கேள்வி : கச்சத்தீவு பிரச்சினையிலும் தமிழர்கள் நலனைக் கைகழுவுகிறதே பி.ஜே.பி. அரசு?_ கு.பழநி, புதுவண்ணை
பதில் : ஏற்கெனவே இருந்த அரசு என்ன கொள்கையை இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையாகக் கொண்டிருந்ததோ அதை அப்படியே அட்சரம் பிசகாமல் அல்லவா செய்து, இலங்கை இராஜபக்சேவை மகிழ்விக்கிறது. பற்றாக்குறைக்கு சு.சுவாமிகளும் அதன் பேச்சாளர்களாக இலங்கையில் செயல்படுவதை அனுமதித்துக் கொண்டுள்ளதே!
கேள்வி : தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்களின் சொற்பொழிவை முதன்முதலில் தாங்கள் கேட்டு மகிழ்ந்த இடம் (அல்லது) ஊர் எது என்று நினைவுபடுத்திக் கூறமுடியுமா? இவர்களை ஒன்று சேரப் பார்த்தது உண்டா? அது எங்கே? யாருடைய சொற்பொழிவு தங்கள் மனதை மிகவும் கவர்ந்தது? கவர்ந்ததற்கான காரணம் கூறுங்களேன்? – தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி
பதில் : எம்.ஜி.ஆர் தவிர மற்ற தலைவர்கள் தந்தை பெரியார் 1944, அறிஞர் அண்ணா 1943, இவர்களின் சொற்பொழிவை கடலூரில் (எனது சொந்த ஊரில்) கேட்டு மகிழும் வாய்ப்புக் கிடைத்தது!
திராவிட மாணவர் சுற்றுப்பயணத்தில் கலைஞருடன் தஞ்சை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்யும் (1945) வாய்ப்பும் நட்பும் கிட்டியது.
சென்னையில் திராவிடர் இயக்க நிகழ்வுகளில் எம்.ஜி.ஆர் உட்பட அனைவரும் இணைந்த நிகழ்ச்சிகளையும் கண்டு களித்த நிலையும் வாய்த்தன.
கேள்வி : தமிழ், தமிழர் பெயரால் கட்சிகளைக் கண்டு, தம்மை வியந்து, தாமே மக்கள் நல இயக்கம் நடத்துவதாய்க் கூறிக்கொள்ளும் மொழி, இனவுணர்வாளர்கள் ஒன்றுசேர்ந்து பொதுநலன் பெறுவது எப்போது? – வே.சொர்ணம், ஊற்றங்கரை
என்னங்க… இந்தக் கேள்வியை அவர்களிடம் தானே கேட்கணும், என்னிடம், இடம் தவறி- கேட்டுள்ளீர்களே!
கேள்வி : மய்ய அரசு மதச்சார்பின்மைக் கொள்கைக்குப் புறம்பாக இயங்குகிறதே! இது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது அல்லவா? எதிர்த்து வழக்கு மன்றம் செல்ல முடியுமா? – இரா.முல்லைக்கோ, பெங்களூர்-
பதில் : வழக்கு தாராளமாகப் போடலாம். ஆனால் தீர்ப்புகள் எப்படி வரும் என்பது குறித்து உறுதி இல்லை. இன்றைய நிலை அப்படி!
கேள்வி : தந்தை பெரியார் பிள்ளையார் பொம்மையை உடைத்ததைக் கண்டித்தவர்கள் இன்று அதே வேலையை ஊருக்கு ஊர் பக்தர்கள் செய்வதைக் கண்டிக்காதது ஏன்?
– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்
பதில் : தந்தை பெரியார் சிறிய சிலையைக் (களிமண் பொம்மை) காசு கொடுத்து வாங்கி இரண்டாக உடைத்து சாமி சக்தி ஒன்றும் இல்லை, என்பதை மெய்ப்பிக்க அப்படிச் செய்தார்கள். இன்று பக்தர்கள் அந்தச் சிலைகளைப் படுத்துகிறபாடு கொஞ்ச நஞ்சமல்ல; அப்படி ஒரு கடவுள் இருந்தால் இவர்களைச் சும்மா விடுவாரா? அவருடைய வலி, வேதனை, அவமானம் அவருக்கல்லவா தெரியும்!
கேள்வி : அய்யா அவர்களின் 136ஆவது பிறந்த நாளில் தாங்கள் தமிழ் மக்களுக்கு விடுக்கும் செய்தி? – க.ராசன், நெய்வேலி
பதில் : ஜாதி – தீண்டாமைக்கு, மூடநம்பிக்கைகளுக்கு எதிரான போரை மேலும் கூர்மையாக்குவோம் என்பதே!
கேள்வி : அரசின் அதிகார அமைப்பின் உதவி இன்றி அரசியல் ரீதியாகவே நிர்வாகத்தைத் தன்னால் நடத்திச் செல்ல இயலும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளது நடைமுறையில் சாத்தியமா?
_கோ.சரசுவதி, அந்தநல்லூர்
தெளிவற்ற பேச்சு. நடைமுறைச் சாத்தியம் இல்லாதது!
கேள்வி : நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றதற்கு மோடிதான் முதற் காரணம் என்றால், தற்பொழுது தொடர்ந்து ஏற்பட்டுவரும் தோல்விகளுக்கு யார் பொறுப்பு? – க.குமரன், புதுக்கோட்டை
பதில் : கொள் என்றால் குதிரை வாய் திறக்கும். கடிவாளம் என்றால் வாய் மூடித்திமிறுமே, அது போன்று இவர்களது அரசியல் வித்தைகளும் சண்டபிரசண்டங்களும்!
கேள்வி : சங்கரராமன் கொலை வழக்கு மேல்முறையீடு செய்யத் தகுதியற்றது என மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் தெரிவித்துள்ள கருத்து தேவையற்ற தலையீடு என கருதலாமா? – நாத்திகன், பெரம்பலூர்
பதில் : நிச்சயமாக, டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் இக்கருத்தை மென்மையாக பல மூத்த சட்ட வல்லுனர்களும் வழக்குரைஞர்களும் கூறியுள்ளனரே!
89 பிறழ்சாட்சியங்கள், புதுவை அரசின் சார்பில் வழக்கு நடத்திய பப்ளிக் பிராசிக்கியூடர் அப்பீல் தேவை என்று கூறி, புதுவை அரசு ஆணை பிறப்பித்து விட்ட பிறகு இப்படி நடப்பது, பச்சையான நீதித்துறையில் குறுக்கீடு அல்லாமல் வேறு என்ன -_ உலகம் பார்த்துக் கொண்டுதான் உள்ளது!
கேள்வி : கேரள அரசின் மதுவிலக்கு பற்றிய முடிவு, தமிழக அரசிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பலாமா? – சா.கோ., பெரம்பலூர்
பதில் : தமிழ்நாடும் கேரள அரசினைப் போல முடிவு எடுக்க, அனைவரும் ஒத்தக் கருத்தினை ஒரு குரலில் _- இக் கோரிக்கையை வலியுறுத்த முன்வருவது அவசர அவசியமாகும். இளைய தலைமுறை மிகவும் நாசமாகி வருகிறது!
கேள்வி : பாகிஸ்தானோடு நல்லுறவு ஏற்படுவதைவிட, அத்துடன் போர் மேகங்களை உருவாக்குவதன் மூலம்தான் பா.ஜ.க. தனது அரசியல் வெற்றியை நிலை நிறுத்த முடியும் என கருதுகிறதா? -சா.கலியபெருமாள், திருவப்பூர்
பதில் : மிக நுணுக்கமான உண்மைகளை உள்ளடக்கியது உங்கள் கேள்வி. அப்படி நினைத்தால் அது வீண் விபரீதங்களை உருவாக்கிடவே வழிவகுக்கக்கூடும். தலைவலி போய் திருகு வலியை வரவழைத்துக் கொள்வது அறிவுடைமையா?
கேள்வி : விநாயகர் விழா என்பது தற்பொழுது பெரிய வியாபாரமாக மாறி, பல ஆன்மீக நபர்கள் கொள்ளை லாபம் அடிக்கும் தொழிலாக மாறிவிட்டதே? – ப.பூங்கோதை, தேனி
பதில் : நூற்றுக்கு நூற்றி ஏழு பங்கு (மோடி அரசு விலைவாசியைக் கட்டுப்படுத்தத் தவறியதால் உயர்ந்திடும் மத்திய அரசு ஊழியர் பஞ்சப்படியைப் போன்று) உண்மையான கருத்து!
கேள்வி : பா.ஜ.க.வின் நாடாளுமன்றக் குழுவிலிருந்து வாஜ்பாய், அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி என மூத்த தலைவர்கள் நீக்கப்பட்டிருப்பது கட்சி உட்பூசலின் வெளிப்பாடா? – பெ.செல்வராசு, அம்மாபாளையம்
பதில் : ஹி… ஹி… என்னங்க இப்படிக் கேக்குறீங்க… கட்சியைப் பலப்படுத்த இவை எல்லாம் முக்கியம் முக்கியம் உஷ்.. உஷ்..!
கேள்வி : பி.ஜே.பி. அரசு சமஸ்கிருத வாரத்தைக் கொண்டாட வேண்டும் என்று சொன்னபோது கண்டனம் தெரிவித்த தமிழக முதலமைச்சர், இணையத்தில் சமஸ்கிருதத்தை ஏற்ற சட்டப்பேரவையில் 50 லட்ச ரூபாய் ஒதுக்கியுள்ளது எதனைக் காட்டுகிறது? – பா.ஆனந்தி, வியாசர்பாடி
பதில் : இது உண்மைதான் என்றால் அது அசல் இரட்டை வேடம் என்றுதான் பலராலும் விமர்சிக்கப்படும்!
கேள்வி : ஈழப் பிரச்சினையில் டெசோவின் பங்கு அர்த்தமற்றது என இங்குள்ள சில தமிழ்த் தேசியவாதிகள் கொக்கரிக்கிறார்களே, எதற்காக? – வெங்கட. ராசா, ம.பொடையூர்
பதில் : வாழ்க வயிற்றெரிச்சல் வல்லுநர்கள்!
கேள்வி : அ.இ.அ.தி.மு.க.விற்கும், பா.ஜ.க.விற்கும் இடையே ஒத்தக் கருத்து நிலவுகிறது என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியது எதனைக் காட்டுகிறது?
_ க.வரதராசன், கோவில்பட்டி
பதில் : அ.இ.அ.தி.மு.க. மத்திய அரசின் போக்கை விமர்சிக்கும்போது – வலிமையான அதிரடி முழக்கங்களை விட்டு – அடக்கிவாசிக்கிறது என்பது உண்மைதான் _- ஆனால் இது எவ்வளவு காலத்திற்கு என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்!