மணிப்பூரின் தலைநகர் இம்பால் அருகே மலோம் என்னும் கிராமத்தில் 2000ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த என்கவுண்டரில் 10 பேர் ஆயுதப்படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்குக் கண்டனம் தெரிவித்தும் மணிப்பூரில் ஆயுதப்படை வீரர்களுக்குக் கொடுக்கப் பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைத் திரும்பப் பெறக் கோரியும் இரோம் சானு சர்மிளா 2000ஆம் ஆண்டுமுதல் உண்ணாவிரதம் இருந்துவந்தார். உண்ணா விரதத்தைத் தொடங்கியபோது அவரது வயது 28.
ஓர் ஆண்டின் 365 நாள்களும் உண்ணாவிரதம் இருந்துவந்த சர்மிளா மீது மணிப்பூர் காவல்துறையினர் ஒவ்வோர் ஆண்டும் தற்கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துவந்தனர். தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டதால் அவர் சிகிச்சை பெற்ற போரோபட் மருத்துவமனையின் அறையே சிறையாக மாற்றப்பட்டது.
தன்னை விடுதலை செய்ய வேண்டி இம்பால் கிழக்கு மாவட்ட அமர்வு (செசன்சு) நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில், சர்மிளாவை விடுதலை செய்யுமாறு ஆகஸ்ட் 19 அன்று நீதிமன்றம் ஆணையிட்டதையடுத்து ஆகஸ்ட் 20 அன்று விடுதலை செய்யப்பட்டார்.
மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த அவர், எனது விடுதலையை வரவேற்கிறேன். இது எனது போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி. எனினும் எனது உண்மையான வெற்றி என்பது நான் வைத்துள்ள கோரிக்கைகள் நிறைவேறுவதில்தான் இருக்கிறது.
எனவே மணிப்பூர் மாநிலத்தில் ஆயுதப் படையினருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரம் திரும்பப் பெறப்படும் வரையில் எனது போராட்டம் தொடரும். மக்கள் ஒருங்கிணைந்து போராடினால் அரசின் முடிவு நிச்சயம் மாறிவிடும் என்று கூறி சிறிது நேரத்திலேயே தனது கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் உண்ணாவிரதத்தை மேற்கொண்டதால் ஆகஸ்ட் 22 அன்று மீண்டும் அதே குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.