நாங்கள் பயணித்த வாகனம் மெல்ல அலைகடலை நோக்கியிருந்த பெரிய கட்டிடம் ஒன்றின் முன்வாசல் பகுதியை அடைந்தது. ஹோட்டலின் பெயர் மாடியின் உச்சிப் பகுதியில் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். எல்லா நட்சத்திர விடுதியின் அழகையும், சுத்தத்தையும் அதுவும் கொண்டிருந்தது. பளபள கிரானைட் தரைகள், உச்சியில் தொங்கும் சர விளக்குகள், தூணுக்குத் தூண் அலங்காரங்கள், ஆங்காங்கே பித்தளைத் தொட்டிகளில் அலங்காரச் செடி வகைகள் ஒட்டுமொத்தக் குளிர்சாதன வசதி, மெல்லிய இசை எல்லாவற்றிற்கும் நடுவே எப்பொழுதும் புன்னகைக்கும் வரவேற்பாளர்கள் என எல்லாமே கச்சிதமாக இருந்தது.
டிசம்பர் மாதத்தின் இறுதிக் காலம் என்பதால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுத் கொண்டாட்டத்திற்காக வேறு அது தயாராகிக் கொண்டிருப்பதை அலங்காரங்கள் காட்டின. நாங்கள் எங்களது அறையின் சாவிகளைப் பெற்றுக்கொண்டு எங்களை ஏழாவது மாடிக்குக் கொண்டு செல்லும் மின் ஏற்றியை அணுகினோம். திசநாயக பின்னர் சந்திப்பதாகக் கூறி எங்களிடமிருந்து விடைபெற்றார்.
பயணமும் பிந்தைய நிகழ்வுகளும் எங்களைச் சற்று பாதிப்பிற்குள்ளாக்கியதால் நாங்கள் ஓய்வெடுக்கத் தயாரானோம். அறையின் தொலைபேசி ஒலித்தது. நான் எடுத்தபோது வீரசிங்கம் பேசினார். ஏதோ அவசர அலுவலாம், மாலை சந்திப்பதாகக் கூறினார். அதுவும் நல்லதிற்கே என நினைத்தவாறு படுக்கையில் உறக்கத்திற்குத் தயாரானோம். என் உறக்கத்திலும், துவக்குகளின் ஓசையும், ஷெல்லடிகளின் சப்தமும் கேட்டுக் கொண்டேயிருந்தது. சட்டென்று யாரோ என்னை உலுக்குவதுபோல் உணர்ந்தேன். அப்பா எழுந்திரு, மணி இரண்டரை ஆயிருச்சி, மூணு மணிக்கெல்லாம் லஞ்ச் முடிஞ்சிரும், பசிக்குது, எழுந்து வா போய்ச் சாப்பிடலாம் என என் மகள் என்னை உலுப்பினாள். நான் கண்களைத் திறந்தபோது அவர்களிருவரும் சாப்பிடத் தயாராகக் கிளம்பி இருந்தனர். நான் தலையை உலுக்கியபடி முகம் கழுவச் சென்றேன். விடுதியின் உணவகம் மிகப் பெரியதாக இருந்தது. யேப்பா! எவ்வளவோ பெரிய ரெஸ்ட்டேரேண்ட்! நம் வீடு பெரிசு இருக்கும்போல இருக்கு! என என் மனைவி ஆச்சரியப்பட்டாள். அங்கு பல்வேறு தேசங்களைச் சேர்ந்தவர்கள் உணவருந்திக் கொண்டு இருந்தனர். அவர்களின் கரண்டிகளின் ஓசையும், மெல்லிய இசையும்தான் அங்கு கேட்டுக் கொண்டிருந்தது. அறையின் வெளிச் சுவர் முழுவதும் பெரிய கண்ணாடிகளான ஜன்னல்களாலும், அதனை மறைத்து பெரிய அழகிய திரைச்சீலைகளும் தொங்கிக் கொண்டிருந்தன. நாங்கள் அதனை ஒட்டிய மேசையில் அமர்ந்தோம். நான் சற்று வெளியே பார்க்க விரும்பி திரைச்சீலையை விலக்கினேன். வெளியே நீலக்கடல் ஆர்ப்பரித்தது. கடற்கரையை ஒட்டிய பகுதியில் தென்னை மரங்களும், அதன் அடியில் கடல் அழகை ரசிக்க மரபெஞ்சுகளும் கிடந்தன. அய்யோ! அம்மா, கடல் எவ்வளவு கிட்டக்க இருக்கு பாரு, அம்மா, ரோடு மாதிரி இங்க யாரும் காவலுக்குமில்ல, யாராச்சும் திடீரென படகுல வந்தா என்ன பண்றது என போலியாக பீதியைக் காட்டினாள். முதல்ல ஜன்னலை மூடுங்க பார்த்தாலே பீதியாக இருக்கிறது என எனது மகளின் பயமுறுத்தலுக்கு என் மனைவி பயந்தாள். அவ சும்மா உன் பயமுறுத்தலுக்குச் சொல்லுகிறாள், நீ பாட்டுக்குச் சாப்பிடு என்று சொன்னேன் நான்.
சாப்பிட்டு முடிந்ததும், கடலை நோக்கிய திசையில் இருந்த வாயிலை நோக்கி நடந்தோம். வாசலையொட்டிய அழகிய தோட்டத்தில் கடலை ரசிக்க நாற்காலிகளும் இருந்தன. மெல்ல கடற்காற்றும் வீசிக் கொண்டிருந்தது. கடலை நோக்கி ஹி வடிவில் வளைந்த கட்டத்திற்கு நடுவில் பெரிய நீச்சல் குளம் தென்பட்டது. அதில் கூச்சலுடன் சிலர் கும்மாளமிட்டுக் குளித்துக் கொண்டிருந்தனர். காற்று வாங்கி உட்கார்ந்தபடியே அந்தக் காட்சியை ரசிக்கலானோம். சிலர் உற்சாகமாகக் குதித்தும், குளித்தும் விளையாடிக் கொண்டிருந்த சூழல் என் மனைவியின் பயத்தைச் சற்றுப் போக்கியது. என்னப்பா இப்படிக் கூத்தடிக்கிறாங்க என என் மனைவி என்னிடம் கிசுகிசுத்தாள். நீ சண்டைக்கு நடுவுல வாழ்க்கையைப் பாக்குற, அதுதான் உனக்கு ஆச்சர்யமாக இருக்கு, இங்க கும்மாளமடிக்கிறவங்களுக்கு சண்டையே கிடையாது, அவங்க வாழ்க்கையே இப்படித்தான், அதனால அவங்களுக்கு எதைப் பத்தியும் கவலையுமில்லை.
அப்பா அங்கபாரு, அதுல ரெண்டுபேரு இண்டியன்ஸ் மாறி இருக்கு அப்போதுதான் கவனித்தேன். அதில் இரு இளைஞர்கள் இந்தியர்கள். தமிழர்களாகவும் இருக்கலாம். ஒருவரிடம் வட இந்தியச் சாயல் தென்பட்டது. மற்றவர் சிங்கள இனத்தவர். மூவருக்கும் வயது இருபதிலிருந்து முப்பதிற்குள்ளிருக்கும். இம்மூவருடன் ஓர் இளம் பெண் துள்ளித்துள்ளி நீச்சலடித்துக் கொண்டிருந்தாள். அவள் அவ்வப்போது சிங்களத்திலேயே கூச்சலிட்டுக் கொண்டிருந்ததால் அவளுக்கு அதிகம் ஆங்கிலம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை எனப் பட்டது. அப்பெண் கருப்பு நிறத்துடன் இரண்டு துண்டு நீச்சலுடை மட்டுமே அணிந்திருந்தாள். அவளை நீந்தியபடியே மூவரும் துரத்தினர், அணைத்தனர். அவர்களுக்குப் பிடிகொடுக்காமல் ஆனால் அவர்கள் அழைப்பிற்கிணங்கியபடி நழுவி நழுவி அவள் நீந்திக் கொண்டிருந்தாள். அவர்களுடைய சேஷ்டைகள் சற்று அருவருப்பாகவும்கூட இருந்தது.
ச்சே என்னப்பாயிது கொஞ்சம்கூட விவஸ்தயே இல்லாம, இங்கிலீஷ் படத்துல வர்ற மாதிரி கூத்தடிக்கிறாங்க. அவங்க பெரிய இடத்துப் பசங்களாயிருப்பாங்க; அந்தப் பெண்ணைப் பார்த்தா கால்கேர்ள் மாதிரி இருக்குது. நாங்கள் கவனிப்பது பற்றி அவர்கள் கொஞ்சம்கூட கூச்சப்படவில்லை. கொஞ்ச நேரத்திற்குப் பிறகு அவர்களில் ஒருவன் மட்டும் எழுந்து தண்ணீர் வழிய வழிய வந்து எங்கள் அருகிலுள்ள நாற்காலியில் அமர்ந்தான். அதை எதிர்பார்த்து நின்றிருந்த வேலையாள் ஒருவன் ஓடிவந்து ஒரு வெள்ளைத் துண்டை நீட்டினான். மற்றொருவன் மது பாட்டில்கள் மற்றும் கிண்ணங்களுடன் அருகில் வந்தான். அதிலிருந்து மதுவையூற்றி கோப்பையைக் கையில் பிடித்தவாறு என்னை நோக்கிப் புன்னகைத்து, சியர்ஸ் என கையுயர்த்தி பின் குடிக்கலானான். நாம் போலாம்பா என்றாள் என் மனைவி சற்று சங்கடத்துடன், இரு இரு, இன்னும் கொஞ்சம் வேடிக்கை பார்ப்போம் என்றேன் நான். அதற்குள் அவன் மதுவை முடித்துவிட்டு துண்டால் முகத்தைத் துடைத்து, பின் அதனை மேசையின் மேல் எறிந்துவிட்டு எழுந்து என்னருகில் வந்தான். சார் இண்டியாவா? நான் ஆமெனத் தலையசைத்தேன். தமிழ்நாடோ? அதற்கும் ஆமெனும் பாணியில் தலையசைத்தேன். சார் அயம் வினோத் ப்ரம் மெட்ராஸ் அயம் பிரிண்டிங் பிசினஸ் பிரம் டிருச்சி என்றேன். இரண்டு தமிழர்களும் நல்ல ஆங்கிலத்தில் அறிமுகம் செய்து கொண்டோம். உடன் ஆங்கிலத்திற்கு விடை கொடுத்துவிட்டு என்ன நியூஇயர் பார்ட்டியா, அதுக்குள்ள ஆரம்பிச்சாச்சா என்றேன். நோ! நோ! நோ! நியூ இயருக்கு இன்னும் செவன் டேஸ் இருக்கு, இது வேற பார்ட்டி என்றபோது மற்றுமொருவனும் எழுந்து உடலைத் துடைத்தவாறு எங்களை நோக்கி வந்தான். வினோத், கணேஷ் திஸ் இஸ் மிஸ்டர் ….. பிரம் டமில் நாட் சார் அயம் கணேஷ் பிரம் பாம்பே என்றவாறு அவன் என்னிடம் கைகளை நீட்டினான். இப்போது நான் அது யார் என்பதுபோல நீச்சல் குளத்தில் இன்னும் அப்பெண்ணுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தவனை நோக்கினேன். என் பார்வையைப் புரிந்து கொண்டதுபோல வினோத் அவனை நோக்கியவாறு, தட்ஸ் குணவர்த்தனே லோகல் பெஃலோ, அவர் பிசினஸ் பார்ட்னர், ஓ! நீங்க எல்லாம் பிசினஸ் பார்ட்னர்சா! என்ன டீல் முடிச்சிருக்கீங்க? அதான் பார்ட்டியா-? என்றேன்.
யெஸ் யெஸ் வினோத் இஸ் டி.வி.எஸ். டீலர், ஹி இஸ் செல்லிங். டி.வி.எஸ். வெஹிகில்ஸ் இன் கொழும்பு, குணவர்த்தன ஃபாமிலி இஸ் த லோகல் டீலர் ஹியர், ஹி ஒன் ஏ பிக் ஷோ ரூம் இன் சென்ட்ரல் கொழும்பு, கணேஷ் இஸ் பிரம் மும்பை, ஹி இஸ் ஹோல்சேல் டீலர் ஆப் மாருதி வெஹிகில்ஸ் இன் மகாராஷ்ட்ரா நௌ வி திரி எக்ஸ்பேண்ட் அவர் பிசினஸ், ஷி இன் ஹேட் குணவர்த்தன இன் அவர் பிசினஸ் பார் செல்லிங் மாருதி கார்ஸ் இன் சிறீலங்கா; டுடே ஒன்லி வி காட் பெர்மிஷன் பிரம் த கவர்ன்மெண்ட் ஆஃப் ஸ்ரீலங்கா பார் அவர் பிசினஸ், தட்ஸ் வொய் வி ஆர் செலிபேரட்டிங் சற்று இடைவெளி விட்டு வில்லிங் டு ஜாய்ன் வித் அஸ்? நோ அய் எட் டு கம்ளீட் மை டீல், சோ லேட்டர் அய் வில் ஜாய்ன் வித் யூ என்றபடி அவர்களிடம் கைகுலுக்கிவிட்டு எழுந்தேன்.
அறைக்குத் திரும்பியதும், அம்மா நீ மட்டும் இல்லைன்னா, அப்பா அவங்களோட கூத்தடிக்கப் போயிருப்பாங்க என என் மகள் என்னையும், மனைவியையும் கிண்டலடித்தாள். ஆமா ரொம்பப் பெரிய இடத்துப் பசங்க, குடிச்சிட்டுக் கும்மாளம் அடிக்கிறானுங்க, அவங்ககிட்ட போய் உங்க அப்பாதான இளிச்சுக்கிட்டுப் பேசுறாங்க பாரு என் மனைவியும் அலுத்துக்கொண்டாள்.
அறையின் கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டது. நண்பர் வீரசிங்க வந்துவிட்டார். அவரிடம் சில முக்கியமான வியாபார விஷயங்களைப் பற்றி கதைக்க ஆரம்பித்தேன்.
அவர் கிளம்பும்போது ரொம்ப முக்கியமான விஷயம், சொல்ல மறந்துட்டேன். நாளை மறுநாள் நீங்க போக இருந்த பிளைட் திருச்சி போறது ஏதோ பாதுகாப்பு பிரச்சினை காரணமாக கேன்சல் ஆயிருக்காம். அதனால் உங்களுக்கு கொழும்புலர்ந்து சென்னை போற விமானத்தில் டிக்கெட் வாங்கிட்டேன். சென்னையிலிருந்து திருச்சி போயிடலாம்ல என்றார். அதனாலென்ன நடராஜன கார எடுத்துட்டு சென்னைக்கு வரச் சொல்லிடுறேன், இதுக்காக நீங்க ரொம்பக் கவலைப்பட வேண்டாம் என்றேன் நான்.
அன்று முழுவதும் என் மனைவி மிகவும் கவலைப்பட்டாள். என்னப்பா இது இப்படிச் சுத்திக்கிட்டுப் போற மாதிரி இருக்கு. இதுக்குப் போய் ஏன் வருத்தப்படுற, நாம வந்த காரியம் சீக்கிரமா முடிஞ்சிருச்சேன்னு சந்தோசப்படு என்றேன்.
மறுநாள் விமானம் வட்டமடித்து மேலே கிளம்பும்போது விமானச் சாளரம் வழியாக உற்று நோக்கிய என் பெண் திருச்சிலேர்ந்து வந்தப்ப அப்படியே கடல் மேல வந்துட்டோம், இப்ப இலங்கைக்கு மேலேயே பறக்கணும், திரிகோணமலை, யாழ்ப்பாணமெல்லாம் கடந்துதான போகணும். அய்யய்யோ ஏன்டி பயமுறுத்துற, புலிகள்கிட்டயும் பிளைட்லாம் இருக்காமே!
சீச்சி என்ன பயந்தாங்கொள்ளி நீ, புலிகள் வச்சிருக்கிறது அவங்களே செஞ்ச சின்ன ஏர்கிராப்ட், அது அவங்க தற்காப்புக்குத்தான். அடுத்தவங்களப் பயமுறுத்துறதுக்கில்லே, அதுல்லாம இது பயணிகள் விமானம், இத யாரும் ஒன்றும் செய்யமாட்டாங்க நீ பயமில்லாம தூங்கு.
அவளுக்குத் தூக்கம் வரவில்லை. அதற்குள் விமானத்தின் உயர்வகுப்புப் பயணிகளுக்காக சிறப்பு விருந்து ஆரம்பிக்கும் முகமாக இடையிலிருந்த திரை மூடப்பட்டது. நிரந்தர புன்சிரிப்புடன் ஒரு பணிப்பெண் அதற்கு முன் காவலுக்கு நிற்கலானாள். உள்ளே கண்ணாடி டம்ளர்களின் ஓசையும், மதுவின் வாடையும், சின்னச் சிரிப்புகளும் எழ ஆரம்பித்தன. உள்ளே கணேசையும், வினோத்தையும், ஒத்தவர்கள் பயணிக்கக் கூடும்.
வானம் தெளிவாக இருந்ததால் விமானச் சாளரம் வழியாக கீழே தெளிவாகப் பார்க்க முடிந்தது. அம்மா கீழ பாரு அதுதான் இலங்கையின் மத்தியப் பகுதி, முழுசும் மலையாக இருக்குபாரு, இங்க உள்ள தேயிலைத் தோட்டத்துலதான் மலையகத் தமிழர்கள் இருக்காங்க, இன்னும் கொஞ்சம் நேரத்துல யாழ்ப்பாணம் மேல பறக்கப் போறோம் என்றாள் என் மகள். என் மனைவி அடிக்கடி கலக்கமான விழிகளுடன் கீழே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். என்ன பாக்குற? என்றேன். அவளிடம், அவள் ஏதும் பேசாமலிருக்க என் பெண் அப்பா கீழே சண்ட நடக்குதான்னு அம்மா எட்டிப் பாக்குறாங்கப்பா என்றாள் சிரித்தபடி.
நான் என் மனைவியின் தோளைத் தட்டியபடி நீ கவலைப்படாத, மேலே இருக்குறவங்களுக்கு கீழே நடக்குற போர் தெரியாது என்றேன். அதன் அர்த்தம் என் மனைவிக்குப் புரிந்ததோ இல்லையோ, என் மகளுக்குப் புரிந்திருக்க வேண்டும். அவள் புன்னகைத்தாள்.
– டாக்டர் அய்.எஸ்.ஜெயசேகர்