தற்போதுள்ள சட்டங்கள் மனித உரிமையை, சுதந்திரத்தைப் பறிப்பதாக உள்ளன. விசாரணை தாமதம் போன்றவற்றால் விரைவாக வழக்கை முடிக்க முடியாததால் பலர் சிறையில் வாடுகின்றனர். இது வருத்தமளிக்கிறது.
மத்தியச் சிறை களில் உள்ளவர்களில் 50 சதவிகிதத்தினர் விசாரணைக் கைதிகளே. அதே நேரத்தில் மாவட்ட நீதிமன்றங்களில் விசாரணைக் கைதிகள் 72 சதவிகிதமாக உள்ளனர். தண்டனை விதிக்கப்பட்டவர்களை விட விசாரணைக் கைதிகளே அதிகளவில் சிறையில் உள்ளனர் என்று வருத்தப்பட்டிருப்பவர் வேறு யாருமல்ல. இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா.
தண்டனைக்குரிய தண்டம்தூக்கி களெல்லாம் வெளியில் உலாவிக் கொண்டிருப்பதும், விசாரணை என்ற பெயரில் கைதுசெய்யப்பட்டோர் சிறைகளில் நிரப்பப்பட்டிருப்பதும்தான் இந்திய நீதித் துறையின் சாதனை போலும். இதில் குற்றமற்றவர் என்று ஒருவர் வெளியே அனுப்பப்படும்போது அதுவரை அவர் சிறையில் அனுபவித்த காலத்தை யார் திருப்பித் தரமுடியும்?