பிரம்மனின் கயமை
சிவன் திருமண சப்தபதி சிறப்பு வாய்ந்தது. பிரமன்தான் புரோகிதர். மந்த்ரங்களைக் கூறி நெய்யை ஊற்றித் தீயை வளர்த்துக் கொண்டே இருந்த நிலையில் மணமக்கள் ஏழு சுற்று சுற்றிவரத் தொடங்கினர். தீ தன் சேலையில் பற்றிக் கொள்ளக் கூடாதே என்கிற தடுப்பு முயற்சியாக மணமகள் தன் புடவையைச் சற்று உயர்த்திப் பிடித்தவாறு நடந்தாள். அதனால் அவளது பாதத்தின் ஒரு பகுதியும் கால்கட்டை விரலும் தெரிந்தது. புரோகிதப் பார்ப்பனரின் கண்களில் கட்டைவிரல் தென்பட்டது. கட்டை விரலின் கவினுறு அழகு பிரமனின் சிந்தையைக் கவர்ந்தது. தன் சிந்தனையைச் சிறகடித்துப் பறக்கவிட்டான்.
கட்டை விரலின் அழகே இப்படி என்றால்… பாதம் எவ்வளவு அழகாக இருக்கும்?… கணுக்கால் எப்படி அமைந்திருக்கும்? அதற்கும் மேலே கெண்டைக் கால் எப்படி இருக்கும்? அதற்கும் மேலே தொடைகள் எப்படி இருக்கும்? அவற்றின் அழகு…? இடையில் இருக்கும் மறைவிடம் எப்படி இருக்கும்? என்றெல்லாம் கற்பனைத் தேரில் ஏறிப் பறந்தான். விளைவு என்ன ஆயிற்று தெரியுமா? அவனது காமாந்தகார எண்ணத்தினால் ஓமத்தீயே அணைந்துவிட்டதாம்! கடவுளின் யோக்யதை இப்படி இருக்கிறது! ஆண்டவனின் திருமணத்தில் இப்படிப்பட்ட அக்கிரமம்! அசிங்கம்! அந்தப் புரோகிதன் பார்த்துக் கொடுத்திட, இவர்கள் செய்து கொள்வதுதான் தமிழ்த் திருமணம்!
மணவறை அமைக்க
மணமக்கள் அமரும் இடம் மணவறை எனப்படும். அதன் கிழக்குத் திசையில் தேவேந்திரனாம், தென்கிழக்கில் அக்கினியாம், தெற்கில் எமன், தென்மேற்கில் நிருதி, மேற்கில் வருணன், வடமேற்கில் ஈசான மூர்த்தி என எட்டுத் திக்குப் பாலகர்களையும் வேதமோதி ஆவாகனம் செய்து பொருத்த வேண்டுமாம். இந்திரனுக்கு அடையாளமாக அநேகமுகம் உள்ள விளக்கு வைப்பார்கள். அக்னிக்கு அடையாளமாக குடவிளக்காம். ஈசான மூர்த்திக்குப் பதிலாக அம்மியும் குழவியுமாம். நவக்கிரகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்திடும் வகையில் முளைகட்டிய ஒன்பது தானியங்கள் வைக்கிறார்கள். சப்த ரிஷிகளுக்கு மாற்றாக ஏழு மண்குடங்கள். ஏழு தண்ணீர்களைக் குறிக்கும் வகையில் பெரிய மண்பானையில் நீர் வைப்பதுதான் சாலுங்கரகம் என்கிறார்கள்.
இந்திரனுக்கும் ஏழு தண்ணீருக்கும் இடையே 12 அங்குல பள்ளம் தோண்டி அதில் நீர், பால், தேன் ஊற்றி நவதானியங்கள் போட்டு அரசாணிக்கால் நடப்பட வேண்டும். இதனை மூன்று பெண்கள் செய்ய வேண்டும். நெல்லினால் பள்ளத்தை மூடி நீர், பால், தேன் தெளித்துக் கும்பிட வேண்டுமாம். அரசாணிக்கால் என்பது அரசு, ஆலமரம், கல்யாண முருங்கைக் கிளை ஆகிய மூன்றும் வைத்துக் கட்டியது. அரசு பிரம்மாவாம். ஆல் திருமாலாம். முருங்கைக் கிளை சிவனாம். முக்கடவுளும் அங்கே வந்திருந்து அருள் பாலிப்பதாகப் பொருளாம்.
தொல்காப்பியம் கூறியவாறு, பெண் கேட்டு, பெற்றுத் திருமணம் செய்வோர் மணமகளை அழைப்பார்கள். ஆரிய வழக்கப்படி ஆணுக்குப் பெண்ணைத் தானமாகத் தருவோர், மணமகனை அழைத்து வருவார்கள். இப்படி மணமகன் அழைப்பு இந்திமொழியில் பராத் எனப்படும். மணமகனுடன் வருவோர் தங்க வைக்கப்படும் இடம் ஜான்வாசா எனப்படும். பார்ப்பனர்தம் திருமணங்களில் மாப்பிள்ளை அழைப்பை ஜான்வாசா அல்லது ஜானவாசம் என்கிறார்கள்.
மஞ்சள் பூசிய நூலை மணமகனின் வலது கையில் கட்டுவதும் அதேமாதிரி நூலை மணமகளின் இடதுகையில் கட்டுவதும் காப்புக் கட்டுதல் எனப்படும். திருமணம் இனிதே நடைபெற வேண்டுதலைக் குறிப்பதாம் இது.
பழைய பார்ப்பன மரபுப்படி பூணூல் அணிவிக்கப்பட்டு சிறுவர்கள் குருவிடம் பாடம் கற்றனர். கல்வி முடிந்ததும் அவர்களை வீட்டுக்கு அனுப்பும் குரு, காசிக்குப் போய் நீராடிவிட்டுப் போ எனக் கூறி அனுப்பி இல்லறத்தில் ஈடுபட அறிவுரை கூறுவார். பெண்ணைப் பெற்றவர் அந்த இளைஞனை வழிமறித்து காசிக்குப் போகவேண்டாம், என் மகளைத் தருகிறேன் என வலியக் கூறி அழைத்துவந்து திருமணம் செய்து வைப்பாராம். அதை இப்போது காசி யாத்திரை என்று நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பெண் பார்த்து, பஜ்ஜி, சொஜ்ஜி சாப்பிட்டுவிட்டு, வரதட்சணை இவ்வளவு என்று பேசி முடித்துவிட்டுத் திருமண அழைப்பிதழ் அச்சடித்து வழங்கிவிட்டுத் திருமணத்தன்று மேற்படி காசியாத்திரை நாடகம் நடத்துகிறார்கள். இதில் ஏதாவது பொருத்தமோ அர்த்தமோ இருக்கிறதா? இப்படி அர்த்தமற்றவை நிறைந்ததுதான் தமிழர் திருமணம் என்பவை!
மதுகுடிக்கும் இந்திரன்
இந்திரனுக்குச் சோமபானம் தந்தால் அழகான மாப்பிள்ளை கிடைப்பான் என்கிறது ஆரிய சாத்திரம். அழகில்லாத அபலா என்ற பெண் சோமபானம் இல்லாத நிலையில் சோமக்கொடி ஆற்றில் மிதந்து வந்ததை எடுத்துக் கசக்கி இந்திரனுக்கு அர்ப்பணம் செய்தாளாம். மகிழ்ந்த இந்திரன் அவள்மீது நுகத்தடியை வைத்து அழகை உண்டாக்கியபின் திருமணம் நடந்ததாம். இந்திரன் லஞ்சம் வாங்கிக் குடித்த பிறகுதான் அருள் பாலித்திருக்கிறான். இந்தச் சாத்திரத்தைச் செய்யும் வகையில் மணப் பெண்ணைத் தன் மடியில் அமர்த்திக் கொள்ளும் அவளின் தந்தை தர்ப்பப்புல்லால் செய்த வளையத்தை (நுகத்தடி) அவள் தலையில் வைத்து காசு வைத்து தண்ணீர் தெளித்து ஒரு சடங்கு செய்கிறார். இதனைப் பார்ப்பனர் திருமணங்களில் பார்க்கலாம். இதுவே தமிழர் திருமணமாகிவிட்டது. பெண்ணை அப்பா சுமப்பதுதான் செம்மையாகச் சுமப்பது எனப் பொருள்படும் விவாகம் எனப்படுகிறது. அதனால்தான் விவாக சுபமுகூர்த்தப் பத்திரிகை எனப்படும். அப்படிப் பத்திரிகை அச்சடிக்கும் பல மண்டூகங்களில் எத்தனை பேருக்கு இதன் பொருள் தெரியும்?
கூரைப் புடவை
மணமகளுக்குப் புதுப்புடவை அணிவிப்பதைக் கூரைப் புடவை என்கிறார்கள். விவாக தோஷம் உள்ளதாம் இக்கூரைப் புடவை. அதனால் இந்தப் புடவையைத் தானமாகத் தருவது சிலரின் பழக்கம். தோஷம் (க்ருரம்) நிறைந்த க்ருரப் புடவைதான் கூரைப் புடவை என்றாகிவிட்டது என்பார்கள்.
திருமணத்தில் முக்கியமானது தாலி கட்டுவது. மாங்கல்ய தாரணம் என வடசொல்லால் குறிக்கப்படும் சடங்கு. மணப் பெண்ணுக்கு நேரில் முக்காலியின்மேல் வைக்கப்பட்ட தாலியைப் புரோகிதரிடம் வாங்கி கிழக்கே பார்த்து உட்கார்ந்து கொண்டிருக்கும் பெண்ணின் கழுத்தில் மேற்கு நோக்கிப் பார்த்துக் கட்டவேண்டும்.
மாங்கல்யம் தந்துநா அநேன மமஜீவன ஹேதுநா கண்டே பத்நாமி சுபரீகத்வம் ஜீவ சரதச்சதம் எனும் சுலோகத்தைப் புரோகிதர் கூறுவார். தோஷம் கழிப்பதற்காகப் பலபேர் நாயுடன் திருமணம், தவளையுடன் திருமணம், கழுதையுடன் திருமணம் என்று செய்கிறார்கள். பார்ப்பனப் புரோகிதர் நடத்தி வைக்கிறார். இதே மந்த்ரத்தைத்தான் கூறுகிறார். அர்த்தம் கெட்ட திருமணம், திருமண மந்திரம் தமிழர் திருமணம்!
தாலி என்பது என்ன? தமிழர் திருமணத்தில் ஆதியில் தாலி உண்டா? பாதியில் வந்த இந்தச் சடங்கு எப்படித் தமிழர் திருமணத்தில் நுழைந்தது? யாரால் நுழைக்கப்பட்டது? இதுபற்றித் தமிழ்நாட்டில் நடந்த வாதப் போர் விவரம் யாது? வடநாட்டில் தாலி கட்டுவது இல்லையே! பின் எப்படி தாலி கட்டும் திருமணம் இந்துத் திருமணம் ஆகும்? விரிவாகப் பார்க்க வேண்டும்.
– சு.அறிவுக்கரசு
– (தொடரும்)