21 ஆம் நூற்றாண்டிலும் மனிதக் கழிவுகளை மனிதனே சுமப்பதா?

செப்டம்பர் 01-15

இந்த 21ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய அவலங்களில் ஒன்று மனிதக் கழிவுகளை மனிதர்களே சுமந்து செல்லும் மிகக் கேவலமாகும். இது அநாகரிகத்தின் உச்சம்! இது  – மனிதர்களை மிருகங்களைவிடக் கேடான நிலையில் நடத்துவது அல்லவா?

இயந்திரமயமாகி தொழில்நுட்பம் உச்சத்தில் – ஓங்கி வளர்ந்து வரும் யுகத்திலா இப்படி நடப்பது?

துப்புரவுத் தொழிலாளர்களையெல்லாம் மாற்றுத் தொழிலாளர்களாக்கிட போதிய பயிற்சி தந்து, அவர்களது பொருளாதார வசதி குறையாமல், வாழ்வாதாரத்திற்கும் போதிய உத்தரவாதத்தினை அளிப்பது அவசர அவசிய மாகும்!

68 ஆண்டு சுதந்திரத்துக்குப் பிறகும் இந்நிலையா?

68 ஆண்டு சுதந்திரத்திற்குப் பிறகும் மனிதக் கழிவுகளை மனிதர்களே சுமப்பது – இதற்கென ஒரு தனி ஜாதி – கீழ்ஜாதி வேறு எந்த சுதந்திர நாட்டிலாவது – உலகில் உண்டா? இதைவிட பெருத்த தேசிய அவமானம் வேறு உண்டா?

இதனை இந்திய நாட்டின் எந்த மூலை முடுக்கிலும் இல்லாது ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் திட்டம் தீட்ட வேண்டும்.

தொழில் நுணுக்க முறைகளைப் பயன்படுத்தி – இந்தக் கழிவுகளிலிருந்து பயனுறு பயன் (Recycling Process) முறையில்  கோப்பர்காஸ் பல நிறுவனங்கள் செய்கின்றனவே! Bio Gas முறைகளையெல்லாம் செய்யலாமே!

அந்தப் பணிகளில் ஈடுபடும் துப்புரவுத் தொழிலாளர்களைக்கூட, அவர்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் என்ற நிலை இருந்தால்கூட, பயிற்றுவித்து, பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட வேண்டும்.

19.8.2014 அன்று வெளிவந்துள்ள ஒரு செய்தியில் சென்னை மாநகராட்சியில் கடந்த 15ஆம் தேதி முதல் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியாளர்கள் குறித்த கணக்கெடுப்பு நடந்துள்ளது.

அதில் 200 வார்டுகளிலும் சேர்த்து மொத்தம் 100 பேர் மட்டுமே அந்தப் பணி செய்வோராகக் கண்டறியப்பட்டுள்ளனராம்.

ஆனால் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் சென்னையில் மனித கழிவுகளை அகற்றும் பணியாளர்கள் 1,500 பேர்கள் இருந்ததாக குறிப்பிட்டுள்ளது வெளியாகி உள்ளதே!

அந்த 1500 பேர்களில் தற்போது 100 பேர் என்று முரணான தகவல்; இதைச் செம்மைப்படுத்தி அவர்கள் அப்பணியை மனிதக் கழிவினைச்  சுமக்கும் பணிக்குப் பதிலாக இயந்திரங்களைப் பயன்படுத்தி,  அவர்களை மாற்றுப் பணியாளர்களாக்கிட மாநகராட்சியும் தமிழக அரசும் முன்வர வேண்டும்.

இதனை ஒழிக்க தேவைப்பட்டால் நாம் அறப் போராட்டத்திலும், விழிப்புணர்வுப் பிரச்சாரத்திலும் ஈடுபடுவோம் என்பதை அறிவித்துக் கொள்ளுகிறோம்.

– கி.வீரமணி
ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *