வெள்ளத்தணைய மலர்நீட்டம், எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் -இந்த இரண்டும், தமிழர்கள் மனவளத்தை (தன்னம்பிக்கையை) ஆண்டார்கள் என்பதற்கான கல்வெட்டுகளாகும். அந்த வழியில், வெற்றி பெற்றால் தங்கம்தான் _ என்ற தன்னம்பிக்கையுடன் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று, தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா _ என்று தானும் நிமிர்ந்து, தமிழனையும் நிமிரச் செய்திருக்கிறார், சத்துவாச்சேரியைச் சேர்ந்த சதீசுகுமார்.
ஸ்காட்லாந்திலுள்ள கிளாஸ்கோ நகரில் 20ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில், 22 வயதான சதிஷ்குமார் 77 கிலோ எடைப்பிரிவில், இந்தியாவின் சார்பாகப் பங்கேற்று 149 கிலோ பளு தூக்கி தங்கம் வென்றிருக்கிறார். இதற்கு முந்தைய சாதனை, 148 கிலோதான். இந்தச் சாதனையை முறியடிப்பதற்கு 12 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. அதற்கும் ஒரு தமிழன் தான் தேவைப்பட்டிருக்கிறான்.
வேலூர் மாவட்டம் சத்துவாச்சேரியில் பிறந்து வளர்ந்தவர் சதீசுகுமார். இவரது தந்தை சிவலிங்கம் _ இராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்று தற்போது தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் செக்யூரிட்டியாக பணிபுரிபவர். தாய் தெய்வானை, தம்பி பிரதீப்குமார், தந்தை _ தனயன் _ தம்பி மூவருமே பளுதூக்கும் வீரர்கள்தான். தாய் தெய்வானையும் அதற்கேற்றபடி பளுதூக்கும் போட்டி பற்றிய தகவல்களை, விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கிறார். இப்படி அனுபவம், குடும்பத்தின் கூட்டு முயற்சி, கடுமையான உழைப்பு இவ்வளவும் சேர்ந்து இந்தத் தங்கக் கனவை நினைவாக்கியிருக்கிறது இப்பொழுது சதீசு குடும்பத்திற்குள் தங்க மகன், தங்க அண்ணன். நமக்கோ தங்கத் தமிழன்.
இந்தக் காமன்வெல்த் போட்டியில் தமிழர்கள் பெருமளவில் பதக்க வேட்டை ஆடி இருக்கிறார்கள். இதில் சதீசுகுமார்தான் தமிழர்களின் சார்பில் முதலில் பதக்கம் வென்றவர். அதுவும் தங்கம். இதை அவருடைய தாய், தொலைக்காட்சியில் பார்த்ததும் ஆனந்தத்தை அடக்க முடியாமல் அழுது இருக்கிறார். சத்துவாச்சேரியே இந்த வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடித் திளைத்திருக்கிறது.
சதீசின் தந்தை சிவலிங்கம் மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டபோது தெரிவித்த கருத்து சதீசின் உளப்பாங்கைத் தெள்ளத்தெளிவாகக் காட்டுவதாக இருக்கிறது.
போட்டிக்குப் போகும்போதெல்லாம் வெற்றி பெற்றால் தங்கம்தான் பெறுவேன் என்று சொல்லிக்கொண்டு போவாராம். அப்படியே வெற்றி பெற்றுத் திரும்புவாராம். இப்படிச் சேர்த்த தங்கம் இப்பொழுதே 50க்கும் மேல் வீட்டில் இருக்கிறது. இந்த முறையும் தங்கம்தான் என்று சொல்லிவிட்டுச் சென்றவன் சொன்னதைச் சாதிச்சுட்டான் என்று நெகிழ்ந்திருக்கிறார்.
சாதிப்பதற்குத் தேவையானது நம்மால் முடியுமென்ற தன்னம்பிக்கை, ஒரு விளையாட்டு வீரருக்கு இருக்க வேண்டிய ஒழுக்கம் சதீசுகுமாருக்கு ஏராளம். இதைப்பற்றி சதீசின் பயிற்சியாளரும் அர்ச்சுனா விருது பெற்றவருமான முத்து, சதீசு எதையுமே மிகச் சரியாகச் செய்ய வேண்டுமென்று நினைப்பவன். கவனம் துளியும் பிசகாது. நேரம் தவறமாட்டான். ஒழுக்கம் தவறமாட்டான். பயிற்சியைத் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தமாட்டான் என்று பட்டியலிட்டுவிட்டு, அவன் இன்னும் சாதிப்பான் என்று நம்பிக்கையோடு சொல்கிறார்.
பயிற்சியும் தன்னம்பிக்கையும் இரண்டும் ஒன்றுகலந்த சதீசுகுமார், தான் கலந்துகொண்ட போட்டிகள் இரண்டைத் தவிர அனைத்திலும் தங்கம் வென்றிருக்கிறார்.
தாய், தந்தை, சகோதரன், அட்லாஸ் ஜிம், இன்னும் பலர் உறுதுணையாக இருந்தாலும், சதீசின் ரோல் மாடல் பயிற்சியாளர் முத்துதான். 13 வயதில் அவர் நெஞ்சில் பற்றிய இந்தத் தீ இந்தக் காமன்வெல்த்தில் தங்கம் வென்று தந்திருக்கிறது. இன்னும் அந்தத் தீ அணையவில்லை. பயிற்சியாளர் முத்து, விளையாட்டு மேம்பாட்டுப் பயிற்சியாளர் நாகராசன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் உள்பட பலரும் அவரைத் தக்கமுறையில் வழிகாட்டி இருக்கிறார்கள். இந்த வழிகாட்டுதலில் கல்லூரியில் பயிலும்போதே பல்கேரியாவில் நடந்த உலக ஜுனியர் சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தேர்வானது, படிப்படியாக சர்வதேசப் போட்டிகளுக்குத் தேர்வானது, தெற்காசிய வெயிட் லிப்டிங் போட்டி, காமன்வெல்த் பளுதூக்கும் சாம்பியன்ஷிப், ஆசியன் சாம்பியன்ஷிப் ஆகிய போட்டிகளில் கலந்துகொண்டு தங்கம் வாங்கியுள்ளார். இதற்கு மகுடமாக இப்பொழுது நடைபெற்ற க்ளாஸ்கோ காமன்வெல்த் _2014 போட்டியில் தங்கம் வாங்கியிருக்கிறார். இந்தத் தங்கவேட்டை ஒலிம்பிக் வரை தொடரட்டும். தங்கத் தமிழன் சதீசுகுமாருக்கு நமது வாழ்த்துகள். – –
– உடுமலை
வறுமையில் வீராங்கனைகள்!
கோவையில் நடந்த தேசிய சப்-_ஜுனியர் பளுதூக்கும் (பவர் லிப்டிங்) போட்டியில் 63 கிலோ எடைப்பிரிவில் பிரியா, ராஜேஸ்வரி, நந்தினி, கதிஜா பேகம் ஆகிய தமிழ்நாட்டுப் பெண்கள் மற்ற மாநிலத்துப் பெண்களைத் தோற்கடித்து தமிழ்நாட்டுக்கு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். இது தமிழினத்துக்கு இரட்டிப்பு மகிழ்ச்சிதான். தந்தை பெரியாரின் கனவும் இதுதானே!
இந்த வீராங்கனைகளின் பயிற்சியாளர் பொன். சடையான், இந்தப் பெண்கள் போட்டி சமயத்தில் சாப்பிடும் உணவுகள்தான் இவர்கள் வாழ்க்கையிலேயே சாப்பிடுகிற நல்ல உணவுகள் என்கிறார். ஆம், வறுமையில் வாடிய பெண்கள்தான் தமிழ்நாட்டுக்கு இந்தப் பெருமையைப் பெற்றுத் தந்திருக்கிறார்கள். ஹெல்தி டானிக்குகள், ஹைஜீனியக் புரோட்டின் டின்கள், கூல்டிரிங்ஸ், பெயின் ரிமூவர் என சகல ஊட்டச்சத்து, மருத்துவ உதவி போன்ற முன்னேற்பாடுகளுடன் வந்திருந்த வடமாநிலத்துப் பெண்களைத்தான் வறுமையில் வாடிய நம் பெண்கள் தோற்கடித்து இருக்கிறார்கள்.
சாதிப்பதற்கு வறுமையொரு தடையில்லை என்பதைச் செயல் மூலம் காட்டி, தமிழக வீராங்கனைகள் வரலாறு படைத்துள்ளனர். இவர்களுக்கு வறுமை இனி இல்லை என்று நிலைமை தமிழக அரசு ஏற்படுத்துமா?