பல சிறப்புகளுடன் தேர்வு நடத்தப்பட்டாலும் மக்கள் தங்கள் நிலைக்கேற்ப தேர்வு குறித்த கருத்துகளை உருவாக்க இயலும். இதற்கு சிவில் சர்வீஸ் தேர்வு குறிப்பாக சி_சாட் முக்கிய உதாரணமாகிவிட்டது. சி_சாட் தேர்வில் பல சர்ச்சைகள் உள்ளன. சரியான விளக்கங்களைத் தர இக்கட்டுரை முயல்கிறது.
ஆண்டுக்கு சுமார் ஆயிரம் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். போன்ற உயர் பதவிகளுக்கு சுமார் 5 இலட்சம் பேர் விண்ணப்பிக்கிறார்கள். விண்ணப்பிக்கும் நிலையில் சிலர் தேர்விலிருந்து விலக்கப்படுகிறார்கள். சுமார் 40 விழுக்காட்டினர் முதல் கட்ட பிரிலிமினரி தேர்விற்குச் செல்வதில்லை. மற்றவர்களில் சுமார் பத்தாயிரம் பேர் முதல்கட்ட பிரிலிமினரி தேர்விலிருந்து இரண்டாம் கட்ட மெயின் தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். மனப்பாடம் செய்யும் ஆற்றல், ஆழமாகப் புரிந்துகொள்ளும் தன்மை, கடின உழைப்பு போன்ற உயர் அதிகாரிகளுக்குத் தேவையான குணங்களை இரண்டாம் கட்ட மெயின் தேர்வு சோதிக்கிறது. இதில் சுமார் இரண்டாயிரம் முதல் மூன்றாயிரம் பேர் வரை இறுதிக் கட்ட ஆளுமையைச் சோதிக்கும் நேர்காணலுக்குத் தேர்வு செய்வார்கள். நேர்காணல் மூலமாகத் தேவையான மாணவ/மாணவிகள் உயர் அதிகாரி பதவிக்குத் தேர்வு செய்யப்படுகிறார்கள். மத்திய தேர்வாணையம் நடத்தும் இந்தத் தேர்வை காலச்சூழல் கருதி மாற்றங்களை 2001 முதல் செய்து வருகிறார்கள். பல சர்ச்சைகள் உருவாகியுள்ளன. குறிப்பாக பிரிலிமினரி தேர்வில் விருப்பப் பாடமுறையை நீக்கி சி_சாட் தேர்வை அறிமுகப்படுத்தியதிலிருந்து தொடர்ந்து சர்ச்சைகள் ஏற்பட்டு வருகின்றன.
பிரிலிமினரி தேர்வில் உள்ள சி_சாட் தேர்வின் பல கூறுகளை ஆய்வதற்கு முன்பு மத்தியத் தேர்வாணையத்திற்கு (U.P.S.C.) ஒரு முக்கியமான கேள்வி. நான்கு பதில்களில் சரியானதைத் தேர்ந்தெடுக்கலாம்.
கேள்வி: சி-சாட் என்பதன் விளக்கம் என்ன?
A) காமன் சர்வீஸ் ஆப்டிடியூட் டெஸ்ட்.
B) சிவில் சர்வீஸ் ஆப்டிடியூட் டெஸ்ட்.
C) சிவில் சர்வீஸ் பிரிலிமினரி டெஸ்ட். பேப்பர் மிமி
D) கமிட்டியின் பரிசீலனையில் உள்ளது. எனவே பதில் அளிக்க இயலாது.
சரியான விடை (D) எனில் மற்றொரு கேள்வி எழுகிறது.
2010 மார்ச் 10அன்று முன்னாள் மத்திய அமைச்சர் திரு. பிரிதிவிராஜ் சவாண் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் சிவில் சர்வீஸ் பிரிலிமினரி தேர்வுக்குப் பதிலாக சிவில் சர்வீஸ் ஆப்டிடியூட் டெஸ்ட்_அய் அறிமுகப்படுத்த அனுமதி வழங்கப்பட்டதாகக் கூறினார். மத்தியத் தேர்வாணையத்திடம் சி_சாட் குறித்த விளக்கம் பரிசீலனையில் உள்ளதாகத் தெரிகிறது. அப்படியென்றால் மாணவர்களுக்குப் போதுமான கால அவகாசம் தராமல் சிவில் சர்வீஸின் முதல்கட்டத் தேர்வான பிரிலிமினரி தேர்வை மாற்றியது ஏன்? குறிப்பாக இரண்டாம் தாளை மாற்றியதால் குடிமைப்பணிக்குத் தகுதியான மாணவர்களைத் தேர்வு செய்ய முடிகிறதா? விருப்பப் பாடத்தை முதல் கட்டத் தேர்விலிருந்து நீக்கியது ஏன்? கீழ்க்காணும் கேள்வியைக் கவனிக்கவும்.
குடிமைப் பணியில் எதிர்பார்க்கப்படும் எந்தத் தகுதிகள் சி-சாட் தேர்வில் சோதிக்கப்படுகிறது என்பதை வரிசைப்படுத்துக?
I) அறிவுத் திறன்
II) கடுமையான உழைப்பு
III) மொழித்திறன்
IV) தேர்வு குறித்த நுணுக்கம்
சரியான விடையாக IV, II, I, III என்பதைக் கருதுவதற்கு பின்வரும் விளக்கங்களைக் கவனிக்கவும்.
அதிக அறிவுத்திறன், மொழித்திறன், கடுமையான உழைப்புள்ள மாணவ/மாணவிகளுக்கு சிவில் சர்விசில் வெற்றிபெற பல முயற்சிகள் தேவைப்படுகிறது. ஆளுமையைச் சோதிக்கும் நேர்காணலுக்கு 275 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. மனப்பாட ஆற்றலையும் கடுமையான உழைப்பையும் சோதிக்கும் எழுதும் முறை மெயின் தேர்வில் 1750 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. எனவே ஆளுமையைவிட எழுதும் முறை தேர்வுக்கு அதிக மதிப்பெண் வழங்கப்படுகிறது.
தேர்வு குறித்த விழிப்புணர்வுள்ள அதாவது தேர்வின் நுணுக்கத்தை அறிந்தவர்களால் ஓரிரு முயற்சியால் வெற்றியடைய முடிகிறது. எனவே அறிவாற்றலால் அதிக மதிப்பெண் பெறும் ஆப்டிடியுட் தேர்வுக்கு முதல்கட்ட பிரிலிமினரி தேர்வில் 200 மதிப்பெண் வழங்குவது சரியான விகிதத்தில் இல்லை. வடிகட்டும் நிலை தேர்வான பிரிலிமினரில், சி_சாட்டிற்கு அதிக மதிப்பெண் வழங்கக்கூடாது.
இப்பொழுது மற்றொரு கேள்வியை முன்வைக்கிறேன்.
பொருந்தாத விகிதத்தில் அதிக மதிப்பெண்களுடன் சி-சாட் தேர்வை நடைமுறைப்படுத்தியது ஏன்?
A) பல அரசுப் பணிக்கான தேர்வுகளை இணைத்து பொதுத் தேர்வாக சிவில் சர்வீஸ் தேர்வை மாற்றுவது.
B) மொழி அடிப்படையில் சாதக பாதக நிலையை ஏற்படுத்துவது.
C) தேர்வு நுணுக்கம் தெரிந்த பிரிவினருக்குச் சாதகமாக்குவது.
D) அய்.அய்.டி, அய்.அய்.எம் போன்ற புரபெஷனல் மாணவர்களுக்குச் சாதகமாக்குவது.
பதில் (A) என்றால் மத்திய தேர்வாணையம் சி_சாட் தேர்வை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். அண்மையில் முன்னாள் மத்திய தேர்வாணைய உறுப்பினர் சி_சாட்டிற்கான விரிவாக்கமாக காமன் சர்வீஸ் ஆப்டிடியூட் டெஸ்ட் என்று கூறியுள்ளார். மத்திய தேர்வாணையத்தின் பல தேர்வுகளை ஒருங்கிணைத்து நடத்தும் நோக்கம் இருக்கிறதா?
ஜூலை 2005இல் மஹதி வர்மா குழுவை மத்திய தேர்வாணையம் அமைத்தது. அறிக்கையை ஜூலை 2006இல் குழு சமர்ப்பித்தது. இக்குழுவின் பரிந்துரைகள் என்ன? தேர்வுகளை ஒருங்கிணைத்து நடத்த சிவில் சர்வீஸ் தேர்வு தேர்ந்தெடுக்கப் பட்டதா? சிவில் சர்வீஸ் பிரிலிமினரி தேர்வு இந்த அடிப்படையில்தான் மாற்றப்பட்டதா? தேர்வுகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை நோக்கி சிவில் சர்விஸ் தேர்வு மாற்றப்படுகிறதா? அப்படியெனில் இதற்கு விரிவான ஆலோசனை, கருத்துப் பரிமாற்றம் தேவை.
சி-_சாட் தேர்வுத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் உள்ளது. பல மத்திய பணிக்கான தேர்வுகள் பிராந்திய மொழியில் நடத்தப்படுகிறது. மத்திய தேர்வாணையமும் தாய்மொழி அறிவுகுறித்த தேர்வை சிவில் சர்விஸில் நடத்துகிறது. எனவே பிராந்திய மொழியில் கேள்வித்தாள்களைத் தர முடியும்; தர வேண்டும். ஆங்கில அறிவுத்திறன் கேள்விகள் குடிமைப் பணியின் வெற்றியைத் தீர்மானிக்கும் நிலையில் இருக்கக்கூடாது. குறைந்தபட்ச அறிவைச் சோதிக்கும் தேர்வு மெயின் தேர்வில் இருக்கிறது. இதுவே போதுமானது. உலகமயமாகும் சூழலில்கூட ஆங்கில மொழி அறிவுக்கு இவ்வளவு முக்கியத்துவத்தை அளிக்கக்கூடாது. ஆங்கில அறிவைச் சோதிக்கும் கேள்விகள் குறைவான அளவில் அல்லது தகுதி நிலை அளவில் இருக்கலாம். சி_சாட்டில் மொத்தமுள்ள 80 கேள்விகளில் சுமார் 50 கேள்விகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆங்கில அறிவுத் திறனுக்காகக் கேட்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.
தேர்வு நுணுக்கம் அறிந்தவர்களுக்கு அதாவது நன்கு படித்த குடும்பச் சூழல், சிறந்த கல்லூரிகளில் படிக்கும் சூழல் அமைந்தவர்களுக்கு சிவில் சர்வீஸ் தேர்வுக் கேள்விகள் எளிதாக அமைகின்றன. கிராம மற்றும் புறநகர் சூழலில் வளர்ந்தவர்களுக்கு மற்றும் படிப்பவர்களுக்கு சிவில் சர்வீஸ் தேர்வு முறை, பாடமுறை, கேள்விமுறை எல்லாம் கடினமாக உள்ளன. எனவே இந்தியப் பல்கலைக்கழக அறிவாற்றல், பாடத்திட்டம், கேள்விமுறையின் வீச்செல்லைக்குள் சிவில் சர்வீஸ் தேர்வு அமைய வேண்டும். சி_சாட் தேர்வு சில பிரிவினருக்குக் கடுமையான தேர்வாக இருக்கும் நிலை மாற வேண்டும். கடுமையான முறையில் சிவில் சர்வீஸ் தேர்வு அமைய வேண்டும் என்று கூறுபவர்கள் இந்தியாவின் பல்கலைக்கழக கல்விநிலையினை யோசிக்க வேண்டும். அய்.அய்.டி மற்றும் அய்.அய்.எம் போன்ற புரொபஷனல் மாணவர்களுக்கு சி_சாட்டில் உள்ள கணித அடிப்படை ஆப்டிடியூட் எளிமையாக அமைகிறது.
கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு இது சாதகமாக இல்லை. பொதுஅறிவுத் தேர்வு இப்பொழுது மனப்பாடம் செய்து எழுதுவதைவிட புரிந்துகொண்டு எழுதும் நிலையில் உள்ளது. எனவே, கூடுதலாக கணித அடிப்படை அறிவுத்திறன் கேள்விகளை அதிகமாகக் கேட்பதைத் தவிர்க்க வேண்டும். அப்படியானால்
சி_சாட்டை எடுத்துவிடலாமா? அல்லது ஓரளவு மாற்றத்திற்குட்படுத்தலாமா? என்ற கேள்வி எழுகிறது.
என்ன மாற்றம் ஏற்படுத்த வேண்டும்?
தீர்வுகள் என்ன என பரிசீலனை செய்யும்போது பின்வருவனவற்றைக் கவனிக்க வேண்டும்.
A) பொதுத் தேர்வாக சிவில் சர்வீஸ் தேர்வை மாற்றக்கூடாது. மேலும் சில பணிகளை இதனுடன் இணைக்கலாம்.
B) அனைத்து பிராந்திய மொழிகளில் கேள்வித் தாள்களை வழங்க வேண்டும்.
C) தவறான மொழிபெயர்ப்புக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். குறைந்தபட்ச மொழித்திறன் என்கிற அடிப்படையில் ஆங்கிலத்திறன் கேள்விகள் அமைய வேண்டும்.
D) மெண்டல்எபிலிடி, ரீசனிங் கேள்விகள் குறைந்த விகிதத்தில் அமைய வேண்டும்.
E) மெயின் தேர்வுப் பாடமுறையும் பிரிலிமினரி தேர்வுப் பாடமுறையும் ஒன்றாக இருக்க வேண்டும். பிரிலிமினரி தேர்வு அப்ஜெக்டிவ் முறையிலும் மெயின் தேர்வு டெஸ்கிரிப்டிவ் முறையிலும் இருக்க வேண்டும். இதன் பாடத்திட்டம் இந்தியப் பல்கலைக்கழக வீச்செல்லைக்குள் அமைய வேண்டும்.
F) மெயின் தேர்வு மதிப்பெண், நேர்காணல் மதிப்பெண் 10:1 என்கிற விகிதத்தில் இருக்க வேண்டும்.
G) மனப்பாடம் செய்து எழுதும் கேள்விமுறை சரியான விகிதத்தில் அமைய வேண்டும்.
இறுதியாக ஒன்றைக் குறிப்பிட வேண்டும். வடகிழக்கு இந்தியா நீங்கலாக மற்ற பகுதி மாணவ மாணவியர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை உள்ளது. இதனால் பலருக்கு விண்ணப்பிக்கும் பிரச்சினைகள் உள்ளன. எனவே ஆஃப்லைன் முறையும் கூடுதலாக வழங்க வேண்டும். விண்ணப்பிக்கும் நிலையிலேயே மாணவர்கள் போட்டியிலிருந்து விலகும்நிலை உள்ளது. இதனை மாற்ற வேண்டும்.
மக்கட் பண்புடையவர் களுக்கு நாட்டுக்கு உழைக்கும் வாய்ப்பாக சிவில் சர்வீஸ் இருக்க வேண்டும். சிவில் சர்வீஸ் தேர்வின் மூலம் சமூக நீதி மறுக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். பொதுவான தேர்வு என சிவில் சர்வீசை மாற்றுவதனால் பொதுமக்களுக்கு எட்டாத தூரத்தில் சிவில் சர்வீஸ் தேர்வு சென்றுவிடும்.
கட்டுரையாளர் : சி.வாஜீத் ஷா
குடிமைப் பணிக்கான தேர்வுத் துறையில் 25 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்.
பெரியார் அய்.ஏ.எஸ். அகாடமியில் பயிற்றுநர்.