சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்….

செப்டம்பர் 01-15

புலிநகம்


நூல்: சிவாஜி முடிசூட்டலும் பார்ப்பனீயமும்!
ஆசிரியர்: அறிஞர் அண்ணா
வெளியீடு: திராவிடர் கழக (இயக்க) வெளியீடு
சென்னை – 600 007.
தொலைப்பேசி: 044-26618163
பக்கங்கள்: 56    விலை: ரூ.25/-

1946 அன்று இபுராகீமுக்கு, இந்து தேச சரித்திரத்தைப் போதிக்கிறார் சுந்தரேச அய்யர்! அப்சல்கானின் பெரும்படையைக் கண்ட அஞ்சா நெஞ்சன் சிவாஜி, என்ன செய்தான்? அப்சல்கானைத் தனியாகச் சந்திக்க வேண்டுமென்று கூறினான். பூஜபூரான் வந்தான்; அவனைத் தழுவுவதுபோல சிவாஜி நடித்து தன் கரத்திலே வைத்திருந்த புலிநகத்தால் கீறிக் கொன்றான் என்று வரலாற்று ஆசிரியர் கூற, இபுராகீம், தன்னையுமறியாது பத்மாஷ் என்று ஏச, துஷ்ட நிக்ரஹார்த்தம் எதையும் செய்யலாம் என்று வரலாற்று ஆசிரியர் கொஞ்சம் வைதீக போதனையும் புரிகிறார். என்ன சமாதானம் சொன்னாலும் இபுராகீம், இது சதிச் செயல்! நம்பிக்கைத் துரோகம்! வஞ்சனை! ஒரு வீரனின் இலட்சணமல்ல என்று கூறாமல் இருக்க முடியுமா? உண்மையிலே, மாவீரன் செய்யலாமா?

சமரசம் பேச அழைத்துத் தழுவி, தழுவுகிற நேரத்தில் வஞ்சகமாகக் கொல்வது வீரமரபா? இல்லை! இபுராகீம் மட்டுமல்லை; வெளி உலகு முழுவதும், சிவாஜி அப்சல்கானைக் கொன்றார், அக்கிரமம். சதி செய்தார். தன் கீர்த்திக்கே இதனால் ஓர் பழி தேடிக் கொண்டார் என்றே கூறும். ஆனால் இபுராகீமுக்கும் தெரியாது. இவ்வளவு பெரிய இலட்சிய புருஷன் ஏன் இந்தச் சதிச் செயல் புரிய வேண்டும் என்று. தனிமையிலே சிந்தித்துச் சோகிக்கும் தோழர்களுக்கும் தெரியாது. ஏன் சிவாஜி அங்ஙனம் செய்தார்? வீர சிவாஜியை இந்த வஞ்சகம் புரியச் செய்த சூட்க்ஷம சக்தி எது என்ற உண்மை வரலாற்று ஆசிரியரும் அதைக் கூறமாட்டார். சிவாஜி துரோகம் செய்ததாக, இபுராகீம் எண்ணிக் கொண்டால் அவருக்கு என்ன நஷ்டம்? அவர் இபுராகீம் இனமுமல்ல, சிவாஜி பிறந்த மராட்டியக் குடியுமல்ல, அவர் பூதேவர் பரம்பரை! சிவாஜியின் போக்குக்கான உண்மைக் காரணம் என்ன? அதை அறிய மீண்டும் நாம் கொஞ்ச நேரம் அப்சல்கான் படையுடன் போகவேண்டும். போவோம்.

வாளையும் வேலையும் கூர்பார்த்துக் கொண்டும் இன்ன விதமான நிலையிலே இவ்விதமாகக் கத்தியை வீசவேண்டும், இன்ன இடத்திலே முன்னேறித் தாக்க வேண்டும் இந்த இடத்திலே, பக்கவாட்டில் தாக்க வேண்டும் என்று, போருக்கான எண்ணம், ஏற்பாடு ஆகியவைகளிலே, அப்சல்கானின் படை ஈடுபட்டிருந்தது. கூடாரத்திலே அமர்ந்து, வரவிருக்கும் வெற்றியை நினைத்துக் குதூகலமாக வீற்றிருந்தான் அப்சல்கான். அந்தக் காட்டிலே, கோபிநாத்  பண்டிட்ஜியும், அதே இடத்தில் உலவுகிறார். அவரிடம் வாள் இல்லை; ஆனால் மற்றக் குலத்தவரைத் தம் தாளடியிலே காண்பதற்கான மகத்துவத்தை மகேஸ்வரனிடம் பெற்றதாகக் கூறிக்கொள்ளும் பிரம்ம குலத்தவர், கோபிநாத். அப்சல்கான் சிவாஜியை முறியடிக்கப் படை பலத்துடன் வந்ததுடன், சமரசம் பேச சிவாஜி விரும்பினால், அதை முன்னின்று முடித்து வைக்க அந்த முப்புரியானையும் அழைத்து வந்தான். கிளம்பின என்பதை வரலாறு எங்ஙனம் எடுத்துக்காட்டும்! சரிதங்களிலே சம்பவங்களைக் கொண்டுதானே அவற்றுக்கான சில பல சிந்தனைகளை யூகிக்க முடியும்! கோபிநாத் பண்டிட்ஜி, தூது அனுப்பப்பட்டார். சிவாஜியிடம், பெரியதோர் படை தயாராக இருக்கிறது என்பதை எடுத்துக் கூறி சிவாஜியைப் பணிய வைக்கக் கிளம்பினார் கோபிநாத். மகத்தான, பொறுப்பான ஒரு செயல் தரப்பட்டது; கோபிநாத்தின் மனதிலே என்னென்ன எண்ணங்களில் தான் இருப்பார்? ஒரு மண்டலாதிபதியின் தூதராக, மற்றோர் மாவீரரிடம் செல்வது, சாமான்யமான காரியமல்ல. பண்டிட்ஜி புறப்பட்டார்.

நாடுகளைக் காடாக்கிவிடக் கூடிய படைபலம் பெற்றிருந்த அப்சல்கானின் தூதராகக் கிளம்பிய அந்த ஆரியனின் அகம், முதலில் பெருமை கொண்டிருக்கும். பிறகோ சிந்தனை வேறாகித்தான் இருக்கும். பரத கண்டத்திலே பல்வேறு இடங்களிலே இருந்த நிலை பற்றிய நினைப்பு தோன்றாமலிருக்குமா? கோபிநாத்தின் மனக்கண்முன் அப்போது, என்னென்ன காட்சிகள் தோன்றியிருக்கும்! அஸ்தினாபுரம் டில்லியாகி, அங்கு அவுரங்கசீப் அரியாசனம் ஏறும் காட்சி ஒரு புறம்! வங்கத்திலே இஸ்லாமியரின் வல்லமையால் ஆட்சி நிறுவப்பட்ட காட்சி மற்றோர் புறம்! பீஜபூரிலே ஒரு சுல்தான்! தன்னைத் தூது போகச் செய்த அப்சல்கான், துடிதுடிக்கும் படையுடன் இருக்கும் காட்சி! எதிரே பிரதாப்கார் நகரம் – அங்கேயோ, மராட்டிய குலம் ஆள்கிறது! ஒருபுறம் இஸ்லாமியர்; மற்றோர் புறம் மராட்டியர்! ஆரியர் ஆட்சிப் பீடத்திலே எங்கும் தென்படவில்லை பெருமையுடன், அந்த பூபாகத்தைப் பாரத்வர்ஷம், பரத கண்டம், ஆர்யாவர்த்தம் என்று பேசிக் கொள்ளும் ஆரியர், அரச பீடத்திலே இல்லை! தூதுபோகும் வேலைதான் கிடைத்தது! கோபிநாத் பண்டிட்ஜியின் மனக்கண், இவை போன்ற காட்சிகளைக் காணாதிருந்திருக்க முடியாது.

அப்சல்கான் அனுப்பிவைத்த கோபிநாத் பண்டிட்ஜி, சில சகாக்களும் பணியாட்களும் புடைசூழ, நகருக்குள் நுழைந்தார், பணிந்து விடு சிவாஜி! இல்லையேல் அழிவு இந்நகருக்குள் நுழையும்? நீ அஞ்சா நெஞ்சனாக இருக்கலாம். ஆனால் அப்சல்கானிடம் இருக்கும் படை பிரம்மாண்டமானது என்று கூற, சிவாஜி கோபிநாத் பண்டிட்ஜியை மரியாதையாக வரவேற்றான். உபசாரம் பல புரிந்தான். அவரும் உடன் வந்தோரும் தங்கியிருக்க இடவசதிகள் ஏற்பாடு செய்து தந்தான்.

ஒரு பலம் பொருந்திய துரைத்தனத்தின் தூதுவராக வந்துள்ள பண்டிட்ஜியை, மிகக் கௌரவமாக நடத்த வேண்டுவது முறைதானே! முறை தெரியாதவரா, வீரசிவாஜி! முறை மட்டுமல்ல. கொஞ்சம் யூகமும் தெரிந்தவர். கோபிநாத் பண்டிட்ஜி பிரம்மகுலத்தவர் என்பது தெரிந்ததும், சிவாஜிக்கு வர இருக்கும் ஆபத்தினின்றும் தப்ப, ஒரு வழி கிடைக்கக்கூடும் என்ற நம்பிக்கை பிறந்தது. கோபிநாதருக்குச் செய்த மகத்தான உபசாரத்தின் உட்பொருள் அதுதான். அவருடன் வந்தவர்களுக்குத் தரப்பட்ட விடுதிகளினின்றும், கொஞ்சம் தொலைவான இடத்திலே, பண்டிட்ஜிக்கு, தங்கும் இடம் அமைக்கப்பட்டது. நள்ளிரவில், சிவாஜி, அந்தத் தனியிடம் சென்றான், கோபிநாத் பண்டிட்ஜியிடம், தனியாகப் பேச! தூது கூற வந்தவரை, இலகுவில் தன் பக்கம் இழுத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில். மராட்டிய மாவீரரின் நம்பிக்கை வீண் போகவில்லை. மறையவர், மலர்ந்த முகத்துடனேயே வரவேற்றார் சிவாஜியை.

மாமுனியே! மராட்டிய மண்டலத்துக்கு வந்துள்ள ஆபத்தை நினைக்கும்போது….

மனக்கஷ்டமாகத்தான் இருக்கும். இருந்தாலும் மாவீரனே! பணிவதன்றி வேறு மார்க்கம் இல்லை.

பணிவது பற்றியல்ல பூதேவா நான் சோகிப்பது! என் மனோ பீஷ்டம், சங்கல்பம், பாழாகுமே.

படைபலம் அவனிடம் அதிகம்! எதிர்த்துப் பயன் இல்லை. தோல்வி நிச்சயம் சம்பவிக்கும். அழிவை அணைத்துக் கொள்வாருண்டோ?

மறையவரே! என் சங்கல்பம், இங்குப் பாரத்வர்ஷத்திலே நமது ஜென்ம பூமியில், புண்ணிய பூமியில், இந்து சாம்ராஜ்யம் சிருஷ்டிக்க வேண்டும் என்பதுதான். என் பொருட்டு அல்ல; பிராமணோத் தமர்களின் பொருட்டே நான் இந்தப் பாடுபடுகிறேன். என் இலட்சியம் தங்களுக்குத் தெரிந்திருக்கும். பசு, பிராமணர், இவற்றின் இரட்சகன் சிவாஜி என்பதை ஸ்தாபிக்க வேண்டுமென்பதே என் நோக்கம். இந்த ராஜ்யம் ஏற்பட்டால்தான் பூர்வ பெருமை நிலைக்கும்; பண்டைச் சிறப்பு மீண்டும் தோன்றும்! ஆரியாவர்த்தத்திலே, வேதாச்சாரமும், குலதர்மமும் ஜொலிக்கும் ஸ்வாமி! சித்தம் குழம்பியிருக்கும் நான் தங்களை யாசிக்கிறேன். என் சங்கல்பம் ஈடேற வழி செய்யுங்கள்; சனாதன தர்மம் தழைக்க உபாயம் கூறுங்கள்; இந்த பீஜபூர் படையினால் அழிந்து விடலாமோ? நான் பாடுபட்டு வளர்த்து வரும் பால்யன்! பூஜிதரே! ஒருவழி காட்டும்!

நானா? வழிகாட்டுவதா? சிவாஜி! நான் பீஜபூர் சுல்தானின் தூதுவன்!

இல்லை, ஸ்வாமீ! தாங்கள் பாரத்வர்ஷத்தின் பிரதிநிதி! ஆர்யாவர்த்தத்தை இரட்சிக்க வேண்டிய ஆர்ய சிரேஷ்டர்! தங்களை அப்சல்கான் அனுப்பியிருந்தாலும் சரி, பீஜபூர் சுல்தான் அனுப்பியிருந்தாலும் சரி, நான் தங்களை ஆண்டவன் அனுப்பி வைத்த தூதுவர் என்றே கொள்கிறேன். ஆரிய! ஆரியாவர்த்தத்துக்கு ஆபத்து நேரிடுவதைத் தடுக்கப் பிரம்ம குலத்தவராகிய உமக்கு உரிமை உண்டு! உமது கடமையும் அதுதான். நான் ஆரிய சேவாச் சைன்யத்தை நடத்துபவன், கட்டளை பிறப்பித்துவிடும்! ஆர்யாவர்த்தத்தை அன்னியரிடம் தந்துவிடவா? அப்சல்கானின் அடிபணியவா? ஆரிய! நான் அடிபணிவது என்றால் என்ன அர்த்தம்? ஆரியாவர்த்தம் அழிந்தது என்று பொருள்!

கோபிநாத் பண்டிட்ஜி வந்ததோ, சிவாஜியைப் பணிய வைக்க! சிவாஜியோ, மேலே தீட்டப்பட்ட கருத்துகளைக் கொட்டினான் கோபிநாதர் முன்பு. கோபிநாத் கூறிவிட்டிருக்கலாம், சிவாஜி! துரோகம் செய்ய முடியாது! நம்பிக்கை மோசம் மகா பாவம்! நான் பீஜபூர் சுல்தானின் உப்பைத் தின்பவன். அவனுக்கு ஊறு தேடமாட்டேன். அது கயவர் செய்யும் காரியம். தர்ம சாஸ்திரம் இதை ஏற்காது! என்று. ஆனால் கோபிநாத் அதுபோல் கூறினாரா? இல்லை! துரோகம் செய்யக்கூடாது என்ற எண்ணம் இல்லை. ஆரியாவர்த்தம்! ஆரிய சிரேஷ்டர்! சனாதனம்! எனும் சொற்களின் சுவையை ரசித்தார்; பீஜபூர் சுல்தானைக் காட்டிக் கொடுக்க இசைந்தார்! வந்தது தூதுவனாக; ஒப்புக்கொண்டதோ, துரோகியாவதற்கு! எவ்வளவு நேரம், கோபிநாத் பண்டிட்ஜியின் மனதிலே போராட்டம் இருந்ததோ நாம் அறியோம்; துரோகி என்று உலகு எதிர்காலத்திலேனும் தூற்றுமோ என்று துளியாவது அச்சம் பிறந்ததோ அறியோம்.

பக்தனின் தூபத்தைப் பெற்றுப் பரவசமடைந்த பண்ட்ஜி, பழிபாவம் எதையும் கருதாமல், எந்த பீஜபூர் சமஸ்தானத்தால் வளர்க்கப்பட்டாரோ, அதே அரசுக்குத் துரோகியாக இசைந்தார். கோபிநாதர், சாமான்யரா? பண்டிட்ஜி! வேதபுராண இதிகாசம் தெரிந்தவர்! அதாவது, நயவஞ்சகம், அடுத்துக் கெடுத்தல், அணைத்து அழித்தல், கொஞ்சி நஞ்சு தருவது போன்ற முறைகளை ஏராளமாகக் கூறும் ஏடுகளை நன்கு அறிந்தவர்.

பாரதத்திலே, திருதராஷ்டிரன், எதிரியை அணைத்து அழிப்பது பற்றிப் படித்திருக்கிறார். சூரியனையே சக்கராயுதத்தால் மறைத்துப் பொழுது சாய்ந்ததாகக் காட்டி எதிரியைக் கொல்ல, அர்ஜுனனுக்கு உதவி செய்த கண்ணன் காட்டும் வழியை அறிந்தவர் கோபிநாத்! பாரதம் போதாதா, எதிரியை அழிக்க! தர்மாதர்மம் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்ற ஆரிய மார்க்கத்தை எடுத்துரைக்க, கோபிநாதருக்கு மட்டுமல்ல, சிவாஜிக்கும் தெரியும் பாரத – இராமாயணக் கதை. பூஜைக்குரிய இராமன் மரத்தின் பின்புறமிருந்து அம்பு எய்தி வாலியைக் கொன்ற கதையை பக்தி சிரத்தையோடு பாராயணம் செய்ததும், அதைக் கேட்டு ஆனந்தித்ததும், வீண்போகுமா? இப்படிப்பட்ட சமயத்திலே, அந்த இதிகாசங்களிலே தெரிந்துகொண்ட முறைகள் பயன்படவில்லையானால், அவைகளைப் படித்துத்தான் பயன் என்ன? கோபிநாத் பண்டிட், சிவாஜிக்கு, அப்சல்கானின் படையை முறியடிக்க, இன்ன யாகம் செய், அதனால் இன்ன அஸ்திரம் கிடைக்கும் என்று யோசனை கூறினாரா? இல்லை! இன்ன தெய்வத்தை உபாசனை செய், இந்த மந்திரத்தை ஜெபித்து விட்டுப் போருக்குக் கிளம்பு என்று உபதேசம் செய்தாரா? அவர் குருவாக அமரவில்லை; பீஜபூர் குடிகெடுக்கும் துரோகியானார். அப்சல்கானுடன் போர் வேண்டாம் – பணிவதாகச் சொல்லி அனுப்பு பாவனைக்கு – அப்சல்கானிடம் நேரடியாகப் பணியத் தீர்மானித்திருப்பதாகச் செய்தி அனுப்பு – தனியாக அப்சல்கான் இங்கே விஜயம் செய்யட்டும். நான் அவரிடம் சரண் புகுந்து விடுகிறேன் – சமர் வேண்டாம் என்று அப்சல்கானிடம் தூது அனுப்பு என்று யோசனை கூறினார் பண்டிட் கோபிநாத் – பண்டிட்? இல்லை – பாதகன்!

அப்சல்கான் வருவானா?

அனுப்பி வைக்கிறேன். அதாவது, அவன் இங்கே தனியாக வரும்படி நான் செய்கிறேன்.

வந்த பிறகு….?

வந்த பிறகு! மராட்டியத்தை, உன் மண்டலத்தை, உன் எதிர்காலத்தைக் கருக்கக் கூடிய எதிரி, துணையின்றித் தனியாக வருகிறான் உன்னைச் சந்திக்க! வந்தபிறகு… என்று என்னைக் கேட்கிறாயே, வகை கெட்ட….

அறிந்தேன் ஆரிய! ஆனால் அப்சல், ஆயுதபாணியாகத்தானே வருவான்.

பைத்தியக்காரா! அப்சல்கான், அஞ்சி அடிபணியக் காத்துக் கொண்டிருக்கும் சிவாஜிக்குத் தஞ்சமளிக்கவன்றோ இங்கே வருவான் – நிராயுதபாணியாகவே வருவான். அவ்விதம் ஏற்பாடு நடக்கும்.

பண்டிட்ஜி! தங்கள் பாதாரவிந்தம்………

கோபிநாத் பண்டிட்டின் சதியாலோசனையே, சிவாஜியைத் தனியாகக் காண, அப்சல்கான் வருவது என்ற ஏற்பாட்டை உருவாக்கிற்று! வீர சிவாஜிக்கு, வாள் ஏந்தத் தெரிந்த அளவுக்கு வஞ்சனை வீசத் தெரிந்திருக்க முடியாது! வேதிய குலத்தவராம் கோபிநாத் பண்டிதர், அந்தக் கைங்கரியத்தில் ஈடுபட்டார், பரம்பரைப் பழக்கத்தின்படி! சிவாஜி, மகத்தானதோர் ராஜதந்திர வெற்றி பெற்றதாகச் சந்தோஷித்தான்! பண்டிட் கோபிநாத், மராட்டியத்தை ஆரிய சேவா பீடமாக்கி விட்டதாக எண்ணி மகிழ்ந்தான். அப்சல்கானோ, திறமை மிகுந்த தூதுவர், திரும்பி வருவார், சீறிப் போரிட்ட சிவாஜியின் சரணாகதிச் செய்தியைத் தூக்கிக் கொண்டு என்று எண்ணிச் சாய்ந்திருந்தான். கோபிநாத் பண்டிட்ஜி வந்து சேர்ந்தார் – அப்சல்கானின் கொலைக்கான ஏற்பாடு செய்து வைத்துவிட்டு! அப்சல், படை அறிவான், போர் அறிவான், பாதகம், சதி, பசப்பு இவைகளைத் தாங்கி நடமாடும் மனித உருவங்கள் தன் பக்கத்தில் இருப்பதை எங்ஙனம் அறிவான்?

சலாம் பண்டிட்ஜீ! என்று சந்தோஷமாக, கோபிநாத்தை வரவேற்றான். அன்று மட்டுந்தானா 1946இல் கூடத்தான்! வாங்க ஸ்வாமி என்று கோபிநாதர்களை வரவேற்கிறார்கள்!

சரண் அடையச் சம்மதித்துவிட்டான்!

பஹுத் அச்சா! பண்டிட்ஜீ! அவன் மகா முரடன் என்பார்களே, எப்படிப் பணியச் சம்மதித்தான்!

முரடனாக இருக்கட்டுமே, சைன்யாதிபதி! அவன் என்ன குருடனா, இந்தப் பிரம்மாண்டமான படை நம்மிடம் இருப்பதை அறியாதிருக்க!

கோபிநாத் உமது வெற்றி இது
ஒருவிதத்தில் என் வெற்றிதான்.

ஒருவிதத்தில் மட்டுமா, சகல விதத்திலும் கோபிநாத்தின் வெற்றிதான் அது. போரிடப் புறப்பட்ட அப்சல், போரிடாமலேயே மாவீரனை மண்டியிடச் செய்துவிட்ட மகிழ்ச்சிப் பெருக்கால், கேளிக்கையாகத்தானே இருந்திருப்பான். ஏன் இராது? எந்தப் பக்கமும் எந்த வீரனுடைய வெற்றி முரசு கேட்டு வந்ததோ, எந்த வீரனின் வெற்றிக் கொடி மலை உச்சிகளிலெல்லாம் மகோன்னதமாகப் பறக்க விடப்பட்டதோ, அந்த வீரன், மண்டியிடச் சம்மதிக்கிறான் என்றால், மகிழ்ச்சி பிறக்காதிருக்குமோ, அப்சல்கானுக்கு!

அந்த மகிழ்ச்சி பன்மடங்கு அதிகமாயிற்று. சிவாஜியால் அனுப்பப்பட்ட தூதன், அப்சலிடம், சரணாகதியை உறுதிப்படுத்த வந்தபோது, கோபிநாத் பண்டிட்ஜி, அப்சல்கானால் அனுப்பப்பட்ட தூதன்! சிவாஜி அனுப்பிய தூதனும், ஓர் பிராமணனே! பெயர் கிருஷ்ணாஜீ பாஸ்கர்.

சிவாஜி சமர் செய்ய விரும்பவில்லை. பீஜபூர் ஆட்சிக்கு அடங்கி நடக்க ஒப்புக் கொள்கிறார். பீஜபூர் சுல்தானின் அதிகாரத்துக்குக் கட்டுப்பட இசைகிறார். சரண் அடைய விரும்புகிறார். வீராதி வீரனே! எங்கள் சிவாஜியின் இந்த வேண்டுகோளைத் தயைகூர்ந்து ஏற்று அருள வேண்டுகிறேன் என்று பாஸ்கரன் கூற, அது கேட்டுப் பரமானந்தம் அடைந்த அப்சல்கான், நமது படையுடன், பிரதாப்கார் நகருக்குள் பவனி வருவோம். அங்கு சிவாஜி பணியட்டும்; பீஜபூர் ஆட்சியின்கீழ் வாழச் சம்மதிக்கும் சிவாஜிக்கு நாம் சுல்தானின் பிரதிநிதி என்ற முறையிலே பேட்டி தருகிறோம் என்று கூற, பாஸ்கரன் பயந்து, தழு தழுத்த குரலில், ஒரு விண்ணப்பம்! சிவாஜி, சரணாகதி சம்பந்தமாகப் பேசுவதற்காகத் தங்களைத் தனியே சந்திக்க விரும்புகிறார். இங்கேயே வர எண்ணினார்…. என்று வலை வீசும் பேச்சைத் துவக்கினார். சதிக் கூட்டத் தலைவர், கோபிநாத், இங்கே இருக்கும் பெரும் படை முன்வர, அஞ்சுகிறான் உங்கள் அசகாயசூரன்! பிராமணரே! ஏன் மறைக்கிறீர்? வெட்கமோ! என்று கூறினார்.

அப்சல்கானின் ஆனந்தம் அளவு கடந்ததாகிவிட்டது. கோபிநாத் பண்டிட்ஜி! அவ்வளவு பயங்கொள்ளியா சிவாஜி? என்று கேட்டான் அப்சல். அந்தக் கேள்வியை எதிர்பார்த்துக் கொண்டிருந்த கோபிநாத், முகஸ்துதியை வாரி வாரி வீசினான், அப்சல்கானின் யூகம் அழியுமளவு.

இதிலென்ன ஆச்சரியம், சேனாதிபதி! அவன் உமது ஜெயங்களைப் பற்றிக் கேள்விப்படாமலா இருந்திருப்பான்? ஏதோ இதுவரையில், நாதியற்ற நகரங்களையும், நெஞ்சில் உறுதியற்ற கும்பலையும் தாக்கி, வெற்றி கண்டேன் என்று வீறாப்பு பேசித் திரிந்தான். இன்று மகத்தானதோர் படையை நடத்தும், தீர புருஷனாகிய அப்சல்கான் களத்திலே, சிம்மம்போல் நிற்கும் தலைவன் வந்திருக்கிறான் என்று தெரிந்ததும் நடுநடுங்கிப் போய் விட்டான். பீஜபூர் சம்ஸ்தானத்தின் பெருமையை அறியானா? தன் பக்கம், பீஜபூரின் திருஷ்டி படாதிருந்தவரையிலே தப்பிப் பிழைத்தான். இப்போது?

,இந்த முகஸ்துதி, அடியோடு அப்சலைக் கவிழ்த்துவிட்டது. சரி! பயம் வேண்டாம் என்று சொல்! நாளை நாம் தனியாக, ஆயுதமின்றி வருகிறோம், சிவாஜியின் சரணாகதிக்கான சம்மதத்தைப் பெற என்று கிருஷ்ணாஜீ பாஸ்கருக்குக்கூறி அனுப்பிவிட்டு, இப்படிப்பட்ட பயங்காளியை நான் கண்டதே இல்லையே! என்று எண்ணி எண்ணிப் பூரித்தான்.

சதியாலோசனைத் திட்டத்தின்படியே சந்திப்பு நிகழ்ந்தது. போர் வீரர்களின் துணையின்றி, ஆயுதமுமின்றி, சிவாஜியைச் சந்திக்க அப்சல்கானை அழைத்து வந்தான் கோபிநாத். சிவாஜி, நேசத்தையும், சமரசப் பாசத்தையும் காட்டுவதுபோல, அப்சல்கானைத் தழுவினான். அய்யோ! என்று அலறினான். அப்சல்கான், அவன் அடிவயிற்றிலே புகுந்தது சிவாஜியின் கரத்திலே மறைத்து வைக்கப்பட்டிருந்த புலி நகம்! சரணாகதியை ஏற்றுக்கொள்ள வந்த அப்சல்கான் வஞ்சகமாக வதைக்கப்பட்டான்.

இதற்குள் அப்சல்கானின் படை, புகக்கூடிய பாதை அடைக்கப்பட்டு விட்டது. சிவாஜியின் படை, இனிப் போர் இல்லை என்று எண்ணி, ஆயத்தம் ஏதும் செய்யாது, ஆனந்தத்திலே மூழ்கியிருந்த அப்சல்கானின் படை மீது பாய்ந்தது: அங்கேயும் படுகொலைதான்!! கோபிநாத் பண்டிட்ஜியும், கிருஷ்ணாஜீ பாஸ்கரும் சிவாஜியை, வீரனை, வஞ்சனையில் ஈடுபடச் செய்து, சதிச்செயல் புரிய வைத்து மறைக்க முடியாத பழியை மாவீரர் தலைவனுக்கு வாங்கித் தந்தனர்.

அப்சல்கானின் உயிரையும் போக்கினர். அப்சல்கானை  சிவாஜி அக்கிரமமாகக் கொன்ற வரலாற்றுச் சம்பவத்தையே மக்கள் அறிவர். வரலாற்று ஆசிரியர் கூறுவார். ஆனால், கோபிநாத் பண்டிட், கிருஷ்ணாஜீ பாஸ்கர் என்பவர்களைப் பற்றிக் கூறார்! சரித்திரம் என்றால் மன்னர்கள் கதைதானே என்று மக்களும் எண்ணிக் கொண்டு, கோபிநாத், பாஸ்கர் போன்றவர்களைக் கண்டுபிடிக்க முயல்வதில்லை. ஆனால், இந்த உபகண்டத்து வரலாற்றிலே கோல்கொண்டவர்களைப்பற்றி அறிந்து கொள்வதைவிட கோபிநாதர்களைப்பற்றித் தெரிந்து கொண்டால்தான், உட்பொருள் விளங்கும்; உண்மை துலங்கும், அப்சல்கானின் மரணம், புலிநகத்தால் என்று கூறுவதைவிட பூசுரனின் புன்னகையால் என்று கூறுவதே பொருந்தும்!

–  திராவிட நாடு, 20.01.194

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *