ஆண் குழந்தைக்கு அலைவது ஏன்?

செப்டம்பர் 01-15

எது தமிழ்த் திருமணம்? – 3

ஆண் குழந்தைக்கு அலைவது ஏன்?

– சு.அறிவுக்கரசு

தன் துணைவரை இழந்த நிலையில் பெண்டிரை மலர் அணியக் கூடாது எனத் தடை விதித்துக் கைம்மை (வைதவ்யம்) நிலையின் அடையாளமாகக் கூறும் ஆரிய வாழ்க்கை முறையைத் திணித்துள்ள நிலையைக் கவனிக்க வேண்டும்.

பரிசம்

ஆரியரைப் பொறுத்தவரை, பெண்டிரை ஒரு பொரளாகத்தான் கருதி வாழ்ந்தனர். இன்றும் வாழ்ந்து வருகின்றனர். எவனாவது ஒருவன் கையில் பிடித்துக் கொடுத்துவிட வேண்டும் என்றும் அப்படிக் கொடுத்துவிட்டால், பெற்றோரின் கடமை முடிந்துவிட்டது என்றும் வாழ்கின்றனர்.

அதற்கேற்றவாறு ஒருவனைப் பார்த்து அவனுக்கு வரதட்சணை கொடுத்துக் கட்டிக் கொள்ளச் சொல்கின்றனர். ஆனால், தமிழர் தம் முறை வேறாக இருந்துள்ளது. பரிசப் பணம் தந்து பெண்ணை மணமுடிக்க வேண்டும் என்கிற முறை ஸ்பரிசம் என்கிற வடமொழிச் சொல்தான் பரிசம் என்று கூறப்படுகிறது. அந்த வட சொல்லுக்குத் தொடுதல் என்று பொருள். ஒருவர் வீட்டுப் பெண்ணைத் தொடுவது அவ்வளவு எளிதல்ல என்பது அக்கால நிலை.

களவு வழி மணம் அல்லாது, ஒருவர் கொடுக்க மற்றவர் கொள்ளும் திருமண முறை மரவுவழித் திருமணம் என்றழைக்கப்பட்ட நிலை. இதைத் தொல்காப்பியம் தமரிற் பெறுதல் எனக் கூறுகிறது. அகநானூறில் ஒரு பாடலில், தென்றியல் மரபின் மன்றல் அயர என இம்முறை குறிக்கப்படுகிறது. இதை நாடறிமணம் என்றும் கூறுவர். நேரிறை முன்கை பற்றி நுமர் தர _ நாடறி நன்மணம் அயர்கம் என்று குறிஞ்சிப்பாட்டு விவரிக்கிறது. இத்தகைய நாடறி நன்மணம் செய்து கொள்வோர் பெண் கொள்வதற்குப் பரிசம் தர வேண்டும். இது பொன்னாகவோ, பொருளாகவோ, நிலமாகவோ, அணிகலனாகவோ இருக்கலாம். அப்படித் தந்தால்தான் பெண் தரப்படும். இல்லையேல் இல்லைதான்.

… கடுங்கண் கோசர் நியமம் ஆயினும்
உறுமெனக் கொள்ளுநர் அல்லர்
தறுநுதல் அரிவை பரிசிழை விலையே

எனப் பாடுகிறது அகநானூறு 90ஆம் பாடல். இதன் பொருள் இதுதான்: நிறை வருவாய் உடைய நியமம் எனும் ஊரையே தந்தால்கூட, வாங்கிக் கொள்ள மாட்டார் பெண்ணின் தந்தை என்பதாம். அதற்கும் மேலே தந்தால்தான் சம்மதம் தெரிவிப்பார் என்றால் அவ்வளவு கிராக்கி பெண்களுக்கு!

இத்தகையத் தமிழர் நிலையைப் பார்ப்பனர் நிலையோடு ஒப்பிட்டுப் பார்த்தால்… ஆரியப் புன்மைத்தனம் புரியம். அந்தக் காலத்துப் புகழ்பெற்ற கடல் வணிகத் துறைமுக நகரான முசிறிக்குச் சமமான ஊரையே தந்தாலும் பெண்ணின் தந்தை தம் பெண்ணைக் கொடுக்கமாட்டார் என்று புறப்பாடல் 343 பாடுகறிது என்றால் பெண்ணின் பெருமையை விளங்கிக் கொள்ளலாம். ஸ்பரிசம் எனும் சொல் பரிசம் என்றாகித் தமிழர் வாழ்வில் சிறப்பான இடம் பெற்றது என்றாலும் இதற்கான தமிழ்ச் சொல்லாக முலைவிலை, தழைவிலை,தண்டழை விலை என்றெல்லாம் நம் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது.

இரண்டாம் திருமணம்

இக்காலத்தைப் போலவே அக்காலத்திலும் இந்த மனைவிக்குக் குழந்தை இல்லையாதலால், இரண்டாம் திருமணம் செய்துகொள்ளும் வழக்கம் இருந்துள்ளது. இக்காலத்தில் இன்னும் மோசமாக இம்மனைவி ஆண் மகவு பெற்றுத் தரத் தகுதியில்லை; ஆகவே இன்னொரு திருமணம் என்கிற நிலையை மேற்கொள்ளும் அறிவற்றவர்களும் உள்ளனர். ஆண் குழந்தை பிறப்பதற்கு ஆணின் குரோமோசோம்கள்தான் காரணி என்கிறது அறிவியல். ஆனால் பெண்ணைக் குற்றம் கூறி இன்னொரு திருமணம் செய்துகொள்ளும் ஈனத்தனம் இன்று நிலவுகிறது! அறிவியல் அடிப்படையில் இதே காரணத்திற்காக இன்னொரு திருமணம் தேவை எனும் நிலைப்பாட்டைப் பெண்கள் எடுத்தால்தான் இம்மாதிரி ஆண்களுக்குப் புத்தி புகட்ட முடியும்.

ஏன் இவர்கள் ஆண் குழந்தைக்கு அலைகிறார்கள் தெரியுமா? மனுதர்மம் 9_137 கூறுவதாவது: மனிதர்களுக்குப் பிள்ளை பிறந்தால் சுவர்க்க லோகத்தை அடைகிறார்கள். பிள்ளைக்குப்பிள்ளை பிறந்தால், புண்ணியலோக வாசம் நீடித்து இருக்கும், பிள்ளைக்குப் பேரன் பிறந்தால், சூரிய லோகத்தை அடைகிறார்கள். செத்த பிறகு ஒரு வாழ்வு உள்ளது எனும் பித்தலாட்டத்தை எல்லா மதங்களும் செய்து வருகின்றன. இந்து மதத்தைப் பொறுத்தமட்டில் இந்த மறுவாழ்வின் வசிப்பிடம் உயர்ந்து கொண்டே போகிறபடியால் ஆண்பிள்ளைக்காக எல்லா இந்துக்களும் அலைகிறார்கள்.

அதைவிடவும் இன்னொரு காரணத்தை மனுதர்மம் கற்பிக்கிறது. மனு சாத்திரப் பாடல் 9_138 மைந்தன் தந்தையை புத் எனும் நரகத்தினின்றும் காப்பாற்றுகிறபடியால், புத்திரனென்று சாட்சாத் பிரமனாலேயே சொல்லப்படுகிறான் என்கிறது. ஆக, நரகத்தில் விழாமல் காக்கும் கரங்களாக மகன் காட்சியளிக்கிறான். ஆகவே, இந்துக்கள் மகன் வேண்டும் என்று அலைகிறார்கள். மகனைப் பெற்றுத் தராத மனைவியை ஒதுக்கிவிட்டு மற்றொரு மனைவியைத் தேடுகிறார்கள்.

தொல்காப்பியம் ஏற்கிறதே

இம்மணம், மகப்பேறு மணம் எனப்படுகிறது. தொல்காப்பியம் இதனை இவ்வாறு கூறுகிறது.

அவனறிவு ஆற்ற அறியு மாகலின்
ஏற்றங்கண்ணும் நிறுத்தற்கண்ணும்
உரிமை கொடுத்த கிழவோன் பாங்கில்
பெருமையிற்றிரியா வன்பின் கண்ணும்

என்று தொல்காப்பியம் கற்பியல் 6ஆம் பாடல் பாடிப் போகிறது. முதல் மனைவி தொன்முறைக் கிழத்தியாம். இரண்டாம் மனைவியை வழிமுறைக் கிழத்தி என்கிறது. வழிமுறைக் கிழத்தியை தொன்முறைக் கிழத்தி ஏற்றுக் கொள்வாளாம். காரணம் என்னவென்றால் இரண்டாம மனைவியின் ஒப்பற்ற குணநலச் சிறப்பாம். மாறாக அமைந்துவிட்ட நிலையைப் பல குடும்பங்களில் பார்க்கிறோமே! அந்தக் காலத்து இரண்டாம் மனைவி அப்படி அமைந்திருந்தாள் என்று தொல்காப்பியத்தைக் காப்பாற்ற தமிழ்த் தேசியர்கள் முயலலாம்! நாம் என் செய்ய?

இரண்டாம் மனைவியை எதிர்கொண்டு அழைத்துத் தன் தங்கையாக ஏற்றுக்கொண்ட முதல் மனைவியைப் பற்றி அய்ங்குறுநூறு பாடல் 92 பாடுகிறது என்றால், பெண்ணியவாதிகள் எங்கே போய் முட்டிக் கொள்ள? இதுதான் பழந்தமிழர் பண்பாடும் அன்றிருந்த நிலையும்! தன்னைவிடச் சிறந்தவளாக இரண்டாம் தாரத்தை முதல் தாரம் சிலாகிப்பதாக இப்பாடல் கூறுகிறது. என்றால் இம்மாதிரித் திருமணங்கள் நிறைய நடப்பதில்லை எனப் பொருள்படும்படியாக எங்கோ ஒன்று என்றே நடப்பதாக இப்பாடல் கூறுவது சற்று ஆறுதல். அதனைக் குறிக்க அருங்கடி என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது நம் அச்சத்தைப் போக்குகிறது. இருதார மணத்தடைச் சட்டம்தான் இந்தக் கொடுமையை ஒழித்தது என்பதையும் உணர வேண்டும்.

சப்தபதியாம்

தொல்காப்பியக் காலத் திருமணமுறை மாறிப் பெற்றோர்களால் பார்த்துச் செய்து வைக்கப்பட்ட திருமணமுறை சிலப்பதிகாரக் காலத்தில் வந்துவிட்டது. பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட என்ற சொற்கள் இக்காலத் திருமண அழைப்பிதழ்களில் பார்க்கிறோமே அந்த நிலை வந்தது கோவலன் _ கண்ணகி திருமணத்தில்! இரண்டு பெரு வணிகக் குடும்பங்கள் இணையும் திருமணமாக அது பாடப்பட்டுள்ளது.

இருபெரும் குரவரும் ஒரு பெருநாளில்
மணவணிகான மகிழ்ந்தனர், மகிழ்ந்துழி
யானை எகுத்தத்து அணியிழையார் மேலிரீஇ
மாநகர்க்கு ஈந்தார் மணம்
(பாடல் 1:41_44)

யானை மீது ஏறிப் பெண்டிர், ஊர் மக்களைத் திருமணத்திற்கு அழைத்தனர். பார்ப்பனப் புரோகிதர் வேதமுறைப்படி திருமண முறை காட்டி மணமக்களைத் தீவலம் வரச் செய்து திருமணத்தை நடத்தி வைத்தாராம். தீவலம் இப்போது சப்தபதி எனப்படுகிறது. தீக்குழியை ஏழுமுறை சுற்றி வரவேண்டுமாம். ஏன் தெரியுமா? மணமகளை வைத்துக் கொண்டிருக்கும் தேவதைகளைத் தாஜா செய்து விலகச் செய்வதற்காக இதைத்தான் சப்தபதி என்கிறார்கள். இதைச் செய்யாத திருமணம் செல்லாது, சட்டப்படியும்! சாத்திரப்படியும்!

சப்தபதி என்றால் ஏழு அடி எடுத்துவைத்தல் எனப் பொருள். இதைச் செய்வதற்கு முன் மணமகளின் கைகளை ஒன்றுசேர்த்துக் குவித்து வைத்து பொரித்த தான்யங்களை அதன்மீது வைத்து நெய் ஊற்றி அவதானம் செய்கிறான் புரோகிதன். அப்போது முணுமுணுக்கப்படும் சமஸ்கிருத மந்த்ரங்களுக்குப் பொருள் இதுதான்: இப்பெண் அக்னிக்காக அர்யமன் தேவதைக்கு அவதானம் செய்கிறாள். எனவே இப்பெண்ணின் மீதான உரிமையை அர்யமன் விட்டுவிட வேண்டும். அவளை இனிமேல் தொந்தரவு செய்யக்கூடாது. இதுபோலவே மேலும் இரண்டுமுறை அவதானம் செய்யப்படும். மேலும் இரண்டு தேவதைகளைத் திருப்திப்படுத்துவதற்காகவும் மணப் பெண்ணை விட்டுவிலகச் செய்வதற்காகவும், இப்படி மூன்று தேவதைகளையும் விலக்கினால்தான் மணமகள் மணமகனுக்கு உரிமையாக முடியுமாம்!

திருமணத்தில் தேவதைகள் எப்படி சம்பந்தப்படுகிறார்கள்? தேவதைகள் கடிவாளம் இல்லாதவர்களாம். கட்டுப்பாடு என்றால் என்ன என்று தெரியாதவர்களாம். இவர்கள் ஆரியப் பெண்களை வைத்துக் கொண்டிருக்கிறார்களாம். எல்லாப் பெண்களுமா இப்படித் தேவதைகளிடம் அடமானமாக இருப்பவர்களே! திருமண மந்த்ரத்தில் கூறப்படும் சோமன், கந்தர்வன், அக்னி, பூஷன் போன்றவர்கள் இப்படிப்பட்டவர்கள்தாம். அவர்கள் வைத்துக் கொண்டிருந்த பெண் புரோகிதரிடம் தரப்பட்டு, அவர் பார்த்து மணமகனுக்குத் தருவதாகத்தான் மாங்கல்யம் தந்துனானே மந்த்ரம் கூறுகிறது. அப்படி வைத்துக் கொண்டிருந்தவர்களையெல்லாம் எதையாவது கொடுத்து விலக்கிய பிறகுதான் மணப் பெண்ணைக் கூட முடியும். இதைத்தான் சப்தபதி சடங்கு தெரிவிக்கிறது. ஏழு முறை சுற்றி வரும்வரை மேற்படி தேவதைகள் எந்தத் தகராறும் செய்யாவிட்டால் தரப்பட்ட வரியினால் அவர்கள் திருப்தி அடைந்து பிடியைத் தளர்த்தி விட்டார்கள் என்று பொருள். இதனைக் கண்காணிக்கும் வேலையை இந்து சட்டமும் செய்கிறது. ஆகவேதான் சப்தபதி இல்லாத சுயமரியாதைத் திருமணம் செல்லத்தக்கதல்ல என்று தீர்ப்பு 1953இல் வழங்கப்பட்டது. ஆந்திராவில், தாலியை மட்டும் கட்டிவிட்டதனால் திருமணம் முடிந்துவிட்டது எனப் பொருள் அல்ல. சப்தபதி சடங்கு செய்யப்படாததால் புரோகிதத் திருமணமே செல்லாதது எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

புகுத்தப்பட்ட சடங்குகள்

இத்தகையச் சடங்குகள் தமிழர் திருமணத்தில் என்றைக்குப் புகுந்தன? புகுத்தப்பட்டன? யாரால் புகுத்தப்பட்டன?

– (தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *