இந்தியா – விடுதலை அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆன போதிலும் அந்நாடு – பலவகையான இயற்கை வளங்களைப் பெற்றிருக்கும் ஒரு நாடான போதிலும்கூட, அது வளர வேண்டிய அளவுக்கு வளராமல் மிகவும் கீழான நிலையில் இருப்பதற்கு மூலகாரணம் அங்குள்ள ஜாதி முறைதான். அந்தத் தீமையை ஒழிக்காவிட்டால் அந்த நாடு எளிதில் முன்னேற முடியாது என்று சில மாதங்களுக்குமுன் வெளியிட்ட ஒரு நூலில் (உலகத்தின் பல நாடுகளைப்பற்றிய எனது கண்ணோட்டம் என்ற ஒரு ஆங்கில நூலில்) நவீன சிங்கப்பூரின் தந்தை என்று கருதப்படும் லீக்வான்கியூ அவர்கள் எழுதியுள்ளார்கள்.
சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னமும் ஜாதி- தீண்டாமை _ அதன் காரணமாக ஜாதிப் பஞ்சாயத்துகள் (காப்பஞ்சாயத்து என்று வடபுலத்தில் ஹிந்திக்காரர்களால் அழைக்கப்படுவது) ஜாதி மறுப்பு, காதல் திருமணங்கள் படித்த இளைஞர்களிடையே ஏற்பட்டால், ஜாதி வெறியர்கள் அவர்களைக் கொலை செய்வதும், ஜாதி வெறி பிடித்த பெற்றோர்களும், உற்றார் உறவினர்களுமே இதற்குத் தூண்டுதலாக அமைதலும் நாளும் குறைவதாகவே தெரியவில்லை.
பெரியார் பிறந்த மண்ணில் தமிழ்நாட்டில் – இந்த ஜாதி வெறி, சில அரசியல் பதவி வேட்டைக்கார சந்தர்ப்பவாதிகளால் நாளும் நீர் ஊற்றி, உரம் போட்டு வளர்க்கப்படுகிறது.
ஜாதியை அரசியல் மூலதனமாக்கி, அதன் மூலம் எப்படியாவது பதவி சிம்மாசனத்தில் அமர நினைக்கும் இவர்களால் அப்பாவி இளைஞர்கள் _ வளர வேண்டிய இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் ஜாதி வெறி என்ற புற்று நோய்க்கு ஆளாகி, வாழ்நாளை வீணாக்கி, வீழ்ந்து வருகின்றனர்!
தமிழ்நாட்டில், மீண்டும் ஜாதி வெறி, மதவெறிக்குப் புத்துயிர் ஊட்ட, ஆட்சியும், அரசியலும் அருமையான கருவிகள் என்ற நோக்கோடு ஊடகங்களின் துணையோடு பழைய கருப்பனாக – பல ஆண்டுகளுக்கு முன்பிருந்த குலதர்ம சமுதாயம் மீண்டும் தோன்றுவதற்கு கடுமையான முயற்சிகள் தொய்வின்றி நடைபெற்று வருவதன்மூலம், தமிழ்நாட்டிற்குத் தலைக்குனிவை ஏற்படுத்துகின்றனர்.
ஜாதியின் தேவை, மேன்மையை நியாயப்படுத்தியும், சிலாகித்தும் பேசும் அளவுக்கு இப்போது இந்த மண்ணில் ஒரு குருட்டுத் தைரியம் முளைத்துள்ளது. இந்த அறைகூவலை ஏற்க நாம் (திராவிடர் கழகம்) மட்டுமல்ல, அனைத்து முற்போக்கு சக்திகளும் முண்டா தட்டி களத்தில் இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது!
சமுதாய ஒருமைப்பாடு இன்றி, தேசிய ஒருமைப்பாடோ, மற்ற எந்த வெங்காயமோ ஒரு போதும் ஏற்பட முடியாது.
உண்மைச் சுய ஆட்சி வரவில்லை. இன்று வந்திருப்பது இடைக்கால வர்ணாசிரம ராச்சியந்தான். உண்மைச் சுய ஆட்சியில் பிராமணன், சூத்திரன், பஞ்சமன் இருக்க முடியாது. இருப்பதைச் சுய ஆட்சி என்று கூற முடியுமா? என்று தந்தை பெரியார் கூறியுள்ளதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
செப்டம்பர் பிறந்துவிட்டது. தந்தை பெரியாரின் 136ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் நாம் எடுக்கும் சூளுரை – ஜாதித் தீண்டாமை ஒழிப்புக்காக அனைத்துக் கள அறப்போரில் ஈடுபடுவது என்பதேயாகும்!
ஒத்த கருத்துள்ள அனைவரையும் ஓர் அணியாக ஆக்கிச் செயல்பட திட்டம் வகுப்பது அவசர அவசியமாகும்.
தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம் வட்டம், தாசம்பட்டி என்ற ஊரில் தேநீர் சிற்றுண்டிச் சாலை நடத்தும் சில கடைகளில் இரட்டைக் குவளை முறை நடைமுறைப்படுத்தப்பட்டு, தீண்டாமையைப் பாதுகாத்து, ஜாதியைப் பாதுகாக்கும் முறை இருப்பதாகப் புகார் வந்ததையொட்டி, தர்மபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. அஸ்ரா கார்க் (மாவட்ட எஸ்.பி) அவர்கள் ஆணையின் பேரில் தனிப்படை காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் இதுபற்றி நடவடிக்கை எடுத்து, இரட்டைக் குவளை வைத்து, தேநீர்க் கடை நடத்துவோர்மீது வழக்குப் போட்டு, கைது செய்துள்ள நடவடிக்கை மிகவும் பாராட்டத்தக்கது. மற்ற மாவட்ட காவல் துறையினரும் பின்பற்ற வேண்டியதாகும்.
பாலக்கோடு வட்டம், நம்மாண்டஹள்ளி பகுதியிலும், இதுபோல சிலர் இதே குற்றத்திற்கு தீண்டாமைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என்று செய்திகள் வந்துள்ளன.
இதுபோலவே இம்மாவட்டத்தின் பிற பகுதிகளான அரூர், பொம்மிடி, பாபிரெட்டிப் பட்டி – போன்ற பகுதிகளிலும்கூட உள்ளன என்று பல ஏடுகளில் செய்திகள் வருகின்றன.
அந்த மாவட்டத்தில் உள்ளதுபோல, தமிழ்நாட்டில் வேறு சில மாவட்டங்களிலும்கூட இந்த இரட்டைக் குவளை முறை நடைமுறையில் உள்ளது.
தேநீர்க் கடைகளில் சட்டம் ஊமையாக இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளது!
இந்த தர்மபுரி நடவடிக்கைபோல எங்கும் பரவலாக சட்டபூர்வ நடவடிக்கைகள் தொடர வேண்டும். கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.
இந்த ஜாதிவெறித்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க குண்டர்சட்டம் போன்றவை பாய்ச்சப்பட்டால்கூட தவறல்ல.
ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம் மட்டும் போதாது; இதுபோன்ற சட்ட நடவடிக்கைகளின் துணையும், செயலும் தேவை! தேவை!!
– கி.வீரமணி,
ஆசிரியர்