கடவுள் @ மார்க்கெட்டிங்.com

செப்டம்பர் 16-30

எந்நாட்டவருக்கும் இறைவன் என ஏற்றிப் போற்றப்பட்டாலும் தென்னாடுடைய சிவனுக்கு உள்ளூர்க் கோவில்களிலேயே கவனிப்பு குறைந்துவிட்டது.

ஆயிரம் ஆண்டுகளாக வானுயர்ந்து நிற்கும் தஞ்சைப் பெரிய கோவிலுக்கு உள்ள மதிப்பும் மரியாதையும் உள்ளே பெருவுடையாராக இருக்கிற சிவனுக்கு இருக்கிறதா என்பதை அவரையே கேட்டால்தான் தெரியும்.

லிங்க வடிவில் இருக்கும் அவருக்கு வாய் இருந்தால் உதட்டைப் பிதுக்கி இல்லை என்றுதான் சொல்லியிருப்பார். கடந்த சில ஆண்டுகளாக பிரதோஷ வழிபாடு தமிழ்நாடு முழுக்க பிரபலப்படுத்தப்பட்டு வருவதால், அந்த நாளில் மட்டும் கவனிப்புக்குரியவராக இருக்கிறார் பெருவுடையார். ஆனால் அதே பெரிய கோவிலில் திடீர் கவனம் பெற்றிருக்கிறார் வராகி அம்மன்.

 

கோவிலுக்குள் நுழைந்தால் இடதுபுறத்தில் இருக்கிறது வராகி அம்மனின் தம்மாத்தூண்டு சன்னதி. திருமால் எடுத்த அவதாரங்களில் ஒன்றாகச் சொல்லப்படுவது பன்றி முகம் கொண்ட வராகி அவதாரம். அதையே பெண்வடிவமாக்கி வராகி அம்மனாக சிவன் கோவிலுக்குள் எப்போதோ வைத்துவிட்டார்கள். பெரிய கோவிலுக்கு வரும் பெண்கள்தான் ஒருகாலத்தில் இந்த அம்மனுக்குப் பேச்சுத்துணையாக இருந்தார்கள். எண்ணெய்ப் பிசுக்கோடு விளக்கு எரியும். அதே பிசுபிசுப்போடு அருகில் கொஞ்சம் குங்குமம் இருக்கும். இப்போது வராகி அம்மன் ஸ்பெஷல் கவனம் பெற்றுவிட்டார். அடிச்சாச்சி லக்கி ப்ரைஸ் என்பதுபோல அந்த தம்மாத்தூண்டு சன்னதிக்கு முன்னால் இரும்புத் தகடுகளால் நிரந்தரப் பந்தல் போடப்பட்டுள்ளது. பக்தர்கள் வரிசையாக வருவதற்கேற்ப கம்பித் தடுப்புகளும் போடப்பட்டிருக்கிறது. முன்பெல்லாம் பக்தர்களே விளக்கேற்றி, குங்குமப் பிரசாதத்தை எடுத்துக் கொள்ளவேண்டிய நிலை.

இப்போதோ டபுள் ஷிஃப்ட்டில் அர்ச்சகர்கள் படுபிஸியாக பூஜை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சாதா பூஜை, ஸ்பெஷல் சாதா பூஜை, அபிஷேக ஆராதனை, சூப்பர் ஸ்பெஷல் டீலக்ஸ் பூஜை எனப் பலவித பூஜைகள் நடத்தப்பட்டு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுபோக, அர்ச்சகரின் தட்டில் விழும் தட்சனை என்பது தனி. பெருவுடையாரைவிட சிறுவடிவமான வராகி அம்மன்தான் ஆயிரமாண்டுகால பெரிய கோவிலில் லேட்டஸ்ட் அட்ராக்ஷன். தஞ்சை மண்டலத்தில் (தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள் மற்றும் சிதம்பரம், புதுச்சேரிக்குட்பட்ட காரைக்கால் பகுதிகளை உள்ளடக்கியவை) பழைமை மிக்க சிவன் கோவில்களுக்குப் பஞ்சமேயில்லை. தடுக்கி விழுந்தால் சிவ..சிவா என்று சொல்ல வேண்டியதில்லை. சிவ.. சிவா என்றாலே கோவில் படிகளில்தான் தடுக்கி விழவேண்டும்.

அந்தளவுக்கு பிரகதீஸ்வரர், கும்பேஸ்வரர், நடராஜர், தியாகராஜர் என வெவ்வேறு பெயர்களுடன் நூற்றுக்கணக்கான சிவன் கோவில்கள் உள்ளன. சப்ளை அதிகமாக இருந்தால் சரக்குக்கு டிமாண்ட் இருக்காது. என்னதான் லேபிள்கள் பலவிதங்களில் இருந்தாலும் உள்ளே இருப்பது சிவன்தான் என்பதால் இந்தக் கோவில்களுக்கு ரெகுலர் கஸ்டமர்கள் குறையத் தொடங்கிவிட்டார்கள். ஆண்டுக்கொரு முறை நடக்கும் தேரோட்டம், ஆருத்ரா தரிசனம், 12ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறும் மகாமகம் இவற்றிற்குத்தான் கூட்டம் வருகிறதேதவிர, மற்ற நாட்களில் வரத்து குறைந்து, அர்ச்சகர்களின் தட்டுகளில் வருமானமும் குறைந்தபடி இருந்தது. இந்த நிலையை மாற்றி, வரும்படியைப் பெருக்கவேண்டுமென்றால் ஆன்மீக மார்க்கெட்டில் புது பிராடக்ட்டை அறிமுகப்படுத்த வேண்டும்.

மதுவைப் போலத்தான் மதமும். நாள்பட்ட சரக்கிற்கு மார்க்கெட் வேல்யூ அதிகம். அதனால் பழைமையான சிவன் கோவில்களில் உள்ள மற்ற சன்னதிகளுக்குத் திடீர் முக்கியத்துவம் உருவாக்கப்பட்டது. இதைஇதை வணங்கினால் உங்களின் இன்னின்ன பிரச்சினைகள் தீரும் என ஆண்மை விருத்தி வைத்தியர் ரேஞ்சுக்கு பிரச்சினைகளின் லிஸ்ட் வெளியானது. அதன் காரணமாக, அண்மைக்காலங்களில் பழைய சிவன் கோவில்கள் பல புதுப் பிரசித்தி பெற்றுள்ளன. அதில் முக்கியமானது, திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில். பெயர்தான் சனீஸ்வர பகவான் கோவில். ஆனால் கோவிலின் மூலத்தலத்தில் இருப்பவர், தர்ப்பாரண்யேஸ்வரர். அதாவது, யாகத்திற்குப் பயன்படுத்தும் தர்ப்பைப் புல் வளரும் காட்டைப் பாதுகாக்கும் ஈசுவரன். அதுவும் பூண்முலை நாயகியுடன் காட்சி தருபவர். ஆனால், இப்போது அவரை யாரும் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. கோவிலின் சைடு சன்னதியில் உள்ள சனீஸ்வரன்தான் சகலமுமாக இருக்கிறார். அங்கேதான் கூட்டம் அலைமோதுகிறது. இத்தனைக்கும் 1950களின் இறுதியில் இந்தக்கோவிலுக்கு குடமுழுக்கு நடந்தபோது பொறிக்கப்பட்ட கல்வெட்டில், அருள்மிகு பூண்முலை நாயகி உடனுறை தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்பிறகு, 1970களின் தொடக்கத்தில் மற்றொரு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. அந்தக் கல்வெட்டில், அருள்மிகு பூண்முலை நாயகி உடனுறை தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோவில்- அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோவில் குடமுழுக்கு என்று பொறிக்கப்பட்டுள்ளது. அதாவது, தர்ப்பாரண்யேஸ்வரரையும் பூண்முலை நாயகியையும் யாரும் கண்டுகொள்ளவில்லை என்றதும் சனீஸ்வரனை புராடக்ட்டாக ஆக்கி மார்க்கெட்டில் விட்டிருக்கிறார்கள். இன்றைக்கு அந்த புராடக்ட் சக்கைப்போடு போடுகிறது.

