மிகவும் அமைதியாக ஒரு மாற்றம் டில்லியில் நடந்ததிருக்கிறது, அமைச்சரவை நிகழ்ச்சிகளில் இனிமேல் அசைவம் கிடையாது என்பதுதான் அது. இந்தச் செய்தி பலருக்குத் தெரியாது. அமைச்சரவைக் கூட்டம் என்பது பார்ப்பனர்களின் யாகமேடை கிடையாது. அமைச்சரவைக் கூட்டத்தின் போது பல்வேறு மாநிலங்களில் உள்ள அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொள்வார்கள். அவர்களின் உணவு முறை அசைவத்துடன் சேர்ந்ததாக இருக்கலாம். மேற்கு வங்கப் பார்ப்பனர்கள்கூட மீன் இல்லாமல் சாப்பிடமாட்டார்கள். அப்படி இருக்க அமைச்சரவை நிகழ்ச்சிகளில் அசைவ உணவை நிறுத்தியது ஏன்? இதுவரை யாரும் கேள்வி கேட்கவில்லை. தமிழ்நாட்டிற்கு வருவோம். இங்கு என்ன நடக்கிறது? ஒரு பத்திரிகை அலுவலகம் அசைவ உணவு கொண்டு வருவதால் சைவம் சாப்பிடும் மற்றவர்களுக்கு அருவருப்பாக இருக்கிறதாம். ஆகையால் இனிமேல் அலுவலகத்திற்கு யாரும் அசைவ சாப்பாடு கொண்டுவர வேண்டாம் என்று கூறி அனைத்துப் பணியாளர்களுக்கும் சுற்றறிக்கை விட்டு, அலுவலக தகவல்பலகையிலும் ஒட்டிவிட்டனர். பொதுவாக ஊடக அலுவலகங்களில் அசைவம் கொண்டுவருவதை பல பத்திரிகை நிறுவனங்கள் நேரடியாக இல்லாமல் மறைமுகமாகத் தடுக்கின்றன.
புதிதாகச் சேர்ந்தவர்கள் அசைவம் கொண்டுவந்தால் உடனே நாசுக்காக சரஸ்வதி வசிக்கும் இடம் என்று மறைமுகமாகக் கூறிவிடுவார்கள். அப்படி இருந்தும் கொண்டுவந்தால் உடனே தூக்கிவிடுவார்கள். திடீரென இந்த அசைவ எதிர்ப்பு ஏன் கிளம்பியது என்று தெரிகிறதா? இதற்கு உணவு முறையை நன்கு கவனித்தால் தெரியும். பார்ப்பனர்களின் அன்றாட உணவில் அதிக அளவு புரதம், கால்சியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் வைட்டமின்கள் இருக்கும். மிகக்குறைந்த அளவே மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் இருக்கும். அவர்கள் சேர்க்கும் கொழுப்பு உணவு மிகவும் எளிதில் உடலில் ஆற்றலாக மாற்றமடையும் தாவரக்கொழுப்பு உணவுதான். பார்ப்பனர்களுக்கு அதிகம் உடலுழைப்பு கிடையாது. ஆனால், பார்ப்பனரல்லாத பெரும்பான்மை மண்ணின் மைந்தர்களுக்குத் தேவையான உணவு. அதுவும் இந்த மண்ணின் பாரம்பரிய உணவு என்பது, அசைவ உணவு வகையைச் சார்ந்ததே. இது விவசாய நாடு. பெரும்பான்மை மக்களின் உணவுத்தேவையை நிறைவு செய்ய மாமிசம் மிகவும் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. மனித குல வரலாற்றைப் பார்த்தாலே உணவுச் சங்கிலிமுறை நமக்குத் தெரியவரும். மாட்டை மனிதன் உணவிற்காகத் தேர்ந்தெடுத்தது என்பது அதிகமான மக்கள் பங்கிட்டு உண்ணக்கூடியதும் அதே நேரத்தில் அவனது உடலுழைப்பிற்குத் தேவையான அனைத்து ஆற்றலும் மாட்டு மாமிசத்திலிருந்து கிடைக்கிறது. இந்தியாவைப் பொருத்தவரை குடும்ப வாழ்க்கை அமைப்பில் ஆடு, கோழி மற்றும் மாட்டு மாமிசம் பொதுவாக இருந்தது. விழா நாட்களில் மாட்டை உணவிற்காக அறுப்பது, விருந்தினர் வரும்போது கோழி, ஆடுகளை அறுப்பது என்பது காலம் காலமாகத் தொடர்வதாகும்.
கோமத யாகம், அசுவமேத யாகம், நரமேத யாகம் என்ற பெயர்களில் உயிரினங்களைத் தீயில் இட்டுப் பொசுக்கிய பார்ப்பனர்கள் இன்று மாமிசம் கொண்டுவராதே என்று கூறுகின்றனர். சரி உங்கள் ஆட்சி உங்கள் அலுவலகம் என்று விட்டால் இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் கருவாடு விற்க தடை விதித்துவிட்டார்கள். கேட்டால் கருவாட்டு நாற்றம் அங்குவரும் வியாபாரத் தரகர்களுக்குப் பிடிக்கவில்லையாம். கருவாட்டு விற்பனையாளர்களை எல்லாம் கடையைக் காலிசெய்துவிடச் சொல்லிவிட்டார்களாம். மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மட்டுமல்ல… மோடி பதவியேற்பு விழாவிலேயே இந்த முயற்சி செய்யப்பட்டு பின்னர் பன்னாட்டுத் தலைவர்களுக்காக மாற்றடப்பட்டதும் அது கிண்டலுக்கு உள்ளானதையும் நாம் அறிவோம். இப்போது நடந்தேவிட்டது அவ்வளவுதான்.
ஏதேது இனிமேல் மாமிசம் சாப்பிடுபவர்கள் எல்லாம் இந்தியர்களே அல்ல என்று சட்டமியற்றிவிடுவார்கள் போலும்! விழிப்பாய் இரு தமிழா! இனி உனது உணவைக்கூட பார்ப்பானைக் கேட்டுத்தான் சாப்பிடும் நிலை வரப்போகிறது!
– சரவணா ராஜேந்திரன்