– கை.அறிவழகன்
வணிகப் பின்னலும், முதலாளித்துவச் சிந்தனைகளும் கலந்து திரைப்படம் என்கிற ஊடகமே இன்னொரு வணிகப் பொருளாகவும், பண்டமாகவும் மாறி விட்டிருக்கிறது. கலைச் சேவை அல்லது நுண்கலை முயற்சி என்று திரைப்படத் துறையில் இயங்கும் யாரையும் அத்தனை எளிதில் அடையாளம் காண்பது அரிது. கடந்த காலங்களில் மிகப்பெரிய வணிக வெற்றியையும், அடையாளங்களையும் பெற்ற இயக்குனர்களே திரைப்படத் துறையின் அடுத்த கட்ட வளர்ச்சியையும், போக்கையும் முடிவு செய்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட அமைப்பில் உருவாக்கப்பட்ட திரைப்படம் வணிக அளவில் வெற்றி அடைந்து மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றால் தொடர்ந்து அதே கட்டமைப்பில் உருவாக்கப்படும் திரைப்படங்களே இதற்கு ஆதாரமாய் இருக்கிறது. எந்த ஒரு இயக்குனரும், திரைக் கலைஞரும் தன்னுடைய இருப்பை உறுதி செய்து கொண்ட பின்பே படைப்பூக்கம் மிகுந்த தனது உள்ளார்ந்த ஆழமான விருப்பத்தை நோக்கி நகர முடியும். இருப்புக்கான சமரசங்கள் செய்வதற்கு மறுத்து கரைந்து காணாமல் போன எத்தனையோ நல்ல படைப்பாளிகளை நம்மால் அடையாளம் காண முடியும். கலைக்கும், வணிகத்திற்கும் இடையிலான இந்த இடைவெளி எப்படி உருவாகிறது அல்லது உருவாக்கப்படுகிறது.
காட்சி ஊடகத்தின் மயக்கம் பார்வையாளனை எப்போதும் ஒரு கனவுலகிலும், வியப்பிலும் நிறுத்துகிறது. தான் செய்ய நினைக்கிற அல்லது வெளிப்படுத்துகிற சமூகக் கோபத்தைத் திரையில் இன்னொரு மனிதனால் சாதிக்க முடிவதை நினைத்து மனதளவில் பெருமிதம் கொள்ளும் பார்வையாளன் அந்த ஊடகத்தின் காட்சிகளில் தோன்றும் மனிதர்களைத் தன்னுடைய நிழல் என்று கருதுகிறான். அவனைப் போற்றுகிறான்; பெருமிதம் கொள்கிறான். இவ்வாறான போற்றுதலை எப்போதும் விரும்புகிற மனித மனம் தொடர்ந்து இத்தகைய நாயகத் தோற்றத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று தன்னையும் அறியாமல் பல வழிகளில் முனைந்து நிற்கிறது. நாயகர்கள் அரசியலுக்கு வருவதற்கும், அரசியல்வாதிகள் திரைக்கு வருவதற்குமான ஒரு மெல்லிய இழை இங்குதான் பின்னப்படுகிறது. ஒரு படைப்புக்குப் பின்னால் தாக்கம் விளைவிக்கிற தொழில்நுட்ப அறிவியல், சமூக அறிவியல், அரசியல் பின்புலம் இவை குறித்த வெளிப்படையான விவாதங்களையோ, அடிப்படை முரண்களையோ நமது சமூகத்தில் எந்த ஒரு திசையிலும் நாம் விவாதிக்க விரும்புவதில்லை. அல்லது கற்றுக் கொடுக்க விரும்புவதில்லை. திரைப்படங்களின் பாதிப்பில் முதல்வர் களைத் தேர்வு செய்கிற நமது சமூகத்திற்கு அந்தத் திரைப்படம் பற்றிய தவறிப் போன ஒரு பாடப் பகுதியைக்கூட நம்மால் கல்லூரி வரையில் காண இயலாது.
நமது சமூகம் தன் வாழ்நாளில் பாதி நேரம் பேசும் திரைப்படங்கள் குறித்தும் அவை உருவாக்கப்படும் விதம் குறித்துமான விழிப்புணர்வு பள்ளி நாட்களிலேயே உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். மாற்றங்களை விரும்புகிற அல்லது மாற்றங்களை நோக்கிச் சிந்திக்கிற எந்த ஒரு திரைப்படக் கலைஞனும் இதற்கான முயற்சியை எடுத்ததாக வரலாறு இல்லை. நல்ல திரைப்படங்களை உருவாக்கும் கலைஞர்களை, திரைப்படங்களின் மூலம் பரவலாக்கப்படும் அரசியல் திட்டங்களை முன்வைக்க வேண்டும் என்று எந்த ஒரு திரைப்படக் கலைஞரும் இதுவரையில் முன்னின்று பேசியதில்லை. அப்படிப் பேசுகிற ஒரு சிலரையும் திரைப்படங்களில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் என்னும் அளவில்தான் துறை முன்னோடிகள் கணக்கிட்டிருந்தார்கள்.
படைப்பாளிகளும், துறை சார்ந்த வல்லுனர்களும் நிரம்பிக் கிடந்த, கிடக்கிற ஒரு சமூகத்தில் வாய்ப்புகளும், தளங்களும் இல்லாமல் இளைஞர்கள் திசை மாறிச் சென்றார்கள். மேலை நாட்டுப் படங்களின் தழுவலை, சாயலை இன்னும் கிடைக்கும் எல்லாவற்றையும் உள்வாங்கி தங்கள் மொழியில் வழங்கி ஒரு தற்காலிக இருத்தலின் பயனை அவர்கள் அறுவடை செய்யத் தொடங்கினார்கள். அவர்களுக்கு வேறு வழியில்லை. படைப்பூக்கம் மிகுந்த இயக்குனர்களின் பட்டியலில் வாய்ப்பு ஒரு முற்றுப்புள்ளியாகவே இருந்தது. தங்களின் வெற்றியையும், இருப்பையும் உறுதி செய்து கொள்வதற்கு அவர்கள் கடைசியில் நாடிச் சென்றவை மேலைநாட்டுப் படங்களாய் இருந்தன. ஆனால், வெற்றி அடைந்த பின்னர் தாங்கள் கவனம் செலுத்த வேண்டிய மிக இன்றியமையாத பணி புதிய தலைமுறைக்கான தளங்களை உண்டாக்குதல் என்கிற அடிப்படை உண்மையை அவர்கள் யாவரும் வெற்றியின் களிப்பில் வசதியாக மறந்து போனார்கள். யாம் பெற்ற துன்பம் பெறுக இப்பேரண்டம் என்று தன்வழியைத் தனி வழியாக்கிக் கொண்டு கடந்து போனார்கள் முன்னவர்கள். பொற்கிழி வழங்குவது, வீடு கட்டிக் கொடுப்பது, வயது முதிர்ந்த காலத்தில் பணமுடிப்பு அளிப்பது அல்லது வெளிநாடுகளில் சென்று குத்தாட்டம் போடுவது மட்டுமே திரைப்படக் கலைஞர்களின் கடமையாக மாறிப் போனது. குறும்படங்களை இயக்கும் பயிற்சிகளை வழங்குவது, திரைப்படங்கள் குறித்த கருத்தரங்குகள் நடத்துவது, பாடத்திட்டங்களில் திரைப்படங்களைச் சேர்ப்பது போன்ற மக்களோடு நெருக்கமாக ஒரு கலையை மாற்றி அமைக்கிற எந்தப் பணியிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள தமிழ்ச் சூழலில் எந்த ஒரு முன்னோடியும் இல்லாமல் போனதுதான் கலைக்கும், வணிகத்திற்கும் இடையிலான மிகப்பெரிய இடைவெளியாக மாறிப் போனதை நாம் அனைவருமே வசதியாக மறந்துவிட்டோம் என்று நினைக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரை ஒரு திரைப்படம் என்பது இவ்வுலகை எதிரொளிக்கும் கண்ணாடி. எதிராக அமர்ந்திருக்கும் மனிதர்களின் கூட்டு மனதைத் தனக்குள் உள்வாங்கி சமூக இயக்கத்தைச் சீரமைக்கும் வல்லமை பொருந்திய ஊடகம். கிடைக்காத நீதியை, கிடைக்காத காதலை, கிடைக்காத அரசியலை கண்களுக்குள் பாய்ச்சி, கிடைக்கின்ற மாதிரியான ஒரு மாயையை உண்டாக்கும் திரைக்காட்சி. நமது தமிழ்த் திரைச் சூழல் தனது மக்களையும், மண்ணையும் எதிரொலிக்கிறதா? அல்லது எதிரொலித்ததா? என்கிற கேள்விக்கு இல்லை என்கிற ஆணித்தரமான பதிலை வழங்க முடியும். திரைப்படங்கள் நமக்கு அறிமுகம் ஆன போது அவை வர்ணக் கட்டுக்களில் இருந்து விடை பெற்றிருக்கவில்லை. ராமனும், கிருஷ்ணனும், ராதையும், சீதையும் என்று புராணக் காலங்களில் இருந்து விடை பெறாமல் இசை மொழியின் இன்னொரு பகுதியாக இருந்தது திரைப்படங்கள். இந்த வர்ண காலத் திரைப்படங்களை உடைத்துக் கொண்டு வரலாற்று மொழிகளைப் பேச வந்த மன்னர் காலத் திரைப்படங்களிலும் மன்னராட்சியை அல்லது முதலாளித்துவத்தைத் தூக்கி நிறுத்தும் போற்றுதலும், புகழுரையும் நிரம்பி இருந்தது. காட்சி அமைப்பின் வியப்பான தோற்றங்களைத் தவிர்த்து அவை மேலதிகமாக எதிர் நின்ற சமூகத்திற்கு எதுவும் செய்ய இயலாத ஒன்றாய்த் திரை இறக்கிக் கொண்டுவிட்டன. இவற்றின் பின்னரான குடும்பங்களின் சிக்கல்களை அவிழ்க்கிற அல்லது பேசுகிற படங்கள் யாவும் எளிய மக்களின் வாழ்க்கையை, அவர்களின் தேவையை, அவர்களுக்கான அரசியலை, கலையை இன்னும் எதையும் சொல்லாமல் காதலையும், திருமணங்களையும் தாங்கி நின்ற காட்சிகளாகத் தேங்கி நின்றன. தனி மனிதனை அல்லது நாயகனை வழிபடுகிற ஒரு மனநிலையை இந்தப் பகுதி தொடக்கி வைத்து ஒரு புதிய அரசியலை மக்களுக்கு அறிமுகம் செய்தது.
இன்றைக்கு அரசியலில், சமூகத்தில் எல்லா இடங்களிலும் வழிபாட்டு மனநிலையை வெற்றிகரமாக உருவாக்கியதில் இந்தப் பகுதித் திரைப்படங்களுக்கு ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு. தேவை இருக்கிற இடங்களில் அல்லது பசி இருக்கிற இடங்களில் போராடி உணவு வழங்குவதிலும், இடம் வழங்குவதிலும் கரைந்து கொண்டிருந்த காலம் நகர்ந்து ஒரு நாளும் சமூக நீதியை அல்லது சமூக நீதிக்கான தேவையை வலியுறுத்தும் படங்களை உருவாக்கிவிடவில்லை.
இடையில் தோன்றி உதித்த திராவிட இயக்கங்களும் அதன் தாக்கமும் குறிப்பிட்ட எல்லை வரை திரைப்பட மூலக்கூறுகளை மாற்றி அமைக்க முனைந்தாலும், காலம் காலமாக கைக்கொள்ளப்பட்டிருந்த பொருள் முதலாளிகள் அந்த எல்லைகளை எப்போதும் குறுக்கி அடைத்து விடவே முனைப்பாக இருந்தார்கள். தமிழ்ச் சமூகத்தின் இரண்டு இளைஞர்கள் சந்திக்கிற போது திரைப்படங்கள் அல்லது திரை நாயகர்கள் குறித்த ஏதாவது கருத்துப் பரிமாற்றம் உறுதியாக நிகழ்கிறது. தான் வாழும் சமூகத்தின், தேவை உலகின், பொருளுலகின் வழமையான ஓர் உறுப்பினர் போலவே திரை நாயகர்கள் அவர்களால் பார்க்கப்படுகிறார்கள். திரைப்படங்களின் காட்சிகள் கூட ஏதோ ஓர் அன்றாட நிகழ்வு தங்களைக் கடந்து போயிருப்பதான ஒரு மன நிலையில் நமது இளைஞர்கள் திரைப்படங்களைப் பற்றிய புரிதல் கொண்டிருக்கிறார்கள். இவற்றைப் பல கூறுகளாக நம்மால் விளங்கிக் கொள்ள முடியும். அவற்றில் சில மிகப்பெரிய சமூகத் தாக்கம் விளைவிக்கக் கூடியவை. இன்றைய புதிய தலைமுறையின் ஒரு சில இயக்குநர்களைத் தவிர ஏனைய பெரும்பான்மை இயக்குநர்கள் இந்தப் பொது வாய்ப்பாட்டின் அடிப்படையிலேயே இயங்க வேண்டிய ஒரு புறச் சூழலை நமது சமூகம் உருவாக்கி வைத்திருக்கிறது. அவற்றில் மிக முக்கியமான சிலவற்றை நாம் விவாதிக்க வேண்டிய ஒரு காலகட்டத்தில் நின்று கொண்டிருக்கிறோம்.
– (விவாதிப்போம்)