நவகிரக தலங்களில் ஒன்றாக திருநள்ளாறு சனீஸ்வரன் பிரசித்தி பெற்று உள்ளூர், உள்நாட்டுப் பக்தர்களை மட்டுமல்ல, வெளிநாட்டுப் பக்தர்களையும் ஈர்க்க ஆரம்பித்துவிட்டார். அதற்கேற்ப புரமோஷன்களும் அதிகம். நாசா அனுப்பிய சேட்டிலைட், திருநள்ளாறுக்கு மேலாக வரும்போது சில நொடிகள் அப்படியே நின்றுவிடுவதாகவும், அந்தளவுக்கு அங்கே ஈர்ப்பு சக்தி இருப்பதாகவும் இணையதளத்திலேயே கதைவிட்டவர்கள் உண்டு. அது கட்டுக்கதை என்பது பின்னர் ஆதாரத்துடன் அம்பலமானது. (உண்மை, 2012 ஜனவரி 16_31 இதழில்  https://unmai.in/new/681.html)

ராகு, கேது என இல்லாத கோள்களையும் சேர்த்து நவகிரகங்கள் என நம்பவைக்கும் இந்த இந்து ஆன்மீக மார்க்கெட்டிங்கில் உள்ள நவகிரக தலங்கள் அனைத்தும் தஞ்சை மண்டலத்தில்தான் உள்ளன. இவையனைத்துமே 1970களிலிருந்து பிரபலப்படுத்தப்பட்டுள்ளன. பழைய பரமசிவனுக்கும் அவருடன் உடனுறையும் சக்திகளுக்கும் வருமானம் பெருக்கும் சக்தி குறைந்துவிட்டதால், அதே கோவிலில் உள்ள மற்ற சன்னதிகளிலிருந்து புதிய சக்திகளைக் கிளப்பிவிட்டு வருமானம் பார்க்கப்பட்டு வருகிறது.

திருவாரூரில் உள்ள பெரிய கோவிலான தியாகராஜ சுவாமி கோவிலில் இந்த நவகிரகங்களும் வரிசையாக இருக்கும். பொதுவாக, நவகிரகங்கள் ஆளுக்கொரு திசையில் முறுக்கிக்கொண்டு முதுகைக் காட்டியபடி இருப்பதுதான் வழக்கம். திருவாரூரில் மனுநீதிச்சோழன் தன் மகனைத் தேர்க்காலில் போட்டுக் கொன்று வருணாசிரம தர்மத்தின்படியான (அ)நீதியை நிலைநாட்டியபோது, பார்வதி சமேதராக பரமசிவனும், முப்பத்து முக்கோடி தேவர்களும், நவகிரகங்களும் வானத்தில் ஒரே நேர்க்கோட்டில் நின்று காட்சியளித்தார்களாம். அதனால் திருவாரூர் கோவிலில் நவகிரக சிலைகள் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும். அப்படி ஒரே நேர்க்கோட்டில் இருப்பதால் கிரகப்பெயர்ச்சியின் சாதக-பாதகங்கள் திருவாரூர்வாசிகளை ஒன்றும் செய்யாது என்றும், திருவாரூரில் பிறந்தாலே முக்தி என்றும் சொல்வார்கள். அதாவது, திருவாரூரில் ஒருவர் பிறந்தால் உடனே அவருக்கு சொர்க்கத்தில் (மோட்சத்தில்) பெர்த் ரிசர்வாகிவிடுமாம். எனவே, திருவாரூரில் நவகிரகத்தை வைத்து மார்க்கெட்டிங் செய்ய முடியாத நிலை. பழைய தியாகராஜருக்கோ மவுசு இல்லை. என்ன செய்வதென்று ஆன்மீக கன்சல்ட்டன்ட்டுகள் ஆலோசித்தார்கள்.

தியாகராஜரும் வன்மீகநாதர் எனப்படும் புற்றிடங்கொண்டாரும் இருக்கும் சன்னதிக்குள் நுழைந்தால் வலப்புறத்தில் சுவரோரமாய் அழுக்கேறி, எண்ணெய்ப் பிசுக்குடனும், வவ்வால் புழுக்கை நாற்றத்துடனும் ஒரு சன்னதி இருந்தது. பெரும்பாலும் இருட்டாகவே இருக்கும். சன்னதிக்குப் பக்கத்தில் ஓர் உப்புத்தொட்டி உண்டு. முகத்தில் பரு போன்ற பிரச்சினைகள் வந்தாலோ வேறு பிரச்சினைகள் என்றாலோ பக்தர்கள் இந்தத் தொட்டியில் உப்பும் மிளகும் கொண்டு வந்து கொட்டுவார்கள். அந்தத் தொட்டியில் உப்பு உதிர்ந்ததுபோல முகப்பரு உதிர்ந்துவிடும் என்பது நம்பிக்கை. இருட்டில் கிடந்த அந்த சரும ஸ்பெஷலிஸ்ட் இன்று சர்வரோக நிவாரண நிபுணராகிவிட்டார். ருணவிமோசகர் என பெயர்ப்பலகை பளிச்சென வைக்கப்பட்டுள்ளது.

தியாகராஜர் சன்னதியைவிட பளபளக்கும் விளக்குகள் இங்குதான் ஒளிர்கின்றன.

அழுக்கடைந்திருந்த சிலை இப்போது வெள்ளிக்கவசத்துடன் ஜொலிக்கிறது. பிரதோஷ நாளில் ருணவிமோசகருக்கு அர்ச்சனை செய்ய அட்வான்ஸ்புக்கிங் செய்யவேண்டிய நிலை உருவாகியுள்ளது. உடல் ரணமாக இருந்தாலும், உள்ளத்தின் ரணமாக இருந்தாலும், கடன் பிரச்சினை போன்ற கார்ப்பரேட் நெருக்கடிகளாக இருந்தாலும் எல்லாவற்றிலிருந்தும் விமோசனம் கொடுப்பவர் இந்த ருணவிமோசகர் என கடந்த சில ஆண்டுகளில் செய்யப்பட்ட மார்க்கெட்டிங்கிற்கு செம ரெஸ்பான்ஸ்.

தியாகராஜ சாமிக்குச் சொந்தமான நிலபுலன்களும் செங்கழுநீர் ஓடையும் யார்யாரிடமோ சிக்கித் தவிக்கிறது.

அவற்றை மீட்டு உதவ, அதே கோவிலில் உள்ள இந்த ருணவிமோசகர் இதுவரை எந்த ஸ்டெப்பும் எடுக்கவில்லை என்கிற உண்மை, நாள்தோறும் குவிகின்ற பக்தர்களுக்குத் தெரியாது. ருணவிமோசகரால் அதிக பலன்பெற்றிருப்பவர்கள் அந்தச் சன்னதியில் உள்ள அர்ச்சகர்கள்தான். பழங்கோவில்களில் உள்ள சன்னதிகளுக்குப் புது மெருகேற்றும் டெக்னிக்குக்கு இணையாக ஆன்மீக மார்க்கெட்டிங்கில் புதுப்புதுக் கடவுள்களை உருவாக்கும் முயற்சிகளும் வெற்றிகரமாக நடந்துவருகின்றன. கிரிக்கெட் பிள்ளையார் என கிரிக்கெட் மட்டை, ஹெல்மெட், அப்டமன் கார்டு ஆகியவற்றுடனும், கோர்ட் பிள்ளையார் என கருப்புக்கோட்டுடனும், கார்கில் போருக்குச் செல்லும் மிலிட்ரி பிள்ளையார் என ஏ.கே.47 துப்பாக்கியுடனும் புதுப்புது பிள்ளையார்கள் உருவாக்கப்படுவதுபோல ஆஞ்சநேயர்களும் பலவிதங்களில் தயாரிக்கப்பட்டு, அவர்களுக்கான கோவில்கள் உருவாக்கப்படுகின்றன. இந்தப் புதுவித ஆஞ்சநேயர்களுக்கு நல்ல மார்க்கெட் வேல்யூவும் கிடைக்கிறது.

நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்கள் தங்கள் பணத்தைப்பெருக்க குபேர வழிபாடு நடத்துவது என்பது அண்மைக்கால ஆன்மீக டிரெண்ட். ஏற்கெனவே செல்வத்திற்கு லட்சுமிதான் சோல் புரப்பரைட்டராக இருந்தார். பெண்ணிடம் பீரோசாவியைக் கொடுத்துவைக்கக் கூடாது என்று நினைத்தார்களோ என்னவோ இப்போது குபேரனை அதிகளவில் முன்னிறுத்துவதுடன், ஜாயிண்ட் அக்கவுண்ட்டாக லட்சுமி-குபேரர் கோவிலும் உருவாக்கப்பட்டுவிட்டது. சென்னை வண்டலூர் அருகேயுள்ள ரத்தினமங்கலத்தில் லட்சுமி-குபேரர் கோவில் இருக்கிறது. இங்கு புதுப்பணக்கார பக்தர்கள் அதிகளவில் படையெடுக்கிறார்கள். இதனால் மகிழ்ச்சியடைந்த கோவில் நிர்வாகம், மார்க்கெட்டிங்கை இன்னும் விரிவாக்கிவிட்டது. லட்சுமி-குபேரரைத் தேடித்தான் பக்தர்கள் வரவேண்டுமா? பக்தர்களைத் தேடி லட்சுமி-குபேரர் போகக்கூடாதா என்பதுதான் ஆன்மீக மார்க்கெட்டிங் கன்சல்ட்டன்டுகளின் புதிய சிந்தனை.

எப்படி சூப்பர் மார்க்கெட் நிர்வாகத்தினர் கஸ்டமர்களுக்கு டோர் டெலிவரி செய்கிறார்களோ, அதுபோல பக்தர்களுக்கு டோர் தர்ஷன் என வீடுதேடிச் சென்று தரிசனம் தருகின்றன லட்சுமி-குபேரர் சாமிகள். இதற்கான கட்டணத்தைக் கட்டிவிட்டால், காரில் உங்கள் வீட்டுக்கு சாமி சிலைகளைக் கொண்டு வந்து பூஜை நடத்தும் குருக்கள் இருக்கிறார்கள். டோர் டெலிவரி செய்பவர்களுக்கு எக்ஸ்ட்ரா சார்ஜ் தருவதுபோல இவர்களுக்கு எக்ஸ்ட்ரா தட்சனை தரவேண்டும்.

குபேரன் என்பவர் திருப்பதி வெங்கடாஜலபதியின் திருமணத்துக்குக் கடன் கொடுத்தவர். அந்தக் கடனை இன்றளவும் திருப்பிக்கட்ட முடியாமல்தான் தன்னிடம் வரும் பக்தர்களிடம் லட்சத்திலும் கோடியிலுமாக மொய் வசூலித்துக்கொண்டே இருக்கிறார் அந்த ஏழுமலையான். வெங்கடாஜலபதி என்பது திருமாலின் இன்னொரு பெயர்தான். திருமாலின் மனைவிதான் லட்சுமி. அந்த லட்சுமி, தன் கணவர் கடன் வாங்கிக் கட்ட முடியாத நிலையில், தன் கணவனுக்குக் கடன் தந்த குபேரனுடன் சேர்ந்து வந்து வீடு வீடாகத் தரிசனம் தருகிறார் என்றால் இது என்ன மாதிரியான கடன் வசூல் என்று ஒருவருக்கும் புரிவதில்லை.

கந்துவட்டி தாதாக்களை மிஞ்சும் ரேஞ்சில் இருக்கிறது குபேரத்தனம். இதுபற்றியெல்லாம் பக்தர்கள் சிந்திப்பதற்கு இடமேயளிக்கக்கூடாது என்பதில் அதிதீவிர கவனம் செலுத்தும் ஆன்மீக மார்க்கெட்டிங் நிபுணர்கள், புதுப்புது கடவுள் புராடக்ட்டுகளை உருவாக்குவதில் படுபிஸியாக இருக்கிறார்கள்.

மார்க்கெட்  இழந்த மாஜிக் கடவுளர்கள் மாபெரும் கோவில்களில் கவனிப்பாரற்ற முதியோர் போல காலந்தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.

– கோவி.லெனின்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *