காலத்தைக் காட்டும் கைக்கடிகாரம்
கட்டியதற்கு கையை வெட்டிய வெறியர்களே!
கடந்த காலத்திலே உன் பாட்டனும்
இடுப்பிலே துண்டைக் கட்ட முடியாதே!
கோவில் குளத்திற்குச் செல்ல முடியாதே
அதை மாற்றியது பெரியாரெனத் தெரியுமோ?
தவறு உன் வளர்ப்பிலுள்ளது
அன்பு, அறிவை ஊட்ட வேண்டிய குடும்பமோ
ஜாதி எனும் நச்சுப்பாலை ஊட்டிவிட்டதோ?
இன்னும் ஜாதி எனும் கத்தியைத் தீட்டாமல்
மனிதநேயம் எனும் புத்தியைத் தீட்டு
தோழன் ரமேஷின் கையில் கடிகாரத்தைக் கட்டு.
– க.அமிர்தசேகர், தூத்துக்குடி
நச்சுச் செடியை மாணவர் மனதில்
நட்டு வைத்தது சமூகத்தின் குற்றம்!
வெட்டுப்பட்டவன் இரத்தம் என்ன ஜாதி?
வெட்டியவன் இரத்தத்திலும் இல்லை ஜாதி!
ஆபத்தில் உயிர்காக்க ஆம்புலன்சில் வரும்
அன்னியர் எல்லோரும் என்ன ஜாதி?
பெயரில் கூட ஜாதிவாலை நறுக்கிய,
பெரியார் 136-லுமா இந்த அநீதி?
– இளங்கோ, திருப்பத்தூர்
சேரிப்பயல்களை மீறிப்போக விடோமெனும்
காறி உமிழும் கழிசடைச் செயல்கள்!
பெரியார் மண்ணில் இன்னும் தொடர்வதா?
பொறுத்தது போதும் பொங்கி எழுவோம்!
– வேட்டவலம் பட்டாபிராமன்
நாங்கள் மனைவியை, விற்றதுமில்லை;
பாதி உடையோடு கானில் வாழ விட்டதுமில்லை;
வேற்றான் உடைகளைய, மன்றில் விட்டதுமில்லை;
இவை யெல்லாம்; உமக்குப் பெருமை
திருத்தங்கல் ரமேஷ் கடிகாரம் கட்டியது சிறுமையா?
– உ.கோ.சீனிவாசன், நாகை
பழங்கால நீடாமங்கலத்தில் ஒருவடிவம்;
வாச்சாத்தியில் வேறு வடிவம்;
பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி, திருத்தங்கல்
மங்கிப் போகாத ஜாதி வண்ணம்.
– சு.பொன்னியின் செல்வன், தஞ்சாவூர்
முடிந்த
நெடுங்கதை
தொடர்கிறது…
– எஸ்.சுரேஷ், அனகாபுத்தூர்
பறையன் பட்டம் போகாமல்
சூத்திரப் பட்டம் போகாது
கோமியம் குடித்தால் இது புரியாது.
மீண்டும் கையில்எடு செருப்பை
இப்போது, அடித்து அடக்கு
மேல் ஜாதி செருக்கை.
– க.அருள்மொழி, குடியாத்தம்
வஞ்சனைத் தீயை அணைக்க சுனாமியாய்ச்
சீறும் எங்கள் உரிமைத் தீ!
தாழ்த்தப்பட்டோர் என ஒதுக்கும் – நீ
சுவாசிக்க உயர்ஜாதிக் காற்றை
உருவாக்க முடியுமா?
– அ.ஹேமா
மணிகாட்டும் கடிகாரம்
மணிக்கட்டில் கட்டியதால்
ஜாதிவெறி நாயுன்னைக்
கடித்துக் குதறியதா?
நீதியில்லா ஜாதியெனும்
வெறிநாயை வெட்டிவீழ்த்து!
வீதியெங்கும் வேசிவீடாய்
விரிந்திட்ட ஜாதியினை
பெரியாரின் தடியால்கொன்று
புதைகுழிக்குள் புதைத்துவிடு!
– நாஞ்சில் நாரண.தொல்காப்பியன், நரிக்குளம்
கைக்கடிகாரமே
உனக்கும் உண்டோ ஜாதி…?
முட்களாய் மணிக்கட்டை
முறித்தது எப்படி…?
– சின்ன வெங்காயம், சென்னை – 78