் பொதுவாக ஊர்கள் தான் இருக்க வேண்டும் என்று ஆக்கப்பட வேண்டும்.

நகரத்தார்களுக்குக்காகத்தான் அவர்கள் வாழ்கிறார்கள் வாழவேண்டும் என்று செல்லப்படுவதை அடியேடு மாற்ற வேண்டும்.

நூல்: கிராமச் சீர்திருத்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *