இணைந்த கரங்கள் – வலுப்பெறும் மதச் சார்பற்ற அணி

செப்டம்பர் 01-15

லாலு பிரசாத் யாதவுடன் நிதிஷ் குமார்

மதவெறி மனிதர்களைப் பிரிக்கிறது, அழிவுக்கு இட்டுச் செல்கிறது. மதச் சார்பின்மை மனிதர்களை இணைக்கிறது; ஒற்றுமைக்கு வழிவகுக்கிறது. இந்த உண்மையை நிரூபிக்கும் சமீபத்திய நிகழ்வுதான், பிரிந்த அரசியல் நண்பர்களான லாலு பிரசாத்தும், நிதிஷ்குமாரும் மீண்டும் அரசியலில் இணைந்திருப்பது.

நண்பர்கள் மீண்டும் இணைந்திருப்பதை வரவேற்பவர்கள் ஒருபுறம் இருக்க, பொறுக்க முடியாமல் பொருமுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். நிதிஷ்குமார்_லாலு கூட்டணியை விரும்பாதவர்கள், மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களும், உயர்ஜாதி வகுப்பினரும்தான் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

உத்திர பிரதேசத்தில் இருந்து உத்திரகான்ட் பிரிக்கப்படாமல் இருந்தால், அதன் மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 85 ஆகவும், பிகாரில் இருந்து ஜார்கண்ட் பிரிக்கப்படாமல் இருந்தால் அதன் மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 54 ஆகவும் இருந்திருக்கும்.

இந்த இரு மாநிலங்களின் மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை  139.  இந்தியாவின் மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் இது சுமார் இருபத்தைந்து சதவிகிதம். இந்தியாவின் ஆட்சியைத் தீர்மானிக்கும் முக்கியப் பகுதி. நீண்ட காலமாக பெரிய தேசியக் கட்சியான காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி ஆகிய இரு கட்சிகளின் மற்றும் அதன் உயர் ஜாதித் தலைவர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது இந்தப் பகுதியின் அரசியல்.

உத்திரபிரதேசம் மற்றும் பிகார் மாநிலத்தில் தங்கள் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ள பெரிய தேசியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி இரண்டிற்கும் இடையே நடந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, ராமர் கோவிலைக் கட்டுகிறோம் என்று சொல்லி, பாபர் மசூதியை இடித்து, மத ரீதியாக மக்களைப் பிளவுபடுத்தி அதில் ஆதாயத்தைத் தேடியது பி.ஜே.பி. இவ்விரு பெரிய தேசியக் கட்சிகள் எதிர்நிலையில் அரசியல் செய்தாலும், அதன் மேல்மட்ட அரசியல் தலைவர்களில் பலர் சிறுபான்மை ஜாதியைச் சேர்ந்த பார்ப்பனர்களாக இருந்ததும், மாநில நலனுக்கு முக்கியத்துவம் தராமல் இருந்ததும், மெல்ல மெல்ல ஒரு அரசியல் மாறுதலை ஏற்படுத்திக்கொண்டே இருந்தது இந்தப் பகுதியில்.

வி.பி.சிங்

உயர்ஜாதியினருக்கு எதிராக தன்னெழுச்சியாக ஏற்பட்ட அந்த மாறுதல், கன்ஷிராம், முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத், சரத் யாதவ், நிதிஷ் குமார், சிபு சோரன், அஜீத் சிங் என பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்த தலைவர்களை வலுவாக வளரச் செய்தது இந்தப் பகுதியில்.

சரத்யாதவ்

அந்தப் பகுதியில் மாநிலக் கட்சிகள் வளரத் தொடங்கின. இதன் விளைவாக, 1989-இல் காங்கிரசுக்கு மாற்றாக வி.பி.சிங் தலைமையில் புதிய மத்திய அரசு அமைந்தது. 79-இல் ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தபோது, சமூகரீதியாக கல்வி அறிவு ரீதியாக பின்தங்கியவர்களை ஆராய அமைக்கப்பட்ட மண்டல் கமிஷன், பத்தாண்டு கால நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியான 89-இல் மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த முயன்று ஆட்சியை வி.பி.சிங் இழந்தது வரலாறு.

கன்ஷிராம்

இந்த பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட தலைவர்களின் மாநிலக் கட்சிகள் மூன்று வகையில் ஒன்றுபடுகிறது. முதலாவதாக, இக்கட்சிகள் பெரும்பான்மை மதவெறிக்கு எதிரான கட்சிகள். இரண்டாவதாக, பிற்படுத்தப்பட்ட – தாழ்த்தப்பட்ட மக்களின் நலனை முன்னிறுத்தும் கட்சிகள். மூன்றாவதாக, மாநில உரிமைக்கு முக்கியத்துவம் தரும் கட்சிகள்.

இம்மூன்றும் முதன்முதலாக தென்னிந்தியப் பகுதியில் வலுவோடு இருக்கும் திராவிட இயக்கங்களின் கொள்கை சார்ந்தவை. இக்கொள்கைக்கு நேர் எதிரானவைகளாக இருக்கும் தேசியக் கட்சிகளின் நேரடி அல்லது மறைமுகச் செயல்பாட்டால் இம்மாநிலக் கட்சிகள் பிரித்து மேயப்பட்டன.

கட்சிகள் பிளவுண்டன. ஒருவருக்கொருவர் எதிராகக் களமிறங்கினர். பிளவுபட்டவர்களை பெரிய தேசியக் கட்சிகளான காங்கிரசும், பாரதிய ஜனதா பார்ட்டியும் தங்கள் ஆதரவாளர்களாக வைத்துக்கொண்டன. இவர்களின் பிரிவு தங்கள் கட்சியை வளர்க்க, வலுப்பெறச் செய்ய உதவும் எனக் கருதியது போல அந்தத் தேசியக் கட்சிகள். இந்த மாநிலக் கட்சிகள் மட்டும் பிரியவில்லை.

அந்த மாநிலங்களே பிரிக்கப்பட்டன. உத்திரபிரதேசமும் பிகாரும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஒற்றுமையாக இருந்து மத்தியில் ஆட்சி அமைத்த இந்தக் கட்சிகள் இணைய முடியாத அளவிற்குப் பிளவுகள் ஏற்பட்டன. மாநிலக் கட்சிகள் வலுவிழந்ததாகக் கருதிய பெரிய தேசியக் கட்சிகளான காங்கிரசும், பாரதிய ஜனதா பார்ட்டியும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் ஒன்றுபட்டுப் பேசிய அதிசயம் நிகழ்ந்தது.

பல மொழிகளை, பண்பாடுகளைக் கொண்ட மக்களால் உருவாக்கப்பட்ட இந்தியா என்ற நாட்டில், அவர்கள் அனைவரும் தங்கள் அரசியல் உரிமையைக் காப்பாற்றிக்கொள்ளும் வகையில் உள்ள தற்போதைய முறையே போதாது, மாநிலங்களுக்கு அதிக அதிகாரமும், சுயாட்சி உரிமையும் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை நிலுவையில் இருக்கும் நிலையில், அமெரிக்காவைப் போல இரட்டைக் கட்சி முறை இந்தியாவில் வரவேண்டும் என்ற கருத்தை பாரதிய ஜனதா கட்சி முன்வைக்க, அதை வருங்கால காங்கிரசின் தலைவராகக் கருதப்படும் ராகுல் காந்தி வரவேற்ற அதிசயம் நிகழ்ந்தது.

பாரதிய ஜனதா பார்ட்டி தனக்குத் தோதான அமெரிக்க பாணி முறையைப் பின்பற்றி அதிபரை முன்னிறுத்தித் தேர்தலைச் சந்திப்பது போல, வழக்கத்திற்கு மாறாக பிரதமர் வேட்பாளர் என்ற புதிய பாணியில் தேர்தலைச் சந்தித்து, அதற்கு அளவிற்கு அதிகமான விளம்பரம் செய்து, தேர்தலில் வென்று தனிப் பெரும்பான்மையோடு ஆட்சியைப் பிடித்துள்ளது. இதில் கவனிக்கவேண்டியது, உத்திரபிரதேசம் மற்றும் பிகாரில் பாரதிய ஜனதா பார்ட்டி பெற்றுள்ள வெற்றியே இதற்குக் காரணமாக அமைந்துள்ளது என்பதுதான்.

பெரிய தேசியக் கட்சியான காங்கிரஸ் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் படு தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், அந்தக் கட்சித் தலைவி சோனியா காந்தி  நடத்திய இஃப்தார் விருந்தின் மூலமாக, பிரிந்த முன்னாள் நண்பர்களான லாலு பிரசாத் யாதவும், நிதிஷ் குமாரும் இணைந்துள்ளனர் என்ற செய்தி மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன்பு, மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் அமைந்த அத்வானியின் ரத யாத்திரையை பிகாருக்குள் நுழைய விடாமல் தடுத்தவர் அன்றைய பிகார் முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ். குஜராத் மதக் கலவரத்தின் போது முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளாமல் கூட்டணியை முறித்தவர் பிகாரின் முதலமைச்சராக இருந்த நிதிஷ் குமார்.

மதவெறிக்கு எதிராக இவ்விருவரும் இணைந்தது ஒரு புதிய தொடக்கமாகத் தோன்றுகிறது. இது புதிய அரசியல் மாற்றத்தை இந்தியாவில் ஏற்படுத்தும் என்பது நிச்சயம். இணைந்த இருவரும் மதசார்பின்மையை முன்னிறுத்துபவர்கள் மட்டுமல்ல, இணைத்த நிகழ்ச்சியே மதச் சார்பின்மையைப் பறைசாற்றும் இஃப்தார் விருந்து நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் தொடர்ச்சியாக மதச்சார்பற்ற இயக்கத் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம்.

லாலு பிரசாத் _ நிதிஷ் குமார் கூட்டணி பெற்றிருக்கும் வரவேற்பிற்குப் பிறகு வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது இணைந்து இருந்த அரசியல் நண்பர்கள் அனைவரும் ஒன்றிணைய  வேண்டும் என்றும் ஆதாசப்படுகிறார்கள் மதச் சார்பற்ற சிந்தனையாளர்கள். காலம் காத்திருக்கிறது.

– திராவிடப் புரட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *