24.9.2014 அன்று காலை சரியாக 7.42 மணிக்கு மங்கள்யான் (செவ்வாய்க்கலன்) உலகில் யாராலும் செய்ய முடியாத சரித்திரச் சாதனையாக முதல் முயற்சியிலேயே செவ்வாய் கோளின் நீள்வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது என்பதை நம்முடைய இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி ஆய்வு மய்யத்துக்கு ஆஸ்திரேலியாவின் கான்பெர்ரா விண்வெளி தகவல் தொடர்பு நிறுவனம் கண்டுபிடித்துத் தெரிவித்தது.
ஆய்வாளர்கள் ஆனந்தக் கூத்தாடினர். அதுவரையில் இஸ்ரோவில் இருப்புக் கொள்ளாமல் அமர்ந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி அனைவரிடமும் கைகுலுக்கினார், கட்டித் தழுவினார். கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றதை விட இது மகத்தானது என்று பூரிப்படைந்தார். (செவ்வாய்க்கலன் வெற்றியைப் பற்றி அவருடைய மதிப்பீடு நம்மைப் புளகாங்கிதப்படுத்துகிறது). மேலும் கூறுகிறார்:
விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா எப்பொழுதுமே உலகின் குருவாக உள்ளது. ஜீரோவைக் கண்டுபிடித்தது நாம்தான். விண்வெளியில் உள்ள கிரகங்களை அறிந்து அவை சூரியனைச் சுற்றும் காலத்தைக் கணித்தது நமது ரிஷிகள்தான். பூமி உருண்டை வடிவம் என்றதும் நாம் தான் (?) என்கிறார்.
கலிலியோ, கோப்பர்நிக்கஸ், புருனோ உங்கள் நினைவுக்கு வரக்கூடாது. வந்தால் நீங்களும் வாழ்நாள் முழுக்க சிறையில் அடைக்கப்படுவீர்கள், கல்லால் அடிக்கப்படுவீர்கள், கட்டி வைத்து எரிக்கப்படுவீர்கள். ஆனால் பூமியைப் பாயாய் சுருட்டியதாகக் கதைவிட்டவர்கள் இப்பொழுது பூமி உருண்டை என்று நாம்தான் முதலில் சொன்னோம் என்று கூறுகிறார்கள்.
ஜீரோவை நாம்தான் கண்டுபிடித்தோம் என்கிறார். நீங்களே ஆட்சிக்கு வந்துவிட்ட பிறகு இதில் யாருக்காவது ஏதாவது அய்யம் இருக்க முடியுமா?
பிரதமராக வாஜ்பேயி இருந்த காலத்தில் அவருடைய ஆசையை சந்திராயன் நிறைவேற்றியது. இப்பொழுது மங்கள்யான் சாதித்துள்ளது என்கிற பிரதமர், மறந்தும்கூட அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிதான் இந்தச் சாதனைக்கு 450 கோடி ஒதுக்கி அடித்தளமிட்டது என்பதைக் கூறவில்லை. செவ்வாய் கோளுக்கு விண்கலனை அனுப்பலாம் என்று விஞ்ஞானிகள் கூறியபோது, அதற்கு முட்டுக்கட்டை போடாமல் நிதியை ஒதுக்கி ஊக்கப்படுத்தியவர்கள்தானே சாதனைக்குச் சொந்தக்காரர்களாக இருக்க முடியும்! ஆனால், இதை உங்கள் சாதனைபோல் மார்தட்டிக் கொள்கிறீர்களே, இதைத்தான் எங்கள் கிராமங்களில் நோகாமல் நுங்கு தின்பது என்று சொல்வார்கள்.
செவ்வாய்க்கலன் படங்களை அனுப்பத் தொடங்கிவிட்டது. அதில் உள்ள நீர், கனிம வளங்களையெல்லாம் கண்டறிந்தால் அதானிகளுக்கும் அம்பானிகளுக்கும் பட்டா எழுதிக் கொடுத்துவிடலாம். உயிர்வளி (ஆக்ஸிஜன்) இருப்பதாகக் கண்டறிந்தால் பூமிக்கும், செவ்வாய்கோளுக்கும் ராக்கெட் சர்வீஸ் தொடங்க டாட்டாவுக்கு அனுமதி கொடுத்துவிடலாம்.. எதிலும் மாற்றத்தை விரும்புபவர்களுக்கு ஒரு மாற்றத்தை நாம் கொடுக்கலாம். பூமியைப் போல் செவ்வாயையும் மனிதர்களால் நிரப்பலாம். அங்கேயும் ஜாதகம் பார்த்து இந்தப் பெண்ணிற்கு பூமிதோஷம் இருப்பதாகச் சொல்லி, திருமணம் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளலாம்.
பிரதமர் அவர்கள் நம் அறிஞர்களிடம் எப்படியாவது இராகு, கேதுவைக் கண்டுபிடிக்கச் சொல்லி உத்தரவு போட்டு, உதவிக்கு ரிஷிகளை வைத்துத் தேடி, உலகிற்கே காட்டி அந்தப் பெருமையையும் நாம் தட்டிச் செல்லலாம்.
அமெரிக்கப் பயணத்திற்கு முதல்நாள் தாங்கள் கோகோ – கோலா _ பெப்ஸி குளிர்பானக் கம்பெனிகளுக்கு எப்படி இந்தியாவின் தூதுவராக மாறி, குளிர்பானத்தில் பழச்சாற்றையும் கலந்து தரவேண்டும் என்ற அரிய யோசனையை பெங்களூரு விவசாயிகள் மாநாட்டில் கூறினீர்களே, அதே போன்று செவ்வாய்க் கோளிலும் தூதுவராக மாறி அந்தப் பணியை நீங்களே செவ்வனே செய்யலாம்.
எல்லா வழிகளிலும் இந்தியாவுக்கும், இந்திய ரிஷிகளுக்கும் பெருமை சேர்க்கும் தாங்கள் ஆளும் நாட்டில் வாழும் 120 கோடிக்கும் மேற்பட்ட மக்களும் ஆனந்தக் கூத்தாடுவோம்!
23.9.2014 அன்று புதுடில்லியில் உள்ள உயிரியல் பூங்காவில் தடுப்புகளை மீறி வெள்ளைப்புலியைப் படமெடுக்க முயற்சி செய்து தவறிக் கீழே விழுந்தான் மக்சூத்கான் என்ற 20 வயது இளைஞன். விழுந்தவனுக்கு எதிரில் புலி அமைதியாகப் பார்த்துக் கொண்டு நின்றுள்ளது. சர்வமும் ஒடுங்கி 15 நிமிடங்கள் கண்களில் உயிர் பயத்தோடு பூனையின் முன் மாட்டிக்கொண்ட எலி போல இருந்துள்ளான். மேலே நின்று கொண்டிருந்தவர்கள் சிறிய கற்களை வீசியுள்ளனர். பூங்காக் காவலாளி அடைக்கப்பட்ட புலியின் கூண்டுக் கம்பிகளைப் பலமாக அடித்துள்ளார், அசரவில்லை புலி. மாறாக, வி வாண்ட் சிக்சர் என்று கூறுவதைக் கேட்கும் மனநிலையில் உள்ள மட்டையாளனைப் போல அவனைக் கடித்துக் குதறியுள்ளது. அன்றைய காலங்களில் கொலைத் தண்டனைக்கு ஆளாகும் ஒருவனையோ, அடிமைகளையோ கூண்டுக்குள் தள்ளி சிங்கம், புலி போன்ற மிருகங்களின் வாய்க்கு இரையாக ஆக்குவது போன்றுதான் அதனை ஒளிப்பதிவில் பார்த்த அனைவருக்கும் இருந்திருக்கும். இவ்வளவு நடைபெற்ற இந்தக் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு பாதுகாவலரைத் தவிர உயிரியல் பூங்காவைச் சேர்ந்த வேறுயாரும் அங்கு இல்லை, வரவுமில்லை. இது நாடா? புலிகள் வாழும் காடா?
இது அந்த இளைஞனுடைய தவறாகக் கூட இருக்கட்டும். ஆனால், காப்பாற்ற முயற்சி எடுப்பதுதானே மனிதநேயம். 15 நிமிட நேரமிருந்தும் காப்பாற்ற முடியவில்லையென்றால் உயிரியல் பூங்கா ஊழியர்கள் எங்கே போனார்கள்? தகவல் தொடர்புச் சாதனம் இருக்கும்தானே? இயல்பாக கொடூரத்தன்மை கொண்ட மிருகங்களைக் கையாளுவதற்கு மயக்க மருந்து ஊசி துப்பாக்கி இருக்குமல்லவா? மிருகங்களை முறையாகக் கையாள பயிற்சியாளர்கள் இருப்பார்களே! இப்படி எந்தக் கேள்வியை எழுப்பினாலும் பதில் ஒன்றுமில்லை. ஜீரோவைக் கண்டுபிடித்தவர்கள் நாம்தான் என்பது வேறு அடிக்கடி நினைவுக்கு வந்து தொலைக்கிறது.
கடந்தவாரம் நேசனல் ஜியாகரபி சேனலில் ஒரு நிகழ்வைப் பார்க்க நேரிட்டது. இதே போன்று வேறு நாட்டில் உள்ள ஒரு உயிரியல் பூங்கா. ஆண் சிங்கம், ஒரு பெண் சிங்கம் இருந்த பகுதிக்குள் புதிதாக வந்திருந்த பயிற்சியாளர் ஒருவர் உள்ளே வந்ததும், ஆண் சிங்கம் பாய்ந்துள்ளது. இதைக் கவனித்த இன்னொரு பயிற்சியாளர் வேகமாக வந்து சிங்கத்தைப் பிடித்து இழுத்துள்ளார். பெண் சிங்கம் வந்து ஆண் சிங்கத்தின் மீது விழுந்து அந்தப் பயிற்சியாளரைக் காப்பாற்றுவதற்கு முயற்சி செய்துள்ளது. இறுதியில், அந்தப் பயிற்சியாளரை இன்னொரு பயிற்சியாளர் காப்பாற்றியுள்ளார். இதற்குப் பெயர்தான் மனிதநேயம்.
கடிபட்டு இறந்தவன் போதைப்பழக்கம் உள்ளவனாம். முகநூலில் அடுத்த ஒரு மணி நேரத்தில் தகவல் பரிமாறப்படுகிறது. போதைப் பழக்கமுள்ளவனை புலியிடம் கடிபட்டு இறக்கச் செய்யலாம் என்று எந்தக் கருடபுராணத்தில் சொல்லப்பட்டுள்ளது?
போதாக்குறைக்கு இந்தப் புலியை என்ன செய்யலாம்? வேறு உயிரியல் பூங்காவிற்கு மாற்றி விடலாம் என்று யோசிக்கிறார்களாம். நம்மூரில் பிரச்சினைக்குள்ளான காவல் துறையினரை வேறு பகுதிக்கு மாற்றுவது போல.
ஒவ்வொரு பிரச்சினையிலும் யானைகள் ஊருக்குள் வந்து மனிதர்களைக் கொல்வது, சிறுத்தையிடம் கடிபட்டுச் சாவது, ஆண்டுக்கு 60,000 பேருக்கு மேல் வெறிநாய்க்கடிகளுக்கு ஆளாகி உயிர்விடுவது, எதற்காவது சரியான தீர்வு கண்டோமா? மனித உயிர்கள் அவ்வளவு மலிவானவையா? மிருக ஆர்வலர்கள்தான் பதில் கூற வேண்டும்.
இது எல்லாவற்றையும்விட அந்த இளைஞன் கடிபட்டு துடிதுடித்துச் சாவதை இணையதளத்திலும், முகநூலிலும், செல்பேசியிலும் உலவவிடுகிறோமே, இது நம்மைத் திருத்திக் கொள்ளவா? நமக்குள் உள்ள மிருக குணத்தைத் திருப்தி செய்யவா? மங்கள்யானுக்காகப் பெருமிதம் கொள்வதா? மனித நேயமற்றுப் போய்விட்டதற்காக வேதனை கொள்வதா? நாம் சிறிது நேரம் சிந்தித்துப் பார்க்கலாமே!
– இசையின்பன்
mob : 9940348533