பெரியாரும் காந்தியும்!

அக்டோபர் 01-15

– கி.தளபதிராஜ்

பெரியாரும் காந்தியும்!

தந்தை பெரியார் அவர்கள் ஈரோட்டில் தனிமனிதராக பொதுவாழ்க்கையைத் தொடங்கியவர். ஈரோடு நகரமன்றத் தலைவராக அவர் செயலாற்றி வந்த காலத்தில் 1920இல் காந்தியாரால் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கப்பட்டது.

 

அதில் இருந்த தீண்டாமை விலக்கு, மது விலக்கு ஆகியவை பெரியாரை மிகவும் கவர்ந்தன. முக்கியமாக தீண்டாமை விலக்கு மூலம், சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் ஜாதி வேற்றுமையை ஒழிக்க ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைப்பதாக எண்ணி காங்கிரஸில் இணைந்தார். காந்தியை முழுமையாக நம்பிய பெரியார் மதுவிலக்குப் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது தனக்குச் சொந்தமான 500 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார்.

கோர்ட்டுகளை விலக்கும் காரியத்தில் தம் குடும்பத்திற்கு கோர்ட்டு மூலம் வரவேண்டிய 50,000 ரூபாயை அந்தக் காலத்திலேயே இழந்தார்.

1915ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி  மாயவரம் (மயிலாடுதுறை) வருகை தந்த காந்தியாருக்கு விக்டோரியா நகர மண்டபத்தில் (TOWN HALL) வரவேற்பு அளிக்கப்பட்டது. மயிலாடுதுறை நகரின் முக்கியப் பிரமுகர்கள் பலரும் இந்த வரவேற்பில் கலந்துகொண்டனர். நகரசபைத் தலைவரான நடேச அய்யர் வரவேற்புரை ஆற்றினார். ஆதிக்க ஜாதியினர் நிரம்பியிருந்த சபையில் காந்தியார் தனது பேச்சைத் தொடங்கினார். நீங்கள் வருந்தக்கூடிய சில சொற்களை நான் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது.

தீண்டத்தகாதவர்கள் என ஒரு வகுப்பார் உருவாகக் காரணமாக இருந்தவர்கள் யார்? எங்கெங்கே பிராமணர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் உயர்ந்தவர்கள் என்கிற மரியாதையை அவர்களே பெறுகிறார்கள். இந்தப் பாவம் அவர்களையே சாரும். பகவத்கீதை சொல்வதை நினைவில் கொள்ளுங்கள். பண்டிதனுக்கும், பாமரனுக்கும் எவன் வேறுபாடு பாராட்டுவதில்லையோ அவனே உண்மையான பிராமணன் என்று கீதை கூறுகிறது. மாயவரத்தில் பிராமணர்கள் பஞ்சம சகோதரர்களிடம் சமமாகப் பழகினால், மற்ற வகுப்பினர் அவர்களைப் பின்பற்றமாட்டோம் என்று சொல்லுவார்களா? தங்களது தற்கால நிலைமை பூர்வீக தவபலத்தால் கிடைத்தது என்று பிராமணர்கள் சொல்வார்களேயானால் அவர்களே தேசத்தை நாசமாக்கும் பாவிகளாவார்கள். மாயவரம் மக்களின் காலடியில் நின்று நான் கேட்கிறேன். வீடு, வாசல் இல்லாதவர்களை உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் கதறுபவர்களை விரட்டியடிப்பதுதானா தேசியம்? என்று பேசினார். அடுத்து 1927ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் நாள் மயிலாடுதுறை ராஜன் தோட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காந்தி  தேவதாசிகள் நிலை பற்றி உரையாற்றினார். அந்தக் கூட்டம் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் இசைவேளாளர்கள் வகுப்பைச் சேர்ந்தவர்கள் காந்தியைச் சந்தித்து, கோவிலுக்குத் தங்கள் வீட்டுக் கன்னிப்பெண்கள் தேவதாசிப் பட்டம் கட்டிவிடப்படுவதைவும், அவர்கள் வாழநேரும் கேவலமான வாழ்க்கையைப் பற்றியும் காந்தியிடம் கூறியிருந்தார்கள். எனவே தேவதாசிகள் பற்றி அந்தக் கூட்டத்தில் காந்தி விரிவாகவே பேசினார்.

அவர்களைத் தேவதாசிகள் என்று அழைப்பதன் மூலம் கடவுளையே நாம் அவதூறு செய்கிறோம். நமது காம இச்சையைத் தீர்த்துக் கொள்வதற்காக கடவுள் பெயரை இழுக்கிறோம். ஒழுக்கமில்லாத வாழ்க்கை வாழ்வதற்காக இம்முறை நீடிக்க வேண்டுமென்று சிலர் எண்ணுவதைப் பார்க்கும்போது வாழ்க்கையே கசந்துபோகிறது. நான் அந்தப் பெண்களைச் சந்தித்தபோது அவர்கள் கண்களில் களங்கம் எதுவும் தென்படவில்லை. உலகில் உள்ள மற்றப் பெண்களைப் போல அவர்களும் ஒழுக்கமான வாழ்க்கை வாழ முடியும் என்று நான் உறுதியாகக் கூறுகிறேன். இந்தச் சகோதரிகளில் பெரும்பாலோர், சொல்லப்போனால் எல்லோருமே தங்களுடைய வாழ்க்கையை மாற்றிக்கொள்ள விரும்புவதாக என்னிடம் தெரிவித்தனர். அவர்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள முடியாவிட்டால்  நான், அவர்களைக் குறைகூற மாட்டேன். அவர்கள் கதி எந்தச் சமூகத்தில் பின்னிப் பிணைந்து கிடக்கிறதோ அந்தச் சமூகத்தையே குறை சொல்வேன் என்றார்.

தமிழ்நாட்டில் சேரன்மாதேவியில் காங்கிரஸ் மற்றும் பார்ப்பனரல்லதார் தலைவர்களின் நிதி உதவியுடன், வ.வெ.சுப்ரமணிய அய்யரால் ஒரு தேசிய நிலையம் ஏற்படுத்தப்பட்டது. அதற்குப் பெயர் குருகுலம். அங்கு பார்ப்பனப் பிள்ளைகளுக்குத் தனி உணவு, தனி இடம், தனிப் பிரார்த்தனை. பார்ப்பனர் அல்லாதாருக்குத்  தனி உணவு, தனி இடம், தனிப் பிரார்த்தனை என வேறுபாடு காட்டப்பட்டது. அதை எதிர்த்து காங்கிரசில் இருந்தபடியே போராடினார் பெரியார். கதர் போர்டு நிர்வாகத்தில் பெரியார் தலைவராக இருந்த போதிலும் காரியதரிசியாக அப்போது இருந்த சந்தானம் என்கிற பார்ப்பனரின் ஆதிக்கத்தால் கதர்போர்டு நிர்வாகம் முழுவதும் பார்ப்பனர் மயமாகி இருந்தது.

சகல வசதிகளையும் பார்ப்பனர்களே அனுபவித்து வந்ததை எதிர்த்துக் குரல் கொடுத்தார் பெரியார். அந்தப் போராட்டங்களில் காந்தியாரின் தலையீடு இருந்ததால் பெரியாரால் வெற்றிபெற முடியவில்லை. 1920லிருந்தே காங்கிரஸில் இருந்தபடி வகுப்புவாரி உரிமைக்காகப் போராடியவர் பெரியார். 1920, 1921, 1922, 1923, 1924இல் நடைபெற்ற திருநெல்வேலி, தஞ்சாவூர், திருப்பூர், சேலம், திருவண்ணாமலை காங்கிரஸ் மாநாடுகளைத் தொடர்ந்து 1925 காஞ்சிபுரம் மாநாட்டிலும் பெரியாரின் வகுப்புவாரி உரிமைத் தீர்மானம் நிராகரிக்கப்பட்டதால் காங்கிரஸிலிருந்து வெளியேறினார் பெரியார். காந்தியார் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையும் நீடிக்கவில்லை.

1934இல் மீண்டும் காந்தி மயிலாடுதுறை வந்தபோது பெரியார் காங்கிரசில் இல்லை. பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தமிழ்நாட்டில் வலுப்பெற்றிருந்தது. 1927இல் கலந்துகொண்ட பலர் காந்தியின் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. கூட்டம் குறைவாக இருப்பதைக் கண்ட காந்தி சென்ற முறை நான் இந்நகருக்கு வந்திருந்தபோது என் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களில் பலர் இப்போது வரவில்லை என்று கூறினார்.

இந்தத் தகவல்கள் தமிழ்நாட்டில் காந்தி என்ற நூலில் இடம்பெற்றுள்ளன.  சுயமரியாதை இயக்க வீராங்கனையும், தேவதாசி ஒழிப்புப் போராட்டத்தில் பெரும்பங்கு வகித்தவருமான மூவலூர் மூதாட்டி இராமாமிர்தத்தம்மையார் 1927இல் நடத்திய ஒரு மகளிர் மாநாட்டில்தான் காந்தி கலந்துகொண்டு உரையாற்றியதாக இராமாமிர்தத்தம்மையார்  வாழ்க்கை வரலாற்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் கூட்டம் நடைபெறுவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்னர் இராமாமிர்தத்தம்மாள் தலைமையில் இசைவேளாளர்கள் காந்தியைச் சந்தித்திருக்கின்றனர். ஆனால் இராமாமிர்தத்தம்மையார் பெயரை விடுத்து சில இசைவேளாளர் பெண்கள் காந்தியைச் சந்தித்ததாக அந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மூவலூர் மூதாட்டியார் இருட்டடிக்கப்பட்டதைப் போன்றே வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியாரின் அளப்பற்கரிய தொண்டை காந்தியாரே மூடி மறைக்கவில்லையா?. நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம், அய்.ஏ.எஸ் அதிகாரியான வெ.இறையன்பு அவர்கள் எழுதிய துரோகச் சுவடுகள் என்கிற நூலை அண்மையில் வெளியிட்டிருக்கிறது. காந்தியாரின் இச்செயலை விமர்சித்து அமுக்கப்படும் அங்கீகாரம் எனும் தலைப்பில் எழுதியிருக்கிறார் இறையன்பு.

முதுகில் குத்துவது ஒருவகையான துரோகம் என்றால் ஒருவரின் முகவரியை மறைத்து அதில் தன் முத்திரையைக் குத்துவது இன்னொரு வகையான துரோகம். உழைத்தவர்களுக்குப் போய்ச்சேரவேண்டிய அடையாளத்தை மறைத்துவிட்டு தொடர்பில்லாத நபருக்குப் பெருமைகளை அள்ளி வீசுவது வியர்வையைச் சிந்தியவர்களுக்கு அயர்வைத் தருகிற அற்பச் செயல் எனத் தொடங்குகிறது அக்கட்டுரை. கேரள மாநிலம் வைக்கத்தில் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடக்க அனுமதிக்கப்படாததைக்  கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர்.

சரியான தலைமையில்லாததால் போராட்டம் முடக்கப்பட்டது. போராட்டத்தை வலுப்படுத்தும் சக்தி ஈரோட்டைச் சேர்ந்த ஈ.வெ.ராமசாமி நாயக்கருக்கே உண்டு எனக் கணித்த போராட்டக்காரர்கள், ராமசாமி நாயக்கருக்கு அழைப்புவிடுக்க, உடனடியாக அவர் வைக்கம் சென்று போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது  திருவிதாங்கூர் மன்னர் மரணம் அடைய, அவரது மறைவையொட்டி கைது செய்யப்பட்டிருந்த போராட்டக்காரர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். ராமசாமி நாயக்கரின் தலைமையில் போராட்டம் விஸ்வரூபம் எடுத்து விபரீதம் ஏதும் நிகழுமோ என்று பயந்த திருவிதாங்கூர் மகாராணி காந்திக்குக் கடிதம் எழுதினார். பின்னர் அந்தத் தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நடக்க அனுமதிக்கப்பட்டனர். இப்போராட்டத்தின் காரணமாக வைக்கம் வீரர் என்று அழைக்கப்படும் அளவிற்கு வாகையைச் சூடிய அந்தத் தலைவர்தான் பின்னால் பெண்கள் மாநாட்டில் பெரியார் என்று பெயர் சூட்டப்பட்ட ஈ.வெ.இராமசாமி. உண்மை இப்படி இருக்க, மகாத்மா காந்தியே மகத்தான தவறு ஒன்றைச் செய்தார். வைக்கம் போராட்டம் பற்றி, காந்தி பத்திரிகை ஒன்றில் எழுதிய கடிதத்தில் பெரியாரைப் பற்றி ஒரு வரிகூட எழுதவில்லை. ஆனால் தந்தை பெரியார் அவர்களோ அதுபற்றி எதுவும் அலட்டிகொள்ளவில்லை என்கிறார்  இறையன்பு.

மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் சுதந்திரப் போராட்ட வீரருமான தியாகி நாராயணசாமி நாயுடு அவர்கள் தன் வாழ்நாள் அனுபவங்களைப் பற்றிச் சொல்கையில் 1930களில் மயிலாடுதுறையில் சுயமரியாதைக்காரர்களின் கை ஓங்கியிருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். மயிலாடுதுறையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் எஸ்.சீனிவாச அய்யங்கார் கூட்டத்தில் கலாட்டா. வரதராஜுலு நாயுடு கூட்டத்தில் அடிதடி. சத்தியமூர்த்தி கூட்டமே நடத்த முடியாத நிலை. காந்திக்குக் கருப்புக்கொடி. நேருவுக்குக் கருப்புக்கொடி. கதர்கட்டி பட்டமங்கலத்தெரு, மணிக்கூண்டு தாண்டினால் கதர் கட்டியவர்கள் சென்றால் அடிவிழும் நிலை  என்று குறிப்பிட்டுள்ளார்.

தியாகி நாராயணசாமி  கூறியதையும், 1934இல் காந்தி வருகைக்கு மக்கள் ஆதரவு குறைந்திருந்ததையும் ஒப்பிடுகையில் தந்தை பெரியார் காங்கிரஸில் இருந்தபோது, தமிழ்நாட்டில் காந்திக்கு இருந்த ஆதரவு, பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறிய பின் காந்திக்கு இல்லை என்பதையும், காந்தி தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் பெரியாரின் கொள்கை நிலைப்பாட்டை ஒட்டியே பேச முடிந்திருக்கிறது என்பதையும் தெளிவுபடுத்துகிறது.

மேலும் காந்தி 1925க்கு முன்னர் தமிழ்நாட்டிற்கு வருகை தந்த போதெல்லாம் பார்ப்பனர்கள் வீட்டுத் திண்ணையில்  அமர்ந்தே சென்றிருக்கிறார். 1925இல் பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்த பின்னரே காந்தியாரால்கூட பார்ப்பனர்கள் வீட்டு அடுப்பங்கரை வரை செல்ல முடிந்திருக்கிறது. இதை, காந்தியே தனது சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார்.

தந்தை பெரியார் அவர்கள் காந்தியாரைச் சந்தித்தபோது நான் சொல்லுகிறேன், தாங்கள் மன்னிக்க வேண்டும். இந்து மதத்தை வைத்துக் கொண்டு தங்களாலேயே நிரந்தரமாக ஒன்றும் செய்துவிட முடியாது. பிராமணர்கள் அவ்வளவு தூரம் விட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். தங்கள் கருத்து அவர்களுக்கு விரோதமாகச் சற்று பலிதமாகிறது என்று கண்டால் உடனே எதிர்க்க ஆரம்பித்து விடுவார்கள். இதுவரை எந்த ஒரு பெரியாராலும் இந்தத் துறையில் எந்தவிதமான மாறுதலும் ஏற்பட்டதில்லை என்பதோடு, அப்படிப்பட்ட ஒருவரையும் பிராணர்கள் விட்டுவைத்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என எச்சரித்தார்.

தந்தை பெரியார் அவர்கள் எச்சரித்ததைப் போலவே 1948இல் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்த நாதுராம் கோட்சே என்கிற பார்ப்பனரால் காந்தி கொல்லப்பட்டார். நாடே கொந்தளித்திருந்த சூழலில் இந்திய நாட்டிற்கு காந்தி நாடு என பெயர் சூட்டப்பட வேண்டும் என்று அரசுக்கு பெரியார் வேண்டுகோள் விடுத்தார். அவர்தாம் பெரியார்!.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *