ஒளிவு மறைவுத் திட்டங்கள்; திரைமறைவு வேலைகள்; மாறுவேடம் பூண்டு ஏய்த்தல், இரகசியத் திட்டங்கள் என்று வாழ்ந்த, வளர்ந்த ஆர்.எஸ்.எஸ். தற்போது அப்பட்டமாக, பட்டவர்த்தனமாக ஆட்சியைத் தன்பிடியுள் கொண்டுவரத் தொடங்கி, தன் செயல்திட்டங்களை வெளிப்படையாகவே செய்யத் துணிந்துவிட்டது.
ஆர்.எஸ்.எஸ்.ன் கொள்கையே ஆட்சியின் கொள்கை; அதுவே, தேசியக் கொள்கை என்ற முடிவில் செயல்படத் தொடங்கிவிட்டனர். எப்படியோ ஏய்த்து வாக்கு பெற்றாகிவிட்டது.
இனி அய்ந்து ஆண்டுகள் எதையும் செய்யலாம் என்ற முடிவில் செயல்படத் தொடங்கிவிட்டனர்.
பகவத் வெளியிட்டுள்ள கருத்துகள் இவற்றை பளிச்சென்று வெளிப்படுத்திவிட்டன. இனி அவர்கள் மறைவுத் திட்டங்கள் செயல்களைக் கைவிட்டு, நேரடியாகக் களத்தில் ஆட்சியை அதிகாரத்துடன் செயல்பட முனைகின்றனர் என்பது அவரது பேச்சால் அய்யமின்றி தெளிவாகின்றது.
பகவத் பகர்வது என்ன?
1. இந்தியாவில் வாழும் அனைவரும் இந்துக்கள். நாத்திகனாயினும் அவன் இந்துவே.
2. இந்தியா முழுவதும் ஒரே கலாச்சாரம். அது இந்துக் கலாச்சாரம் மட்டுமே. புத்தமும், சமணமும் இந்து மதத்தின் உள்ளடக்கமே!
3. தன்னையே நம்பாதவனே நாத்திகன்.
4. மோடியின் செல்வாக்கால் ஆட்சியைப் பிடிக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை மக்கள் ஏற்றதாலே ஆட்சியைப் பிடித்தோம். பகவத் பகர்ந்த பாசிச நச்சுக்களில் இவை முதன்மையானவை. இவை ஏதோ ஒரு தனி நபரின் கருத்துகள் அல்ல. திட்டமிட்டு, நன்கு சிந்தித்து, தனது ஆதிக்கத்தை அரங்கேற்ற அடிப்படை வகுத்து இவை வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
முதலில் இந்தியாவில் வாழும் அனைவரும் இந்துக்கள்தான் என்ற. கருத்தின் உள்ளடக்கம், தத்துவம், இலக்கு என்ன? அதன் விரிபொருள் என்ன?
இந்துமதம் ஒன்றே இந்தியாவின் மதம். இந்து மதக் கோட்பாடுகளே இந்தியக் கலாச்சாரம் _ என்பதன்மூலம், இந்து மதத்தைச் சேராத கிறித்துவ, இஸ்லாமியர்கள்கூட இந்துக்களே என்று வலியுறுத்துகின்றனர்.
அதன் பொருள் என்ன?
கிறித்துவமதம் உலகப் பெருமதமாக இருக்கலாம். இஸ்லாம் அதற்கு அடுத்த நிலையில் வளர்ந்திருக்கலாம். என்றாலும் இந்தியாவிற்குள் அம்மதங்களைப் பின்பற்றுகின்றவர்கள் இந்து மதத்தையே ஏற்க வேண்டும். இந்துமதச் சித்தாந்தங்கள்படியே வாழ வேண்டும் என்கின்றார்.
இதன்மூலம் அவர்கள் சொல்வது என்ன? கிறித்தவராயினும், இஸ்லாமியராயினும் இனி இந்தியாவிற்குள் இருக்க வேண்டுமென்றால், இந்து மதத்தை _ அதன் கலாச்சாரத்தை ஏற்க வேண்டும். இல்லையென்றால் நாட்டைவிட்டுச் சென்றுவிட வேண்டும்.
அடுத்து புத்தமும், சமணமும் இந்து மதத்தின் பிரிவுகளே! எனவே அவர்களும் இந்துக்களாகிவிட வேண்டும்.
இந்துமதச் சிந்தனைகளை எதிர்த்து, ஆன்மா, கடவுள் இவற்றில் நம்பிக்கையில்லாமல் அறிவார்ந்த, மனிதநேய மலர்ச்சியில் உருவாக்கப்பட்ட அமைப்புகளை மதமாக்கி, அதை இந்து மதத்தோடு கலக்க முயற்சிக்கும் திட்டமே இக்கருத்து.
மூன்றாவதாக, கடவுளை, மதத்தை ஏற்காத, நம்பாத நாத்திகர்களும் இந்துக்கள் தானாம். அவர்களும் இந்து மதத்தை இந்துக் கலாச்சாரத்தை ஏற்றுத்தான் ஆகவேண்டுமாம்.
ஆக, இம்மூன்று கருத்துகளின் மூலம் அவர்கள் முன்வைக்கும் முடிவு என்ன?
இந்தியாவிற்குள் வாழும் எவரும், அவர் எந்த நம்பிக்கை, கொள்கை, கலாச்சாரம் உடையவராயினும் அவர்கள் கட்டாயம் இந்துக்களாகிவிட வேண்டும். இந்தியா இந்துதேசம்; இந்துத்துவாதான் அதன் கலாச்சாரம்.
இதை ஏற்றே மக்கள் வாக்களித்துள்ளனர். மோடி இந்தியாவை வல்லரசாக்குவார் என்பதற்காக மக்கள் வாக்களிக்கவில்லை. மோடியின் வேலை இந்தியாவை வல்லரசாக்குவது அல்ல. இந்தியாவை இந்து நாடாக்குவது மட்டுமே! என்பதே மேற்கண்ட கருத்துகளின் இலக்கு, முடிவு, செயல்திட்டம் எல்லாம்.
நாத்திகர் தன்னம்பிக்கை அற்றவர்கள். இப்படிக் கூறும் பைத்தியக்காரர்கள் கையில் ஆட்சியென்றால் இனி இந்தியாவின் நிலையென்ன?
இறை மறுப்புக் கொள்கையாளன் நாத்திகன். இறையை நம்பாதவன் என்றாலே தன்னை நம்புகின்றவன் என்று பொருள். மாறாக கடவுளை நம்புகிறவன் தன்னை நம்பாதவன். நம் கையில் எதுவும் இல்லை; எல்லாம் இறைவன் செயல் என்பவன். அப்படியிருக்க இந்த உண்மைக்கு முற்றிலும் மாறாக இவர்கள் பேசுகிறார்கள் என்றால் தெரியாமல் பேசவில்லை; தெரிந்தே பேசுகிறார்கள்!
தாதா ராஜ்யம் நடத்த தடியேந்திவிட்டார்கள். சரி, தப்பு, தருமம், நேர்மை இதெல்லாம் இல்லை; நாங்கள் சொல்வதே தருமம். அதுவே சரி. அதை அப்படியே ஏற்பதே மக்களின் வேலை. பகுத்தறிவு, ஜனநாயகம், மனித உரிமை இவையெல்லாம் மண்ணில் போட்டு மூடு என்று சொல்லாமல் சொல்கிறார்கள் என்பதே இதன் பொருள். அது மட்டுமல்ல, ஆட்சிப் பீடமே ஆர்.எஸ்.எஸ். பிடியில்தான் என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்கள் என்பதும் பொருள்.
ஆக, பிற மத மக்களுக்கும், மனிதநேயச் சிந்தனையாளர்களுக்கும், மனித உரிமைப் போராளிகளுக்கும், பெண்ணுரிமைச் சிந்தனையாளர்களுக்கும், அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும் மதச்சார்பின்மைக் கொள்கைக்கும், பன்மைத் தன்மை பேணும், காக்கும், பின்பற்றும் நடைமுறைக்கும் முற்றிலும் எதிரான, சற்றும் நியாயமில்லா, பாசிசக் கொள்கை பறையறையப்பட்டுவிட்டது.
இனி மேற்கண்டவர்கள் விழிப்போடிருந்து, ஒன்றுபட்டு, கிளர்ந்தெழுந்து மக்களாட்சி மாண்பு காக்க வேண்டியது உடனடிக் கடமையாகும்.
இல்லையென்றால் வெறிப்பிடித்தவர்களின் வேட்கையால் இந்த நாட்டின் எதிர்காலம் எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும் எச்சரிக்கை!
– மஞ்சை வசந்தன்