வளர்ச்சி… பெப்பே…ப்பே..
சீறு சுமந்த சாதிசனமே ஆறு கடந்தா ஸ்கூலு வருமே…
– லெனின் (முகநூலிலிருந்து)
வளர்ச்சி நாயகன் நரேந்திர மோடியை முதல்வர் பதவியிலிருந்து பிரதமர் பதவிக்கு புரமோஷன் தந்த குஜராத் மாநிலத்தில் நாள்தோறும் அரைமணி நேரம் தண்ணீரில் நீந்திப் பள்ளிக்குச் செல்கிறார்கள் நூற்றுக்கும் மேற்பட்ட மலைஜாதி மாணவ/-மாணவியர். சீர் சுமப்பதுபோல தங்கள் புத்தகங்களையும் சீருடைகளையும் தனித்தனிக் குடத்திற்குள் போட்டு, அவை நனையாமல் பத்திரமாக ஆற்றைக் கடந்து பள்ளிக்குச் செல்கிறார்கள்.
இந்த மாணவர்களின் பெற்றோரில் யாராவது ஒருவர் ஒவ்வொரு நாளும் பாதுகாப்புக்காக வந்து, பத்திரமாக ஆற்றில் நீந்திச் செல்ல வழிகாட்டுகிறார்கள். ஆற்றைக் கடந்ததும் மாணவர்கள் தங்கள் சீருடைகளை அணிந்து கொள்கிறார்கள். ஆனால், மாணவிகளைப் பொறுத்தவரை உடை மாற்றுவதற்கு மறைவான இடம் இல்லாததால், அவர்கள் சீருடையுடனேயே ஆற்றைக் கடந்து, நனைந்த உடைகளுடனேயே பள்ளிக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். மத்திய குஜராத்தில் சோட்டா உதேப்பூர் மாவட்டத்தில் மலைவாழ் மக்கள் வாழும் சஜன்பூர் கிராமத்தில் வாழும் மாணவ_-மாணவியர்தான் கல்வி கற்க இந்தப் பாடுபடுகிறார்கள். இப்பகுதியில் ஒரேயொரு உயர்நிலைப் பள்ளிதான் உள்ளது. அரை கிலோமீட்டர் அகலமுள்ள அய்ரன் ஆற்றில் நீந்தி அக்கரைக்குச் சென்றால் அதன்பின் 5 கி.மீ தூரம் நடந்து, உட்டவாடி என்ற இடத்தில் உள்ள பள்ளிக்குச் செல்லலாம். ஆற்றைக் கடக்காமல் ரோட்டிலேயே நடந்து செல்ல வேண்டுமென்றால் 20 கிலோமீட்டர் சுற்றிப் பயணிக்க வேண்டும். அதனால்தான் கிராமத்து மாணவ-_மாணவியர் தினமும் நீந்திச் செல்கின்றனர்.
நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது அவரிடம் நேரிலேயே முறையிட்டும் எங்கள் பிள்ளைகளுக்கு விடிவு பிறக்கவில்லை என்கிறார் கிராமத்துப் பெரியவர். சைக்கிளிலோ மினிபஸ்ஸிலோ பள்ளிக்குச் செல்ல வசதியாக ஒரு பாலம் கட்டிக் கொடுங்கள் என்பதுதான் இவர்களின் நீண்டகாலக் கோரிக்கை. அவ்வப்போது அறிவிப்புகள் வந்தாலும், இன்னும் அது நிறைவேறவில்லை.
முதல்வர்களை நியமிக்காத முதல்வர்!
ஒரு 2ஜிக்கு சி.ஏ.ஜி. சொன்ன கற்பனைக் கணக்கை வைத்துக் கொண்டு ஆடியவர்கள், குஜராத்தின் உண்மை நிலையை அதே சி.ஏ.ஜி. எனப்படும் கணக்குத் தணிக்கை அதிகாரி கொடுக்கும் அறிக்கைகளில் சொல்லும்போது சகல துவாரங்களையும் மூடிக் கொள்கிறார்கள். குஜராத்தில் 16 அரசு பொறியியல் கல்லூரிகளும், 30 அரசு பாலிடெக்னிக்குகளும் இருக்கின்றன. இதில் பொறியியல் கல்லூரியைப் பொறுத்தளவில் 279 பேராசிரியர் பணியிடங்கள் உள்ளன. இதில் 252 இடங்கள் காலியாக உள்ளன. 559 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 307 பணியிடங்கள் காலி! 81% அரசு பொறியியல் கல்லூரிகளில் முதல்வர்கள் இல்லை. 71% கல்லூரிகளில் ஆய்வக உதவியாளர்கள் இல்லை. 33% கல்லூரிகளில் பயிற்றுநர்கள் இல்லை.
பாலிடெக்னிக்கைப் பொறுத்தவரை 85% முதல்வர்கள் இல்லை; 74% துறைத் தலைவர்கள் இல்லை; பயிற்றுநர், ஆய்வக உதவியாளர் என்று இந்த இல்லை பட்டியல் நீள்கிறது. இதுதான் மோடி குஜராத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டுசென்ற லட்சணம் என்று அம்பலப்படுத்துகிறது சி.ஏ.ஜி! அதைப் பத்தி என்னங்க ஜி, மோடிஜி பிரதமரானால், நாடே நட்டுக்கும் என்று இன்னும் நம்புகிறார் பிச்சைக்காரஜி!