’உத்சவ்’னா உச்சா கூடாதா?

செப்டம்பர் 16-30

இவ்விடம் அரசியல் பேசலாம்

’உத்சவ்’னா உச்சா கூடாதா?

(வழக்கம்போல இந்த ஞாயிறும் சலூன்கடையில் அரசியல் கலந்தாய்வுக் கூட்டம் தொடங்கிடுச்சு! ஒரு பக்கம் கட்டிங் ஷேவிங் நடக்குறப்பவே சலூன்கடை சுந்தரம், வாடிக்கையாளர் மதியழகன் ஆகிய இருவருக்கும் இடையில் சுவாரசியமாப் போற உரையாடலை அப்படியே பதிவு பண்ணி உங்களுக்குக் கொடுத்துட்டோம்! சுவாரசியமான உரையாடலிலிருந்து… உங்களுக்காக…)

வாங்க தோழரே, சவுக்கியமா?

 

ரொம்ப சவுக்கியம்! முடி வெட்டுறோமோ இல்லையோ, உங்க கடைக்கு வந்து நாட்டு நிலவரத்தைக் கொஞ்சம் பேசிட்டுப் போனாலே பாரம் குறைஞ்ச மாதிரி ஆயிடுது தோழரே! அதுக்காகத்தான் இன்னைக்குக்கூட அப்படியே இந்தப் பக்கமா வந்தேன்!

அதுசரி, சலூன்கடை அரசியல் பேச்சுகள்தான் பலமுறை நாட்டோட தலையெழுத்தையே மாத்தியிருக்கு! இந்த வார நிலவரம் என்ன தோழர்? உங்க ஏரியா பிள்ளையார் சவுக்கியமா?

அதை ஏன் கேக்கறிங்க! எங்க ஏரியா பிள்ளையாரு சிலை பத்து நாளா இருந்ததுல பெயிண்டெல்லாம் உரியத் தொடங்கிடுச்சு…

பின்ன, தூக்குத் தண்டனைக் கைதிகளின் காத்திருப்பு மாதிரிதான் ஆயிடுச்சு பிள்ளையாரோட பொழப்பு!

இதுல ஒரு காமெடி பார்த்தியா? அவரோட பிறப்புக்கான கதை மாதிரியே ஆயிடுச்சு அவரோட அழிப்பும்!

எதைச் சொல்றிங்க?

அப்பன் சிவனே அவரோட தலையைத் துண்டிச்சுட்டாரு, அடுத்ததா அவருக்காக ஒரு அப்பிராணி யானையோட தலையைத் துண்டிச்சு ஒட்ட வச்சாங்க… இப்ப என்னடான்னா பெரிய பெரிய பொம்மையா செஞ்சு கடலில் தூக்கிப் போட்டு உடைச்சு அவரை அழிக்கிறாங்க! ஆக மொத்தம் அவரோட பிறப்பைப் போலவே அழிப்பும் காட்டுமிராண்டித்தனமாத்தான் இருக்கு!

இப்பல்லாம் கடலலையப் பார்த்தால் பிள்ளையார் பொம்மைகளை இங்க வந்து கொட்டாதீங்கடான்னு மாற்றி மாற்றிச் சொல்றாப்புலயே இருக்கு!

அதுசரி, நாம என்னைக்கு இயற்கையோட வார்த்தையை மதிச்சோம்?!

பிள்ளையார் சிலைல பெயிண்டு உரிஞ்சமாதிரியே இந்த நூறு நாள்ல மோடிக்குப் பூசின பெயிண்டும் உரிஞ்சுடுச்சு, கவனிச்சிங்களா?

தேர்தலப்ப அவசர அவசரமா பெயிண்ட் அடிச்சப்பவே தெரியும், சீக்கிரம் பல்லிளிச்சிரும்னு!

மாப்பிள்ளை அவருதான், ஆனால் அவரு போட்டிருக்குற சட்டை என்னதுன்னு சொல்றாப்புல தான் இருக்குது மோடியோட ஒவ்வொரு நடவடிக்கையும்! காங்கிரஸ் கட்சியை அப்படியே அச்சு அசலா இமிடேட் பண்ணியே ஆட்சி நடத்துறார்! அப்ப, டிவியில வர்ற காமெடி ஷோக்களில் மிமிக்ரி பண்றவங்களையே மோடி மிஞ்சிட்டார்னு சொல்லு!

அதே அதே! இப்பக்கூட ஜப்பான்ல அவரு ட்ரம்ஸ் வாசித்ததை நினைத்துப் பெருமைப்படலாம்னு பார்த்தால், அதே ட்ரம்ஸ நம்ம மன்மோகன்சிங்கும் அடிச்சிருக்காருன்னு ஆதாரப்பூர்வமா எடுத்துக்காட்டிட்டாங்க!

அடங்கொய்யால! இதுல கூடவா காப்பி பேஸ்ட் வேலை பண்ணியிருக்காரு?!

அது போகட்டும், இந்தத் தடவை ஆசிரியர் தினத்தை குரு உத்சவ்னு பெயர் மாத்தினதைக் கேள்விப்பட்டிங்களா?

நமக்குத் தெரிந்ததெல்லாம் காராசேவ் மிச்சர் தான்…

ஆமா, ஆமா, நான்கூட கார்ப்பச்சேவ் மாதிரி இந்த குரு உத்சவ், ரஷ்யாவோட மந்திரியா இருப்பாரோன்னுதான் முதலில் நினைச்சுட்டேன்! அப்புறமாத்தான் உண்மை வௌங்குச்சு!

ஆனா எனக்கு ஒன்னு மட்டும் வெலங்கவேயில்ல… ஆசிரியர் தினம்னா ஆசிரியர் களோடதான மோடி கலந்துரை யாடணும்? அதென்ன, மாணவர்களோட கலந்துரையாடல்?

அதான் ஆரம்பத்துல இருந்தே சொல்றோம்ல, மோடி ஷோ கேஸ் பொம்மை மாதிரிதான். அதுக்குத் தினமும் ட்ரெஸ் மாட்டிவிடுற பொறுப்பெல்லாம் சுத்தியிருக்குற தொழிலதிபர்கள், ஆர். எஸ். எஸ். கூட்டத்தோட வேலைதான்! ஆசிரியர் தினத்தன்னைக்கு அவருக்கு மாட்டிவிட்ட வேஷம் அப்துல்கலாம் வேஷம்! புரிஞ்சுதா?!
அட, ஆமால்ல!

இதுல கொடுமை, அவரோட ஹிந்திப் பேச்சை, இந்தியா முழுக்க இருக்குற பசங்களை நேரடி ஒளிபரப்பில் பார்க்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தினது! இவனுங்க அரசியலில் பசங்களை வேற டார்ச்சர் பண்றானுங்க! பெங்களூர்ல ஒரு பள்ளிக்கூடத்துல மோடியோட ஆசிரியர் தினப் பேச்சை நேரடி ஒளிபரப்பு பண்ணிட்டு, அது முடியறவரைக்கும் பசங்களை உச்சாகூடப் போகவிடாமல் ஆசிரியர்கள் அடாவடி பண்ணியிருக்காங்க!

அடக்கொடுமையே! குரு உத்சவ்னா, உச்சா கூட போகக்கூடாதா என்ன?!

இன்னும் போகப் போக என்ன கோமாளித் தனமெல்லாம் பண்ணப் போறாங்களோ!

அதான் நம்ம ஊர் பொன்னார் ஆரம்பிச்சுட்டாரே!

எதைச் சொல்றிங்க?

குமரி மாவட்டத்தைக் கேரளாவோட சேர்க்கணும்னு கொஞ்ச நாளா கதக்களி ஆடிட்டு இருக்காரே… படிக்கல?

ஆமா, ஆமா, எனக்கென்னவோ இவரு கொஞ்சம் கொஞ்சமா மலையாளக் கரையோரமா ஒதுங்கலாம்னு யோசனை பண்றாரோன்னு தோணுது!

அட, இது புதுக் கதையால்ல இருக்கு!

பின்ன, தமிழ்நாட்டில் இவரோட வேலை முடிஞ்சுடுச்சு, புதுத் தலைமையும் வந்திடுச்சு. இனி தமிழ்நாட்டுல இவருக்கு மரியாதை பெருசா இருக்காதுன்னு முடிவு பண்ணிட்டாரு போல. அதான், கேரளாப்பக்கம் அரசியல் பண்ணி அதோட தலைமையைக் கைப்பற்றிடலாம்னு யாரோ ஜாதகம் குறிச்சுக் குடுத்திருக்காங்க போல! குமரின்னாலே மனசு அலைபாயத்தான செய்யும்?!

அது சரி.. அவரவர் மனதில் ஆயிரம் ஆயிரம் ஆசைகள்!

இவருதான் கோமாளின்னா, இவரைவிடப் பெரிய கோமாளியா அந்த சூனா சாமி பேசிட்டுத் திரியறாரே!

பின்ன… ஞானப்பழத்துக்காகக் கோவிச்சுக்கிட்டுக் கோவணாண்டியா மாறின சுப்பிரமணிய சாமி மாதிரி, இந்தாளும் மந்திரி பதவி ஆசையில அந்நிய நாட்டுக்கே உளவாளியா வேலை பார்க்கப் போயிட்டாரு! இவரையெல்லாம் தேசத்துரோக வழக்கு ஒரு மண்ணும் பண்ணாது!

அதான் அங்க அங்க கொடும்பாவியக் கொளுத்திக்கிட்டு இருக்காங்களே! இதுல ஒரு ஒற்றுமை பார்த்திங்களா? தம்பி சுப்பிரமணிய சாமியோட கொடும்பாவியக் கொளுத்துறது ஒருபுறம்னா, அண்ணன் பிள்ளையாரோட பொம்மைப்பாவி(!)ய கடலில் போட்டு அழிக்கிறது இன்னொரு பக்கம் நடக்குது!

பின்ன அழிக்கும் கடவுளோட குடும்பத்தினர்னா சும்மாவா?!

ஹஹஹஹ! சரியாச் சொன்னீங்க!

– கல்வெட்டான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *