ஈழத்தில் அங்குள்ள தமிழ்ச் சகோதர, சகோதரிகளின் வாழ்வுரிமைக்காக நடைபெற்ற உரிமைப் போரினைத் தனது ராணுவத்தாலும், வெளி ஆதிபத்திய சக்திகளின் ராணுவம் மற்றும் பல்வேறு நிதி ஆதாரம் உட்பட பெற்று தமிழின அழிப்பு வேலையை சிங்கள ராஜபக்சே அரசு நடத்திய காரணத்தால் அய்.நா. மன்றத்தால் இலங்கையின் ராஜபக்சே அரசு, போர்க் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மீது ராஜபக்சேவைப் போர்க் குற்றவாளியாக பன்னாட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்திடச் செய்து, அதன்மீது நடவடிக்கை எடுக்கவும், உடனடியாக மத்திய (இந்திய) அரசு நடவடிக்கை எடுக்கவும் முன்வர வேண்டும்.
அத்துடன் அவ்வரசின் நடவடிக்கைகளைத் தீவிர வாதத்திற்கு எதிரானவைதான் என்று நியாயப்படுத்த முயன்ற மத்திய அரசு தனது செயலுக்கு, தனது முந்தைய நிலைப்பாட்டிற்காக, வருத்தம் தெரிவித்து, ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமையை மீண்டும் உறுதிப்படுத்த – உரிமைகளைப் பெற்றுத் தர முயலுவதுதான் அதன் செயலுக்கு ஒரே கழுவாய் நடவடிக்கையாகும்!
இன்னமும் வேலிக்குள் வைக்கப்பட்ட தமிழர் குடும்பங்கள் பல்லாயிரக்கணக்கில் வதிந்து அவதிப்பட்டுக் கொண்டுள்ள அவலம் நீடிக்கவே செய்கிறது! தமிழர்களின் பூர்வீக இடங்களில் சிங்களக் குடியேற்றங்களை சிங்கள அரசு திட்டமிட்டே செய்யும் கொடுமை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக நடந்தேறி வருகிறது!
ஈழத் தமிழர்களின் கண்ணீரும், செந்நீரும் வழிந்தோடும் நிலைக்கு முற்றுப் புள்ளி இல்லை. நமது அரசுகள் கொடுத்த நிதி உதவிகள் இலங்கை அரசின் கொடுங்கரங்களை வலிமைப்படுத்தத்தான் உதவின போலும்! என்னே கொடுமை!!
மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படவில்லையெனில் இனி காங்கிரஸ் கட்சி தமிழ் மண்ணை அறவே மறந்திட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டே தீரும். மீண்டும் பழைய ஆலோசகர்கள் பழைய கள்; புது மொந்தை, பாணி அரசியல் நடத்தாமல், புதிய அணுகுமுறை மிகுந்த மனிதாபிமானத்துடன் கடைப்பிடிக்க முன் வரவேண்டும்.
தமிழ்ச் சமுதாயத்தின் பொறுமைக்கு எல்லை உண்டு என்பதை மறக்கக் கூடாது. இது முதல் கட்ட அறப்போராட்டமாகும். தமிழர்கள் தங்கள் இன எதிரிகளை நண்பர்களாகக் கருதிய தவறை மீண்டும் மீண்டும் செய்வதோ, அரசியல் மூலதனம் புதிதாக அகப்பட்டது இதோ என்று கருதியோ குளிர்காய எண்ணாமல் உண்மையாகவே ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்குப் பாடுபட முன்வர வேண்டும் என்பதே நமது முக்கிய வேண்டுகோளாகும்.
– கி.வீரமணி
ஆசிரியர்