Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பெரியார் வாழ்வில்….

நம் பிள்ளைகள் அரசுப் பணிக்குப் போகவேண்டும்

தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தந்தை பெரியாருக்கு உதவியாளராக வந்து பணியாற்றிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அந்த இளைஞருக்கு அரசுப் பணி வாய்ப்பு வந்து, அதற்கான ஆணையும் கிடைத்தது. அந்த ஆணையை எடுத்துக்கொண்டு இளைஞரை அழைத்துச் செல்ல அவருடைய உறவினர் வந்திருந்தார். ஆனால் அய்யாவுக்கு உதவியாக இருப்பதே தனக்குப் பெரிதும் மகிழ்ச்சி என்றும், அய்யாவுடனிருக்கும் வாய்ப்பைத் தான் இழக்க விரும்பவில்லை என்றும் அந்த இளைஞர் அரசுப் பணியை மறுக்கும் எண்ணத்தை வெளியிட்டார். இதனை புலவர் இமயவரம்பன் மூலம் அறிந்த தந்தை பெரியார், நம் பிள்ளைகள் அரசுப் பணியில் _ அதிகாரத்தில் அமர வேண்டும் என்பதற்காகத்தானே நான் பாடுபட்டு வருகிறேன். அப்படி வந்த பணியை விட்டுவிடுவதா? எனக்கு உதவிக்கு வேறு ஆட்களைப் பார்த்துக் கொள்ளலாம். நீங்கள் சென்று பணியில் சேருங்கள். என்று அந்த இளைஞருக்கு எடுத்துச் சொல்லி, உறவினருடன் அனுப்பி வைத்தார். தந்தை பெரியார் என்பது சும்மா அழைக்கப்பட்ட பெயரா என்ன?


 

 

பெண்களைப் பற்றி அந்தக் காலத்தி லேயே அறிவுப்பூர்வமாகப் பேசியவர் பெரியார். அந்தக் காலத்துக்கு அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. இன்றைக்கும் அது பொருத்தமாகத்தான் இருக்கிறது. பெண்களைப்பற்றி இத்தனை கரிசனத்துடன் ஒருவர் சிந்தித்தது நினைத்துப் பார்க்க வேண்டிய விஷயம்.

முக்கியமாக இந்து தர்மத்தைக் காப்பாற்றியதாகச் சொல்லப்படுகிற முனிவர்களும், ரிஷிகளும் பெண்களை எவ்வளவு கேவலப்படுத்தியவர்கள் என்பதை முதலில் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவர் பெரியார்தான்.

நம் தெய்வீகத் திரைப் படங்களும், தொலைக்காட்சித் தொடர்களும் மிக உயரத்தில் தூக்கி வைத்துச் சித்திரித்துக் காட்டும் இந்த ரிஷிகள், முனிகளின் பிம்பத்தை உடைத்துக் காட்டவேண்டும் என்ற ஆவல் எனக்கு உண்டு. அந்த வேலையை மிகச் சாதாரணமாகச் செய்துவிட்ட  துணிச்சல்காரர் பெரியார். அந்தத் துணிச்சலை நினைத்து சந்தோஷப்படுகிறேன்.

– இராஜம் கிருஷ்ணன் (எழுத்தாளர்)


 

இந்திய உபகண்டத்திலேயே ஜாதி ஒழிப்புக்காகவும், ஜாதி ஆணவ ஆதிக்கங்களை ஒழிப்பதற்காகவும் உண்மையிலேயே பாடுபட்டு உழைத்து வருபவர் பெரியார். இந்த இருபதாம் நூற்றாண்டிலேயே பெரியார் ஒருவர்தான் இருக்கிறார். ஆகவே, ஜாதி ஒழிப்பில் ஆர்வமிக்க அனைவரும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் பெரியார் அவர்களுடன் ஒத்துழைப்பதுடன், வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் மேடைகளில் அவரது அறிவுரைகளைக் கேட்கும்படி வசதி ஏற்படுத்திக் கொள்வது நல்லது.

– பாபு ஜெகஜீவன்ராம் (விடுதலை, 18.10.1960)

 


 

கடவுள் மறுப்பு மட்டுமல்ல

1967இல் தந்தை பெரியார் கடவுள் மறுப்பு வாசகத்தை அறிமுகப்படுத்திய பிறகு கழகக் கூட்டங்களில் தொடக்கத்திலேயே அதைச் சொல்வதுண்டு. அன்று பெரியார் பிஞ்சுகளாக இருந்த நாங்கள் (என் சகோதரர் மற்றும் சகோதரி) தேவகோட்டையில் ஆர்ச் அருகில் தந்தை பெரியார் பங்கேற்ற கூட்டத்தில் கடவுள் மறுப்பு வாசகத்தை மனப்பாடம் செய்து மேடையில் கூறினோம். அதைக் கவனித்த அய்யா அவர்கள், அதோடு போதாது; ஆத்மா மறுப்பும் சொல்ல வேண்டும். அது தெரியுமா? என்று கேட்டு, பின்னர் அவர்கள் வைத்திருந்த ஓர் அட்டையில் எழுதப்பட்டிருந்த ஆத்மா மறுப்பைக் காட்டி, அதைப் பார்த்துப் படிக்கச் சொன்னார்கள். தன் கொள்கையில் முழுமையும், தெளிவும் அவசியம் என்பதில் உறுதியோடிருந்தவர் பெரியார்.

– இறைவி