எது தமிழ்த் திருமணம்? (4)
அருந்ததி தெரியுறதா?
– சு.அறிவுக்கரசு
புறநானூற்றுக் காலத்தில் சடங்குகள் இல்லை. சிலப்பதிகாரக் காலத்தில் மாமுது பார்ப்பான் புரோகிதராக இருந்து சப்தபதி சுற்றச் செய்த சடங்கு நுழைந்துவிட்டது. பார்ப்பனப் புரோகிதருடன் கூடவே சடங்கும் நுழைந்துவிட்டது.
சுமார் 8ஆம் நூற்றாண்டில் கொங்கு வேளிர் எழுதிய பெருங்கதை நூல் உதயணன், வாசவதத்தை ஆகியோரின் மணவிழா பற்றிக் கூறுகிறது. திருமணம் நடைபெறும் நாளைக் குறித்தவன் ஜோதிடன். புரோகிதனைத் தொடர்ந்து ஜோதிடன் நுழைந்துவிட்டான். நாளையும் நேரத்தையும் குறித்துக் கொடுத்தான். 45 கால்கள் கொண்ட மணப்பந்தல் அமைக்கப்பட்டது. இந்தக் கால்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தெய்வம் நிலைபெற்றிருக்கிறது எனக் கூறிவிட்டனர். பந்தலின் கிழக்குப் பக்கத்தில் அம்மி வைக்கப்பட்டது. அரசாணி வைக்கப்பட்டது. இதனை வணங்கியபின் பார்ப்பனப் புரோகிதன் சடங்குகளைச் செய்யத் தொடங்கினான். மாலையைத் தூக்கிப் பிடித்து எதையோ முணுமுணுத்தான்.
அருந்ததியையும் வசிஷ்ட முனிவனையும் வணங்குவதாக விளக்கம் கூறப்பட்டது. தெய்வங்கள் பட்டினியாக இருந்தனபோலும்! அவற்றிற்குப் படையல் போடப்பட்டது. பாலில் வெந்த வெண்சோறு, தேனில் வேக வைக்கப்பட்ட தேன்சோறு, புளிநீரில் வெந்த புளியஞ்சோறு, கரும்புச் சாறில் வேகவைக்கப்பட்ட அடிசில், நெய்ப் பொங்கல் ஆகியவற்றை அகல்களில் வைத்துப் பலி கொடுத்தனர். இந்த அகல்கள் மண்ணால் செய்யப்பட்டவை அல்ல. பொன், வெள்ளி, செம்பு போன்ற உலோகங்களால் செய்யப்பட்டன. தெய்வங்கள் அல்லவா! அதனால் உசத்தியான உலோகப் பாண்டங்கள்! தெய்வ உணவு இப்படி என்றால் புரோகிதன் முதலானோர் உணவு எப்படியாம்? நெய்யோடு கலந்த அய்ந்து வகை சிற்றுண்டிகளும், தாளிக்கப்பட்ட அறுசுவை அடிசில்களும் நிறைந்த பெருஞ்சோற்றுத் திரளைப் பார்ப்பனர் உண்டனராம்!
அதன்பின் மணமகன் அருந்ததி நட்சத்திரத்தை மணமகளுக்குக் காட்டினானாம். மணமகளை தலைக்குமேல் கைகூப்பிக் கும்பிட்டு மூன்றுமுறை அருந்ததியை வணங்கச் செய்தானாம். அது கற்புடைய விண்மீனாம். நட்சத்திரங்களில் கூடக் கற்புடையது என்றும் சோரம் போனது என்றும் தாரதம்மியப்படுத்திப் புளுகியுள்ளனர்.
யார் இந்த அருந்ததி? இவள் மாசானம்மா எனும் பெண்! தன் குருவிடம் பாடம் படித்துக் கொண்டிருந்தவள். குரு இவளுக்குக் குழந்தை வரம் தரும் மந்திரத்தை ஒரு நாள் சொல்லிக் கொடுத்து யாருக்கும் கூறக் கூடாது என்று சொல்லி இருந்தார். பாடம் முடிந்து வீட்டுக்குத் திரும்பும்போது மந்திரத்தைச் சொல்லிப் பார்த்தாளாம். உடனே அவளுக்குக் குழந்தை பிறந்துவிட்டதாம்! மந்திரத்தின் மகிமை அது! ஆணுடன் உடல் உறவு கொள்ளாமலே குழந்தை பிறந்த காலம் அது! என்றாலும் பயந்துபோன மாசானம்மா அழுதாள். அவள் எதிரே தோன்றிய தெய்வம் அவளைச் சமாதானப்படுத்தி அவளை நட்சத்திரமாக உயர்த்திப் பெருமை ஏற்படுத்தியதாம். கல்யாணம் ஆகாமலே குழந்தை பெற்ற கன்னித்தாய் கற்பின் சிகரம் என்று ஆக்கப்பட்டாள்! எல்லோரும் அதைப் பார்த்து மண வாழ்க்கையைத் தொடங்கும்படி ஆக்கிவிட்டார்கள்!
திருமணத்திற்குப் பிறகு மூன்று நாள்கள் விரதம் இருந்தனர். அதற்குப் பெயர் சதுர்த்தி விரதம், நான்காம் நாள் இரவுதான் அவர்களுக்கு முதல் இரவு! வாசவதத்தையின் உடலின் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு அங்குலப் பகுதியையும் உதயணன் தொடும்படிச் செய்தனர். பலர் முன்னிலையில் அவனும் அவளைத் தொட்டுத் தீண்டினான். பொன் தட்டில் சோறு போட்டு ஊட்டினர் இருவர்க்கும். பிறகுதான் முறையிற் பிழையாது கட்டில் ஏற்றினர் என்கிறது பெருங்கதை.
ஆண்டாள் திருமணம்
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் ரங்க மன்னார் எனப்படும் நாராயணனைத் திருமணம் செய்து கொண்டதை ஆண்டாளே பாடிய திருப்பாவை விரிவாகக் கூறுகிறது. திருமண நாளுக்கு முதல் நாள் ஆயிரம் ஆனைகளோடு மணமகன் நாராயணன் வருகிறான். மணப்பந்தலுக்குள் நுழைகிறான். மணமகளின் கழுத்தில் மணமகளின் சகோதரி அந்தரி மாலை அணிவிக்கிறாள். வேதம் தெரிந்தோர் வேதத்தை ஒலிக்கின்றனர். நறுமணம் உள்ள நீரால் மணமக்களைக் குளிப்பாட்டிக் காப்பு நாண் கட்டுகின்றனர். பிறகு அக்கினி சாட்சியாக மணமகளின் கையைப் பிடித்து தீவலம் வந்து மணந்து கொண்டான். பிறகு மணமகளின் கால்களை மணமகன் பிடித்துத் தூக்கி அம்மியின் மீது வைக்கிறான். மணமக்கள் இருவரின் கைகளையும் சேர்த்துவைத்துப் பொரி தூவித் தீயில் இடுகின்றனர். அதன்பின்னர் மணமக்கள் யானை மீது ஏறி அமர்ந்து ஊர்வலம் வந்தனராம்.
தாலி புகுந்தது
வைணவக் கடவுளின் திருமணம் இப்படி! சைவக் கடவுளின் திருமணம் எப்படி என்று பார்ப்போமா? முருகனுக்கும் தெய்வானைக்கும் நடந்த திருமணத்தைக் கந்தபுராணம் கூறுகிறது. கச்சியப்ப சிவாச்சாரி எனும் பார்ப்பனர் 11ஆம் நூற்றாண்டில் பாடியது இந்நூல். கடவுளின் கல்யாணத்தையே மானுடர் பாடி வைக்கும் விசித்திரம் இங்கேதான்! இந்து மதத்தில்தான்! மேலே விவரிக்கப்பட்ட திருமணப் படிநிலைகளில் கூறப்பட்ட எல்லாச் சடங்குகளுடனும் கூடுதலாக ஒன்றும் தெய்வானை திருமணத்தில் கூறப்படுகிறது! அதுதான் பார்ப்பனக் கைச்சரக்கு! தெய்வானையின் கழுத்தில் முருகன் தாலி கட்டினான் என்று கச்சியப்ப சிவாச்சாரி கதை விடுகிறார். இதுவரை இல்லாத இந்தச் சடங்கு புகுத்தப்பட்டதே புராணத்தில்தான். இந்தப் புளுகு கந்த புராணத்திலும் இல்லை என்கிற சொல்லடை இதனால்தான் எழுந்ததோ?
இதே பார்ப்பனர் அதே புராணத்தில் கூறிய வள்ளி_முருகன் திருமணத்தில் சடங்குகள் எதுவும் இல்லாமல் நடந்ததாக எழுதியுள்ளார். வள்ளி குறப்பெண். தெய்வானை உயர்ஜாதிப் பெண்! வள்ளித் திருமணம் களவு மணம்! தெய்வானைத் திருமணம் பெரியோர்களால் முடிவு செய்து நடந்த திருமணம் என்பதும் காரணமோ? அதனால்தான் தெய்வானைத் திருமணம் முடிந்ததும் அவளின் தந்தையான இந்திரன் மணமகளுக்கு மதுபர்க்கம் தந்தான். முக்கனி, கரும்பு, தேன், காமதேனுவின் பால் ஆகியவற்றைத் தந்தானாம். கச்சியப்பர் பாடுகிறார்.
ஆனால், திருமண சாஸ்திரப் பாடல்களின்படி மதுபர்க்கம் என்றால் மாமிச விருந்து – அதுவும் மாட்டு இறைச்சி விருந்து என்கிறார் காலஞ்சென்ற அக்னிகோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரி (படிக்க நூல்: இந்துமதம் எங்கே போகிறது?)
பாத பூஜை
சிவ பெருமானின் புகழ் பேசித் திரிந்த 63 நாயன்மார்களின் கதையைப் பெரிய புராணம் (திருத்தொண்டர் புராணம்) பாடிய சேக்கிழார் பாடியுள்ளார். திருமணம் செய்துகொண்ட அடியார்களின் கதையைப் பாடும்போது யாரும் தாலி கட்டியதாகப் பாடவில்லை. கச்சியப்ப சிவாச்சாரி மட்டும் கந்தபுராணத்தில் பாடி வைத்துள்ளார் என்றால் பார்ப்பனக் குறும்பு என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.
சீர்காழிப் பார்ப்பனன் (ஞான) சம்பந்தனின் திருமணம் பற்றிப் பாடிய சேக்கிழார் மணமகளின் தாய் மணமகனுக்குப் பாதபூஜை செய்ததாகப் பாடியுள்ளார். மணமகன் தன் பெற்றோர்க்குப் பாதபூஜை செய்வதும் மணமகள் அதுபோலவே தன் பெற்றோர்க்குப் பாதபூஜை செய்வதும் நடைமுறையில் இருக்கிறது. சம்பந்தன் திருமணத்தில் மாமியார் மருமகன் காலைக் கழுவிப் பாதபூஜை செய்துள்ளார் என்றால், பார்ப்பன உயர்வை மேலும் உயர்த்துவதற்காகக் காட்டப்பட்டதோ?
பெற்றோர்க்குப் பாதபூஜை செய்யும் பழக்கம் இங்கு உள்ளது. மணமகன் தன் பெற்றோர்க்கும், மணமகள் தன் பெற்றோர்க்கும் பாதங்களைக் கழுவி வணங்குகிறார்கள். ஆனால் ஆரிய முறைத் திருமணங்களில், வடநாட்டில் மணமகனின் பாதங்களைப் பெண்ணின் தந்தையோ பெண்ணின் அண்ணனோதான் கழுவ வேண்டும்.
அவர்கள் மணமகனை விட வயதில் மூத்தவராக இருந்தாலும் பாதங்களைக் கழுவ வேண்டும். காரணம், மணமகன் குலத்தால் உயர்ந்தவனாம். பெண் தாழ்ந்த குலமாம். பெண் கொடுக்கும்போது அவளை உயர் குலத்தில்தான் கொடுக்க வேண்டும் என்கிற மரபு அவர்களிடையே! பெண் கொடுப்போர் குறைந்த தகுதி உடையவராகவும் பெண் எடுப்போர் தகுதி உயர்ந்தவராகவும் கருதப்படும் விசித்திர நிலை. இதனால் என்ன ஏற்படுகிறது தெரியுமா? உயர் குலத்தவரின் பெண்ணைக் கட்ட ஆண் கிடைக்காத நிலை! அதுபோலவே கீழ் குலத்தவரின் குடும்பங்களில் பெண்கள் பற்றாக்குறை! ஒரே ஜாதியில், குலம், கோத்திரம் என்று பிரித்து வைத்துக் கொண்டிருப்பதால் இந்த விசித்திரம்!
திராவிடர் நாகரிகம் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டது. ஆரிய நாகரிகம் மாடு மேய்த்தலை அடிப்படையாகக் கொண்டது என்பதால் இந்நிலை என்கிறார்கள் ஆய்வாளர்கள்!
நேரில் வந்த அருந்ததி
இராமாயணக் கதையைத் தமிழில் பாடித் தமிழ்ச் சமூகத்திற்குப் பெருந்துரோகம் செய்த கம்பன் ராமன்_சீதை திருமணத்தைப் பாடியுள்ளான். வசிஷ்டன்தான் புரோகிதன். இவன்தான் ராமனின் பட்டாபிஷேகத்திற்கும் நாள் குறித்துத் தந்தான். பட்டாபிஷேகம் நடக்கவில்லை. ராமனின் தந்தை இறந்தான். ராமன் காட்டுக்கு அனுப்பப்பட்டான். அப்பேர்ப் பட்ட திறமையான ஆள்தான் வசிஷ்டன்.
தண்டுலம் விரித்தனன் தருப்பை சாத்தினன்
மண்டுலம் விதிமுறை வகுத்து மென்மலர்
கொண்டவை சொரிந்தெரி குழம் மூட்டினன்
பண்டுள மறைநெறி பரவிச் செய்தனன்
எனப் பாடியவாறு அரிசி பரப்பி, தர்ப்பைப் புல் வைத்து, நெருப்பு மூட்டி, மலர் வைத்து, எரியச் செய்து மந்திரம் கூறத் தொடங்கினானாம். வைதிகச் சடங்குகளைச் செய்யத் தொடங்கியதும் இராமனும் சீதையும் நெருப்பைச் சுற்றி வந்தனர். பின்னர் சீதை அம்மி மிதித்து அருந்ததி பார்த்தாளாம். இது மிகச் சிறப்பான திருமணமாம்! அதனால் நட்சத்திரமாகிவிட்ட அருந்ததி திருமணத்திற்குப் பெண் உருவில் நேரில் வந்திருந்தாளாம். சீதை அவளைப் பார்த்தாளாம். எதிர் நின்ற கலங்கலில் கற்பின் அருந்ததி கண்டாள் எனப் பாடுகிறான் கம்பன். புளுகுக்கு எல்லையே இல்லை கம்பனிடத்தில்!
நாராயணன் எனும் கடவுள் 22 அவதாரங்கள் எடுத்ததாகப் புராணங்கள் கூறும். ஆனால் அவற்றுள் 10 அவதாரங்கள் மட்டுமே முதன்மைப் படுத்தப்பட்டு தசாவதாரங்கள் எனப்படுகின்றன. இந்த அவதாரங்களை இந்தியாவில் மட்டுமே எடுத்துள்ளன. ஆதலால் இது இந்தியக் கடவுள் உலகக் கடவுள் என ஒப்பமுடியாது, அல்லவா! அதேபோல அவதாரம் எடுத்த சிவன் தனது அவதார விளையாட்டுகளை மதுரை நகரிலும் சுற்றிலும் மட்டுமே காட்டியிருக்கிறது. ஆகவே தென்னாடு உடைய சிவனே, எந்நாட்டவர்க்கும் இறைவா எனப் புகழ்வது தவறு!
சிவனின் விளையாட்டுகளைப் பாடுவது திருவிளையாடல் புராணம். 16ஆம் நூற்றாண்டில் பரஞ்சோதி என்பவர் பாடியது. சிவன் தடாதகை என்பாளை மணந்துகொண்டதைப் பாடும்போது, மணமகளின் அண்ணனான திருமால் பூஜை செய்ததையும் பிரம்மன் புரோகிதம் பார்த்ததையும் குறிப்பிடுகிறார். சிவன் கையில் தடாதகையின் கைகளை வைத்து தண்ணீர் ஊற்றி பாணிக்கிரணம் செய்தல், மங்கலம் பாடல், தாலி கட்டுதல், பொரியிடல், தீவலம் வருதல், அம்மி மிதித்தல், அருந்ததி காட்டல் போன்ற சடங்குகள் காட்டப்பெறுகின்றன. சிவனின் கால்களைக் கழுவி பூஜை செய்தது திருமால் என்கிறது இப்புராணம்! இதனை மாலியப் பிரிவினர் (வைணவர்) ஏற்பரோ? சைவ, வைணவச் சண்டைதான் பிரபலம் ஆயிற்றே!
– (தொடரும்)