கிராமங்களில் இந்துக்கள் என்ற அடையாளத்தோடு தாழ்த்தப்பட்டோர் குடியிருக்கும் சேரிக்குள்ளும் வரச் சொன்னால், தனக்குத் தீண்டாமை ஒட்டிக் கொள்ளும் என்று சிலிர்த்துக் கொண்டு போகும் இந்துக் கடவுள்கள்;
நகரங்களில் தாழ்த்தப்பட்ட இளைஞர்களுக்கு இந்துக்கள் என்று முக்கியத்துவம் கொடுத்து;
இந்துக்கள் அல்லாத இஸ்லாமியர் தெருவழியாக அதுவும் மசூதிகள் வழியாகத்தான் போவேன் என்று பிள்ளையார் அடம் பிடிப்பதன் மர்மம் என்ன?
சென்னை மீனவர்களை இந்துக்கள் என்று அடையாளப்படுத்தி, விநாயகரை மீனவர் குடியிருப்புகளுக்கும் மீனவரை விநாயகர் ஊர்வலத்திற்கும் சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்துச் செல்லும் இந்து அமைப்புகள்;
திருவல்லிக்கேணி அக்ரஹாரத்தைச் சுற்றி, அடிக்கடி பல்லக்கில் உலா வரும் பார்த்தசாரதியையும், மயிலாப்பூர் கோவிலை சூத்திர பக்தர்கள் சும்மா சும்மா சுற்றி சுற்றி வருவதைப் போல், அடிக்கடி அக்ரஹாரத்தைச் சுற்றி வருகிற மயிலை கபாலிஸ்வரனையும், மிக அருகில் இருக்கும் மீனவர் குப்பத்திற்குள் வீதி உலா அழைத்துச் செல்லாமல் இருப்பதன் மர்மம் என்ன?
2004 டிசம்பர் 26 அன்று சென்னை மண்ணின் மைந்தர்களான மீனவர்களைப் பலி கொண்டது சுனாமி.
எஞ்சியவர்கள் உயிர் தப்ப அருகிலிருந்த திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, மயிலை கபாலிஸ்வரர் கோவில்களை நாடி ஓடினார்கள்;
ஆனால் அந்த மாபெரும் இந்துக் கோவில் கதவுகள் மீனவ இந்துக்களுக்குத் திறந்து தங்க இடம் தந்தால் அசுத்தம் செய்து விடுவார்கள், தீட்டாகி விடும் என்று மூடியே இருந்தது.
100 சதவீதம் இந்துக்களான சென்னை மீனவர்களுக்கு சுனாமி தாக்குதல்களின் போது, கிறித்துவ சாந்தோம் சர்ச் கதவுகளே திறந்து அடைக்கலம் தந்தது.
அடைக்கலம் தந்தவன் மீனவர்களுக்கு அந்நிய மதக்காரன் விரட்டி விட்டவன் சொல்கிறான்.
சுனாமியின் போது விரட்டி அடித்தவர்கள் இப்போது விநாயகன் சிலையோடு மீனவக் குப்பங்களுக்குள் இந்து விளையாட்டு விளையாட வருவதன் மர்மம் என்ன?
கோவில்களில் விநாயகர் உட்பட சமஸ்கிருத மந்திரங்கள் சொல்லி வணங்கும் கடவுள்களுக்கு, வழக்கமாக மிருதங்கம், கடம், வீணை, புல்லாங்குழல் போனறவைதான் இசைக்கப்படும்; வீதி உலா புறப்படும்போது நாதஸ்வரம், தவில் கொண்டுதான் வாசிப்பார்கள்.
ஆனால் இப்போது விநாயகர் நகர் உலா புறப்படும்போது பறை அடித்துக் கொண்டாடுவதன் மர்மம் என்ன?
– வே.மதிமாறன்