அய்யாவின் அடிச்சுவட்டில்… கடந்த பாதை…

செப்டம்பர் 16-30

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் தன் வரலாறு அய்யாவின் அடிச்சுவட்டில்… என்ற தலைப்பில் புதிய பார்வை 1995 _ செப்டம்பர் 1ஆம் இதழில்  தொடராக வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து உண்மை இதழில் கடந்த சில ஆண்டுகளில் நான்கு பாகங்களாக வெளிவந்து, புத்தகமாகவும் வெளியிடப்பட்டுள்ளது. 1933 ஆசிரியர் கி.வீரமணி பிறப்பு முதல் அறிஞர் அண்ணா மறைவு (1969) வரை முதல் பாகமாகவும், 1969 முதல் தந்தை பெரியார் மறைவு (1973) வரை இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்களாகவும், அய்யா காலத்திற்குப் பின் அன்னை மணியம்மையார் தலைமையிலான காலப் பதிவுகள் (1974_1978) நான்காம் பாகமாகவும் வெளிவந்துள்ளன.

தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் காலத்திற் குப் பிறகு இயக்கத்தின் பொறுப்பை ஏற்ற நாளில் இருந்து தொடங்குகிறது அய்யாவின் அடிச்சுவட்டில் அய்ந்தாம் பாகம்.

இதழ்களின் பார்வையில்…

தமிழ்நாட்டின் கடந்த அரை நூற்றாண்டு அரசியல் வரலாற்றை உள்ளடக்கியதாக, இந்நூல் அமைந்துள்ளது.   சுவையும் விறுவிறுப்பும் கலந்த நடையில், வீரமணி இப்புத்தகத்தை எழுதியுள்ளார். தமிழ்நாட்டின் அரசியல் நிகழ்வுகள் பற்றிய அபூர்வமான ஆவணமாக இந்தப் புத்தகம் திகழ்கிறது.

– தினத்தந்தி  31.12.2008

தந்தை பெரியாரிடம் அறிமுகமானது முதல், அவரது நிழலாக வளர்ந்தது வரையிலான காலத்து, தனது வாழ்க்கைக் குறிப்புகளைத் தொகுத்தளித்திருக்கிறார் கி.வீரமணி. தமிழக அரசியலைப்  புரட்டிப் போட்ட பல அரசியல் நிகழ்வுகளை பெரியாரின் அருகிலிருந்து பார்த்த அவர், சுவாரசியம் குறையாத நடையில் அவற்றை விவரிக்கிறார். திராவிட இயக்க அரசியல்மீது ஆர்வம் காட்டும் எல்லோரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

–         தினகரன்  4.1.2009

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி 1944ஆம் ஆண்டு முதன்முறையாக ஈ.வெ.ரா பெரியாரைச் சந்தித்ததில் இருந்து 1971ஆம் ஆண்டு வரையும் அவருக்குக் கிடைத்த பல்வேறு அனுபவங்களைப் பதிவு செய்துள்ள நூல். மாணவப் பருவத்தில் அவர் பங்கு கொண்ட இயக்கங்கள், போராட்டங்கள், எதிர் கொண்ட இடர்ப்பாடுகள் அனைத்தும் கூறப்பட்டுள்ள நூல், திராவிட இயக்க வரலாற்றைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்குப் பயன்படும்.

– தினமணி 5.1.2009

வாழ்க்கை வரலாற்று நூல்களில் மிகமிகக் குறைவான பொய்கள் இடம் பெறுவது சுயவரலாற்று நூல்களில்தான் என்கின்ற பொருள்படும் ஆங்கிலப் பொன்மொழி உண்டு. தாமறிந்த தம்முடைய வரலாற்றுச் செய்திகளை முடிந்தவரை பதிவு செய்வது என்பது மிக மிக அவசியமான வரலாற்றுக் கடமை. அதனைச் செய்ததற்காக கி. வீரமணிக்குப் பாராட்டுகள். அய்யாவின், அடிச்சுவட்டில் உறுதியாகப் பயணம் செய்பவர் வீரமணி. இதில் சந்தேகம் இல்லை. இந்நூல் அதனை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

– தீக்கதிர் 18.1.2009

பெரியாரின் அணுக்கத் தொண்டராக அவரின் கடைசி வாழ்நாள் வரையிலும் அருகில் இருந்த கி. வீரமணியின் தன் வரலாற்று நூல். அவரின் தனிப்பட்ட வாழ்க்கை பெரியாரோடு இணைந்ததுதான் என்ற அளவில், பெரியாரின் பண்புகளையும், கொள்கைகளையும் சிறப்பாக நம்முன் வைக்கிறது. தன் வரலாறு என்பதைவிட, வரலாற்றுப் பார்வை என்பதே பொருத்தமாக இருக்கும். தமிழகத்தின் மகா புருஷனுக்கு அருகிருந்து பணி செய்த அனுபவத்தை நேர்த்தியுடன் விவரித்திருக்கும் பாங்குதான் இந்தப் புத்தகத்தின் அருமையான பண்பு!

–   ஆனந்த விகடன் 14.1.2009

ஒரு தன் வரலாறு எழுதப்படும்போது மேதாவித்தனமும், சிலிர்ப்பும், பெருமை கூட்டி எழுதுவதும் வழக்கம். அப்படிச் செய்யாமல் தனது அறிவாசானின் நிழலில் நின்று நிதானமாக இயல்பாக மிக நேர்மையுடன் பதிவு செய்திருக்கிறார்  தனக்குத் தானே எடை போட்டு மதிப்பீடு செய்யும் முயற்சிதான் தன் வரலாறு என்பதை உணர்ந்த ஆசிரியர் கி. வீரமணி. இவ்வகையிலும் இந்நூல் முக்கியக் கவனத்திற்குரியதாகிறது. அடுத்தடுத்த பாகங்கள் எப்போது வரும் என்கிற ஆவலைத் தூண்டுகிறது இந்த  முதல் பாகம்.

– புதிய பார்வை ஜனவரி 1 -15, 2009

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *