உலக மக்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களுடைய உரிமைகளை நிலைநாட்டும் பிரச்சினைகளில் தன்னுடைய அக்கறையை இந்தியா வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். வல்லரசாக ஆக வேண்டுமென்றால் தான் நல்லரசு என்பதையும் இந்தியா நிரூபிக்க வேண்டும். எனவே, இலங்கை இனப் படுகொலை செய்துள்ளது என்று அய்.நாவின் அறிக்கையில் கூறியிருப்பதுபற்றி உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு கண்டிப்பாகக் கருத்துத் தெரிவிக்க வேண்டும். – மீனாட்சி கங்குலி மனித உரிமை கண்காணிப்பகத்துக்கான தென் ஆசியத் தலைவர், அய்.நா.சபை
சுவிஸ் வங்கிகளில் மற்ற நாட்டுக்காரர்களைவிட இந்தியர்கள்தான் அதிகம் பேர் கருப்புப் பணம் வைத்துள்ளனர். கறுப்புப் பணத்தால் ஜெர்மனி அரசைவிட, இந்திய அரசுக்குத்தான் ஏராளமான வரி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இருப்பினும் இந்திய அரசு அக்கறை காட்டவில்லை.
வெளிநாடுகளில் கறுப்புப் பணத்தைக் குவிப்பது உள்நாட்டு ஊழலைவிட மிகவும் மோசமானது. கறுப்புப் பணத்தை வெளிநாட்டுக்கு அ-னுப்புவதால், உள்நாட்டில் மக்களின் வாழ்க்கைச் செலவு மிகுந்ததாகிவிடுகிறது. – ஜூலியின் அசாங்கே நிறுவனர், விக்கிலீக்ஸ் இணையதளம்
பாகிஸ்தான் தலைவர்கள் எங்களின் ஹிட்லிஸ்ட்டில் உள்ளனர் என்பதை எச்சரிக்கிறேன். பின்லேடனைக் கொன்றதற்காக அமெரிக்கா மகிழ்ச்சி கொள்ளக்கூடாது. அவரைக் கொல்ல அமெரிக்காவுக்கு 10 ஆண்டுகள் ஆகியுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவை நாங்கள்தான் கொன்றோம். மூன்று மாதத்தில் திட்டத்தை நிறைவேற்றினோம். இந்த வகையில் நாங்கள் இன்னும் 3 மாதத்தில் எங்கள் சதித் திட்டத்தை நிறைவேற்றுவோம். – அசானுல்லா அசான், செய்தித் தொடர்பாளர், இ-தலிபான்
குழந்தைகளுக்கு நிர்ணயிக்கப்படும் 14 வயது என்பதை அய்.நா. உடன்படிக்கையின்படி 18 வயதாக மாற்றி கட்டாயக் கல்வி, தரமான கல்வி, இலவசக் கல்வி, சமச்சீர் கல்வி ஆகியவற்றை அனைத்துக் குழந்தைகளுக்கும் அளிக்கும் வகையில் இந்தச் சட்டத்தை மாற்றினால்தான் குழந்தை உழைப்பை முற்றிலும் அகற்றமுடியும். – வே. வசந்தி தேவி,மேனாள் தலைவர், தமிழக மகளிர் ஆணையம்
பாகிஸ்தான் எல்லையைக் கடந்து அபோதாபாத்வரை அமெரிக்க வீரர்கள் வந்து நடவடிக்கை எடுத்ததை ஒப்புக் கொள்ள முடியாது. அது பாகிஸ்தானின் இறையாண்மையை மீறிய செயல். பாகிஸ்தான் அரசுடன் இதுபற்றிக் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும். அல்-குவைதா மற்றும் தலிபான்களுடன் பாகிஸ்தான் போரிடுகிறது. பின்லேடன் எப்படி அபோதாபாத்துக்கு வந்தார் என்று எனக்குத் தெரியவில்லை. அவருடன் உள்ளூர் அதிகாரிகள் தொடர்பு வைத்திருப்பர் என்று நான் கருதவில்லை. ஆனால் உள்ளூர் மக்கள் தொடர்பில் இருந்திருக்கக்கூடும். – பர்வேஸ் முஷாரப், மேனாள் அதிகர், பாகிஸ்தான்